பேலியோ டயட்

பகுதி 24: கோதுமையும் நிலக்கடலையும்!

கோதுமையின் வரலாறு சுமேரியாவில் தொடங்குகிறது. 9000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் கோதுமையை உண்டதற்கான தடயங்கள் இருந்தாலும்....

நியாண்டர் செல்வன்

கோதுமையின் வரலாறு சுமேரியாவில் தொடங்குகிறது. 9000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் கோதுமையை உண்டதற்கான தடயங்கள் இருந்தாலும் 5000 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் முதல் நாகரிகம் எனச் சொல்லக்கூடிய சுமேரியர்கள் இராக்கின் மெசபடோமியா பகுதியில் பெருமளவு கோதுமையை விளைவித்து, பயிரிட்டு, மனித இனத்தின் முக்கிய உணவாக கோதுமையை உருவாக்கினார்கள். இப்படி ஐயாயிரம் ஆண்டுகளாக கோதுமை நம் முக்கிய உணவாக இருந்தாலும், 26 லட்சம் ஆண்டுகள் தொன்மையுள்ள நம் மரபணுக்களுக்குக் கோதுமையைப் பிடிக்காமல் போய்விட்டது.

பேலியோ டயட்டில் தானியங்களை ஒதுக்குவது பலருக்கும் குறையாக உள்ளது. உடல் இளைக்க, சர்க்கரை நோய்க்கு என எல்லாவற்றுக்கும் சப்பாத்தியைத்தானே பரிந்துரை செய்கிறார்கள். அரிசி வேண்டாம் என்பதைக்கூட ஒப்புக்கொள்கிறோம், கூடவே சப்பாத்தியையும் தவிர்க்கவேண்டுமா என்று ஏக்கத்துடன் கேள்வி எழுப்புகிறார்கள். அவர்களிடம், சரி, கோதுமை - அரிசியில் என்ன வைட்டமின் அல்லது மூலச்சத்து உள்ளது என்று கேள்வி கேட்டால் யாருக்கும் பதில் சொல்லத் தெரியாது.

உண்மை என்னவென்றால், தீட்டாத முழு கோதுமை, அரிசியாக இருந்தாலும் அதில் எந்த மூலச்சத்தும் இல்லை என்பதே உண்மை. இவற்றில் பி வைட்டமின்கள் சிறிது உண்டு. ஆனால் அரிசி, சாதமாக மாறும்போதே அதில் உள்ள வைட்டமின்கள் விடைபெற்றுக்கொள்கின்றன. அதில் உள்ள மக்னீசியம், கால்சியம் போன்ற சில மினரல்கள் நம் உடலில் சேரவிடாமல் தானியங்களிலுள்ள பைட்டிக் அமிலம் எனும் மூலப்பொருள் தடுத்துவிடுகிறது. பைட்டிக் அமிலம் - விதைகள் அனைத்திலும் காணப்படும் மூலப்பொருள் ஆகும். பைட்டிக் அமிலம் இருப்பதால் கோதுமையில் உள்ள கால்சியம், மக்னீசியம் எதுவும் நம் உடலில் சேருவது இல்லை. அப்படியே கழிவுடன் வெளியேறிவிடுகிறது.

சரி, நன்மைதான் இல்லை. கெடுதலாவது ஏற்படாமல் உள்ளதா என்று பார்த்தால் அதுவுமில்லை. தானியங்கள், குறிப்பாக கோதுமையின் தீமைகளை உரக்கச் சொன்னவர், இதயநல மருத்துவர். வில்லியம் டேவிஸ்.

‘Wheat belly’ என்கிற ஒரு நூலை 2011-ல் எழுதினார் டேவிஸ். வெளியான ஒரே மாதத்தில் நியூயார்க் டைம்ஸின் 'அதிகம் விற்பனையாகும் நூல்கள்’ பட்டியலில் இடம்பிடித்தது. டேவிஸ், கோதுமை மீது கீழ்க்காணும் குற்றசாட்டுக்களைச் சுமத்துகிறார்:

தற்போதைய கோதுமை என்பது மரபணு மாற்றம் செய்யப்பட்ட குட்டை கோதுமை. நம் தாத்தா, பாட்டி காலத்தில் இருந்த உயரமான கோதுமை இப்போது வழக்கில் இல்லை. முன்பு அரிசிக்குச் சமமான உணவாக இருந்த கோதுமை, இந்த மரபணு மாற்றத்தால் அரிசியைவிட பல மடங்கு கெடுதலான உணவாக மாறிவிட்டது.

கோதுமை நம் மூளையில் ஓப்பியம் எனும் போதைமருந்து ஏற்படுத்துவதற்கு ஒப்பான தாக்கத்தை ஏற்படுத்தி நமக்குப் பசியைத் தூண்டி, மேலும் கூடுதலாக உண்ண வைக்கிறது.

நம் ரத்த சர்க்கரை அளவுகளை வெள்ளை சர்க்கரையை விடவும் அதிக அளவுகளில் ஏற்றுகிறது.

கோதுமையில் உள்ள க்ளூடன் (Gluten) வகைப் புரதம், உடலுக்குக் கடும் ஒவ்வாமையை ஏற்படுத்துவதுடன், பலவகை நோய் எதிர்ப்பு சக்தி சார்ந்த ஆட்டோ-இம்யூன் (Autoimmune diseases) வகை வியாதிகளையும் (உதா: சொரியாசிஸ்) உண்டாக்குகிறது.

கோதுமையால் பெரும்குடலுக்குப் பாதிப்பு ஏற்பட்டு, அல்சர், ஐ.பி.எஸ் (Irritable Bowel Syndrome) போன்ற வியாதிகள் ஏற்படுகின்றன.

இவையனைத்தையும் விடவும் முக்கியமாக, சர்க்கரை நோயாளிகளுக்கு மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி, ரத்த சர்க்கரை அளவுகளை அதிகமாக்கிவிடுகிறது.

வில்லியம் டேவிஸின் குற்றச்சாட்டுகளால் அதிர்ச்சியடைந்த கோதுமையை நம்பி பிழைப்பு நடத்தும் உணவு நிறுவனங்களும், துரித உணவு நிறுவனங்களும் வேறுவகையில் இப்பிரச்னையைக் கையாண்டன. முழு தானிய கவுன்சில் (Whole grain council) என்கிற இத்தகைய கோதுமை விற்பனையாளர்களின் நலசங்கம், டேவிஸைக் கடுமையாகத் தாக்கி கட்டுரைகளை வெளியிட்டது. (இணைப்பு: http://wholegrainscouncil.org/files/backup_migrate/-WheatBellyJulieJonesCFW.pdf)

ஆனால், பதிலடி தருவதற்குப் பதிலாக, டேவிஸ் சொன்ன பல குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளும்படியான மழுப்பலான பதில்களையே அளித்தது. உதாரணமாக…

கோதுமையை நிறுத்தியவுடன் பல சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவுகள் குறைவதாக டேவிஸ் குறிப்பிட்டதற்கு கவுன்சில் அளித்த பதில்: 'இதற்குக் காரணம் கோதுமையை நிறுத்தியது மட்டும் அல்ல. அவர்கள் உணவுக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்ததுமே’ என்றது. கோதுமை விற்பனை அதிகரிப்புக்கும் உடல்பருமன் அதிகரிப்புக்கும் உள்ள தொடர்பை டேவிஸ் சுட்டிக்காட்டியபோது 'இதற்கும் காரணம் கோதுமை அல்ல. அதிக கலோரிகளை அமெரிக்கர்கள் உண்டதே’ என்று கூறியது. ஆனால் கோதுமை போன்ற மாவுச்சத்து உள்ள உணவுகளை உண்டால் விரைவில் பசி எடுத்து மீண்டும் அதிக உணவை நேரிடும் என்பதை கவுன்சில் வசதியாக மறைத்துவிட்டது.

டேவிஸ் குறிப்பிட்ட, 'முழு கோதுமையும், மைதாவும் ஒரே அளவில் ரத்த சர்க்கரை அளவுகளை அதிகமாக்குகின்றன’ என்பதை கவுன்சில் ஒப்புக்கொண்டது. விந்தையிலும் விந்தையாக, முழு கோதுமை ரொட்டி, ஒரு சாக்லெட் பாரை விடவும் அதிக அளவில் ரத்த சர்க்கரை அளவுகளை அதிகமாக்குகிறது என்கிற டேவிஸின் குற்றச்சாட்டையும் கவுன்சில் ஒப்புக்கொண்டது. இதற்குக் காரணம், சாக்லெட்டில் உள்ள பாதாம், பால் போன்ற பொருள்களே என்ற விந்தையான விளக்கத்தையும் கொடுத்து, கோதுமையை விடவும் சாக்லெட் ஆரோக்கியமானது என்கிற டேவிஸின் கூற்றையும் இறுதியில் ஏற்றுக்கொண்டது. இதுபோல, கவுன்சிலின் பதிலறிக்கை, ஒரு மறுப்பு அறிக்கையாக எண்ணமுடியாத அளவுக்குப் ‘புத்திசாலித்தனமாக’ இருந்தது!

கவுன்சிலின் இந்தப் பதில்கள் ஊடகங்களில் வெளியானபோது, அது பெரிய விவாதப்பொருளானது. அதற்குமுன்புகூட, கோதுமையைத் தவிர்க்கச் சொல்லி பலரும் சொல்லி வந்தார்கள். ஆனால் டேவிஸின் புத்தகம்தான் கோதுமை பற்றிய விழிப்புணர்வை அதிகமாக்கியது. இதனால் பேலியோ டயட்டைப் பின்பற்றாதவர்களும் கோதுமையைத் தவிர்க்கத் தொடங்கினார்கள் (அமெரிக்காவில்!). அரிசி, கின்வா போன்ற தானியங்கள் மக்களிடையே பரவ ஆரம்பித்தன.

ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள் அவ்வளவு எளிதில் இதை விட்டுவிடவில்லை. எதிர்க்காற்றில் பாய்மரக் கப்பலோட்டும் வித்தையை நன்கு அறிந்த நிறுவனங்கள், ‘க்ளூடன் ஃப்ரீ’ (Gluten free) என்கிற பெயரில் ‘கோதுமைப் புரதம் தவிர்த்த உணவுகள்’ எனும் வகையிலான உணவுகளை அறிமுகப்படுத்தின. அதற்கு முன்பே க்ளூடன் இல்லாத உணவுகள், க்ளூடன் ஒவ்வாமை உள்ளவர்களைக் குறிவைத்து சந்தைப்படுத்தப்பட்டபோதும் டேவிஸின் நூலின் விற்பனைக்குப் பிறகு இவ்வகை உணவுகளின் விற்பனையும் பலமடங்கு அதிகரித்தன. இனிப்புகள், துரித உணவுகள், பீட்சா, போன்றவை கூட ‘க்ளூடன் ஃப்ரீ’ என்கிற பெயரில் சந்தைப்படுத்தப்பட்டன.

பொதுமக்களிடையே கோதுமை குறித்த விழிப்புணர்வு பரவ வில்லியம் டேவிஸ் முக்கிய காரணம் என்றாலும் விஞ்ஞானிகளிடையே கோதுமை குறித்த சந்தேகம் பல ஆண்டுகளாக இருந்தே வந்துள்ளது. உதாரணமாக, புகழ்பெற்ற மருத்துவ இதழான நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின்-னில் (New England Journal of Medicine), 2002-ல் வெளியான ஆய்வுக்கட்டுரை ஒன்றில் மருத்துவப் பேராசிரியர் ஃபாரல், கோதுமையால் உருவாகக்கூடிய வியாதிகள் என மாரடைப்பு, புற்றுநோய், அனைத்து வகை ஆட்டோஇம்யூன் வியாதிகள், முடக்குவாதம், ஐ.பி.எஸ்., ஹஷிமோடோ வியாதி (இது ஒருவகை தைராய்டு வியாதி. பல ஹைப்போதைராய்டு நோயாளிகளுக்கும் ஏற்படும்.), மைக்ரேன் எனப்படும் தலைவலி, காக்காய் வலிப்பு, பார்க்கின்சன், ஏ.எல்.எஸ் (Amyotrophic lateral sclerosis) எனப்படும் நரம்பு வியாதி, ஆட்டிசம், மன அழுத்தம் போன்ற 55 வகை வியாதிகளைப் பட்டியலிடுகிறார்.

செலியாக் வியாதி

செலியாக் வியாதி (celiac disease) உலகில் நூறு பேரில் ஒருவருக்கு இருக்கும் வியாதி. செலியாக் வியாதி இருப்பவர்கள் கோதுமையை உண்டால் அவர்களது நோய் எதிர்ப்பு சக்தி மிகக் கடுமையான முறையில் எதிர்வினை புரியும். வயிற்றின் சிறுகுடல், பெருங்குடல் பகுதிகளில் வைரஸ் அல்லது பாக்டீரியா புகுந்துவிட்டதாக கருதி அவற்றின் மேல் தாக்குதல் தொடுக்கும். இதனால் சிறுகுடலில் பாதிப்பு ஏற்பட்டு உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை ஜீரணிப்பதில் பாதிப்பு ஏற்படும். இது பரம்பரையாக வரும் வியாதி எனக் கூறப்பட்டாலும் குட்டை கோதுமை 1970-களில் அறிமுகமானபிறகு, செலியாக் வியாதி வந்தவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துவிட்டது.

50 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட 10,000 பேரின் ரத்தப் பரிசோதனை முடிவுகளையும் 2009-ல் எடுக்கப்பட்ட 10,000 பேரின் ரத்தப் பரிசோதனை அளவுகளையும் ஒப்பிட்ட மற்றொரு ஆய்வுக்கட்டுரையில் இந்த 50 ஆண்டுகளில் செலியாக் வியாதி 400% அதிகரித்திருக்கும் தகவல் வெளியானது. 1970-களில் குட்டை கோதுமை அறிமுகமான பிறகு அதில் க்ளூடன் புரதத்தின் சதவிகிதம் அதிகமானதே இதற்குக் காரணமாக கூறப்படுகிறது.

இந்த ஆய்வை நடத்திய பேராசிரியர் ரூபியோ கீழ்க்காணும் தகவல்களை கூறுகிறார்.

க்ளூடன் எனும் கோதுமைப் புரதம், நோய் எதிர்ப்பு சக்தியைப் பலவீனப்படுத்துகிறது.

கோதுமை அதிகமாக உள்ள உணவுகள் பொதுவாக ஊட்டச்சத்து குறைந்தவையாகவே இருக்கும். அதிலும் இவை அதிகமாக குப்பை உணவுகளாகவே இருப்பதால் உணவின் மூலம் நமக்குக் கிடைக்கும் ஊட்டச்சத்தின் அளவுகள் குறைகின்றன.

செலியாக் வியாதி நூறு பேரில் ஒருவருக்கு மட்டுமே வந்தாலும், தற்போது 400% மடங்கு அதிகரித்துள்ளது. செலியாக் வியாதி மரபணு மூலம் பரம்பரையாக வரும் வியாதி என்றாலும் குட்டை கோதுமை அந்த மரபணுவின் பாதிப்பை மேலும் அதிகரித்து, வியாதியின் சதவிகிதத்தை அதிகரிக்க வைக்கிறது. செலியாக் வியாதிக்கு காரணமான மரபணு, உலக ஜனத்தொகையில் 30 முதல் 50 சதவிகிதம் பேருக்கு உள்ளது.

செலியாக் வியாதியால் பாதிக்கப்பட்டவர்களின் சதவிகிதம் 1% என்றால் அவர்களை விட எட்டுமடங்கு பேர் தமக்கு செலியாக் வியாதி இருப்பதே தெரியாமல் உள்ளவர்கள். இதற்கு ஏழ்மை, மருத்துவ வசதியின்மை போன்ற பல காரணங்களைக் கூறலாம். ஆக, உலக ஜனத்தொகையில் 9% பேர் செலியாக் வியாதியால் பாதிப்படைந்துள்ளார்கள்.

30 முதல் 50% மக்களுக்கு செலியாக் வியாதிக்கான மரபணுக்கள் இருப்பதால் இத்தனை பேருடைய வருங்கால சந்ததியினரும் (கோதுமை நுகர்வினால்) செலியாக் வியாதியால் பாதிக்கப்படும் வாய்ப்புகளும், எதிர்காலத்தில் இந்த வியாதி மிகக் கடுமையாகப் பரவக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன.

அதேசமயம், செலியாக் வியாதிக்கான தீர்வு மிகவும் எளிதானது. கோதுமையை தவிர்த்துவிடுங்கள். அவ்வளவுதான்.

*

இப்போது சில உண்மைகளை யோசிப்போம்.

கோதுமை, இயற்கை உணவு என்றால் ஏன் பலருக்கும் கோதுமை ஒவ்வாமை உள்ளது?

10,000 ஆண்டுகளாக கோதுமையை உண்டபோதும் கோதுமை நம் உடலுக்குப் பழகவில்லை என்றால் அது எப்படி இயற்கை உணவாகும்? அத்தகைய உணவை நாம் உண்பது சரியா?

இந்த இடத்தில் என் நண்பருக்கு நிகழ்ந்த சம்பவத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். அவர் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பெண். இந்தியாவில் இருக்கும்போது அவருக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போகும். மருத்துவர்களால் அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. திருமணமாகி அமெரிக்கா வந்ததும், சில மாதங்கள் கழித்து ஒரு மருத்துவரிடம் சென்றார். அங்கு அவருக்கு கோதுமை ஒவ்வாமை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பிறகு அவர் முற்றிலும் கோதுமையைத் தவிர்த்தார். அதற்குப் பிறகும் பிரச்னைகள் நிற்கவில்லை. பிறகு அவருக்கு நிலக்கடலை ஒவ்வாமை இருப்பதும் கண்டறியப்பட்டது. பிறகு அவரால் பாதாம் முதலிய கொட்டைகளையும் உண்ணமுடியாமல் போனது.

இதனால் சோர்ந்துபோன அவர் மருத்துவரிடம், ‘நான் அடிக்கடி சிக்கன் மட்டன் எல்லாம் சாப்பிடுவேன். அவற்றிலும் ஒவ்வாமை உள்ளதா என்று பரிசோதித்துவிடுங்கள்’ என்று கூறியுள்ளார்.

அதற்கு மருத்துவர் சிரித்தபடி ‘என் ஆயுளில் சிகப்பு மாமிச ஒவ்வாமை வந்தவர் என ஒருவரைக்கூடப் பார்த்ததில்லை. மனிதனுக்கு ஒவ்வாமை அளிக்காத ஒரே உணவு, சிகப்பு இறைச்சியே’ என்று கூறியுள்ளார்.

ஆமாம். ஆரோக்கிய உணவுகள் என்று கூறப்படும் நிலக்கடலையும், கோதுமையும் உலகில் பலருக்கும் ஒவ்வாமையையே ஏற்படுத்துகின்றன. ஆனால் கெடுதலான உணவு என ஒதுக்கப்படும் சிகப்பு இறைச்சி உலகில் யாருக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்துவதில்லை. டிக் எனும் வகைப் பூச்சி ஒருவரைக் கடித்தாலொழிய சிகப்பு இறைச்சியால் ஒவ்வாமை ஏற்படாது. ஆக நம் உடலுக்கு, இயற்கை உணவு எது என்பது மிகத் தெளிவாக தெரிந்துள்ளது. ஒவ்வாமை, வியாதிகள் மூலம் எந்த உணவு நல்ல உணவு, தனக்கு எவ்வகையான உணவுகள் வேண்டும் என்பதை உடல் தெரிவிக்கிறது. நாம்தான் கவனத்தில் கொள்வதில்லை.

ஒவ்வாமையைப் பொறுத்தவரை மேலைநாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் ஒவ்வாமையின் சதவிகிதம் மிகவும் குறைவு என்றே கருதப்பட்டது. உதாரணமாக, நான் அமெரிக்கா வந்த புதிதில் பள்ளியில் குழந்தையைச் சேர்க்கச் சென்றேன். அங்கே ஆசிரியர்கள் என்னிடம் கூறிய முதல் தகவலே - ‘இப்பள்ளி நிலக்கடலை அனுமதிக்கப்படாத பகுதி!’ அதேபோல பள்ளி வளாகத்தில் ‘துப்பாக்கியைக் கொண்டு வர அனுமதி இல்லை (Gun free zone)’ என்ற அறிவிப்புப் பலகை காணப்பட்டது. அதனருகே ‘நிலக்கடலை கொண்டு வர அனுமதி இல்லை (peanut free zone)’ என்கிற பலகையையும் காணமுடிந்தது. அங்கு மட்டுமல்ல, பல பள்ளிகளிலும் இதேபோன்ற அறிவிப்புகளைக் கண்டேன்.

பல மாணவர்களுக்குக் கடுமையான நிலக்கடலை ஒவ்வாமை உள்ளது. மேலும் மற்ற மாணவர்கள் கொண்டுவரும் உணவில் நிலக்கடலை இருந்து அதைத் தெரியாமல் சாப்பிட்டாலும் உடலெங்கும் தடிப்பு, தடிப்பாக வந்து சில சமயம் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலைகூட ஏற்படுகிறது என்று பள்ளியில் கூறுகிறார்கள். இதனால்தான் அமெரிக்கப் பள்ளிகளில் நிலக்கடலைக்குத் தடை உள்ளது.

இந்தியாவில் இதுபோன்ற சம்பவங்களை நாம் கேள்விப்பட்டதில்லை. ஆனால் தற்போது வரும் ஆய்வுகள் பலவும், அந்தந்தப் பகுதியில் இயற்கையாக விளையும் பொருள்களால், அப்பகுதியிலுள்ள மக்களுக்கு ஒவ்வாமை ஏற்படுவது இயல்பானது எனக் கூறுகின்றன. நிலக்கடலையின் பூர்வீகம், அமெரிக்கா. அதனால்தான் பல அமெரிக்கர்களுக்கு நிலக்கடலை ஒவ்வாமை உள்ளது. அதேசமயம் இந்தியர்களிடம் நிலக்கடலை ஒவ்வாமை குறைவாகவே உள்ளது. மைசூரில் உள்ள அலர்ஜி ஆஸ்துமா நிறுவனத்தின் (Allergy Asthma Associates, Mysore) மருத்துவர் ரமேஷ் நிகழ்த்திய ஆய்வு ஒன்றில், 25% இந்தியர்களுக்கு உணவுப்பொருள் ஒவ்வாமை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துமே கத்திரிக்காய், பப்பாளி, அவரைக்காய், வெள்ளரிக்காய் போன்ற நாட்டுக்காய்களால் ஏற்படும் ஒவ்வாமையே.

அதேபோல ஆப்பிரிக்காவில் உள்ள கானா நாட்டில் பலருக்கும் அன்னாசிப்பழ ஒவ்வாமை உண்டு. 90% சீனர்களுக்கு பால் ஒவ்வாமை உண்டு. சீன உணவகங்களில் பால் சார்ந்த பொருள்களைக் காண்பது மிகவும் அரிதாகும். வங்கதேசத்தில் பலருக்கும் பலாப்பழ ஒவ்வாமை உண்டு. நார்வேயில் மீன் ஒவ்வாமை!

இப்படி அந்தந்த மண் சார்ந்த உணவால் அந்தந்த மண்ணின் மைந்தர்களுக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. அதேசமயம் உணவுச் சந்தைகள் உலகமயமாவதால் உள்ளூர் உணவுகள் பலவும் உலகமயமாகி ஒவ்வாமை நோய்களும் விரைவில் உலகம் தழுவிய அளவில் பல்கிப் பரவலாம் என்பதே விஞ்ஞானிகளின் அச்சமாக உள்ளது. குறிப்பாக கோதுமை நுகர்வு பெருகப் பெருக உள்ளூர் உணவுகள் பலவும் கோதுமைமயமாகி வருகின்றன. உதாரணமாக தமிழ்நாட்டு உணவான இட்லி, கோதுமையின் கலப்பால் ரவா இட்லி ஆனதைக் கூறலாம். எனவே, கோதுமை ஒவ்வாமையும், செலியாக் வியாதியும் மிகப்பெரிய அளவில் உலகெங்கும் பல்கிப்பரவுகிற வாய்ப்புகள் அதிகம். இதிலிருந்து தப்பிப்பது மிகவும் எளிது. ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவைகளைத் தவிர்த்துவிட்டால், ஒவ்வாமையின் விளைவுகள் நம்மை விட்டு அகன்றுவிடும். ஆனால் நம் மக்களும் க்ளூடன் ஃப்ரீ, நிலக்கடலை ஃப்ரீ போன்ற உணவுப் பொருள்களையே நாடிச் செல்கிறார்களே ஒழிய, ஆரோக்கிய உணவுகளை உண்ண முன்வருவதில்லை என்பது வருத்தம் தருகிற விஷயமாகும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT