முகப்பு
முடியும் வரை கல்

 8. தாய்த் தமிழ்ப் பள்ளி

விருதுகளையும் பரிசுகளையும் அந்தக் குழந்தைகள் அள்ளிக் குவிக்கிறார்கள். மொழி உணர்வும் நாட்டுப்பற்றும் மிக்கவர்களாகவும், சுய ஒழுக்கத்தில் மிளிர்பவர்களாகவும் வார்த்தெடுக்கப்படுகிறார்கள்.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:08 PM
பகிர்:

ஒரு ஒதுக்குப்புறத்தில் இருக்கும் ஒரு தமிழ்வழித் துவக்கப் பள்ளியில் தன் குழந்தை படிக்க வேண்டும் என்பதற்காக, கோயம்புத்தூர் போன்ற பெருநகரிலிருந்து திருப்பூரின் ஒரு முடுக்குப் பகுதிக்கு குடும்பத்தையே யாரேனும் மாற்றிக்கொண்டு வருவார்களா?

வந்திருக்கிறார்கள்.

பத்தொன்பது ஆண்டுகளாகப் பணியாற்றியபின் ஐந்தாயிரம்தான் ஊதியம் கிடைக்கிறது. இத்தனை ஆண்டுகளாக ஊதிய உயர்வு பற்றிய எண்ணமே ஆசிரியர்களுக்கு எழாதிருக்குமா? இவ்வளவு குறைவான ஊதியத்துக்கும் யாரும் சொல்லாமல், நிர்ப்பந்திக்காமல் தன் விருப்பத்தில் வார இறுதி நாட்களிலும் பள்ளிக்கு வந்து அவர்கள் உழைப்பார்களா? இந்தப் பள்ளியில் பணியாற்றுவதற்காகக் கிடைத்த அரசுப் பள்ளிப் பணியையும் யாரேனும் நிராகரிப்பார்களா?

  1. எழவேயில்லை

  2. உழைக்கிறார்கள்

  3. நிராகரித்திருக்கிறார்கள்

சகல வசதிகளோடும் ஒரு பள்ளியை நடத்திக்கொண்டிருக்கும் தாளாளர் ஒருவர், தன்னிடம் பணிபுரியும் ஆசிரியர்களுக்குப் போலவே தனக்கும் ஐந்தாயிரம் ரூபாயை மட்டும் மாத ஊதியமாக எடுத்துக்கொண்டு, அந்த ஊதியத்துக்குள்ளேயே பதினைந்துக்குப் பதினைந்து அளவு கொண்ட இரண்டு அறைகளில் தனது பிள்ளைகளோடு குடும்பம் நடத்துவார் என்பது கல்வி பெருவணிகமாகிப்போன இந்தக் காலத்தில் சாத்தியமா?

அந்த ஊதியமும் இல்லாமல், அந்தத் தாளாளரின் மனைவி அந்தப் பள்ளியைக் கூட்டிப் பெருக்குவது, கழிவறைகளை சுத்தம் செய்வது, குழந்தைகளுக்கு ஆயாவாகப் பணியாற்றுவது என்பதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா?

  1. சாத்தியம்

  2. நடக்கக்கூடிய காரியம்

இதற்குள்ளேயே நமக்கு மயக்கம் வந்துவிடும். ஆனால், இவ்வளவு அதிசயங்களையும் நடைமுறையில் சாத்தியமாக்கியிருக்கிறது திருப்பூர் தாய்த் தமிழ்ப் பள்ளி.

இந்தப் பள்ளியின் ஆண்டுவிழாவில் உரையாற்ற அழைக்கப்பட்டபோது, அந்தப் பள்ளியின் இத்தகைய விழுமியங்களில் ஒரு சின்னப் பகுதியும் தெரியாதவனாகத்தான் இருந்தேன்.

பள்ளி ஆண்டு விழாக்களில் உரையாற்றுவதென்பது அப்படி ஒன்றும் மனத்துக்கு உகந்த காரியமெல்லாம் இல்லை. உகந்த காரியமா இல்லையா என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், அது அவ்வளவு கடினமான காரியம். ஆண்டு விழாக்கள் என்றாலே, அங்கு கூடியிருக்கும் கூட்டமே தங்களது குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்காகவும், அவர்கள் பரிசு பெறும் கண்கொள்ளாக் காட்சியைப் பார்ப்பதற்காகவும்தான். அதிலும், துவக்கப் பள்ளி என்றால் கேட்கவே வேண்டாம். அந்தக் குட்டிக் குழந்தைகளிடம் எதைப் பேசுவது?

ஆனாலும், அந்தப் பள்ளிக் குழந்தைகளின் பன்முக ஆற்றல் குறித்து முகநூலின் வழி பரிச்சயம் இருந்ததால், அழைப்பை ஏற்று, பெரியவள் கிருத்திகாவோடு கிளம்பினேன். கடுமையான வெய்யிலும் புழுதிக் காற்றும் எங்களை ஒருவழி செய்திருக்கவே, குளித்துவிட்டுப் போனால் தேவலாம் என்று தோன்றியது. எங்களை அழைத்துக்கொண்டுபோக கார் எடுத்து வந்திருந்தவரிடம் இதைச் சொல்லி, ஏதேனும் விடுதி அறை நோக்கிச் செலுத்துமாறு கூறியபோது, அதை மறுத்த அந்தத் தம்பி, தங்களது வீட்டில் குளித்துவிட்டுச் செல்லலாம் என்று கூறினார். அவருடனான உரையாடல், அவர் அந்தப் பள்ளியின் தாளாளர் திரு. தங்கராஜ் அவர்களின் புதல்வர் என்று தெரிந்தது.

ஒரு தனியார் பள்ளியின் தாளாளர் வீடு எப்படியும் பிரம்மாண்டமாகத்தான் இருக்கும் என்ற என் எண்ணம், அப்படித்தான் இருக்கும் என்ற பொதுப் புத்தியிலிருந்து வந்ததல்ல. பொது நடைமுறை எனக்குக் கற்பித்திருந்த பால பாடம். ஒருமுறை, கிஷோரின் பள்ளித் தாளாளர் வீட்டைக் கடந்து போனபோது, அவரது வீட்டைக் காட்டியவாறே, ‘இங்க பாருப்பா, பள்ளிக்கூடத்த கட்டுய்யான்னா வீட்ட எவ்வளவு பெருசா கட்டுறார்னு’ என்று சொன்னதெல்லாம் நினைவுக்கு வரவே, அதுபோன்றதொரு பிரம்மாண்டத்துக்குள்தான் நுழையப்போகிறோம் என்ற என் நினைப்பை சுக்கல் சுக்கலாக நொறுக்கிப் போட்டது எதார்த்தம்.

உண்மையைச் சொன்னால், அது ஒரு வகுப்பறையின் பாதி அளவுக்கும் கொஞ்சம் குறைச்சலான அறை. அதே அளவுள்ள இன்னொரு அறை. அவ்வளவுதான் அவர்களது வீடு. இரண்டு மாடிக் கட்டடங்களைக் கொண்ட ஒரு பள்ளியின் தாளாளரது வீடே இவ்வளவுதான் என்பதில் நான் அடைந்த அதிர்ச்சியை ஆகப் பெரிதென நினைத்திருந்த எனக்கு, இதைவிடவும் பேரதிர்ச்சிகள் ஓராயிரம் அங்கிருக்கின்றன என்ற உண்மை அப்போது தெரிந்திருக்கவில்லை.

இரண்டு ஸ்டூல்களைப் போட்டு அமரவைத்தார்கள். சற்று நேரத்துக்கெல்லாம், உண்மையைவிடவும் ஏகத்துக்கும் இளைத்துப்போன ஒரு அம்மா வணங்கிக்கொண்டே வந்தார்கள். இரண்டு தட்டுகளை எடுத்தவர்கள், சாப்பிடுமாறு எங்களை வற்புறுத்த ஆரம்பித்தார்கள். அன்போடு மறுத்துவிட்டோம். அந்தப் பள்ளியின் ஆயா என்று தோன்றியது. ஆண்டு விழாவை ஒட்டி, தாளாளரின் வீட்டு வேலைகளைச் செய்வதற்காக வந்திருக்கிறார்போல என்ற சந்தேகத்தோடு நான் அவரைப் பார்த்ததை உணர்ந்து கொண்டிருக்க வேண்டும் அவர். ‘அய்யாவோட மனைவிங்கய்யா நான்’ என்று நல்ல தமிழில் கூறினார்.

நான் கேட்கப்போகும் இந்தக் கேள்விக்கான அவர்களது பதில் என்னை அழவைக்கப்போகிறது என்பதை அறிந்துவைத்திருக்கும் அளவுக்கு ஞானமெல்லாம் எனக்கில்லை. கேட்டேன், ‘என்னம்மா செய்றீங்க?’

‘காலைல நாலு மணிக்கெல்லாம் எழுந்து பள்ளிக்கூடத்துக்கு போயிடுவேங்கய்யா. போயி, வகுப்புங்கள எல்லாம் கூட்டிப் பெறுக்கிட்டு, கழிவறைங்கள எல்லாம் சுத்தம் செஞ்சுட்டு, தண்ணியப் புடிச்சு வேனெல்லாம் கழுவிட்டு வீட்டுக்கு வருவேங்க. அப்புறம், சமைச்சு வச்சுட்டு வேனுல போயி புள்ளைங்கள அழச்சுட்டு வருவேன். அப்புறம், பள்ளிக்கூடத்துல குழந்தைங்க எதாவது ஆயி இருந்துடுச்சுன்னா கழுவி சுத்தம் செய்யனும். அப்புறம், மத்த டீச்சருங்க எதனாச்சும் வேலை சொன்னாங்கன்னா அதச் செய்வேங்க. அப்புறமா, வேனுல போயி குழந்தைகள வீட்டுல விட்டுட்டு வந்தா, வீட்டுக்கு வந்து சமைக்கத்தாங்கய்யா நேரம் சரியா இருக்கும்’.

இவ்வளவு வேலையையும் ஒரே ஆள் செய்கிறாரா? அதுவும், அந்தப் பள்ளியின் தாளாளரின் மனைவி. சரியாகச் சொல்லப்போனால், அந்தப் பள்ளியின் உரிமையாளரா கழிவறைகளைச் சுத்தம் செய்வது உள்ளிட்ட இத்தனை வேலைகளைச் செய்கிறார்...?

எங்களோடு ஆண்டு விழாவுக்கு வந்தவுடன், தாள்களைப் பொறுக்குவது, நாற்காலிகளைப் போடுவது போன்ற வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

என் உரையை இப்படித்தான் ஆரம்பித்தேன் -

‘நான் எப்பேர்பட்ட கொம்பனின் காலிலும் எதன் பொருட்டும் விழுபவனில்லை. ஆனால், வாழ்நாளில் ஒரே ஒரு மனிதனின் காலில் விழ வேண்டும் என்றால், அது இந்தப் பள்ளியின் தாளாளரின் இணையர் சகோதரி விஜயலட்சுமி அவர்களின் காலில்தான் விழுவேன்’ என்று அழுதுகொண்டே சொன்னபோது, மேடையில் இருந்தவர்களும் எதிரே அமர்ந்திருந்தவர்களும் எழுந்து நின்று கலங்கியவாறே கை தட்டினார்கள். பார்க்கிறேன், ஒரு மூலையிலிருந்து அந்தத் தாய் கண்கள் கலங்கியவராகக் கைகூப்பி நன்றி சொல்லிக்கொண்டிருந்தார்.

அவர்களது வீட்டுக் குளியலறையில் குளிக்கப் போனபோது, ஐந்து ரூபாய்க்கான சேம்பிள் சோப்பு ஒன்று மட்டுமே, மிகவும் கரைந்த நிலையில் இருந்தது. வெளியே வந்தபோது, நான் எதுவும் கேட்காமலே அவரது மகன் சொன்னார், ‘மாசக் கடைசி இல்லீங்களாய்யா. அதான் சோப்பு வாங்க முடியல’.

இவ்வளவையும் பார்க்கும்போது, ஏதோ பிள்ளைகள் அதிகம் படிக்காத ஒரு சுமாரான பள்ளி என்றெல்லாம் நினைத்துக்கொள்ளாதீர்கள். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை, ஏறத்தாழ 340 குழந்தைகள் படிக்கிறார்கள். இந்த ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை இன்னும் சற்று அதிகரித்திருக்கக்கூடும். பொதுப் பள்ளி ஊழியனாக முப்பது ஆண்டுகள் பணியாற்றும் என்னால், இது எவ்வளவு பெரிய எண்ணிக்கை என்பதை உணர முடிகிறது.

இலவசக் கல்வியும் இல்லை. ஒவ்வொரு குழந்தைக்கும் சுமார் 3500 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள். கட்டணம் வாங்கிக்கொண்டுதானே கல்வியைத் தருகிறார்கள். இவ்வளவு நீட்டி இழுத்து இதில் எழுதுவதற்கு என்ன இருக்கிறது என்று உங்களுக்குத் தோன்றக்கூடும். இதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன -

  1. இந்தக் கல்விக் கட்டணம் என்பது பராமரிப்புச் செலவு, ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கான ஊதியம், மின்சாரக் கட்டணம் போன்றவற்றுக்கே போதாத அளவில், பொதுமக்களின் உதவியோடுதான் நடத்திக்கொண்டு வருகிறார்கள்.

  2. பள்ளியில் படிக்கும் குழந்தைகளில் பலர், இந்தக் கட்டணத்தைக்கூட கட்ட இயலாதவர்கள். இந்தக் குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை, பொதுமக்களே செலுத்திவிடுகிறார்கள்.

ஆச்சரியமாக இருக்கிறது, இப்படியெல்லாம்கூட சாத்தியமா. இதைக் கேட்டபோது தோழர் சீமா செந்தில், இந்தப் பள்ளியைப் பற்றியும் அதன் தாளாளர் திரு. தங்கராசு மற்றும் அவரது குடும்பத்தினரின் தியாகம் குறித்து பகிர்ந்துகொண்டவற்றை, ஒன்றன் கீழ் ஒன்றாகப் பட்டியலிட்டாலே ஒரு நான்கு ஃபாரம் தாண்டும்.

வீட்டிலிருந்து பள்ளிக்குப் போனால், வீட்டிலிருந்து ஆயிரம் விழுக்காடு வேறுபட்டு வளமையோடு இருக்கிறது தாய்த் தமிழ்ப் பள்ளி. குடும்பத்தைப் பட்டினி போட்டு பள்ளியைக் கொழுக்க வைத்திருக்கிறார் மனிதர்.

முப்பது ஆண்டுகளாக மேடைகளில் உரையாற்றிக்கொண்டிருக்கிற உரையாளன் என்கிற வகையில், நான் பங்கேற்ற ஆகச் சிறந்த பத்து மேடைகளில் அதுவும் ஒன்று.

ஏறத்தாழ 500 நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அவை கடந்து ஒரு எழுநூறு பேர் சுற்றிலும் நின்றுகொண்டிருந்தார்கள்.

தேர்ந்த நுணுக்கத்தோடு அந்தப் பிஞ்சுக் குழந்தைகள் ஆடிய தப்பாட்டம் இருக்கிறதே, அப்பப்பா எழுதி மாளாது. தப்படிப்பது என்பது அப்படி ஒன்றும் எளிதான விஷயம் அல்ல. உடல் வலிமையும் பயிற்சியும் அதிகம் தேவைப்படும் விஷயம். அந்தச் சின்னப் பிஞ்சுகள் அதை அவ்வளவு நேர்த்தியாகச் செய்தது என்னை விளிம்பு தாண்டிய ஒரு ஆச்சரிய நிலைக்குக் கொண்டுசென்றது.

‘ஆக்காட்டி’ பாடலை தோழர் கே.ஏ.குணசேகரனும், அண்ணன் முகில் அவர்களும் பாடக் கேட்டு அழுதிருக்கிறேன். அந்தப் பாடலுக்கான நடனத்தை தாய்த் தமிழ்ப் பள்ளிக் குழந்தைகள் நிகழ்த்தியபோது மெய் சிலிர்த்தது. KAG-யும் முகிலும் தந்திருக்காத உச்சம் அது என்று நான் எழுதுவதை அவர்கள் சரியாய் புரிந்துகொள்வார்கள் என்பது எனக்குத் தெரியும்.

அய்யா, சரியாக இருபது நிமிடங்கள் மட்டும் பேசுங்கள் என்று என்னை அழைத்தபோது தூறத் தொடங்கியிருந்தது. ஏன் தாய்மொழிவழிக் கல்வி அவசியம் என்று கொஞ்சம் இறுக்கத்தோடு நான் பேசியதையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டாடியது திரள். தேர்ந்த தமிழ் ஆர்வர்களிடம் பேசிய திருப்தி கிடைத்தது.

பேசி முடித்ததும், அந்தப் பள்ளியின் காவலருக்கு என்னை குத்து விளக்கு கொடுத்து கௌரவிக்கச் செய்தார்கள். அவருக்கு வயது எண்பது. சில மாதங்களுக்கு முன்னால், வயதானதால் வேலை பார்க்க இயலவில்லை என்று சொல்லிவிட்டு ஓய்வு பெற்றுவிட்டாராம். தன்னால் பள்ளியை விட்டுவிட்டு இருக்க முடியவில்லை என்றும், சாகும் வரைக்கும் பள்ளியிலேயே இருந்துவிடுவதாகவும், முடிந்ததும் காரியத்தைச் செய்துவிடுங்கள் என்றும் சொன்னவாறு, ஒரே வாரத்தில் பள்ளிக்குத் திரும்பிவிட்டாராம்.

பேசியவர்களில் ஒரு சகோதரி, ஒரு லட்சம் ரூபாய்க்குப் பெஞ்சு டெஸ்குகளை வாங்கித் தருவதாக உறுதி சொன்னார். இதுபோல நிறைய பேர் நிறைய செய்வதாக வாக்களித்தார்கள்.

அடித்தல் திருத்தலின்றி பேசியவர்களில் பெரும்பான்மையோர் சொன்னது இதுதான், ‘பள்ளியிலிருந்து ஒரு துரும்பையும் அவர் வீட்டுக்கு எடுத்துச் செல்வதில்லை’.

கூட்டத்தோடு கூட்டமாக தோழர் சீமாவோடு நின்றுகொண்டிருந்தபோதுதான், இந்தப் பள்ளியில் தன் பிள்ளை படிக்க வேண்டும் என்பதற்காக, குடும்பத்தை கோயம்புத்தூரிலிருந்து திருப்பூருக்குக் கொண்டு வந்துவிட்டு, திருப்பூரிலிருந்து தினமும் கோயம்புத்தூருக்கு வேலைக்குப் போய் வருவதாகவும் சொன்னார்.

ஒரு தமிழ்ப் பள்ளிக்கு இவ்வளவு ஈர்ப்பா என்றபோது, தான் மட்டுமல்ல இந்தப் பள்ளிக்காகத் திருப்பூருக்கு புலம் பெயர்ந்த குடும்பங்கள் ஏராளம் என்றார்.

பள்ளிக்காகக் குடும்பங்கள் புலம் பெயர்கின்றன. அதிகப்படியான ஊதியம் கிடைத்தபோதும், அரசுப் பணியே கிடைத்தபோதும் அவற்றை நிராகரித்துவிட்டு, இதே பள்ளியில் ஆசிரியைகள் பணியாற்றுகின்றனர். அப்படி என்னதான் இருக்கிறது இந்தப் பள்ளியில்?

குழந்தைகள் பட்டம் செய்கிறார்கள், பறக்க விடுகிறார்கள். ஆசிரிய அக்காக்கள் உதவுகிறார்கள். பனை ஓலையில் காற்றாடி செய்கிறார்கள், காற்றாடிகள் சுற்றுகின்றனவா என்று மைதானத்தில் வட்டமடிக்கிறார்கள். இதற்கும் ஆசிரிய அக்காக்கள் உதவுகிறார்கள். படம் வரைகிறார்கள், பொம்மை செய்கிறார்கள், தொப்பி செய்கிறார்கள் ஆடுகிறார்கள், பாடுகிறார்கள். அத்தனையையும் தாளாளர் படம் பிடித்து முகநூலில் வைத்து, பாருங்கள் என் குழந்தைகளின் திறனை என்று வியந்து கொண்டாடுகிறார்.

எனில், படிப்பு அவ்வளவுதானா? என்றால் இவற்றில் பெறுகிற தேர்ச்சியைக் காட்டிலும், கல்வியில் இவர்கள் தேர்ச்சியானது யாரும் பொறாமைப்படும்படியாகவே உள்ளது.

விருதுகளையும் பரிசுகளையும் அந்தக் குழந்தைகள் அள்ளிக் குவிக்கிறார்கள்.

மொழி உணர்வும் நாட்டுப்பற்றும் மிக்கவர்களாகவும், சுய ஒழுக்கத்தில் மிளிர்பவர்களாகவும் வார்த்தெடுக்கப்படுகிறார்கள்.

படித்த குழந்தைகள் நல்ல நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் பள்ளியை மறக்காமல் இருக்கிறார்கள்.

ஆங்கில வழிக் கல்வியிலிருந்து மக்களை தாய்மொழி வழிக் கல்விக்குத் திருப்புவது கடினம் என்கிறார்கள். இல்லை, சரியாக முயன்று அர்ப்பணிப்போடு உழைத்தால் திருப்பலாம் என்பதை நிரூபித்தபடி இருக்கிறது திருப்பூர் தாய்த் தமிழ்ப் பள்ளி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.