‘என் அன்பான உல்மஸ்’.
இப்படித்தான் அந்த இ-மெயில் தொடங்குவதாக அட்லாண்டிக் பத்திரிகையில் வெளியாகி இருக்கும் நீள்கட்டுரை ஆரம்பமாகிறது.
இது காதல் கடிதம்தான். ஆனால், இதில் அன்புக்குப் பாத்திரமான உல்மஸ் ஒரு பெண் அல்ல; ஆணும் அல்ல; உல்மஸ் ஒரு மரம். ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள ஆயிரக்கணக்கான மரங்களில் ஒன்று. ஆயிரக்கணக்கு என்று தோராயமாக சொல்வதற்கில்லை. அந்நகரில் உள்ள எழுபதாயிரத்துக்கும் அதிகமான மரங்களில் ஒன்று.
இந்த மரத்துக்குத் தான் ஒருவர் ஆசையுடன் இ-மெயில் அனுப்பியிருக்கிறார். இந்த மரம் மட்டும் அல்ல்; மெல்பர்ன் நகரில் உள்ள எந்த ஒரு மரத்துக்கும் மெயில் அனுப்பலாம். இதுவரை ஆயிரக்கணக்கானோர் மெயில் அனுப்பி மரங்களுடன் பேசியிருக்கின்றனர். ஆச்சரியமாக இருக்கிறதா? அதைவிட ஆச்சரியம் சில நேரங்களில் மரங்கள் அவர்களுக்குப் பதில் மெயிலும் அனுப்புவதுதான்!
மரங்கள் எப்படி மெயில் அனுப்பும்? மரங்கள் சார்பாக நகரசபையில் உள்ளவர்கள் பதில் அனுப்புகின்றனர்!
ஆனால், மரங்களுக்கு ஏன் மனிதர்கள் மெயில் அனுப்ப வேண்டும்? இது உண்மையில் ஆச்சரியமானது. மெல்பர்ன் நகர மரங்களிடம் மரத்தின் இ-மெயில் முகவரியை வழங்கிய நகரசபை நிர்வாகமே இதை எதிர்பார்க்கவில்லை!
மரங்களுடன் மனிதர்களுக்கு இருக்கும் பிணைப்பை உணர்த்தும் வகையில் அமைந்திருக்கும் இந்த மெயில் பரிவர்த்தனை, மரங்கள் மீதான நேசத்தை வெளிப்படுத்துகிற ஒரு திட்டத்தின் சற்றும் எதிர்பாராத எதிர்வினை.
பசுமை நகரம் மெல்பர்ன்
மெல்பர்ன் ஆஸ்திரேலியாவின் அழகிய நகரங்களில் ஒன்று. உலகில் வாழ்வதற்கு இனிமையான நகரம் எனும் அடைமொழியும் அதற்கு உண்டு. எல்லா நகரங்களில் இருப்பது போலவே மெல்பர்ன் நகரிலும் பசுமையான மரங்களும் பூங்காக்களும் உண்டு. என்ன, மற்ற நகரங்களை விட சற்று அதிக எண்ணிக்கையில் மரங்கள் உள்ளன.
அதைவிடவும் மற்ற நகரங்களை விட மெல்பர்ன் நகரசபை அதன் மரங்கள் மீது அதிகமாகவே அக்கறை கொண்டிருக்கிறது. இதன் அடையாளமாக கடந்த 2007-ம் ஆண்டு நகரசபை நகர்புறக் காடு எனும் திட்டத்தை உருவாக்கியது.
பொதுவாக நகரத்துச் சூழல் = கான்கீரிட் காடுகள் என்றுதானே வர்ணிகப்படுகிறது! இந்த நகரசபையோ மெல்பர்னைக் காடுகளுக்கு மத்தியில் இருக்கும் நகரம் என வர்ணிக்கும் சூழலை உருவாக்க விரும்பியது. அதன் விளைவுதான் நகர்புறக் காடு திட்டம்.
மெல்பர்ன் நகரை மேலும் பசுமையாக்குவது மற்றும் ஏற்கெனவே உள்ள பசுமையைப் பாதுகாப்பது என நகரசபையால் தீர்மானிக்கப்பட்டது. இதற்காக வெறுமனே புதிய மரக்கன்றுகளை நட்டு வைக்கும் அடையாளச் செயலுடன் நிறுத்திக்கொண்டு விடவில்லை. மிகவும் பொறுப்பாக நகரில் உள்ள மரங்கள் அனைத்தையும் கணக்கெடுத்தனர். மரங்களின் வகை, அவற்றின் ஆரோக்கியம் என எல்லா விவரங்களையும் சேகரித்தனர். இருக்கும் மரங்களில் எத்தனை வருகிற ஆண்டுகளில் பட்டுப்போகும் அபாயம் கொண்டிருக்கின்றன என்கிற விவரங்களையும் சேகரித்தனர்.
இந்த விவரங்களின் அடிப்படையில் அடுத்த 20 ஆண்டுகளில் மெல்பர்ன் நகரம் 30,000-க்கும் மேற்பட்ட மரங்களை இழக்கக் கூடும் என தெரிய வந்தது. வயதாகும் காரணம் மற்றும் வறட்சி உள்ளிட்டவற்றால் இந்த இழப்பு படிப்படியாக ஏற்படும் என்றும் அறியப்பட்டது.
ஆக, மெல்பர்ன் நகரின் பசுமையான சூழல் காக்கப்பட நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இதற்காக ஆண்டுதோறும் புதிய மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட முடிவு செய்யப்பட்டது. அதோடு ஏற்கனவே இருக்கும் மரங்களையும் பாதுகாக்க முயற்சி மேற்கொள்ளப்பட தீர்மானிக்கப்பட்டது. மரங்களின் வகைகளை அதிகரிப்பது முதலிய அம்சங்களுடன் மிகவும் விரிவான ஒரு திட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
மரங்களுக்காக ஒரு திட்டம்
நகரசபை திட்டம் தீட்டுவது ஒரு பக்கம் இருந்தாலும் அதில் பொது மக்கள் பங்களிப்பு இருந்தால்தானே முழு வெற்றி சாத்தியமாகும். அதிலும் பொது மக்கள் புழங்கும் இடங்களில் இருக்கும் மரங்களைப் பேணிக் காக்க வேண்டும் என்றால் அவர்களின் ஒத்துழைப்பு அவசியம் அல்லவா?
எனவேதான் மெல்பர்ன் நகரசபை பொதுமக்களையும் இந்தத் திட்டத்தில் ஆர்வத்தோடு பங்கேற்க வைக்க முடிவு செய்தது. இதற்காக கொஞ்சம் புதுமையாக யோசித்து ஒரு செயலைத் தொடங்கியது. எல்லா மரங்களுக்கும் இ-மெயில் முகவரி உருவாக்கப்பட்டன! இதைத் தொடர்ந்து, மரங்களுக்கு மெயில் அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மரங்களுக்கு மெயில் அனுப்பும் வசதியை ஏற்படுத்தித் தந்தபோது நகரசபை பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லை. குறிப்பிட்ட ஏதேனும் ஒரு மரம் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்குப் பராமரிப்பு தேவை எனும் கோரிக்கையை மெயில் மூலம் அனுப்பி வைக்கலாம் என்றே நகரசபை தெரிவித்திருந்தது. இதனால் மரங்கள் குறித்த மக்களின் ஈடுபாடு அதிகரிக்கும் என்பதோடு பராமரிப்பு தேவைப்படும் மரங்களையும் அறிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க உதவும் என்றே எதிர்பார்த்தது.
உதாரணத்துக்கு ஒரு மரத்தின் கிளை முறிந்திருக்கிறது என்ற தகவலையோ அல்லது வேறு ஒரு மரத்தில் வேர் வெளியே வந்து பாதிக்கப்பட்டிருக்கிறது என்ற தகவலையோ தெரிவிப்பார்கள் என்றுதான் நகரசபை நினைத்தது. நகரம் முழுவதும் மரங்கள் பரவி இருக்கும் நிலையில், எந்த இடத்தில் உள்ள மரம் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது என்பதை உடனடியாக கண்டறிவது சாத்தியமில்லை என்பதால் இந்த ஏற்பாடு. எனவே, அந்த அந்தப் பகுதியில் இருக்கும் மக்கள் ஆர்வம் காட்டி ஒரு மெயில் அனுப்பினால் அதைத் உடனே தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்கலாம். இது தான் நகரசபையின் திட்டம்.
இ-மெயில் மரங்கள்
2013-ம் ஆண்டு இந்த மெயில் அனுப்பும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், நகரசபை நிர்வாகிகள் கொஞ்சமும் எதிர்பார்க்காத வகையில் மெல்பர்ன் மக்கள் பலரும் மரங்களுக்கு நேரடியாக மெயில் அனுப்பத் தொடங்கினர். அதாவது மரத்துடன் பேசுவது போலவே குறிப்பிட்ட மரங்களுக்கு மெயில் அனுப்பினார்கள்! இயற்கையை நேசிப்பவர் என்றால் தங்கள் பகுதியில் உள்ள மரங்கள் மீது ஒரு காதல் இருக்கும் அல்லவா? தினமும் போகும்போதும் வரும்போதும் பார்த்துக்கொண்டிருக்கும் மரத்தின் மீது ஒரு பற்று இருக்கும் அல்லவா? ஒரு தோழன் போல அந்த மரத்தைக் கருதலாம் அல்லவா? இப்படி மரங்களுடன் பிணைப்பு ஏற்படுவது இயல்பானது தானே! மரங்களுடன் மானசீகமாகப் பேசுவதும் கூட பலருக்கு வழக்கம்தான். நிழலின் அருமை வேண்டுமானால் வெயிலில் தெரியலாம், ஆனால் மரங்களின் அருமையை அவற்றின் இருப்பிலேயே தெரிந்து கொள்ளலாம். அவை காட்சி இன்பம் மட்டும்தானா? இயற்கையின் ஆதாரமே மரங்கள்தானே!
அதனால்தான் மெல்பர்ன் மக்களும் வெகு இயல்பாக மரங்களுக்கான இ-மெயில் முகவரி மூலம் மரங்களைத் தொடர்பு கொண்டார்கள். ஒவ்வொருவரும் தங்கள் அபிமானமான மரத்துக்கு மெயில் அனுப்பினார்கள்.
அன்பே ஆருயிரே!
இவற்றில் ஒன்று தான் அன்பிற்கினிய உல்மஸ் மரத்துக்கான மின்மடல்.
‘இன்று செயிண்ட் மேரி கல்லூரியைக் கடந்து செல்லும்போது என் கண்ணில் பட்டது ஒரு கிளை அல்ல; மாறாக உனது மின்னும் அழகு. இது போன்ற செய்திகளை நீ எப்போதும் பெற்றுக்கொண்டிருக்க வேண்டும். நீ அத்தனை அழகான மரம்’
உல்மஸுக்கு மெயில் அனுப்பியவரின் உருக்கம் இது. (செல்போன் நம்பர் கொடுத்திருந்தால் என்ன ஆயிருக்கும்!)
இன்னொரு மெயில், அன்பான தங்க எல்ம் மரமே, நீ விரைவில் பட்டுப்போகும் நிலையில் இருப்பது சோகமாக உள்ளது. டிரக்குகள் உனது தாழ்வான கிளைகளைச் சேதமாக்கும்போது கவலை அளிக்கிறது. சுற்றி நடக்கும் கட்டுமானப் பணிகள் உன்னைக் களைத்துப்போகச் செய்துள்ளதா? என கரிசனத்துடன் விசாரிக்கப்பட்டிருந்தது.
அல்ஜீரிய ஓக் மரத்துக்கு எழுதப்பட்ட மெயிலில் இப்படித் தெரிவிக்கப்பட்டிருந்தது:
‘அன்பான அல்ஜீரிய ஓக் மரமே, எங்களுக்கு பிராண வாயு அளிப்பதற்கு நன்றி. இத்தனை அழகாக இருப்பதற்கு நன்றி...’
இப்படிப் பலரும் பலவிதங்களில் மரங்களுடன் பேசியிருந்தனர். மரங்கள் மீதான காதலையும், அன்பையும் வெளிப்படுத்தியிருந்தனர். ஒரு சிலர் மரங்களுடன் மனம் விட்டுப் பேசி தங்கள் மனக்குறைகளையும் கூட வெளிப்படுத்தியிருந்தனர்.
ஆச்சரியம் என்னவென்றால் மெல்பர்னில் வசிப்பவர்கள் மட்டும் அல்ல; அந்நகரில் வசித்து உலகின் வேறு நகரங்களுக்குக் குடிபெயர்ந்தவர்களும் தங்களுடன் பழகிய மரங்களை நினைத்து உருகி மெயில் அனுப்பியிருந்தனர். லண்டனில் வசிக்கும் மாணவி ஒருவர் தனக்கு ஆறுதல் அளித்து வந்த மரத்தைப் பார்க்க முடியாமல் ஏங்குவதாக தெரிவித்திருந்தார்.
மெல்பர்ன் நிர்வாகிகள் இத்தகைய எதிர்வினையை எதிர்பார்க்கவில்லை என்றாலும் மகிழ்ச்சி அடைந்தனர். மரங்களுடன் மெல்பர்ன் மக்கள் கொண்டிருந்த உணர்வுபூர்வமான பிணைப்பை இது உணர்த்துவதாக நினைத்தனர். மெல்பர்னை மரங்கள் மயமாக்கும் தங்கள் முயற்சிக்கான தார்மீக ஆதரவாகவும் எண்ணி உற்சாகம் கொண்டனர். அது மட்டும் அல்ல, திட்டத்துக்குப் பொறுப்பு வகிக்கும் நிர்வாகிகள் சில மெயில்களுக்கு மரங்களின் சார்பில் பதில் மெயிலும் அனுப்பி வைத்தனர். மரங்கள் பேசாது என தெரிந்தும்கூட அந்தப் பதில் மெயிலைப் பெற்றவர்கள் உற்சாகம் அடைந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
முன்னோடித் திட்டம்
இணையப் பயன்பாட்டில் இந்தத் திட்டம் ஒரு முன்னோடி முயற்சி என்பதிலும் சந்தேகமில்லை. அரசு மற்றும் நகர அமைப்புகளின் திட்டங்கள் தட்டையானதாக, ஒற்றைத்தன்மையுடன் அதிகாரமயமாக இல்லாமல் மக்களின் பங்களிப்பு கொண்டதாக இருந்தால் என்ன மாதிரியான அற்புதங்கள் எல்லாம் நிகழும் என்பதற்கான உதாரணமாக இந்தத் திட்டம் அமைகிறது. மக்களுடைய ஈடுபாடு மட்டும் அல்ல, நகரசபையின் ஈடுபாட்டுக்கும் இந்தத் திட்டம் உதாரணமாக இருக்கிறது. திட்டத்துக்காக அமைக்கப்பட்டுள்ள இணையத்தளத்தைப் பார்த்தே இதைத் தெரிந்து கொள்ளலாம். மெல்பர்ன் அர்பன் ஃபாரஸ்ட் விஷுவல் எனும் பெயரிலான அந்தத் தளம், அதிக அலங்காரம் இல்லாமல் எளிமையான வடிவமைப்புடன், மெல்பர்ன் நகரக்காடுகளை வலம் வர அழைக்கிறது.
நகரில் உள்ள 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள வழி செய்கிறது இந்தத் தளம். வரைபடம் வழியாக நகரில் எந்த இடங்களில் எல்லாம் மரங்கள் இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது. பச்சைப் புள்ளிகள் மின்னும் அந்த வரைபடத்தைப் பார்த்தாலே நெஞ்சம் உற்சாகம் கொள்கிறது.
சும்மாயில்லை, மரங்களின் வகை மற்றும் அவற்றின் ஆயுட்காலம் உள்ளிட்ட விவரங்களும் அவற்றுக்குரிய வண்ணங்களில் தனியே உணர்த்தப்பட்டுள்ளன.
மரங்களின் ஆயுட்காலம் பற்றிய சுருக்கமான விளக்கமும், மரங்களின் பலவகைத் தன்மையைக் காப்பதற்கான வழிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. அப்படியே மெல்பர்ன் நகரின் பசுமைப் போர்வையை அதிகரிப்பதற்கான வழிகளும் விளக்கப்பட்டுள்ளன. இவற்றில் பொதுமக்கள் பங்கேற்பதற்கான வழிகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மரங்களுக்கான ஒரு செயலி
இப்படி ஒரு துடிப்பான இணையத்தளத்தைப் பார்த்திருக்க முடியாது எனும் எண்ணத்தை இந்த இணையத்தளம் உண்டாக்குகிறது. மரங்களை இ-மெயில் மூலம் தொடர்பு கொள்ள முடிவது இதன் அழகான அங்கமாக இருக்கிறது. இந்த முயற்சி பற்றி விவரிக்கும் அட்லாண்டிக் பத்திரிகை கட்டுரை, இணையத்துடன் இணைக்கப்பட்ட பொருள்கள் பற்றி பெரிதாகப் பேசப்படும் நிலையில், இது போன்ற தொழில்நுட்பம் சார்ந்த தகவல் தொடர்பு எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கலாம் என்றும் குறிப்பிடுகிறது.
திட்டமிடலில் இணையத்தைப் பயன்படுத்திக்கொண்டு கூடவே அதன்வழியாக பொதுமக்களின் பங்களிப்புக்கும் வழி செய்யும்போது அது எல்லா விதங்களிலும் பயனுள்ளதாக இருக்கும்.
மரம் வளர்ப்பில் இணையத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் முயற்சிக்கு இன்னும் சில உதாரணங்கள் இருக்கின்றன. அமெரிக்காவில் போர்ட்லாண்ட் பகுதியில் உள்ள மரங்கள் பற்றிய தகவல் அளிப்பதற்காக ஒரு செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி, நகரில் எந்த பகுதிகளில் எல்லாம் மரங்கள் தேவை என அடையாளம் காட்டுகிறது.
மரங்கள் ஆரோக்கியத்தை அளித்து, நம்மிடையே புத்துணர்ச்சியையும் உண்டாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுபோல, எண்ணற்ற வழிகளில் பலன் தரும் மரங்களைப் பாதுகாக்க தொழில்நுட்பத்தையும் திறம்படப் பயன்படுத்துவது நம் கைகளில்தான் உள்ளது.
இணைப்புகள்: 1.மெல்பர்ன் நகரசபை திட்ட இணையத்தளம்: http://melbourneurbanforestvisual.com.au/#about 2.மரங்களுக்காக ஒரு செயலி: http://map.treesandhealth.org/ 3. அட்லாண்டிக் கட்டுரை: http://www.theatlantic.com/technology/archive/2015/07/when-you-give-a-tree-an-email-address/3982 |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.