நெட்டும் நடப்பும்

இன்ஸ்டாகிராம் ஆயுதமேந்திய இளம் பெண்!

சோமாலியா பற்றி உங்களுக்கு எல்லாம் என்ன தெரியும்? உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க தேசம் இது என்பதும், வறுமையும் வன்முறையும்

தினமணி

சோமாலியா பற்றி உங்களுக்கு எல்லாம் என்ன தெரியும்? உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க தேசம் இது என்பதும், வறுமையும் வன்முறையும் தாண்டவமாடும் நாடு என்பதும்தான் இதற்கான உங்கள் பதிலாக இருக்கும். இவற்றோடு சோமாலியக் கடல் கொள்ளையர்களும் நினைவுக்கு வரலாம். சோமாலியா பற்றி பெரும்பாலானோர் மனத்தில் உள்ள சித்திரம் இந்த வகையானதுதான். இதில் பொருட்குற்றம் ஏதுமில்லை. நாளிதழ்களைப் பிரித்துப் பார்த்தால் சோமாலியா பற்றி கண்ணில் படும் செய்திகள் இந்த எண்ணத்தைத் தான் பதியச் செய்கின்றன.

இவ்வளவு ஏன், 20 ஆண்டுகளுக்கும் மேலாக முறையான நாடாளுமன்றம் இல்லாத நாடு என்றுதான் சோமாலியாவை பிபிசி அறிமுகம் செய்கிறது. சோமாலியாலாண்ட் தவிர மற்ற இடங்கள் சுற்றுலாப் பயணிகளுக்குப் பாதுகாப்பானது அல்ல என்கிறது விக்கிடிராவல்ஸ் அறிமுகம். கூகுளில் சோமாலியா எனும் தேடல் பதத்துடன் உள்நாட்டுப்போர், வன்முறை, போர், வறுமை ஆகிய வார்த்தைகளே இடம்பெறுகின்றன.

எனவே சோமாலியா பற்றிய பொதுப்படையான சித்திரம், வன்முறையால் பாதிக்கப்பட்ட நாடு என்பதாகவே இருக்கிறது. இந்த கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனெனில் சோமாலியாவுக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அந்த முகம் பலரும் அறியாததாக உள்ளது. கண்டுகொள்ளப்படாததாகவும்.

உள்ளிருந்து ஒரு குரல்

சோமாலியாவின் இந்த இன்னொரு முகத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் வெளிப்படுத்துகிறார் உகாசோ பூகவ்.

யார் இந்த உகாசோ?

27 வயதான உகாசோ, இன்ஸ்டாகிராம் நட்சத்திரமாக அறியப்படுகிறார். அதாவது புகைப்படப் பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமில் அவர் பிரபலமாக இருக்கிறார். அவருக்கு ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் இருக்கின்றனர். அவர் வெளியிடும் புகைப்படங்களை உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவலுடன் பார்த்து ரசிக்கின்றனர். அதைவிட முக்கியமாக அவர்கள் அனைவரும் சோமாலியாவைப் புதிய வெளிச்சத்தில் பார்க்கின்றனர். பரவலாக அறியப்பட்ட சித்திரத்துக்கு மாறான வகையில் அந்நாட்டின் ஆன்மாவை தரிசிக்கின்றனர். அதன் கலாசாரத்தையும், தினசரி வாழ்க்கையின் நாடித்துடிப்பையும் அறிந்து கொள்கின்றனர்.

அதனால்தான் உகாசோ, மோமாலியா பற்றிய உலகின் பார்வையை மாற்றியவராக புகழப்படுகிறார்.

ஒருவர் தனிநபராக இதை செய்ய முடிந்திருப்பது ஆச்சர்யம்தான். உகாசோ இதை இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் வாயிலாக சாதித்திருக்கிறார். உலகம் பார்த்திராத சோமாலியாவை அவர் தனது புகைப்படப் பகிர்வுகள் மூலம் பார்க்கச்செய்து வருகிறார்.

அவர் படம் பிடித்துக்காட்டும் சோமாலியா, நாளிதழ்களில் பார்க்கும் போர் பாதித்த சோமாலியாவில் இருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதுதான் அவரை இந்தளவுக்கு வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

போர் பாதித்தால் என்ன, சோமாலியாவிலும் வாழ்க்கை அழகாக தான் இருக்கிறது என்பதை அவரது இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் உணர்த்துகின்றன. மற்ற நாடுகள் போலவே பல பிரச்னைகளுக்கு மத்தியிலும் அங்கு வாழ்க்கை எத்தனை துடிப்பாக இருக்கிறது என்பதை அவை உணர்த்துகின்றன.

சோமாலியக் கடற்கரைக் காட்சிகள், மீனவர்களின் வாழ்க்கை, துள்ளி விளையாடும் சிறுவன், துடிப்பான இளைஞர்கள் என விரியும் இந்தக் காட்சிகளில் இயல்பு வாழ்க்கையையும், மகிழ்ச்சி பொங்கும் முகங்களையும் தவறாமல் பார்க்கலாம். போரினால் ஏற்பட்ட பாதிப்பின் சிதிலங்களைப் பின்னணியில் பார்க்க முடிந்தாலும் சாமானிய மக்களின் வாழ்க்கை எப்போதும்போல தொடர்வதைப் பார்க்கலாம்.

சோமாலியா பற்றிய வறுமையும் வன்முறையும் நிறைந்த சித்திரங்களை இந்தப் படங்கள் கேள்விக்குறியாக்கி வியக்க வைக்கின்றன. அதனால்தான் ஆயிரக்கணக்கானோர் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பின் தொடர்கின்றனர்.

இதற்காகவே சோமாலியா பற்றிய தவறான பிம்பத்தை உடைத்தெறிந்தவராக பாராட்டப்படுகிறார்.

கனடாவில் இருந்து...

ஆனால், உகாசோ இதைத் திட்டமிட்டு செய்யவில்லை. எதையும் மாற்றிக்காட்ட வேண்டும் எனும் நோக்கத்துடனும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் தொடங்கவில்லை. உகாசோ சோமாலியாவில் பிறந்தவர்தான் என்றாலும் 1991-ல், உள்நாட்டுப் போர் தீவிரமாக இருந்ததால், கைக்குழந்தையாக இருந்த உகாசோவைத் தூக்கிக் கொண்டு கனடா நாட்டுக்குக் குடிபெயர்ந்தார் அவருடைய பாட்டி. அங்கு ஏற்கெனவே அவரது தந்தை தஞ்சம் அடைந்திருந்தார். தாய் மட்டும் சோமாலியாவிலேயே தங்கி விட்டார். உகாசோ கனடாவில்தான் மேற்கத்திய இளம் பெண்ணாகவே வளர்ந்தார். என்ன இருந்தாலும் தாயையும், தாய் நாட்டையும் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் அல்லவா? உகாசோ மனத்திலும் அந்த ஆசை இருந்தது. 2013-ம் ஆண்டில் கனடா வந்த அவரது மாமா, சோமாலியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி வியப்பாக எடுத்துக் கூறினார். அதோடு தாய்நாட்டுக்குச் சென்று பார்க்கும் எண்ணம் இருந்தால் அதற்கு இதுவே சரியான தருணம் என்றும் தெரிவித்தார். அடுத்தச் சில மாதங்களில் உகாசோ தாயைப் பார்க்க சோமாலியா பயணமானார்.

சோமாலியாவில் கண்ட மாற்றம் நிறைவாக இருக்கவே அங்கேயே தங்க தீர்மானித்துவிட்டார்.

அரசு அதிகாரியாக பணியாற்றத் தொடங்கிய அவருக்கு வாழ்க்கை என்னவோ திருப்தியாகத் தான் இருந்தது. ஆனால் கனடாவில் இருந்த உறவினர்களும், நண்பர்களும் தன்னை நினைத்து கவலைப்படலாம் என நினைத்து அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதற்காக சோமாலியாவின் இயல்பு வாழ்க்கையைப் படம் பிடித்து அந்தக் காட்சிகளை தன்னுடையை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடத் தொடங்கினார்.

நான் பாதுகாப்பாக இருக்கிறேன், நீங்கள் நினைப்பது போல இங்கு நிலைமை மோசமாக இல்லை, ரத்தமும், வன்முறையும் போய்விட்டது எனும் செய்தியை இந்தப் படங்கள் மூலம் பகிர்ந்து கொண்டார். இயல்பு வாழ்க்கை திரும்பிய சோமாலியாவில் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் குதூகலத்துடன் எடுத்துக்கொண்ட படங்களையும், வீடியோ காட்சிகளையும் பகிர்ந்து கொண்டார். தலைநகர் மொகிட்ஷுவில் வசித்தவர், சோமாலிய அம்மாக்களின் அலுப்புகளைக் கேலி செய்யும் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார். இந்தப் பகிர்வு அவருக்கும் உற்சாகத்தை கொடுத்தது.

எதிர்பாராத ஆர்வம்

நண்பர்கள் வட்டத்துக்காகப் பகிர்ந்து கொண்ட இந்தப் படங்கள் மற்ற நாடுகளில் உள்ள பலரைக் கவரும் என அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அதுதான் நடந்தது.

எல்லோருக்குமே உண்மையை அறிந்து கொள்வதில் ஆர்வம் இருக்கத்தானே செய்யும். பரவலாக முன்னிறுத்தப்பட்ட சோமாலியாவுக்கு மாறாக இதுதான் உண்மையான சோமாலியா எனக் காட்டிய அந்தப் படங்களை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் உள்ளவர்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். இப்படி தான் அவருக்கு ரசிகர்கள் பெருகினர். இந்த வரவேற்பு உகாசோவுக்கு ஆச்சர்யத்தை அளித்தது. அவர் எதிர்பாராதது.

மேலும் உற்சாகமாகி, சோமாலியாவின் அழகைப் புகைப்படங்களாக எடுத்து தள்ளி, பிறகு அதை இன்ஸ்டாகிராமில் பகிரத் தொடங்கினார். யுத்த இடிபாடுகளுக்கு மத்தியில் புதிதாக எழுந்து நிற்கும் கட்டடங்களையும், சீரமைக்கப்படும் சாலைகளையும் படம் பிடித்துக் காட்டினார். ஈத் திருநாள் கொண்டாட்டம், ராணுவ வீரர்களின் மக்கள் சேவை ஆகிய உணர்ச்சிமயமான காட்சிகளையும் பகிர்ந்தார். சோமாலியாவின் அழகைத் தொடர்ந்து படம் பிடித்து காட்டுவது தனது கடமை என்பது போன்ற உணர்வுடன் அவர் செயல்பட்டு வருகிறார். சோமாலியாவின் அழகை மட்டும் அல்ல அதன் கலாசாரத்தை உணர்த்தும் காட்சிகளையும் வெளியிட்டு வருகிறார். சோமாலியாவின் இடிபாடுகளை திரும்பிப் பார்த்து கடந்த காலத்தையும் வர்ணனை செய்து வருகிறார். இவற்றின் மத்தியில் அவரது சுயபடங்களும், கணவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட படங்களும் இடம்பெறுவதால் அந்தப் பக்கத்துக்கு மேலும் ஒரு ஈர்ப்பு கிடைக்கிறது. கட்டுப்பாடு மிக்க ஒரு சமூகத்தில் பெண்ணுக்கான சுதந்தரத்தின் பிரதிபலிப்பாகவும் அவர் துணிவுடன் உலா வருவதையும் இந்தப் படங்கள் வெளிப்படுத்துகின்றன.

இதனிடையே உகாசோவின் இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு இருக்கும் வரவேற்பு பற்றியும் அதற்கான காரணம் பற்றியும் நாளிதழ்கள் விவரித்து எழுத அவர் மேலும் பலருக்கு அறிமுகமாகி இன்ஸ்டாகிராம் நட்சத்திரமாகி விட்டார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்ட உள்ளது.

இன்ஸ்டாகிராம் ஆயுதம்

புகைப்படப் பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராம் மூலம் நட்சத்திரமானவர்கள் பலர் இருக்கின்றனர். ஃபேஷன் காட்சிகளையும், கண்ணுக்கு இனிய சித்திரங்களையும் பகிர்ந்து கொண்டு பிரபலமானவர்கள்தான் அதிகம் என்றாலும் ஒரு தேசத்தின் இயல்பு நிலைக் காட்சிகளைப் பகிர்ந்து கொண்டு உலகின் கவனத்தை ஈர்த்தது உகாசோ மட்டும் தான். பிரச்னை பூமியாக உலகம் எண்ணும் தனது நாட்டில் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதைப் பூலோக குடிமக்கள் பார்ப்பதற்கான சாளரமாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் அமைந்துள்ளது.

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்துக்குள் நீங்கள் எட்டிப் பார்த்தாலும், துடிப்பான இளம்பெண்ணின் சுயபடங்களின் ஊடே சோமாலியாவின் தினசரி வாழ்க்கையின் குறுக்குவெட்டுச் சித்திரத்தையும் காண முடியும்.

ஆனால் சிலர், சோமாலியாவின் மகிழ்ச்சியான முகத்தைக் காண்பித்து அங்குள்ள பிரச்னைகளையும், இன்னும் முழுவதுமாக முடிவுக்கு வராத போரையும் அவர் மூடி மறைப்பதாக குற்றம் சாட்டலாம். இதற்கும் உசாகோ தனது இன்ஸ்டாகிராம் குறிப்புகள் மூலமே பதில் அளித்துள்ளார். பலர் நான் யதார்த்த்தை மறைத்து கடற்கரைக் காட்சிகளை காட்டிக்கொண்டிருப்பதாக கூறுகின்றனர். முதல் விஷயம் எங்களுக்கு கடற்கரை இருக்கிறது. இன்னொரு விஷயம் எங்களுக்கு தெருக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் நாங்கள் முன்னேறிக்கொண்டிருக்கிறோம். இந்த இடத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கப் பாடுபடுபவர்களுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன் என ஒரு புகைப்படப் பதிவில் கூறியுள்ளார்.

இன்னொரு பதிவில், இங்கு நான் எடுக்கும் புகைப்படங்கள் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு முக்கியமானவை, இரவில் தெருவிளக்கு பிரகாசமாக எரிவதை படம் பிடிக்கிறேன். இது மற்றவர்களுக்கு சாதாரணமாக தெரியலாம், ஆனால் இருளில் மூழ்கியிருந்த நாட்டில் இப்போது தெருவிளக்கு இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

போரால் பாதித்த நாட்டை எத்தனை ஆண்டுகளுக்கு தான் அப்படியே பார்த்துக்கொண்டிருப்பது. அங்குள்ள மனிதர்களின் வாழ்க்கையையும் பார்க்க வேண்டாமா? அதை தான் உசாகோவிவின் இன்ஸ்டாகிராம் பக்கம் கேட்காமல் கேட்கிறது.

இணையத்துக்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு. அதில் முக்கியமானது அதன் ஜனநாயகத்தன்மை. இணையம் எல்லோருக்கும் சம வாய்ப்புகளை அளிக்கிறது. இணையத்தை இப்படித் தான் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடில்லை. இந்த ஆதார அம்சத்தை பயன்படுத்திக்கொண்டு பல சாமானியர்கள் இணையத்தை ஒரு ஆயுதமாக்கிக் கொண்டுள்ளனர். அந்த வரிசையில் உசாகோவும் இப்போது சோமாலியாவுக்காக வாதாடி அதைப் புதிய ஒளியில் பார்க்கச் செய்து வருகிறார். அது மட்டும் அல்ல, இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகச் சேவைகளை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான அழகான முன்னுதாரணமாகவும் இருக்கிறார்.

உசாகோவின் இன்ஸ்டாகிராம் பக்கம்: https://instagram.com/ugaasadda/

உசாகோ தனது இன்ஸ்டாகிராம் பற்றி எழுதிய கட்டுரை: http://www.independent.co.uk/voices/how-my-instagram-pictures-from-inside-somalia-are-helping-to-filter-out-damaging-stereotypes-10453279.html

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோனா கல்வி நிறுவன வளாகத்தில் ஜன. 10 இல் ஸ்ரீநிவாச கல்யாணம்

தனித்துவ அடையாள எண் பதிவு: விவசாயிகளுக்கு அழைப்பு

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் தா்னா

விழுப்புரத்தில் காஞ்சி மகா பெரியவா்ஆராதனைப் பெருவிழா

பூட்டியிருந்த வீட்டில் ரூ.23 ஆயிரம் திருட்டு

SCROLL FOR NEXT