நெட்டும் நடப்பும்

இணைய பாடங்களாகும் இணையத்தளங்கள்

ஒரு நல்ல இணையத்தளம் எப்படி இருக்க வேண்டும்? இந்தக் கேள்விக்கான பதிலை வரையறை செய்வதற்கில்லை. நல்ல இணையத்தளங்களுக்கான ஆதார

தினமணி


ஒரு நல்ல இணையத்தளம் எப்படி இருக்க வேண்டும்? இந்தக் கேள்விக்கான பதிலை வரையறை செய்வதற்கில்லை. நல்ல இணையத்தளங்களுக்கான ஆதார அம்சங்கள் என்று பலவற்றைச் சொல்ல முடியுமே தவிர, ஒரு இணையத்தளம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூற முடியாது. அதிலும் ஸ்மார்ட்போன்களுக்கான செயலிகள் செல்வாக்கு பெற்றுவரும் நிலையில் இணையத்தளங்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி இருக்கும்போது நிச்சயமாக இணையத்தளங்களை எந்தச் சட்டகத்திலும் அடைக்க முடியாது.

ஆனால் நல்ல இணையத்தளங்கள் எப்படி எல்லாம் இருக்கின்றன என அழகான உதாரணங்களைக் காட்ட முடியும். அதாவது வடிவமைப்பு, உள்ளடக்கம், பயன்பாடு என எல்லாவற்றிலும் புதுமையாக இருக்கும் தளங்கள்! எப்படி எல்லாம் இணையத்தளங்களை உருவாக்குகின்றனர் என வியக்க வைக்கும் தளங்கள்!

பூவா தலையா தளம்

முதல் உதாரணமாக எளிமையான இணையத்தளம் ஒன்றைப் பார்க்கலாம். ஃபிலிப் எ காயின் (http://justflipacoin.com/) எனும் இந்தத் தளத்தில் பெரிதாக ஒன்றும் கிடையாது. அது தான் அதன் சிறப்பு. அதற்காக இந்தத் தளத்தில் ஒன்றுமே கிடையாது என்றில்லை. இதில் பூவா, தலையா போட்டுப் பார்க்கலாம். இந்தத் தளத்தில் நுழைந்ததுமே ஒரு வட்டம் வரவேற்கும். அந்த வட்டம்தான் நாணயம். அதில் கிளிக் செய்தால் நாணயத்தை சுண்டி விட்டது போல அது சுழன்று பூவிலோ தலையிலோ வந்து நிற்கும். அவ்வளவு தான் இந்தத் தளம். புதுமையாக இருக்கிறது இல்லையா?

கையில் நாணயம் இல்லாமல், மவுஸ் கிளிக் மூலம் நாணயத்தை சுண்டி விட்டு முடிவை தெரிந்து கொள்ள உதவுகிறது இந்தத் தளம். விளையாட்டாகப் பயன்படுத்தலாம். அல்லது குழப்பமான மனநிலையில் முடிவெடுக்க நாணயத்தை சுண்டிப் பார்க்கலாம்.

இணையத்தள சேவையை வழங்கும் நிறுவனம் ஒன்று இந்தத் தளத்தை உருவாக்கி இருக்கிறது. அவர்களுடைய சேவை பற்றி கவனத்தை ஈர்ப்பதற்கான விளம்பரம் என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால் விளம்பரத்தின் சாயலோ, ஊடுருவலோ இல்லாமல் இருக்கிறது.

நாணயத்தைச் சுண்டிப்போட்டுப் பார்ப்பதற்கு என்றே ஒரு தளம் அமைக்கப்பட்டிருப்பது இணையத்தளத்துக்கான வடிவமைப்பு, நோக்கம் ஆகிய இரு அம்சங்களைப் பற்றியுமே நிறைய யோசிக்க வைக்கும். இந்தத் தளத்தை வெறும் தளம் என்று புறந்தள்ளிவிட முடியாது. இதற்கு ஒரு நோக்கம் இருக்கிறது. அதைக் கச்சிதமாக நிறைவேற்றியும் தருகிறது.

கேள்வி பதில் தளம்

ஃபிளிப் எ காயின் தளத்தைப் பொறுத்தவரை அதன் எளிமைதான் அழகு. இதேபோல இன்னொரு எளிமையான தளமாக இருக்கிறது - கேள்வி பதில் இணையத்தளம். 

இப்போது விண்வெளியில் எத்தனை பேர் இருக்கின்றனர்? இதுதான் கேள்வி. இந்தக் கேள்வியே தளத்தின் முகவரி (http://www.howmanypeopleareinspacerightnow.com/). இந்தக் கேள்விக்கான பதிலை முகப்புப் பக்கத்தில் எண்ணாக பார்க்கலாம். அதாவது விண்வெளியில் எத்தனை வீரர்கள் பணியில் ஈடுபட்டிருக்கின்றனரோ அவர்களின் எண்ணிக்கையை இந்தத் தளம் காட்டுகிறது. (அந்த வீரர்களின் பெயர் மற்றும் அவர்கள் விண்வெளியில் வாசம் செய்யும் நாள்களும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன).

விண்வெளிக்கு வீர்ர்கள் போய் வந்து கொண்டிருப்பதால் இந்த எண்ணிக்கை மாறிக்கொண்டே இருக்கும்.

புதுக்கவிதை போல இந்தத் தளம் ஒரு அழகான இணைய கவிதை.

புதிய அலை தளங்கள்

இந்த இரண்டு தளங்களுமே எளிமையில் அல்ல, உள்ளடக்கத்தை முன்வைக்கும் கோட்பாட்டையே மாற்றி இருப்பவை. இணையத்தளம் எனும் பரப்பை கருத்துகள் அல்லது தகவலை அளிப்பதற்காக எப்படிப் புதுமையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என இவை உணர்த்துகின்றன. இணையப் பரப்பை, வழக்கமான பாணியில் கட்டம் கட்டமாகப் பிரித்து அவற்றில் பெட்டிப் பெட்டியாகத் தகவல்களை அடுக்குவதற்குப் பதில் இந்தத் தளங்கள் அந்தப் பரப்பை பயன்படுத்தும் விதத்தில் ஒரு பயன்பாட்டை அளிக்கின்றன.

இந்தப் போக்கின் நீட்சியாக ஸ்டார்ட்டப்லாஞ்ச்லிஸ்ட் இணையத்தளம் இருக்கிறது.

வளர் இளம் நிறுவனங்கள் ஸ்டார்ட்டப் என்று குறிப்பிடப்படுகின்றன. பெரிய அளவில் முதலீடு இல்லாமல், மனத்தில் உள்ள புதுமையான எண்ணம் வர்த்தக வெற்றிக்கு அஸ்திவாரமாக அமையுமா என சோதித்துப்பார்க்க முயலும் புதிய நிறுவன்ங்கள் இவ்வாறு பொருள் கொள்ளப்படுகின்றன. இன்று இணைய உலகில் நட்சத்திர அந்தஸ்து பெற்றிருக்கும் வாட்ஸ் அப், ஸ்னேப்சாட், இன்ஸ்டாகிராம் போன்றவை இப்படி உருவான நிறுவனங்கள். தொழில்நுட்ப வெளியில் இத்தகைய வளர் இளம் நிறுவனங்கள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. இவற்றில் ஏதேனும் சில நிறுவனங்கள் வருங்கால வர்த்தக வெற்றிக்கதைகளாக உருவாகலாம் என்பதால் முதலீட்டையும் இவை பெருமளவு ஈர்த்து வருகின்றன.

ஆனால் இவற்றின் வெற்றியைக் கணிப்பது அடுத்து எந்தத் திரைப்படம் ஹிட்டாகும் என யூகிப்பதை விட கடினமானது. பல இளம் நிறுவனங்கள் முதலீட்டை விழுங்கி விட்டு காணாமலும் போயிருக்கின்றன.

பரிந்துரையில் புதுமை

தோல்வி விகிதத்தை மீறி ஸ்டார்ட்டப் நிறுவனங்கள் பெரும் ஆர்வத்தை ஈர்த்து வருகின்றன. பலர் அடுத்த வெற்றிகரமான இளம் நிறுவனத்தை நம்மால் உருவாக்க முடியுமா? என கனவு காண்கின்றனர். இவர்களுக்கு வழிகாட்டுவதற்காக என்றே எண்ணற்ற புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் இருக்கின்றன. எல்லாமே தொழில்முனைவு ஜாம்பவான்களால் எழுதப்பட்டவை. புதிய நிறுவனங்களைத் துவக்க வழிகாட்டுதல் வேண்டுபவர்களுக்கு உதவக்கூடிய புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை அடையாளம் காட்டுகிறது ஸ்டார்ட்டப்லாஞ்ச்லிஸ்ட் இணையத்தளம்.

பொதுவாக இதுபோன்ற புத்தகப் பரிந்துரை தளங்கள் எப்படி அமைந்திருக்கும்? புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் வரிசையாகப் பட்டியலிடப்பட்டிருக்கும். அவற்றின் வகைக்கு ஏற்ப பிரிக்கப்பட்டிருக்கும். சமீபத்தில் சேர்ந்தவை, அதிகம் படிக்கப்பட்டவை என்றெல்லாம் அடையாளம் காட்டப்பட்டிருக்கும். ஒவ்வொரு புத்தகத்துடனும் அதன் அட்டைப் படத்துடன் அறிமுகக் குறிப்பும் இடம்பெற்றிருக்கும். விமரிசனமும் இடம்பெற்றிருக்கலாம்.

ஆனால் இந்தத் தளம், பட்டியல் எல்லாம் இல்லாமல் படிக்க வேண்டிய புத்தகம் மற்றும் கட்டுரைகளைப் பரிந்துரைக்கிறது. அதிலும் பயனாளிகளின் எதிர்பார்ப்புக்கேற்ற  புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை முன்வைக்கிறது. இதை எப்படிச் செய்கிறது தெரியுமா? பயனாளிகளுடன் உரையாடி அவர்கள் எதிர்பார்ப்பைத் தெரிந்துகொண்டு அதனடிப்படையில் செயல்படுகிறது.

இந்தத் தளத்தில் நுழைந்ததுமே அதன் நோக்கம் அழகாக குறிப்பிடப்பட்டு அதன் கீழ், ஒரு பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. எந்த வகையான கருத்துகளைத் தேவை என புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ள இந்தப் பட்டியலில் தேவையானவற்றை கிளிக் செய்தால் அவற்றுக்குப் பொருத்தமான புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

வடிவமைப்பில் புதுமை

வழக்கமான புத்தகப் பரிந்துரைத் தளத்தின் உள்ளடக்கம் மற்றும் வடிவமைப்பை தலைகீழாகப் புரட்டிப்போட்டு பயனாளிகளின் விருப்பத்திற்கேற்ற தேர்வை முன்வைத்து ஒரு பிரத்யேகத் தன்மையை உருவாக்கித் தருகிறது இந்த இணையத்தளம். அந்த வகையில் இது வெறும் இணையத்தளமாக இல்லாமல் இணையச் சேவையாக விளங்குகிறது. வளர் இளம் நிறுவனங்கள் பற்றிய புத்தகங்களை எல்லாம் தொகுத்தளித்து, விரும்பியதை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்வதற்கு மாறாக, உங்கள் எதிர்பார்ப்பு என்ன என்று கேட்டு அதற்கேற்ற புத்தகங்களையும்  கட்டுரைகளையும் வழங்குகிறது.

இணையத்தள வடிவமைப்பின் அடுத்தக் கட்டப் பாய்ச்சலின் அடையாளமாக இவை இருக்கின்றன. அது மட்டும் அல்ல; தள வடிவமைப்பில் புதுமையும் படைப்பாக்கமும் தேவை எனும் கருத்தையும் இவை சொல்லாமல் சொல்கின்றன.

மேலும் சில தளங்கள்

இவை வடிவமைப்பில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் மட்டும் அல்ல. இந்த மாற்றங்கள் உள்ளடக்கம் சார்ந்தவையாகவும் இருக்கின்றன. உள்ளடக்கத்தைப் புரிய வைப்பதில் பழைய அலுத்துப்போன உத்திகளை கைவிட வேண்டும் எனும் வேட்கை, உள்ளடக்கத்தின் தன்மையையே மாற்றும் மாயத்தையும் நிகழ்த்தி வருவதை இந்தப் புதிய அலை தளங்கள் உணர்த்துகின்றன.

நம்முடைய பல தளங்கள் வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் இன்னும் இணைய கற்காலத்தைச் சேர்ந்தவையாக இருப்பதைப் பார்க்கும்போது இந்தப் போக்கின் முக்கியத்துவத்தை இன்னும் கூடுதலாக வலியுறுத்த தோன்றுகிறது.

மேலே பார்த்த பூவா தலையா தளம் போலவே இன்னொரு தளமும் இருக்கிறது. பிரிக்னாமிக்ஸ் எனும் கோட்பாட்டை முன்வைத்து பிரபலமான புத்தகத்தை அடியொற்றி அமைக்கப்பட்டுள்ள இந்தத் தளம், பூவா தலையா உத்தியை மனித பழக்க வழக்கங்களைப் புரிந்து கொள்வதற்கான சோதனையாக முன்வைக்கிறது. https://www.freakonomicsexperiments.com/home/faqs

இதே போல ரேண்டம்.ஆர்க் தளமும் பூவா தலையா உத்தியை இன்னொரு கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது: https://www.random.org/coins/

                                ***

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோனா கல்வி நிறுவன வளாகத்தில் ஜன. 10 இல் ஸ்ரீநிவாச கல்யாணம்

தனித்துவ அடையாள எண் பதிவு: விவசாயிகளுக்கு அழைப்பு

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் தா்னா

விழுப்புரத்தில் காஞ்சி மகா பெரியவா்ஆராதனைப் பெருவிழா

பூட்டியிருந்த வீட்டில் ரூ.23 ஆயிரம் திருட்டு

SCROLL FOR NEXT