நெட்டும் நடப்பும்

ஃபேஸ்புக்கும் இணையப் பரிசோதனையும்!

இணையக் கலைஞர்கள் என்று ஒரு பிரிவினர் இருக்கிறார்கள் தெரியுமா? இந்தப் பிரிவில் பல ரகத்தினர் இருக்கிறார்கள். இணையக் கலைஞர்கள் என்றால், கொஞ்சம்

தினமணி

இணையக் கலைஞர்கள் என்று ஒரு பிரிவினர் இருக்கிறார்கள் தெரியுமா? இந்தப் பிரிவில் பல ரகத்தினர் இருக்கிறார்கள். இணையக் கலைஞர்கள் என்றால், கொஞ்சம் புதுமையையும், படைப்பாற்றலையும் வெளிப்படுத்தி இணையப் பயன்பாட்டை ஒரு கலையாக மாற்றிக் காட்டுபவர்கள். இவர்களைப் பொறுத்தவரை இணையம் என்பதே ஒரு களம் போலதான். அந்தக் களத்தை இவர்கள் பயன்படுத்திக்கொள்ளும் விதம் இணையப் பயன்பாட்டையே நாமறிந்த விதத்தில் இருந்து வேறு ஒரு தளத்துக்குக்  கொண்டு செல்வதாக இருக்கும்.

இணைய வரலாற்றில் இத்தகைய இணையக் கலைஞர்கள் பலர் உண்டு. இந்த பட்டியலில் ஜோ வெய்க்சுக்கும் இடம் கொடுக்கவேண்டும். வெய்க்ஸ் பற்றி நிறைய விஷயங்களைச் சொல்லலாம். அவற்றை எல்லாம் விட சமீபத்தில் அவர் மேற்கொண்ட இணையப் பரிசோதனை ஒன்றைத் தெரிந்து கொண்டாலே போதும், மனிதர் எத்தனை சுவாரசியமானவர் என்று புரியும்.

ஃபேஸ்புக் பரிசோதனை!

ஃபேஸ்புக், சமூக வலைப்பின்னல் தளங்களில் பிரபலமானதாகவும், பெரியதாகவும் இருக்கிறது. ஃபேஸ்புக் பயனாளிகள் பலருக்கு அதன் நிலைத்தகவல்கள்தான் உலகமாக இருக்கிறது. ஃபேஸ்புக்கைப் பலரும் பலவிதமாகப் பயன்படுத்துகிறார்கள். சிலருக்கு அது நட்புக் கூடாரம். இன்னும் சிலருக்கு அது அரட்டை அரங்கம். இன்னும் சிலருக்கு அது சுய அறிவிப்புப் பலகை. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். வெய்க்சோ ஃபேஸ்புக்கை ஒரு சோதனை கூடமாக மாற்றிக்காட்டினார்.

என்ன செய்தார் தெரியுமா? புதிதாக ஒரு ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கினார். அந்தப் பக்கம் தனிநபர் ரகத்தைச் சேர்ந்தது அல்ல; சமூகப் பக்க ரகத்தைச் சேர்ந்தது.

இந்தப் புதியப் பக்கத்தில் அவர் நிலைத்தகவல்களை வெளியிடவோ அல்லது, நண்பர்களை தேடிக்கொண்டு புதிய இணையச் சமூகத்தை உருவாக்கவோ நினைக்கவில்லை. இந்தப் பக்கத்தை அப்படியே இணையவாசிகளின் கைகளில் கொடுத்துவிடத் தீர்மானித்திருந்தார்.

அதாவது, PublikFacebook™ எனும் பெயரிலான அந்தப் பக்கத்தின் பயனர் பெயர் மற்றும் பாஸ்வேர்டைப் பகிரங்கமாக வெளியிட்டிருந்தார். இதன் பொருள் அந்த ஃபேஸ்புக் பக்கத்தை யார் வேண்டுமானாலும் இயக்கிக் கொள்ளலாம். பொதுவாக இணைய உலகில் பயனர் பெயரும் பாஸ்வேர்டும் பூட்டும் சாவியையும் போல. இவற்றை மற்றவர்கள் கைகளில் சிக்காமல் பாதுகாக்க வேண்டும். ஆனால் வெய்க்சோ இந்த நடைமுறைக்கு மாறாக புதிய ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கி அதை இணைய உலகில் உள்ள எவரும் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை அளித்திருந்தார். இதற்கான அறிவிப்பை அவர் தனது ட்விட்டர் கணக்கு மூலம் வெளியிட்டிருந்தார்.

இது உங்கள் பக்கம்

ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் தளங்களை நாம் பயன்படுத்தும் விதம் நமது ஆளுமைகளின் பிரதிபலிப்பாக இருப்பதாக கருதப்படுகிறது. ஃபேஸ்புக் பயன்பாடு அடிப்படையில் பயனாளிகளின் ஆளூமையைக் கண்டறிந்து சொல்லும் பல வகை ஆய்வுகளும் நடத்தப்பட்டிருக்கின்றன.

ஃபேஸ்புக் பயன்பாடு தனிநபர்களின் ஆளுமையைப் பிரதிபலிக்கின்றன என்றால், எல்லோரும் பயன்படுத்தக்கூடிய ஒரு ஃபேஸ்புக் பக்கம் எந்த வகையில் அமைந்திருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பிய வெய்க்ஸ், பொதுமக்களின் பெயரிலேயே ஒரு ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கி அதை இணைய சமூகத்திடம் ஒப்படைத்திருந்தார்.

சுவாரசியமாகத்தான் இருக்கிறது இல்லையா? ஃபேஸ்புக்கை விருப்பம் போல பயன்படுத்துவதை பெரும்பாலானோர் செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் வெய்க்சோ ஒரு பொது ஃபேஸ்புக் பக்கத்தை எல்லோரும் எப்படிப் பயன்படுத்துகின்றனர் என்று பார்க்க விரும்பினார்.

இந்தப் பரிசோதனையின்போது நிகழ்ந்தவற்றை அவர் தனது இணையத்தளத்தில் விரிவாகப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஃபேஸ்புக் பக்கம் ஒப்படைக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒருவர் அதனுள்ளே நுழைந்திருக்கிறார். முதல் வேலையாக அவர் அதன் பாஸ்வேர்டை மாற்றிவிட்டார்!  உடனே வெய்க்ஸ் தலையிட்டு பாஸ்வேர்டை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வந்தார்.

அடுத்ததாக நுழைந்தவர் அந்தப் பக்கத்தின் பெயரை மேக்ஸ்மிலன் மேனிங் என மாற்றி பின்னணிப் புகைப்படத்தையும் மாற்றினார்.

தொடர்ந்து வந்தவர்கள் தங்கள் மனம் போன போக்கில் மாற்றங்களைச் செய்தனர். மேக்சின் சுயசரிதைக் குறிப்பை வளர்த்துக்கொண்டே சென்றனர், அவரது ஆர்வங்களை மாற்றி அமைத்தனர்.

சர்வதேச தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ்-ஐ அவர் லைக் செய்வதுபோல செய்தார்கள். அடுத்ததாக அவர் பார்த்துக்கொண்டிருந்த வேலையை மாற்றினர்.

இதனிடையே சிலர் இதை நம்பி ஏமாறவும் செய்தனர். ஆபாசப் படங்களும் இதில் வெளியிடப்பட்டன.

முதல் சில நாள்களில் உலகம் முழுவதிலும் இருந்து 135 பேர் அந்தப் பக்கத்தை இயக்கியிருந்தனர்.

சோதனை விரிவாக்கம்

ஃபேஸ்புக்கில் யார் வேண்டுமானால் எளிதாக கணக்கு துவக்கலாம். மற்றவர்களின் ஃபேஸ்புக் பக்கத்திலும் கருத்து தெரிவிக்கலாம். அப்படி இருக்க பொதுப் பயன்பாட்டுக்காக யாரோ உருவாக்கி கொடுத்த பக்கத்தையும் நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்தியிருக்கின்றனர். அந்தப் பக்கத்தில் அவர்கள் வெளிப்படுத்திய தகவல்களை எப்படிப் புரிந்து கொள்வது? அதில் வெளிப்பட்டது விளையாட்டுத்தனமா ? அல்லது மன விகாராமா? இப்படிப் பல கேள்விகள் எழுகின்றன. இந்த வகையான ஒரு பக்கத்தில் நல்ல விதமான கருத்துகள் தெரிவிக்கப்படும் வாய்ப்பு எத்தனை சதவிகிதம் இருக்கிறது? இதேபோல இன்னொரு பொதுப் பக்கம் அமைத்தால் அது எந்தவிதமாக பயன்படுத்தப்படும்?

இவை எல்லாம் சுவாரசியமான கேள்விகள்.

வெய்க்ஸ், ஃபேஸ்புக் பரிசோதனைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தை அடுத்து இதே போல புகைப்படப் பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராம் மற்றும் குறும்பதிவு சேவையான ட்விட்டரிலும் பொதுக் கணக்குகளை உருவாக்கி அதன் பாஸ்வேர்டையும் இணையத்தில் வெளியிட்டு இந்தச் சோதனையை விரிவுபடுத்தியுள்ளார். ட்விட்டர் கணக்கில் அவதூறான கருத்துக்கள்தான் அதிகம் வெளியானதாக அவர் குறிப்பிட்டுள்ளார். (இதற்கு முன்னர், இணையத்தில் உலாவும்போது, வர்த்தக நிறுவனங்களின் பிராண்ட் பெயர் தோன்றும் இடங்களை எல்லாம் கருப்பு மையால் அழித்துவிடும் பிரவுசர் நீட்டிப்புச் சேவையை வெய்க்ஸ், கூகுள் குரோமுக்காக உருவாக்கவும் செய்தார்.)

சமூக ஊடகங்களை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைத் திரும்பிப் பார்க்கும் வகையில் அவருடைய சோதனை அமைந்திருப்பதாக கொள்ளலாம். இந்தச் சோதனை பற்றிய முதல் அறிக்கையை வெய்க்ஸ் வெளியிட்டபோது, இந்தப் போலி பக்கம் ஃபேஸ்புக் நிர்வாகத்தால் முடக்கப்படாமல் இருப்பது பற்றியும் வியப்பு தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு சில நாள்கள் கழித்து ஃபேஸ்புக் அந்தப் பக்கத்தை முடக்கிவிட்டது. வெய்க்ஸ் போன்ற மனிதர்கள்தான் இணையப் பயன்பாட்டின் பார்க்கப்படாத பரிமாணங்களை உணர்பவர்களாக இருக்கிறார்கள்.

ஜோ வெய்க்ஸ் இணைதளம்: http://joeveix.com/

ஃபேஸ்புக் பரிசோதனை பற்றிய விளக்கப் பதிவு; http://www.deathandtaxesmag.com/255540/public-facebook/

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோனா கல்வி நிறுவன வளாகத்தில் ஜன. 10 இல் ஸ்ரீநிவாச கல்யாணம்

தனித்துவ அடையாள எண் பதிவு: விவசாயிகளுக்கு அழைப்பு

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் தா்னா

விழுப்புரத்தில் காஞ்சி மகா பெரியவா்ஆராதனைப் பெருவிழா

பூட்டியிருந்த வீட்டில் ரூ.23 ஆயிரம் திருட்டு

SCROLL FOR NEXT