நெட்டும் நடப்பும்

நம்பிக்கை தரும் இணையத்தளங்கள்

இணையத்தில் கோடிக்கணக்கில் இணையத்தளங்கள் இருக்கின்றன. அந்தத் தளங்களை எல்லாம் நூற்றுக்கணக்கில் வகைப்படுத்தலாம். பொதுவாக,

தினமணி

ணையத்தில் கோடிக்கணக்கில் இணையத்தளங்கள் இருக்கின்றன. அந்தத் தளங்களை எல்லாம் நூற்றுக்கணக்கில் வகைப்படுத்தலாம். பொதுவாக, செய்தித் தளங்களையும், சமூக வலைத்தளங்களையும் எல்லோரும் அறிந்திருக்கின்றனர். பொழுதுபோக்குத் தளங்களும், யூடியூப் போன்ற வீடியோ தளங்களும் பரவலாக அறியப்பட்டுள்ளன. ரெட்டிட் போன்ற இணையச் சமூகங்களும், பஸ்ஃபீட் போன்ற இணையத் திரட்டிகளும் பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால், இப்படிப் பரவலாக அறியப்பட்ட இணையத்தளங்களை மீறி இணையத்தில் அறிந்து கொள்ள வேண்டிய இணையத்தளங்கள் அநேகம் இருக்கின்றன. இவற்றில் ஆக்கம் தரும் வகையிலான தளங்கள் என பெரிய பட்டியல் போடலாம். இந்தப் பட்டியலில் உள்ள தளங்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் ஊக்கத்தையும், நம்பிக்கையையும் அளிக்கக் கூடியதாக இருப்பதுதான் இவற்றின் தனிச்சிறப்பு.

நம்பிக்கைக் கதைகள்

எங்கே, உதாரணமாக, ஒரு தளம் சொல்லுங்களேன் என்று கேட்டால், கிவ்ஸ் மீ ஹோப் (http://www.givesmehope.com/) தளத்தைச் சுட்டிக்காட்டலாம். கிவ்ஸ் மீ ஹோப், அதன் பெயர் உணர்த்துவது போலவே நம்பிக்கை தரும் இணையத்தளம்.

இதில் நம்பிக்கை அளிக்கும் சின்னச் சின்ன கதைகளைப் படிக்கலாம். எல்லாக் கதைகளுமே இணையவாசிகளால் பகிர்ந்து கொள்ளப்பட்டவை. வெவ்வேறு சூழல்களில் பலவகையான மனநிலையில் பகிர்ந்து கொள்ளப்பட்டவ. ஆனால் எல்லாமே, வாழ்க்கை நம்பிக்கை அளிக்கிறது எனும் செய்தியை முன்வைப்பவை.

உதாரணத்துக்கு ஜென்னா என்பவர், தனது (கஸின்) சகோதரரின் ஃபேஸ்புக் நிலைத்தகவல் பற்றிய செய்தியைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அன்பு அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள், உன்னை நேசிக்கிறேன்’ எனும் அந்த நிலைத்தகவலைச் சுட்டிக்காட்டி, சகோதரரின் அம்மா ஆறு மாதங்களுக்கு முன் இறந்துவிட்டாலும் கல்லூரியில் முதலாண்டு படிக்கும் அவர், தன் அம்மா மீது வைத்திருக்கும் மாறாத பாசம், நம்பிக்கை அளிக்கிறது என ஜென்னா குறிப்பிட்டுள்ளார்.

மேடி என்பவர் பள்ளியில் தான் தனிமைப்பட்டு நிராகரிக்கப்பட்டதாக உணர்கிறார். ஆனாலும் பள்ளி வேனின் பின் இருக்கையில் அமர்ந்து கண்ணீரைக் கட்டுப்படுத்த முயன்ற நிலையில், தன்னைப் பார்த்து புன்னகை புரிந்து ஊக்கம் அளித்த வேன் டிரைவரின் புரிதல் நிறைந்த புன்னகை மற்றும் அமைதியான ஆறுதல், நம்பிக்கை அளிப்பதாக கூறியுள்ளார்.

ஒவ்வொருவரும் இதே முறையில் சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் இடையே வாழ்க்கையில் தாங்கள் நம்பிக்கையை உணர்ந்த தருணங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். படித்துப் பார்த்தால் உங்களுக்கும் உற்சாகமாக இருக்கும். தானாக தன்னம்பிக்கை பிறக்கும். உலகம் விரோதிகளாலும் துரோகம் செய்பவர்களாலும் நிறைந்திருப்பதாக நினைப்பவர்கள் மனத்தில் கூட நம்பிக்கைச்செடி வேர் விடும்.

இதே போன்ற அனுபவங்கள் உங்களிடமும் இருந்து அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் எண்ணமும் இருந்தால் நீங்களும் இந்தத் தளத்தில் பதிவிடலாம்.

ஒரு தலைப்பு மற்றும் சில வரிகளில் அனுபவத்தை விவரித்து, வாழ்க்கை நம்பிக்கை தருகிறது (ஜி.எம்.எச்) என முடிக்கலாம்.

குறிப்பிட்ட அனுபவப் பகிர்வு மிகவும் கவர்ந்தால் அதன் கீழ் பின்னூட்டமாக கருத்து தெரிவிக்கும் வசதியும் இருக்கிறது. அவசியம் குறித்து வைத்துக்கொண்டு அடிக்கடி விஜயம் செய்து பாருங்கள்.

ஊக்கம் தரும் வரலாறு

லெட்டர்ஸ் ஆஃப் நோட் (http://www.lettersofnote.com/) இணையத்தளமும் இதேபோல கடிதங்களின் மூலம் ஊக்கத்தை அளிக்கிறது. சாதாரண கடிதங்கள் அல்ல; வரலாற்றில் இருந்து எடுக்கப்பட்ட கடிதங்கள்.

இமெயில் யுகத்தில் கடிதங்களை நினைவுபடுத்தும் இந்த இணையத்தளம் விஷேசமானது. கடிதங்களுக்கு என்று ஒரு வரலாறு இருக்கத்தானே செய்கிறது. எத்தனை மகத்தான உறவுகளுக்கு அவை சாட்சியாக இருந்திருக்கின்றன! எத்தனை உன்னதமான நட்புகளுக்கு அவை பாலமாக இருந்திருக்கின்றன. கடிதங்களே ஒரு காலப் பொக்கிஷம் தானே. இந்தப் பொக்கிஷங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, மறக்க முடியாத கடிதங்களை லெட்டர்ஸ் ஆஃப் நோட் இணையத்தளம் வெளியிட்டு வருகிறது.

அடிப்படையில் இந்தத் தளம் ஒரு வலைப்பதிவு தான். கடிதங்கள், அஞ்சல் அட்டைகள், தந்திகள், தொலைநகலிகள் உள்ளிட்ட தகவல் பரிமாற்ற ஆவணங்களை அழகாகப் பதிவு செய்து வரும் வலைப்பதிவு.

ஒவ்வொரு ஆவணமும் அவற்றுக்கான நகலுடன் அவை எழுதப்பட்ட காலம் மற்றும் சூழல் போன்ற விவரங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. சில, நட்பின் ஆற்றலை நினைவு கூறுகின்றன. சில அன்பைப் பரிமாறிக்கொள்கின்றன. இன்னும் சில சோதனைகளுக்கு மத்தியில் நம்பிக்கை தந்த இதயங்களுக்கு நன்றி தெரிவித்து உருகுகின்றன. இவற்றைப் படிக்கும்போது, இடைப்பட்ட தொலைவை மீறி நெருக்கமாக இருந்த நெஞ்சங்களைப் புரிந்துகொள்ள முடிவதோடு அவர்களின் உறவுப்பாலம் கடிதங்களால் சிறகடித்த அற்புதத்தையும் வியப்புடன் திரும்பிப் பார்க்க முடிகிறது.

ஒவ்வொரு கடிதமும் ஒருவிதத்தில் மனித உறவின் அருமையைப் புரியவைத்து ஊக்கம் அளிக்கிறது.

உதாரணத்துக்கு நாவலாசிரியர் எமிலி டிக்கின்சன் தனது தோழிக்கு எழுதிய கடிதங்கள்! அவர் மறைவுக்குப்பின் வெளியிடப்பட்ட இந்தக் கடிதங்கள் மூலம்தான் அவரது கவித்துவ ஆளுமையே முழுமையாக வெளிப்பட்டது.

‘இப்போது இந்த ஜூன் மாத நன்பகலில் எனக்கு ஒரே எண்ணம் தான் உள்ளது, அது உன்னைப்பற்றி சூசி, ஒரே பிரார்த்தனை தான் உள்ளது, அது உனக்கானது... என துவங்கும் அந்தக் கடிதத்தில், எனக்கு நீ மேலும் மேலும் தேவைப்படுகிறாய்... எனது மிகப்பெரிய இதயத்தை இழந்து தவிக்கிறேன்.. எனக் குறிப்பிட்டுள்ளார்.

அட நமக்கும் இத்தகை நட்புள்ளம் கிடைக்காதா என ஏங்கச் செய்து மானுடம் மீது நம்பிக்கை துளிர்க்க இந்தக் கடிதத் தளத்துக்குச் செல்வதையும் வழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்.

நம்பிக்கைக் காணொலிகள்

ஊக்கம் தரும் கதைகள் எந்த வடிவில் இருந்தாலும் சிறந்தது என்றாலும் அவற்றை வீடியோ காட்சியாகப் பார்க்க முடிந்தால் இன்னும் சிறப்பானது என நினைப்பவர்கள் நேராக கர்மா டியூப் (http://www.karmatube.org/ ) இணையத்தளத்துக்கு விஜயம் செய்யலாம். பிரபலமான யூடியூப் வீடியோ பகிர்வுத் தளத்தில் நீங்கள் பலவகையான வீடீயோக்களை பார்த்து ரசித்திருக்கலாம். இந்தத் தளத்தை நம்பிக்கை கதைகளுக்கான யூடியூப் என்று சொல்லலாம். ஏனெனில் இதில் நம்பிக்கைச் செய்தியை வலுவாகச் சொல்லும் வீடியோ காட்சிகள் மட்டுமே பதிவேற்றப்படுகின்றன.

இந்த வீடியோக்கள் தினசரி நாயகர்கள், கலை மற்றும் இசை, சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன. இவை தவிர உற்சாக உரைகள் மற்றும் நேர்க்காணல்களும் தனியே உள்ளன.

ஒவ்வொரு வீடியோவும் இணையவாசிகள் தெரிவித்த கருத்துகளின்படி ஊக்கம் அளிப்பவை, தகவல்பூர்வமானவை, துணிச்சலானவை, அழகு மிக்கவை என்றும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

ஐந்து அல்லது பத்து நிமிடங்களை இந்தத் தளத்தில் செலவிட முடிந்தால் மனம் புத்துணர்ச்சி பெறுவதை உணரலாம். இதில் சந்தாதாராக சேர்ந்தால் வீடியோக்களை மெயிலில் தரிசிக்கலாம்.

வீடியோ கதைகள்

ஸ்டோரி டெல்லர்ஸ் பார் குட் (http://storytellersforgood.com ) இணையத்தளமும் வீடியோ சார்ந்தது என்றாலும் இது வீடியோ கதைகளுக்கானது. நிஜ வாழ்க்கைக் கதைகளை வீடியோவாகப் படம் பிடித்து அவற்றின் மூலம் ஊக்கத்தை விதைக்கும் தளம்.

இந்தத் தளம் உருவான விதேமே நெகிழ வைக்கும் ஒரு கதைதான். இதன் நிறுவனரான காரா ஜோன்ஸ், அமெரிக்காவில் பத்திரிகையாளாராக இருந்தவர்.

ஒருமுறை விபத்து பற்றிய செய்தி சேகரிக்கச் சென்றிருக்கிறார். இவரது குழு போன நேரத்தில் சம்பவ இடத்தில் எல்லாம் சகஜ நிலைக்குத் திரும்பியிருந்தது (அமெரிக்காவில்). எனவே மேலும் செய்தியைத் தேடி பாதிக்கப்பட்டவரின் வீட்டுக்கே சென்றிருக்கிறார். அங்கு வாயிலில் அமர்ந்திருந்த இளம்பெண் ஒருவர் இவரைப் பார்த்ததுமே பதற்றத்துடன், ‘ எனது அம்மாவுக்கு என்ன ஆயிற்று? என் அப்பா என்னை அழைத்து இங்கு காத்திருக்குமாறு கூறினார்! ஒரு மோசமான விபத்து பற்றி செய்தியை பார்த்தேன். அது என் அம்மாவா? ...’ அவரது குரல் பரிதவித்தது. நான் ஒரு வார்த்தை கூட பதில் சொல்லாமலே அந்த பெண் நடந்ததை புரிந்து கொண்டுவிட்டார்.

இந்த அனுபவத்தை விவரித்துள்ள காரா ஜோன்ஸ், தனது செய்தி வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்களையும், வேதனைகளையும், வலியையும் பார்த்திருந்தாலும் இது போன்ற அதிர்சிக்கு ஆளானதில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அந்தக் கணத்தில் அவர் இதழியல் பணிக்கு முழுக்குப்போட தீர்மானித்தார். அதன் பிறகு அர்ஜெண்டினா நாட்டுக்குச் சுற்றுலா சென்று திரும்பியவர் இனியும் தன்னால் அபத்தமான சூடான செய்திகள் பின்னே ஓட முடியாது என புரிந்துகொண்டு, சமூகத்தின் ஊக்கம் நிறைந்த கதைகளை வீடியோ வழியே சொல்வதற்காக இந்த இணையத்தளத்தைத் தொடங்கினார். தளத்தில் உள்ள வீடியோக்கள் துடிப்பான கதைகளையும் துள்ளலான அனுபவத்தயும் முன் வைக்கின்றன.

உரையாடல்கள்

கதைகள் மட்டும்தான் ஊக்கம் தருவதற்கான வடிவங்களா என்ன? தகவல்களை அளிக்கும் உரைகளும், உரையாடல்களும் ஆக்கபூர்வமான எண்ணங்களை உண்டாக்க கூடியவைதானே? கான்வர்சேஷன்ஸ் (http://www.conversations.org/ ) இணையத்தளம் இதைத்தான் செய்கிறது.

கலைஞர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூகப் போராளிகள் என மகத்தான ஆளுமைகளுடனான நேர்க்காணல்களைக் கொண்டிருக்கிறது இந்த இணையத்தளம். இதே பெயரிலான பத்திரிகையின் இணைய வடிவம்.

இணையத்தில் ஊக்கம் பற்றி பேசும்போது டெட் அமைப்பின் (https://www.ted.com/) இணையத்தளம் பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது.

டெக்னாலஜி, எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் டிசைன் ஆகிய மூன்று விஷயங்களையும் இணைக்கும் வகையில் செயல்பட்டு வரும் அமைப்பான டெட் பல துறை சாதனையாளர்களைத் தனது மாநாடுகளுக்கு அழைத்து உரையாற்ற வைக்கிறது. இந்த உரைகள் 18 நிமிடங்கள் அளவிலானவை. ஆனால் அதற்குள் உரை நாயகர்கள் தங்கள் அனுபவத்தின் சாரம்சத்தைச் சாறாகப் பிழிந்து தந்து விடுவார்கள். ஊக்கம் உங்களுடனே இருக்க வேண்டும் என்றால் டெட் தளத்துக்கு செல்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோனா கல்வி நிறுவன வளாகத்தில் ஜன. 10 இல் ஸ்ரீநிவாச கல்யாணம்

தனித்துவ அடையாள எண் பதிவு: விவசாயிகளுக்கு அழைப்பு

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் தா்னா

விழுப்புரத்தில் காஞ்சி மகா பெரியவா்ஆராதனைப் பெருவிழா

பூட்டியிருந்த வீட்டில் ரூ.23 ஆயிரம் திருட்டு

SCROLL FOR NEXT