நெட்டும் நடப்பும்

டிஜிட்டல் இருண்ட காலம் – ஓர் எச்சரிக்கை

கொஞ்சம் இணைய வரலாற்றுடன் தொடங்கினோம். கொஞ்சம் வருங்கால வரலாறு பற்றிய கவலையுடன் நிறைவு செய்யலாம். வரலாறு என்றாலே கடந்த காலம்தானே!

தினமணி

கொஞ்சம் இணைய வரலாற்றுடன் தொடங்கினோம். கொஞ்சம் வருங்கால வரலாறு பற்றிய கவலையுடன் நிறைவு செய்யலாம். வரலாறு என்றாலே கடந்த காலம்தானே! அப்படியிருக்க எதிர்கால வரலாறு பற்றி இப்போது ஏன் கவலைப்படவேண்டும்?

டிஜிட்டல் இருண்ட காலம் மனிதகுலத்தை அச்சுறுத்துவதால்தான்!

ரோபோக்களின் எழுச்சியும், செயற்கை அறிவின் பாய்ச்சலும் மனித குலத்துக்கு வருங்காலத்தில் சவாலாக இருக்கும் என்னும் எச்சரிக்கை பற்றி அறிவியல் உலகில் பரவலாக விவாதம் நடப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இனி வரும் ஆண்டுகளில் ரோபோக்களிடம் மனிதர்கள் இழக்கக்கூடிய வேலைகள் பற்றி தீவிர ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன. ரோபோக்கள் இந்த அளவுக்கு அச்சுறுத்தக்கூடியவையாக மாறுமா என்பது தெரியவில்லை. ஆனால் ரோபோக்களின் ஆதிக்கம் பற்றி கவலைப்படும் அதே நேரத்தில், நாம் வாழும் காலத்திலேயே வருங்கால சந்ததிகளுக்கான வரலாற்று வெளிச்சத்தை இல்லாமல் செய்து வருவது பற்றியும் நிச்சயம் கவலைப்பட்டாக வேண்டும். விண்ட் செர்ஃப் (Vint Cerf) இதை உறுதியாக நம்புகிறார்.

விண்ட் செர்ஃப், இணைய தந்தை எனப் பாராட்டப்படுபவர். இணைய முன்னோடிகளில் ஒருவர். இணையத்தின் உள்கட்டமைப்பில் முக்கிய அம்சமான டிசிபி/ஐபி அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவர். இப்போது கூகுள் நிறுவனத்தில் தொழில்நுட்பத் தூதராக இருக்கிறார்.

செர்ஃபின் எண்ணம், செயல், மூச்சு எல்லாமே தொழில்நுட்பம்தான். அதனால்தான் நாம் தொழில்நுட்பச் சுவடுகளை அழித்துக்கொண்டே இருப்பதாக அவர் கவலைப்படுகிறார். இதன் விளைவையே டிஜிட்டல் இருண்ட காலம் என எச்சரிக்கிறார்.

டிஜிட்டல் இருண்ட காலம்

உலகம், டிஜிட்டல் மயமாகி வருவது தெரியும், ஆனால் அதென்ன டிஜிட்டல் இருண்ட காலம்? இது புதிதாக, புதிராக இருக்கிறதே என நீங்கள் நினைக்கலாம். நம் தகவல் பரிமாற்றங்கள் மற்றும் ஆவணங்கள், வருங்கால வரலாற்றாசிரியர்களின் கைகளுக்குக் கிடைக்காமல் போகும் அபாயம்தான் டிஜிட்டல் இருண்ட காலம். வரலாற்றின் தகவல்கள் தெரியாத காலத்தைத் தானே இருண்ட காலம் எனச் சொல்கிறோம். அந்த வகையில் வருங்கால சந்ததிகள், நம்மைப்பற்றி ஆய்வு செய்ய முற்படும்போது போதிய தகவல்களும் தரவுகளும் இல்லாமல், நாம் வாழ்ந்த காலத்தைப் பற்றிய தகவல்கள், குறிப்புகள், ஆவணங்கள் போன்ற அனைத்தும் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தால் அது எத்தகைய இழப்பாக இருக்கும்! அதைத்தான் மனிதகுலம் தன்னை அறியாமல் இப்போது செய்துகொண்டிருக்கிறது.

எங்கே கடிதங்கள்?

தொழில்நுட்பம் ஏற்படுத்தித் தரும் சாத்தியங்களால் முன் எப்போதையும் விட தனிமனிதர்கள் தங்கள் வாழ்க்கையை அதிக அளவில் பதிவு செய்து கொண்டிருப்பது உண்மைதான். ஃபேஸ்புக் நிலைத்தகவல்களும், வலைப்பதிவுகளுமே இதற்கு சாட்சி. இவை தவிர ஸ்மார்ட்போன் கேமராக்கள் மூலம் புகைப்படங்களாகவும், சுய படங்களாகவும் காட்சி ரீதியான பதிவுகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். கடந்த தலைமுறை குடும்பங்களிடம் புகைப்பட ஆல்பம் என ஒன்றோ இரண்டோதான் இருந்திருக்கும். இந்த டிஜிட்டல் தலைமுறையோ ஒரே நாளில் நூற்றுக்கணக்கில் புகைப்படங்களை எடுக்கும் சாத்தியம் பெற்றிருக்கிறது. காலை உணவின் சுவையும், நேற்று பார்த்து ரசித்த திரைப்படம் பற்றிய கருத்துக்களும் குறும்பதிவுகளாக பகிரப்படுகின்றன.

எல்லாம் சரிதான். ஆனால் இவற்றைச் சேமிப்பதிலோ பாதுகாப்பதிலோ நாம் எந்த அளவுக்கு அக்கறை கொண்டிருக்கிறோம்? நம்முடைய இணையப் பதிவுகளும், புகைப்படங்களும், ஏன் இ-மெயில்களும் எங்கே இருக்கின்றன? அவை கிளவுட்டில் சேமிக்கப்பட்டுள்ளன. இது நம் கைகளிலும் இல்லை, கட்டுப்பாட்டிலும் இல்லை. கிளவுட் சேவையை அளிக்கும் நிறுவனம் நாளை இல்லாமல் போனால் என்ன ஆகும்? அல்லது அந்த நிறுவனம் நம்முடைய கோப்புகளை எல்லாம் அழித்துவிட தீர்மானித்தால் என்ன செய்வது? கிளவுட் சேவைகளில் நம் கோப்புகளின் உரிமை என்ன என்று தெரியாத நிலையில்தான் நாம் அவற்றின் நிபந்தனைகளுக்கு எல்லாம் உட்பட்டு பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். இவ்வளவு ஏன்? ஃபேஸ்புக்கிலோ, ஜிமெயிலிலோ நாம் வெளியிட்டிருக்கும் பதிவுகள் மற்றும் பரிமாறியுள்ள இ-மெயில்களின் நிலை என்ன?

இந்த நிறுவனங்கள், பயனாளிகள் தங்கள் கடந்த காலப் பதிவுகளுக்கு எல்லாம் உரிமை கோரக்கூடாது என அறிவித்தால் என்னாகும்? கவனிக்க நாம் அவற்றின் நிபந்தனைகளுக்கு எல்லாம் உட்பட்டு தான் இந்தச் சேவைகளை பயன்படுத்தியிருக்கிறோம். இது வெறும் அனுமானம்தான். விஷயம் என்ன என்றால் நாம் உருவாக்கும் டிஜிட்டல் தகவல்களின் சேமிப்பு நம்மிடம் இல்லை என்பதுதான். யோசித்துப்பாருங்கள், நீங்கள் பரிமாறிக்கொண்ட இமெயில்களின் நகல்கள் எல்லாம் உங்களிடம் இருக்கின்றனவா?

டிஜிட்டல் வடிவிலான தகவல்களை நாம் சரியாகச் சேமிப்பது இல்லை என்பது மட்டும் அல்ல, நம்முடைய தகவல் தொடர்புகளும் ஆழமானதாக அமைவதில்லை. கடிதங்கள் எழுதிய காலத்தில் விரிவாக உணர்வுகளை வெளிப்படுத்தியது போல் அல்லாமல் இ-மெயில்கள் அவசரகதியில்தான் அமைகின்றன. இலக்கியவாதிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் எழுதிய கடிதங்களை மட்டுமே தொகுத்து அவர்கள் வாழ்க்கையையும் சிந்தனைகளையும் புரிந்து கொள்வது சாத்தியமாகி இருக்கிறது. இன்று ஒருவருடைய இ-மெயில்களை இப்படித் தொகுப்பது சாத்தியமா?

டிஜிட்டல் சிக்கல்

இன்னொரு பக்கத்தில் டிஜிட்டல் பதிவுகளும்கூட மிகப்பெரிய அபாயத்தில் இருக்கின்றன. வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப உலகில் அவற்றைப் பதிவு செய்ய பயன்படுத்திய தொழில்நுட்பங்களும், மென்பொருள்களும் வரும் காலத்தில் காலாவதியாகிவிடலாம் என்பதால் வருங்காலத் தலைமுறை அவற்றை அணுகுவதில் பெரும் சிக்கல் ஏற்படலாம். இப்போதே கூட பிளாப்பி டிஸ்க் வடிவிலும், சிடிகளிலும் இருக்கும் தகவல்களை எப்படி படிப்பது என்பது பெரும் சிக்கலாக இருக்கிறது. பழைய கால கம்ப்யூட்டர்களும், சேமிப்பு முறைகளும் வேகமாகக் காலாவதி ஆகி வரும் நிலையில் நாளைய தொழில்நுட்பத்தால் இவற்றை அணுக முடியாமல் போகலாம். அப்போது வருங்கால வரலாற்றாசிரியர்கள் தலையில் கையை வைத்துக்கொண்டு உட்காருவதைத் தவிர வேறு வழி உண்டா?

புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய வடிவமைப்புக்கான வேட்கையில் நேற்றைய தொழில்நுட்பங்களை கண்ணை மூடிக்கொண்டு வீசிக்கொண்டிருக்கிறோம். நம் தலைமுறையில் அதிக கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. அதேசமயம், நம் தலைமுறையில்தான் அதைவிட வேகமாக பழைய தொழில்நுட்பங்கள் காணாமல் போய் கொண்டிருக்கின்றன. வாக்மேன் அவுட் ஆஃப் ஃபேஷனாகி விட்டது. பென் டிரைவ் யுகத்தில் டிவிடிக்களே பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டன.

வருங்கால கவலை

இந்தப் பின்னணியில்தான் விண்ட் செர்ஃப் போன்ற முன்னோடிகள் தொலைநோக்குடன் வருங்காலம் பற்றி கவலைப்படுகின்றனர். என்னதான் இருந்தாலும் காகித வடிவில் விட்டுச் செல்லப்பட்ட தகவல்களைப் படித்து ஆய்வு செய்வதில் நமக்கு எந்தச் சிக்கலும் இல்லை. அதற்கு முன்னர் கிடைத்த கல்வெட்டுக்களிலும் சிக்கல்கள் இல்லை. ஆனால் இன்றைய டிஜிட்டல் ஃபைல்களை நாளைய மென்பொருள்களால் படிக்க முடியாமல் போகும் நிலையை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?

இதனால் உண்டாகக் கூடிய டிஜிட்டல் இருண்ட காலம் பற்றி செர்ஃப் ஏற்கனவே பேசியிருக்கிறார். இப்போது இது தொடர்பாக ஒரு நவீன கடிதத்தை வெளியிட்டிருக்கிறார்.

நன்றாக கவனியுங்கள். கடிதம். இ மெயில் அல்ல.

கடிதங்களை நவீன வடிவில் வெளியிட உதவும் ஸ்மார்ட்போன் செயலியான லெட்டர்ஸ் மூலம் இந்தக் கடித்ததை அவர் திறந்த மடலாக எழுதியிருக்கிறார்.

தகவல் தொடர்பு வழிமுறைகள் மாறி வரும் நிலையில் பழமையான கடித முறையைப் பாதுகாப்பது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார். கடிதங்கள் உறவை வளர்ப்பதில், வர்த்தகம் மேற்கொள்வதில் மற்றும் வரலாற்றைக் காப்பதில் உதவியிருக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளவர், இந்த எழுத்து வடிவிலான தொடர்பை இணையத்தால் மேம்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த நம்பிக்கையுடன்தான் இப்போது கடித செயலி மூலம் கடிதம் எழுதுவதாக கூறியுள்ளவர், டிஜிட்டல் இருண்ட காலம் பற்றியும் குறிப்பிட்டு இதை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வகையில் இணையத்தை எப்படி மேம்படுத்துவது என இணையவாசிகளிடம் ஆலோசனையையும் கேட்டிருக்கிறார்.

இணையம் வருங்காலத்தில் எந்தளவுக்கு மாற்றம் அடையும், எந்த வகையிலான புதிய தொழில்நுட்பங்கள் உருவாகும், அவற்றால் என்னென்ன மாற்றங்கள் உண்டாகும் என்பது பற்றி அவர் அறிய விரும்புவதாக கோரியுள்ளார்.

ஆக நீங்களும் யோசியுங்கள். அப்படியே உங்கள் பதிவுகள் எல்லாம் டிஜிட்டல் குமிழ்களாக காணாமல் போய்விடாமல் நிலைத்து நிற்க என்ன செய்யலாம் என்றும் யோசியுங்கள். ஏனெனில் இது நம் காலத்துப் பிரச்னை!

(முற்றும்)

சைபர்சிம்மன் – தொடர்புக்கு: enarasimhan@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோனா கல்வி நிறுவன வளாகத்தில் ஜன. 10 இல் ஸ்ரீநிவாச கல்யாணம்

தனித்துவ அடையாள எண் பதிவு: விவசாயிகளுக்கு அழைப்பு

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் தா்னா

விழுப்புரத்தில் காஞ்சி மகா பெரியவா்ஆராதனைப் பெருவிழா

பூட்டியிருந்த வீட்டில் ரூ.23 ஆயிரம் திருட்டு

SCROLL FOR NEXT