நெட்டும் நடப்பும்

அம்மாவின் பார்வையில் இணையத்தளங்கள்

நாவலோ, சிறுகதையோ ஒரு இலக்கியப் படைப்பை எடைபோட்டு மதிப்பீடு செய்வதில் வாசகனுக்கு எந்த அளவு செல்வாக்கு இருக்கிறது என்று

தினமணி


நாவலோ, சிறுகதையோ ஒரு இலக்கியப் படைப்பை எடைபோட்டு மதிப்பீடு செய்வதில் வாசகனுக்கு எந்த அளவு செல்வாக்கு இருக்கிறது என்று தெரியவில்லை. அது முழுக்க முழுக்க இலக்கிய விமரிசகர்களின் சொத்து. அதேபோல ஒரு திரைப்படத்தை ஆய்வு செய்வதில் ரசிகனின் பங்கு எந்த அளவு இருக்கிறது என்றும் தெரியவில்லை. ஆனால் இணையத்தளங்கள் என்று வரும்போது பயனாளிகளின் கை தான் ஓங்கியிருக்கிறது தெரியுமா?

இணையப் பயனாளிகளுக்கே கூட இது ஆச்சர்யத்தைத் தரலாம். ஆனால் பயனாளிகளை முக்கியமாக கருதாத இணையத்தளங்கள் வெற்றி பெற முடியாது என்பதுதான் விஷயம். அதனால்தான் இணையத்தளங்களுக்கான இலக்கணம் முழுவதும் பயனாளிகள் அனுபவத்தைச் சார்ந்திருக்கிறது.

இணையத்தளங்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை இணையவாசிகள் அறியாமலே கூட இருக்கலாம். ஆனால் அவர்கள் பயன்படுத்தும் விதம்தான் பல தளங்களின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்றன. எனவே இணையத்தைப்  பொறுத்தவரை பயனாளிதான் ராஜா. சந்தேகம் இருந்தால் இணைய அம்மாவின் தளத்துக்குச் சென்று பாருங்கள்!

அம்மாதான் பயனாளி

யார் இந்த இணைய அம்மா? அவர் என்ன செய்கிறார் என்று தெரிந்து கொண்டால் ஆச்சர்யமாக இருக்கும். இந்த இணைய அம்மா, இணையத்தளங்களை விமரிசனம் செய்து தனது தீர்ப்பை வழங்குகிறார். சும்மாயில்லை, இணையத்தளங்கள் கட்டணம் செலுத்தி அவர் சொல்வதைக் கேட்க தயாராக இருக்கின்றன.

தி யூசர் ஈஸ் மை மாம் இதுதான் இணைய அம்மாவின் இருப்பிடம். இங்கிருந்துதான் அவர் தளங்களை விமரிசனம் செய்கிறார். இணையத்தளத்தை மதிப்பிட விரும்பும் நிறுவனங்கள் 75 டாலர் கட்டணம் செலுத்த வேண்டும். அதன் பிறகு இணைய அம்மா அந்தத் தளத்தைப் பயன்படுத்திப் பார்த்து அது எப்படி இருக்கிறது என மதிப்பீடு செய்வார்.

இணையத்தள விமரிசனம் என்பதை கூட புரிந்து கொள்ளலாம். ஆனால் கட்டணம் செலுத்தி அதைக் கேட்க தயாராகி இருப்பது வியப்பாக இருக்கலாம். அதிலும் வல்லுநர்களின் விமரிசனம் என்றால் கூட பரவாயில்லை, ஆனால் அம்மாவின் விமரிசனத்துக்கு இத்தனை மவுசா என்ற கேள்வியும் எழலாம்.

ஆனால் இணையப் பயன்பாட்டைப் பொறுத்தவரை அம்மாக்கள்தான் உண்மையான நக்கீரன் தெரியுமா? அவர்களின் கருத்துகள் முக்கியமானவை. பொருட்படுத்த வேண்டியவை. இதைப் புரிந்து கொள்ளாமல் போனால் இழப்பு அம்மாக்களுக்கு அல்ல, அவர்களை அலட்சியம் செய்யும் இணையத்தளங்களுக்குத்தான்!

இது இன்னும் வியப்பாக இருக்கலாம். விஷயம் என்ன என்றால் இணையத்தளங்களுக்கான இலக்கணத்தில் பயன்பாட்டுத் தன்மைக்குத்தான் முதலிடம். வடிவமைப்பு, உள்ளடக்கம், தோற்றம் எல்லாம் அதன் பிறகுதான்.

பயன்பாடு என்று வரும்போது இணையத்தளம் அடிப்படையில் எளிமையாக இருக்க வேண்டும் என்பதுதான் பொன் விதி. இதைப் புரியும் வகையில் சொல்வதற்காகத்தான், ஒரு நல்ல இணையத்தளம் உங்கள் அம்மாக்களால் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்று சொல்கின்றனர். இதன் பொருள், அம்மாக்களைப் பயனாளியாக மனத்தில் கொண்டு இணையத்தளங்களை உருவாக்கினால் அது எல்லோரும் பயன்படுத்தும் வகையில் இருக்கும்!

எளிமையே எல்லாம்

ஒரு இணையத்தளம், வல்லுநர்களும் வடிவமைப்பாளர்களும் போற்றும் தளமாக இருப்பதால் பயனில்லை. அது பயனாளிகளைக் கவரும் தளமாக அது இருக்க வேண்டும்.  அதுவே நல்ல இணையத்தளமாக கொள்ளப்படுகிறது. பயனாளிகளின் பிரதிநிதிகளாக அப்பாவி அம்மாக்கள் கருதப்படுகின்றனர். அதனால்தான் அம்மாக்களுக்குப் புரியும் வகையில் இணையத்தளம் இருக்க வேண்டும் என்கின்றனர்.

இந்த இடத்தில்தான் பயன்பாட்டுத்தன்மை வருகிறது. அதாவது இணையத்தளத்தின் உள்ளடக்கம் எல்லாத் தரப்பினராலும் சுலபமாகப் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். தளத்தின் எந்தப் பகுதியும் எந்தச் சேவையும் குழப்பத்தைத் தரக்கூடாது. தடுமாற வைக்கக் கூடாது. நாடி வருபவருக்கு என்ன தேவையோ அதை பளிச் என அடையாளம் கொண்டு சில கிளிக்குகளில் தேடி அடையும் வகையில் இருக்க வேண்டும்.

(ஒற்றை கிளிக்கில் கிடைத்தால் இன்னும் விசேஷம்).

இணையத்தளம் எதற்கானது என்ற தெளிவின்மையையோ அல்லது அதில் என்ன எல்லாம் இருக்கின்றன என்று புரியாத சிக்கலான தன்மையோ இருந்தால் அந்தத் தளம் பயன்பாட்டு நோக்கிலானது அல்ல என்று பொருள். இதற்கான தண்டனை என்ன தெரியுமா? பயனாளிகள் சில கிளிக்குகளில் ஏமாற்றம் அடைந்து வெளியேறிவிடுவார்கள்.             

எனவேதான் அடிப்படையில் இணையத்தளம் எளிமையாக இருக்க வேண்டும் - அப்போது தான் பயன்படுத்தவும் சுலபமாக இருக்கும் என்கின்றனர்.

ஆடம்பர வடிவமைப்பு ஏன்?

இணைய நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் இணைய வடிமைப்பாளர்களும்கூட இந்த இணைய அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர். இணையத்தளம் கவரும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக அதற்கு கிராபிக்ஸ் அலங்காரம் செய்கின்றனர். பிளாஷ் சாஃப்ட்வேரால் பளிச்சிட வைக்கின்றனர். தோற்றத்தில் மயங்க வைக்க முற்படுகின்றனர்.

ஆனால் ஐயோ பாவம், அது பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்பதை மறந்து விடுகின்றனர். விளைவு, பயனாளிகள் குழப்பமடைந்து ஓட்டமெடுக்கின்றனர்.

இங்கு தேடியந்திரமான கூகுளைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். கூகுள்  முன்னணி தேடியந்திரமாக இருப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. ஆனால் எல்லாவற்றையும் விட முக்கிய காரணம் அதன் எளிமை. அதன் முகப்புப் பக்கத்தில் எந்த அலங்காரமும் இல்லை. கவனச்சிதறலும் இல்லை. தேடுவதற்காகத்தானே வந்திருக்கிறீர்கள்; தேடிக்கொள்ளுங்கள் என கூகுளின் முகப்பு எளிதாக வரவேற்கிறது.

அதன் தேடல் கட்டக் கதவுகள் இணையவாசிகள் எட்டிப்பார்ததுமே திறந்து கொள்கிறது.

கூகுளுக்கு விளம்பரம்தான் வருவாயை அள்ளித் தருகிறது என்றாலும்கூட முகப்புப் பக்கத்தில் அது ஒரு விளம்பரத்தை கூட வைக்கத் துணியவில்லை. இணையவாசிகள் மீதான பயம் கலந்த மரியாதை இது. தேடல் சேவை எளிதாக, எவரும் இனம் காணக்கூடியதாக இல்லாவிட்டால் பயனாளிகள் நாடி வரமாட்டார்கள் என்று கூகுளுக்கு நன்றாக தெரியும்.

கூகுள் மட்டும் அல்ல, இணையத்தில் வெற்றியை விரும்பும் எந்த ஒரு நிறுவனமும் தனது இணையத்தளம் சராசரி மக்கள் அணுகுவதில் எந்தச் சிக்கலும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை அறிந்திருக்கின்றன.

பயன்பாட்டுத்தன்மை

இணைய உலகில் இந்த அம்சங்கள் பயன்பாட்டுத் தன்மை என பிரபலமாக குறிப்பிடப்படுகின்றன. இவற்றை வலியுறுத்தும் வல்லுநர்கள், ஒரு இணையத்தளம் பயனாளிகளைத் தடுமாற வைத்தால் அது அவர்களின் தவறு அல்ல; அந்த இணையத்தளம் வடிவமைப்பில் உள்ள பிழை என்கின்றனர். இந்த உண்மையை அழுத்தமாகச் சுட்டிக்காட்டவே அம்மாக்களைப் பயனாளிகளுக்கான உதாரணமாக கொள்கின்றனர்.

தொழில்நுட்ப விஷயங்களில் கடந்த தலைமுறையினர் அதிலும் குறிப்பாக அம்மாக்கள் அதிக பரிட்சயமும் புரிதலும் இல்லாமல் இருக்கின்றனர். கம்ப்யூட்டரைப் பார்த்ததும் அம்மாக்கள் மிரண்டு ஒதுங்கலாம். மவுஸ் நகர்த்தலைக்கூட அவர்கள் கைப்பிடித்து சொல்லித்தர வேண்டியிருக்கலாம். ஆனால் இணையத்தளம் பயன்பாடு என்று வரும்போது அம்மாக்கள் கூட பயன்படுத்தும் வகையில் ஒரு தளம் இருந்துவிட்டால் அதைவிட அந்தத் தளத்துக்கு சிறந்த சான்றிதழ் வேறில்லை.

இதைத்தான், அம்மாக்கள் கூட எந்த வழிகாட்டுதலும் தேவைப்படாத அளவுக்கு உங்கள் தளத்தை தெளிவான முறையில் வடிவமையுங்கள் என்கின்றனர்.

இந்தக் கருத்தைத்தான் தி யூசர் ஈஸ் யுவர் மாம் இணையத்தளம் அழகாக எடுத்து வைக்கிறது.

குடிகாரர் பார்வையில்

இந்தத் தளத்தை ஸ்காட்டி ஆலன் என்பவர் உருவாக்கி இருக்கிறார். இதன் முகப்பு பக்கத்தில், அன்புக்குரிய இணையமே, எனது அம்மா உங்கள் அபத்தங்களால் வெறுத்துப் போயிருக்கிறார். அவரால் உங்கள் இணையத்தளங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அது அவரது பிழையும் அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இது பற்றி பேசித்தீர்த்துக்கொள்வோம், உங்கள் தளம் பயன்பாட்டு நோக்கில் எப்படி இருக்கிறது என்பதை என் அம்மா பயன்படுத்தி பார்த்து விமரிசனம் செய்வார் என்றும் இந்தத் தளம் குறிப்பிடுகிறது. இணையத்தளத்தை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அதன் குறை நிறைகளை அம்மா விரிவாக தருவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்காட்டியின் அம்மா விமரிசனம் எந்த அளவுக்கு இணையத்தில் பிரபலமாகும் என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று இணையப் பயன்பாட்டின் முக்கியத்துவத்தையும் அதைப் புரிந்து கொள்வதில் அம்மாக்களின் பங்கையும் இந்தத் தளம் அழகாக உணர்த்துகிறது.

இந்தத் தளத்துக்குச் சகோதர தளம் ஒன்றும் இருக்கிறது. அது இன்னமும் சுவாரசியமானது. தி யூசர் ஈஸ் டிரங்க் எனும் அந்தத் தளம் , குடிபோதையில் பயன்படுத்தும்போது ஒரு இணையத்தளம் எப்படி இருக்கிறது என்பதை ஆய்வு செய்து சொல்வதை கட்டணச்சேவையாக வழங்குகிறது. இதை வில்லங்கம் என்றோ விநோதம் என்றோ நினக்க வேண்டாம். குடிபோதையிலும் தெளிவாகப் புரியும் படி இணையத்தளம் இருக்க வேண்டும் எனும் கருத்தை இது வலியுறுத்துகிறது.

ஒரு கிளிக் விதி

நிற்க, இணைய வடிவமைப்பு என்பது பயனாளிகளை மையமாக கொண்டதாக இருக்க வேண்டும் என்பதே நாம் உணர வேண்டிய நீதி.

இணையப் பயன்பாடு தொடர்பான கோட்பாடுகளையும் அதன் முக்கிய அம்சங்களையும் வலியுறுத்தும் இணையத்தளங்கள் பல இருக்கின்றன. அவற்றில் ஒன்றான யூசர் போகஸ் தளம் இணைய வடிவமைப்புக்கான 20 அடிப்படை அம்சங்களை குறிப்பிடுகிறது.

இணையத்தளத்தின் முக்கியமான தகவல், முகப்பு பக்கத்தில் இருக்க வேண்டும் அல்லது ஒரு கிளிக்கில் அடையும்படி இருக்க வேண்டும் என்பது அவற்றில் ஒன்று. நல்ல இணையத்தளம் என்றால் அப்படி இருக்க வேண்டும். அதாவது இணையவாசிகளை அல்லாட விடாமல் வழிகாட்டுவது போல!
 

இணைய அம்மாவின் இணையத்தளம்:http://theuserismymom.com/

பயன்பாட்டு அம்ச இணையத்தளம்: http://www.userfocus.co.uk/index.html

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோனா கல்வி நிறுவன வளாகத்தில் ஜன. 10 இல் ஸ்ரீநிவாச கல்யாணம்

தனித்துவ அடையாள எண் பதிவு: விவசாயிகளுக்கு அழைப்பு

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் தா்னா

விழுப்புரத்தில் காஞ்சி மகா பெரியவா்ஆராதனைப் பெருவிழா

பூட்டியிருந்த வீட்டில் ரூ.23 ஆயிரம் திருட்டு

SCROLL FOR NEXT