நெட்டும் நடப்பும்

ஃபேஸ்புக்குக்கு எதிராக போர்க்கொடி!

மீடியம் என்ற பெயரில் செயல்பட்டு வரும் வலைப்பதிவுச் சேவையை அறிவீர்களா?

தினமணி

மீடியம் என்ற பெயரில் செயல்பட்டு வரும் வலைப்பதிவுச் சேவையை அறிவீர்களா?

நாப்கின் எனும் பெயரில் புதிதாக ஒரு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது தெரியுமா? தீவிர விவாதம் நடக்கும் இணையமேடையாக ரெட்டிட் தளம் இருப்பது தெரியுமா? எல்லோ வலைப்பின்னல் சேவையையும், கேள்வி-பதில் சேவை தளமான குவோராவையும் பயன்படுத்தியதுண்டா?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் என்ன அவசியம் என்று பார்ப்பதற்கு முன், பிரபல சமூக வலைப்பின்னல் சேவைகளான ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டருக்கு மாற்றுச் சேவைகள் தேவை என எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? இந்தச் சேவையை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆவேசம் கொண்டதுண்டா?

மனுஷ்யபுத்திரன் குமுறல்

சமீபத்தில் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் இந்த நிலைக்கு இலக்கானார். ‘ஃபேஸ்புக்கை விட்டுவிடலாம் என்றுகூட தோன்றுகிறது. சொந்தங்களே..உங்களை எப்படி விட்டு விட்டுச் செல்வது என்று தடுமாறுகிறேன்’ என்று அவர் தனது ஃஃபேஸ்புக் பக்கத்தில் குமுறியிருந்தார்.

மனுஷ்யபுத்திரன் ஃபேஸ்புக் மீது இப்படி அதிருப்தி கொள்ள காரணம் இல்லாமல் இல்லை. கவிஞர், பதிப்பாளர், எழுத்தாளர், கருத்தாளர் என பன்முகம் கொண்டவராக அறியப்படும் மனுஷ்யபுத்திரன், தமிழ்ச் சமூகம் அவரை அறிந்திருக்கும் இந்தப் பெயருக்குப் பதிலாக அவரது இயற்பெயரைப் பயன்படுத்த வேண்டும் என்று ஃபேஸ்புக் நிர்வாகத்தால் நிர்பந்திக்கப்பட்டதுதான் இதற்கான காரணம்.

மனுஷ்யபுத்திரன் என்பது அவரது புனைப்பெயர். அது அவரது அடையாளம். அப்படி இருக்க ஃபேஸ்புக் திடீரென அந்தப் பெயரை பயன்படுத்தக்கூடாது என தடை விதித்து, அவரது உண்மையான பெயரைப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்துவது என்ன நியாயம்?

இது கவிஞருக்கு மட்டும் நேர்ந்த கதி அல்ல; சமூகச் செயற்பாட்டாளராக அறியப்படும் எவிடென்ஸ் கதிர், ஃபேஸ்புக்கால் தனது ஏற்பு பெயரைப் பயன்படுத்தமுடியாமல், மத அடையாளம் நிறைந்த பெயரைப் பயன்படுத்த வேண்டியிருப்பதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வேதனை தெரிவித்திருந்தார்.

புனைப்பெயர் சர்ச்சை

நீங்கள் புனைப்பெயரை பயன்படுத்துபவர் என்றால் ஃபேஸ்புக்கில் இந்த நிலை உங்களுக்கும் ஏற்படலாம்; ஏற்பட்டிருக்கலாம். நீங்கள் முதலில் இதை நினைத்து குழம்பியிருக்கலாம். பின்னர் ஃபேஸ்புக்குடன் மல்லுக்கட்டி போராடி வெறுத்துப்போயிருக்கலாம். உங்கள் நிஜ பெயரையும், புனைப்பெயர் நியாயத்தையும் நிலைநாட்ட பிறப்புச் சான்றிதழ், அடையாள அட்டை போன்ற ஆவணங்களை ஃபேஸ்புக்குக்கு அனுப்பி வைத்திருக்கலாம்.

ஒரு பயனர் கணக்கை தக்க வைத்துக்கொள்ள இப்படிப் போராட வேண்டியிருக்கிறதே என நொந்து போயிருக்கலாம். அது மட்டும் அல்ல இதனால் கொள்கை சார்ந்த சிக்கல்களுக்கும் உள்ளாகி இருக்கலாம். புனைப்பெயர் வைத்துக்கொள்வதற்கு தேவையும், நியாயமும் இருக்கிறதுதானே!

இந்த வகை சர்ச்சைகளுக்கு எல்லாம் மூலமாக இருப்பது ஃபேஸ்புக்கின் நிஜப்பெயர் கொள்கை.

அதாவது ஃபேஸ்புக் சேவையைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் நிஜப்பெயரைத் தான் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. புனைப்பெயர்களுக்கு அனுமதி இல்லை. உண்மையில் இதை போலிப் பெயர்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், நடைமுறையில் புனைப்பெயர்களும் பாதிப்புக்குள்ளாகின்றன.

ஃபேஸ்புக் ஆரம்பித்த காலத்தில் இருந்தே இந்த நிஜப்பெயர் கொள்கை அமலில் இருக்கிறது.

சிக்கலின் காரணம்

சமூக வலைப்பின்னல் சேவைகளில் இது கொஞ்சம் வித்தியாசமான நிலை தான். ட்விட்டர் உள்ளிட்ட வேறு எந்தச் சேவையிலும் இஷ்டம் போல பயனர் பெயரை உருவாக்கிக் கொள்ளலாம். பொதுவாக எல்லா இணையச் சேவைகளிலும் இதுதான் நடைமுறை. பயனர் பெயர் என்பது பயனாளிகளின் விருப்பம் சார்ந்தது. அவர்கள் உரிமையும்தான்!

ஆனால், ஃபேஸ்புக் நிஜப்பெயர் கொள்கையைக் கடைபிடிப்பதால் பயனாளிகள் தங்கள் உண்மையான பெயரைத் தான் ஃபேஸ்புக் கணக்கில் பயன்படுத்த வேண்டும் என நிர்பந்திக்கிறது. ஃபேஸ்புக் பயனாளிகளின் நலனைக் காக்கவே இந்தக் கொள்கை என ஃபேஸ்புக் விளக்கம் அளிக்கிறது. யாரேனும் போலி பெயரில் பக்கங்களை அமைத்து ஃபேஸ்புக் உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்துவதை தடுக்க இது அவசியம் என்று ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் ஒரு முறை கூறியிருக்கிறார். விவாகரத்து பெற்ற பெண்மணியைப் பழிவாங்க அவரது மாஜி கணவர் பொய் ஃபேஸ்புக் பக்கத்தை அமைத்து தொல்லை தரலாம் என்பதும், அப்படி நிகழும் பட்சத்தில் நிஜப்பெயராக இருந்தால் அந்தப் பெண்மணி அவரை பிளாக் செய்துவிட முடியும் என்பதும் மார்க் தரும் உதாரணம்.

மார்க்கின் பொறுப்பு என்ன?

ஒரு நிறுவனம் என்ற முறையில் ஃபேஸ்புக் தனக்கான பயனர் பயன்பாட்டுக் கொள்கையை வகுத்துக்கொள்ள முழு உரிமை பெற்றிருக்கிறது. மேலும் மற்ற சேவைகளில் இருந்து மாறுபட்ட தன்மை பெற்று இருப்பதால் ஃபேஸ்புக் நிஜப்பெயரை பயனர் பெயராக வலியுறுத்துவதையும் கூட புரிந்து கொள்ளலாம். ஃபேஸ்புக் நண்பர்களையும், அவர்கள் மூலம் புதிய நண்பர்களையும் தேடிக்கொள்ள உதவும் நட்பு வலைப்பின்னல் என்பதால் அதில் பெயருக்கு உள்ள முக்கியத்துவம் ஏற்புடையதே. ஆனால் பெயருக்கும், அடையாளத்துக்கும் வித்தியாசம் உள்ளதே? புனைப்பெயரும் போலிப்பெயரும் ஒன்றா? இந்த கேள்விகள்தான் தீவிர விவாதத்தை உருவாக்குகின்றன. உண்மையில் இந்தக் கொள்கை சர்வதேச அளவில் நீண்ட காலமாகவே சர்ச்சைக்கு உரியதாகவும் இருக்கிறது.

ஃபேஸ்புக்கின் நிஜப்பெயர் கொள்கை குழப்பமானதாகவும், பாகுபாடானதாகவும் இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஃபேஸ்புக் உண்மையில் புனைப்பெயர்களுக்கு தடை விதிப்பதில்லை, நட்பு வட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெயர்களை அனுமதிக்கவே செய்கிறது என்று ஒருமுறை மார்க் கூறியிருக்கிறார். ஆனால், நடைமுறையில் பல பயனாளிகள் தங்கள் பெயர் முடக்கப்பட்டு அதை நீக்குவதற்காக பிறப்புச் சான்றிதழை எல்லாம் சமர்பிக்கும் நிலைதான் இருக்கிறது. இதன் பிறகும் கூட பலரும் ஃபேஸ்புக்கிடம் இருந்து சாதகமான பதிலை பெற முடியாமல் தவிக்கின்றனர்.

பிரிட்டனில் ஜெம்மா ரோஜர்ஸ் எனும் பெண்மணி ஃபேஸ்புக்கில் தனது புனைப்பெயரான ஜெம்மாராய்ட் வால் லோலா எனும் பெயரை பயன்படுத்துவதற்காக அந்த பெயரையே தனது அதிகாரபூர்வ பெயராக மாற்றிக்கொண்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

சர்வதேச சர்ச்சை

மேலும் அமெரிக்காவில் டிராக் குவின் எனப்படும் பல பாலினத்தவர்கள் நிஜப்பெயர் கொள்கையால் பெருமளவு பாதிக்கப்பட்டு வீதிக்கு இறங்கி போராடியுள்ளனர். பெயர் என்பது இன அடையாளம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்துவதாக உள்ளவர்கள் இந்தக் கொள்கையால் தாங்கள் கருத்துத் தாக்குதலுக்கும், பாகுபாட்டுக்கும் இலக்கானதாக குமுறிய சம்பவங்களும் உண்டு.

இதனிடையே ஜெர்மனியில், ஃபேஸ்புக் தனது நிஜப் பெயர் கொள்கையை அமல்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் கட்டுப்பாட்டு அமைப்பான ஹாம்பர்க் டேட்ட புரடக்‌ஷன் அத்தாரிட்டி எனும் அமைப்பு இந்த உத்தரை பிறப்பித்துள்ளது. ஃபேஸ்புக்கால் தனது நிஜப்பெயரை பயன்படுத்த நிர்பந்திக்கப்பட்டது தொடர்பாக பெண்மணி ஒருவர் கொடுத்த புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிஜப்பெயர் கொள்கையை வலியுறுத்துவது பயனாளிகளின் தனியுரிமையை மீறுவதாகவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு நடந்த பிறகும் ஃபேஸ்புக் நிஜப் பெயர் கொள்கையில் பிடிவாதமாகவே உள்ளது.

ஃபேஸ்புக் தனது கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அந்தக் கொள்கையால் பாதிப்பு ஏற்படும் பொருத்தமான இடங்களில் அக்கொள்கை தளர்த்திக்கொள்ளப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த பட்சம் ஃபேஸ்புக் பொறுப்பாக பதில் அளிக்கவாவது செய்ய வேண்டும்.

உலகளவில் நிஜப்பெயர் கொள்கை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அதற்கேற்ற நிவாரணத்தை அளிக்க மனமில்லாமல் இருக்கிறது. புனைப்பெயரால் அறியப்படும் ஒரு இலக்கியவாதியை அதே பெயரில் ஃபேஸ்புக்கில் இயங்கச்செய்வது ஃபேஸ்புக்கின் கடமை அல்லவா? விதிவிலக்கான சந்தர்பங்களைப் புரிந்து கொண்டு செயல்படும் பொறுப்பு ஃபேஸ்புக்குக்குக் கிடையாதா? இல்லை, இணையப் பரப்பில் பெரும் செல்வாக்கு கொண்ட நிறுவனம் எனும் ஆணவமா?

ஃபேஸ்புக் கடமை

இந்தியா ஃபேஸ்புக் பரப்பில் அதிக பயனர் கொண்ட நாடாக இருக்கும் போது, ஃபேஸ்புக் வளர்ச்சி வரைபடத்தில் இந்தியாவுக்கு முக்கிய இடமிருக்கும்போது, இங்குள்ள பயனர்களின் பிரச்சனையைக் காது கொடுத்து கேட்டு தீர்வு காண்பதற்கு தகுந்த முயற்சிகளை ஃபேஸ்புக் நியமிக்க வேண்டாமா?

ட்விட்டர் சேவையில், பிரபலமானவர்கள் தங்கள் பக்கத்தை அதிகாரபூர்வமான பக்கம் என உறுதி செய்து கொள்ளும் வசதி இருக்கிறது. போலி பக்கங்களை முடக்க இது உதவுகிறது. ஃபேஸ்புக்கிலும் கூட இதே போன்ற அம்சம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதை மேலும் விரிவுபடுத்தி, அதிகாரபூர்வமான புனைப்பெயர் கொண்டவர்கள் அதே பெயரில் செயல்பட அனுமதி அளிப்பது ஃபேஸ்புக்கின் கடமை. இப்படிச் செய்வதற்குப் பதிலாக பயனர்கள் தங்கள் அடையாளத்தை நிருபிக்க ஆவணங்களையும், அடையாள அட்டையையும் சமர்பித்து ஃபேஸ்புக்கின் அங்கீகாரத்துக்கு ஏங்கச்செய்வது சரியா?

இப்படிப் பல கேள்விகள் எழுகின்றன.

பயனர்கள் தன்னை நம்பியிருக்கின்றனர் என்ற அலட்சியம் காரணமா? இல்லை உண்மையிலேயே அதன் நிர்வாகத்தால் தனிப்பட்ட கணக்குகளின் சிக்கலைப் புரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க முடியாமல் இருக்கிறதா?

இப்படி ஆவேசமாக கேட்கத்தோன்றுகிறதா? எனில் ஃபேஸ்புக்கை விட்டு வெளியேறுங்கள்.

நிற்க. ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறுங்கள் என சொல்வது இந்தப் பதிவின் நோக்கம் அல்ல; அப்படிச் சொல்வதன் மூலமாக ஃபேஸ்புக் தன் நிலையைப் பரிசீலிக்கவேண்டும் என்கிற கோரிக்கையை இதன்மூலமாகத் தெரிவிக்கவேண்டும். எங்களை மதிக்காவிட்டால், ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறுவோம் என்று எச்சரிக்கை விட்டு ஃபேஸ்புக்கைப் பதில் சொல்ல வைக்க வேண்டும்.

மாற்றுச் சேவைகள்

ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறுவதா? இந்த எண்ணமே ஃபேஸ்புக் பயனாளிகள் பலருக்கு அச்சத்தை தரலாம். ஃபேஸ்புக் மூலம் உருவாக்கி வைத்திருக்கும் நட்பு வட்டத்தை எப்படி இழக்கமுடியும் என்று தோன்றலாம். 

ஃபேஸ்புக் மிகப்பெரிய வலைப்பின்னல் என்பதில் சந்தேகமில்லை; ஆனால் இணையத்தில் கருத்துகளை வெளிப்படுத்தவும், தொடர்புகளை உருவாக்கிக் கொள்ளவும் ஃபேஸ்புக்கை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலை இல்லை.

ஃபேஸ்புக்குக்கு மாற்றாக பல அருமையான சேவைகள் இருக்கின்றன.

ஃபேஸ்புக்கிற்கு மாற்று என்று சொல்லும் போது, உடனே ஆர்குட் கதி என்னாயிற்று, இப்போது ஜி-பிளஸ் எப்படி தடுமாறுகிறது என்ற வாதங்களை முன்வைப்பதால் பயனில்லை.

ஃபேஸ்புக்கின் செல்வாக்கு பற்றியதல்ல இந்த விவாதம். இணையவாசிகளின் உரிமை மற்றும் அவர்களுக்கு உள்ள வாய்ப்புகள் பற்றியது.

இணைய உலகில் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள ஃபேஸ்புக்கின் நிலைத்தகவல்கள் மட்டுமா வழி? இணைய உரையாடல் என்பது ஃபேஸ்புக்கின் அபத்தங்கள் நிறைந்த லைக்குகளிலா உள்ளது?

தனித்தன்மை மிக்க பார்வையை முன்வைக்கும் ஆழமான கட்டுரையை நீள்பதிவாக மீடியம் எனும் வலைப்பதிவு சேவைத் தளத்தில் வெளியிட்டு கவனத்தை ஈர்க்கலாம். தொழில்நுட்ப உலகின் முக்கிய சிந்தனையாளர்கள் மீடியமில் அழமான பதிவு மூலம் தங்கள் கருத்துகளை வெளியிட்டு இணையவாசிகள் மற்றும் ஊடகத்தின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். மீடியம் பதிவில் முத்திரை பதிக்கும் சிந்தனையாளர்கள் பலர் இருக்கின்றனர்.

நீங்களும் மீடியம் சேவையைப் பயன்படுத்தலாம். குறிப்பாக மனுஷ்யபுத்திரன் போன்ற படைப்பாளிகள் நிச்சயம் மீடியம் அல்லது மீடியம் போன்ற ஒரு சேவையை பயன்படுத்தி தனது வாசகர்களை சென்றடையலாம்.

அதே போல இணையத்தின் முகப்புப் பக்கம் என வர்ணிக்கப்படும் ரெட்டிட் தளம், செய்தி மற்றும் தகவல் சார்ந்த விவாதமும் உரையாடலும் நடைபெறும் இணையச் சமூகமாக இருக்கிறது. ரெட்டிட்-டில் ஒரு கருத்தைச் சொன்னால், அது உறுப்பினர்கள் கருத்தை கவருமானால் இணையமே அதனால் பற்றிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. அது மட்டும் அல்ல, எதையும் கேளுங்கள் எனும் பொருள்பட ரெட்டிட்டில் நடத்தப்படும் ஆஸ்க் மீ எனிதிங் கேள்வி-பதில்கள் வீச்சு நிறைந்தவை.

நாப்கின் இணையத்தளம் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய, புதிய எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டு அதற்கான ஆதரவையும், ஒத்துழைப்பையும் நாடும் இடமாக இருக்கிறது. இந்தத் தளத்தில் ரத்தினச் சுருக்கமாக முன்வைக்கப்படும் புதிய எண்ணங்களை பார்க்கும்போது இணையத்தின் ஆற்றலை நினைத்து வியப்பாக இருக்கும்.

கேள்வி-பதில் இணையத்தளமான குவோராவில் கேட்கப்படும் கேள்விகளும் அவற்றுக்குப் பதில் அளிக்கும் வகையில் நிகழும் உயிரோட்டமான தீவிர உரையாடல்களும் அசர வைக்கக் கூடியவை. இந்தத் தளத்தில் பெரும்பாலான கேள்விகளுக்குத் துறை சார்ந்த வல்லுநர்களும், நிறுவனர்களுமே பதில் அளிப்பதைப் பார்க்கலாம்.

எல்லோ, ஃபேஸ்புக்குக்கு எதிராகத் தொடங்கப்பட்ட விளம்பரம் சாராத சமூக வலைப்பின்னல்.

இணையம் பரந்து விரிந்திருக்கிறது. ஃபேஸ்புக் என்னதான் செல்வாக்கு பெற்றிருந்தாலும் அந்தப் பரப்பில் அது சிறு துளிதான். மாற்றுத் தளங்கள் இருப்பதை உணர்வது என்பது நமக்கான வாய்ப்புகளை முழுவதும் உணர்வதாகும். அது மட்டும் அல்ல, இணையத்தின் ஜனநாயகத்தன்மை என்றும் பயனர் பக்கம் என்பதையும் உணரமுடியும்.

மீடியம் - https://medium.com/

நாப்கின் - http://www.napkin.is/

ரெட்டிட் - https://www.reddit.com/

எல்லோ - https://ello.co/beta-public-profiles

குவோரா - http://www.quora.com/India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோனா கல்வி நிறுவன வளாகத்தில் ஜன. 10 இல் ஸ்ரீநிவாச கல்யாணம்

தனித்துவ அடையாள எண் பதிவு: விவசாயிகளுக்கு அழைப்பு

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் தா்னா

விழுப்புரத்தில் காஞ்சி மகா பெரியவா்ஆராதனைப் பெருவிழா

பூட்டியிருந்த வீட்டில் ரூ.23 ஆயிரம் திருட்டு

SCROLL FOR NEXT