வரலாறு படைத்த வரலாறு

கேள்வியின் நாயகன்

'எனக்குத் தெரிந்ததெல்லாம் எனக்கு எதுவுமே தெரியாதென்பதுதான்.' எவ்வளவு அழகான, அற்புதமான உண்மை! இப்படிச் சொன்னவர் யார்? அவர் ஒரு தத்துவஞானி. கிரேக்க சமுதாயத்தில் ஏதென்ஸ் நகரத்தில்

நாகூர் ரூமி

'எனக்குத் தெரிந்ததெல்லாம் எனக்கு எதுவுமே தெரியாதென்பதுதான்.'

எவ்வளவு அழகான, அற்புதமான உண்மை! இப்படிச் சொன்னவர் யார்? அவர் ஒரு தத்துவஞானி. கிரேக்க சமுதாயத்தில் ஏதென்ஸ் நகரத்தில் வாழ்ந்தவர். இயேசுகிறிஸ்துவுக்கு முந்தியவர். அவர் காலம் கிமு 470-399! அவர் நிறையப் பேசினார். நிறைய கேள்விகள் கேட்டார். கேள்விகள் கேட்பதில் அவரை யாரும் மிஞ்சமுடியாது. அவர் கேள்வியின் நாயகன். கேள்விகள் கேட்டுக்கேட்டு ஒரு பிரச்சனைக்கு பதில் / தீர்வு கண்டுபிடிக்கும் முறைக்கே அவருடைய பெயரைத்தான் வைத்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். (அது என்ன பெயர் என்று அப்புறம் சொல்கிறேன்).

வினோதம் என்னவென்றால், அவருடைய வாழ்க்கையிலிருந்தும் உரையாடல்களிலிலிருந்தும் நமக்குக்கிடைத்ததைவிட முக்கியமான செய்திகள் அவருடைய மரணத்திலிருந்து கிடைத்திருப்பதுதான். அய்யோ பாவம் என்று நாம் நினைக்கலாம். ஆனால் அவர் அப்படி நினைக்கவில்லை. 'மனிதகுலத்துக்குக் கிடைத்திருக்கும் அருட்கொடைகளில் மிகச்சிறந்தது இறப்புதான்' என்று அவர் சொன்னார்!

அந்த அற்புத மனிதரின் பெயரை இந்த உலகம் நன்கறியும். ஆனால் பெயரை மட்டும்தான் அறியும்! கோடு போட்டால் ‘ரோடு’ போடும் விற்பன்னர்களல்லவா நாம்?! அவர் பெயரை வைத்துக்கொண்டே அவரை மிகவும் தெரிந்தமாதிரி நடந்துகொள்வதில் நமக்கு இணை நாம்தான்! நமக்குத் தெரியாமல் தெரிந்த அவர் வேறு யாருமல்ல, கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸ்தான்!

சாக்ரடீஸின் வாழ்க்கை பற்றி மிகமுக்கியமான தகவல் ஒன்றை இங்கே சொல்லிவிடுவது உத்தமம். கணவன்மார்களுக்கு உதவியாக இருக்கும். மனைவிமார்களையும் குஷிப்படுத்தி அது தூண்டலாம்.

அவருடைய மனைவி பெயர் சாந்தியோப்பி. ஆனால் அவர் பெயரில் மட்டும்தான் ‘சாந்தி’ இருந்தது. சொல்லிலும் செயலிலும் அவர் ஒரு சண்டமாருதி என்று சொன்னால் மிகையாகாது! ஆமாம். ஒருமுறை சாக்ரடீஸ் தன் மாணவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். பேசிக்கொண்டிருந்தாரென்றா சொன்னேன்! ம்ஹும், வழக்கம்போல கேள்விமேல் கேள்விகேட்டு அவர்களைக் குழப்பிக்கொண்டிருந்தார். ஒரு தெளிவை ஏற்படுத்துவதற்காக. உள்ளேயிருந்த அவர் மனைவி சாந்தியோப்பி அவரை உரக்கத் திட்டிக்கொண்டிருந்தாள்.

‘இவனோட பெரிய தொந்தரவாப் போச்சு. ஒன்னுக்கும் ஒதவாத பேச்சையே எப்பப்பாத்தாலும் பேசிட்டிருக்கான். அதக்கேக்க ஒரு முட்டாள் கும்பல் வேறு’ என்ற ரீதியில் கத்திக்கொண்டிருந்தாள். ஒருகட்டத்தில் பொறுக்க முடியாமல் சாக்ரடீஸ் தலையில் ஒரு வாளித்தண்ணீரைக் கொண்டுவந்து ஊற்றினாள்! கொஞ்சம்கூட சூடாகாமல் சாக்ரடீஸ் தன் மாணவர்களிடம் சொன்னார்: ‘இவ்வளவு நேரம் இடிஇடித்தது. இப்போது மழை பெய்திருக்கிறது!’ அவர் ஒரு உண்மையான தத்துவஞானி என்று இதிலிருந்தே தெரியவில்லையா?!

‘திருமணமா? தாரளமாகச் செய்துகொள்ளுங்கள். உங்கள் மனைவி நல்லவளாக அமையும்பட்சம் நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். உங்கள் மனைவி மோசமானவளாக அமைந்தால் நீங்கள் தத்துவவாதியாக மாறிவிடுவீர்கள்’ என்று அவர் ஏன் சொன்னார் என்று இப்போது புரிந்திருக்கும்!

ஆரக்கிள்

கிரேக்க கலாச்சாரத்தில் ஒரு பழக்கம் இருந்தது. கோயிலில் பூசாரிப்பெண் இருப்பாள். அவள்தான் ஆரக்கிள். அவளிடம் மக்கள் கேள்விகேட்பார்கள். எப்போது மழைபெய்யும் என்பது போன்ற வருங்காலம் பற்றிய கேள்விகளாகவே அவை பெரும்பாலும் இருக்கும். (ஆரக்கிள் என்ற கணிணி மொழிக்கும் இதற்கும் தொடர்பில்லை. ஆனால் ’வருங்கால மொழி’ என்ற பொருளில் அக்கணிணி மொழிக்கு அப்பெயர் இடப்பட்டிருக்கலாம்). புரியாத பாஷையில் அவள் ஏதேதோ பதில் சொல்லுவாள். அதைப்புரிந்துகொண்டு எளிமையான மொழியில் விளக்கும் விற்பன்னர்களும் இருப்பார்கள்.

ஒருமுறை சாக்ரடீஸின் நண்பர் சாரஃபோன் என்பவர் ஆரக்கிளிடம் சென்று ஏதென்ஸிலேயே அறிவாளி யார் என்று கேட்டபோது சாக்ரடீஸைவிட அறிவாளி யாருமில்லை என ஆரக்கிள் சொன்னது. அதற்கு பதிலாக சாக்ரடீஸ் சொன்னதுதான் இக்கட்டுரையின் தொடக்கமாக உள்ளது!

மனிதர்கள் நான்கு வகைப்பட்டவர்கள் என்று சொல்லப்படுகிறது:

தனக்குத் தெரியாது என்பது தெரியாதவர்கள் – இவர்கள் முட்டாள்கள். இவர்களை விட்டுவிடுங்கள்.

தனக்குத் தெரியாது என்பது தெரிந்தவர்கள் – இவர்கள் எளிமையானவர்கள். சொல்லிக்கொடுங்கள்.

தனக்குத் தெரியும் என்பது தெரியாதவர்கள் – இவர்கள் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். எழுப்புங்கள்.

தனக்குத் தெரியும் என்பது தெரிந்தவர்கள் – இவர்களே ஞானிகள். பின்பற்றுங்கள்.

இதில் சாக்ரடீஸ் சொல்வது இரண்டாவதில் வருகிறது. ஆனாலும் அவர் தன் பணிவின் மற்றும் எளிமையின் பொருட்டே அப்படிச் சொன்னார் என்பதையும் அவர் நான்காவது வகை மனிதன் என்பதையும்  அவரது வரலாற்றிலிருந்து புரிந்துகொள்ளலாம்.

மூன்று பெண்கள்

சாக்ரடீஸின் அப்பா சொஃப்ரானிகஸ் ஒரு சிற்பி என்றும் கல்லுடைப்பவர் என்றும் சொல்லப்படுகிறது. கல்லுடைப்பதும் சிற்பம் வடிப்பதும் ஒரேவிதமான வேலைதான். ஆனால் இரண்டுக்கும் பாரதூரமான, நுட்பமான வித்தியாசமுள்ளது.  முன்னது இருப்பதை இல்லாமலாக்குவது. பின்னது மறைவானதை வெளிக்கொண்டுவருவது. முன்னது அழிப்பு. பின்னது ஆக்கம். முன்னதில் உடலுழைப்பு மட்டுமே உள்ளது. பின்னதில் புத்தியும் கலைத்திறனும் வேலை செய்கிறது. முன்னது வேண்டாம் என்று ஒதுக்குகிறது. பின்னது வேண்டும் என்று செதுக்குகிறது.

சாக்ரடீஸின் ஞானத்தைப் பார்க்கும்போது அவர் அப்பா ஒரு சிற்பியாகத்தான் இருந்திருக்கவேண்டும். சாக்ரடீஸின் அம்மா பேறுகாலப் பணிமகளாக இருந்தவர். சாக்ரடீஸின் வாழ்க்கையில் மிகுந்த தாக்கம் ஏற்படுத்திய மூன்று பெண்களில் முதலாமவர் அவர் அம்மா. டயோட்டிமா, அஸ்பேசியா ஆகிய பெண்கள் மற்ற இருவர். ஆனால் அவர்கள் யார், எதனால், எப்படி சாக்ரடீஸை அவர்கள் பாதித்தார்கள் என்று தெரியவில்லை. ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வோம். ஒரு தத்துவ ஞானியின் வெற்றிக்குப் பின்னால் மூன்று பெண்கள் இருந்துள்ளனர்!

குருவுக்கு மிஞ்சிய சிஷ்யர்கள்

சாக்ரடீஸ் என்ன பேசினார், என்னவெல்லாம் செய்தார், என்னவெல்லாம் எழுதினார் என்று எதுவுமே தெரியவில்லை! அப்படியானால் அவரைப் பற்றி எப்படித் தெரிந்துகொண்டோம்? அவருடைய மாணாக்கர்கள் மூலமாக! அவர்கள் சாதாரண மாணாக்கர்கள் அல்ல. குருவுக்கு மிஞ்சிய சிஷ்யர்கள். தத்துவஞானி ப்ளேட்டோவும் செனஃபோனும் (Plato and Xenophone) சாக்ரடீஸின் மாணவர்கள்!

ஒரு பேராசிரியர் வகுப்புக்குப் போனார். மாணவர்களெல்லாம் வகுப்பைக் காலி செய்துவிட்டு – ‘கட்’ அடித்துவிட்டு – போயிருந்தார்கள். ஒரே ஒரு மாணவர் மட்டும் உள்ளே இருந்தார். அப்போது அந்தப் பேராசிரியர், 'நீ மட்டும்தானப்பா குருவுக்கு மிஞ்சிய சிஷ்யன்' என்று சொன்னார்! ப்ளேட்டோவும் செனஃபோனும் அப்படி மிஞ்சியவர்களல்ல! அவர்கள் குருவை மிஞ்சியவர்கள் என்று சொல்லலாம். ஆம். கிரேக்கம் என்று சொன்னாலே மூன்று 'பெரிசுகள்’ பெயர்கள்தான் உடனே ஞாபகம் வரும். சாக்ரடீஸ், ப்ளேட்டோ, அரிஸ்டாட்டில். ப்ளேட்டோவுக்கு சாக்ரடீஸும், அரிஸ்டாட்டிலுக்கு ப்ளேட்டோவும் ஆசிரியர்கள்.

அறிவும் வறுமையும்

சேர்ந்தே இருப்பது புலமையும் வறுமையும் என்று சொல்லி நாம் சிரிப்போம். ஆனால் கிரேக்க சமுதாயத்தில் சாக்ரடீஸ் வறுமை வாழ்க்கையையே தேர்ந்தெடுத்தார். அதேசமயம் தன் கருத்துக்களை எடுத்துச் சொல்வதில் மிகவும் துணிச்சலும் உறுதியும் கொண்டவராக இருந்தார். 'அடுத்தவேளை சாப்பாட்டுக்கு ஒன்றுமில்லாவிட்டாலும் எல்லாவற்றையும் பற்றி யோசித்துக்கொண்டே இருப்பார்' என்று சாக்ரடீஸ் பற்றிக் கூறினார் இன்பியல் கவிஞர் யுபோலிஸ். இயேசு, முஹம்மது நபி, புத்தர், பரமஹம்சர், ரமணர், ஷிர்டி சாய்பாபா என எல்லா ஞானிகளுமே எளிமையையும் வறுமையையும் விரும்பித் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்களாகவே இருந்துள்ளனர்.

சாக்ரடீஸ் யோசித்துக்கொண்டு மட்டும் இருப்பதில்லை. ஜனநாயகம், கடவுள்கள் பற்றிய தன் கருத்துக்களையெல்லாம் யாருக்கும் அஞ்சாமல் கூறுவார். அவர் பேச்சைக் கேட்கும் கிரேக்கர்களில் பலர் கடுப்பாகி அவரைத் தாக்கவும் செய்வர். அவர் தலைமுடியைப் பிடித்து இழுப்பார்கள். ஆனால் எதையுமே சாக்ரடீஸ் பொருட்படுத்துவதில்லை. பொறுமையுடன் எல்லாவற்றையும் சகித்துக்கொள்வார். பொறுமையாளர்களோடு நிச்சயாக நான் இருக்கிறேன் என்று அல்லாஹ் சொல்வதாக வரும் திருமறையின் வசனம் எனக்கு நினைவில் வருகிறது. ஏனெனில் சாக்ரடீஸின் சகிப்பின் பின்னால் ஒரு ஞானமிருந்தது. இல்லையெனில் ஏன் சகித்துக்கொள்ளவேண்டும் என்ற கேள்வி வந்து எல்லாவற்றையும் கெடுத்துவிடும்.

சாக்ரடீஸின் இளமைக்காலம் கிரேக்கத்தின் பொற்காலமாக இருந்தது. பெரிகிள்ஸின் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. அக்ரோபோலிஸ் என்ற மக்கள் வாழும் கோட்டை, பார்த்தீனான் போன்ற புகழ்பெற்ற கோயில் ஆகியவை பெரிகிள்ஸின் ஆட்சியில் கட்டப்பட்டவையாகும்.

ஆனால் காலம் செல்லச்செல்ல சாக்ரடீஸின் கருத்துக்கள் அன்று நிலவிய ஜனநாயகத்துக்கு எதிரானதாகவும், ஏதன்ஸ் நகர மக்கள் வணங்கிய கடவுளரை மதிக்காததாகவும் பார்க்கப்பட்டது. வாய் இருப்பதனாலேயே அதைத்திறந்து கருத்து சொல்லும் சுந்திரம் அனைவருக்கும் இல்லை என்று சாக்ரடீஸ் அடித்துக் கூறினார். இப்படியெல்லாம் பேசியதாலேயே அவர் உயிருக்கு உலைவைத்ததுபோல் ஆனது. முக்கியமாக ஸ்பார்ட்டாவுக்கு கிரேக்கத்துக்கும் யுத்தம் வந்தபோது சாக்ரடீஸ் ஸ்பார்ட்டாவையும் ஸ்பார்ட்டன்களையும் ஆதரித்துப் பேசினார்.

கிமு 411லிருந்து 403 வரையிலான காலகட்டத்தில் ஜனநாயகத்துக்கு எதிரான கலகம் எழுந்தது. அதற்கு மூலகாரணமாக இருந்தவர்கள் இரண்டு பேர்: அல்சிபியாடிஸ் மற்றும் க்ரிட்டியாஸ். இருவருமே சாக்ரடீஸின் மாணாக்கர்கள்! ஏதன்ஸில் இருந்த பணக்காரர்களின் சொத்துக்கள் பறிக்கப்பட்டன. பெண்கள், குழந்தைகள், அடிமைகள் என 5000 பேருக்கு மேல் நாடுகடத்தப்பட்டனர். 1500க்கும் மேற்பட்ட ஜனநாயகவாதிகள் கொல்லப்பட்டனர். அதன் மோசமான விளைவுகளுக்கு சாக்ரடீஸ்தான் காரணம் என்று அதீனியர்கள் நினைத்தனர். ஏனெனில் அந்த வன்முறையைப் பற்றி அவர் மூச்சுவிடவில்லை. அதற்கு எதிராக எதுவும் சொல்லவும் இல்லை, செய்யவும் இல்லை.

சாக்ரடீஸ் 'ஒரு மாதிரியான ஆளு’ என்றெண்ணி முதலில் உதாசீனப் படுத்தியவர்களெல்லாம் இப்போது அவரை ஒரு பயங்கரவாதிபோலப் பார்த்தனர். ஆனால் அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் வழக்கம்போல சாக்ரடீஸ் தன் கருத்துக்களைக் கூறிக்கொண்டிருந்தார். பலர் அவரது கருத்துக்களால் கவரப்பட்டுக்கொண்டும் இருந்தனர்.

வழக்கும் வாதமும்

கலவரங்களெல்லாம் ஒழிந்த பிறகு, ஆர்க்கான் என்ற மன்னனின் ஆட்சிக்காலத்தில், சாக்ரடீஸ்மீது வழக்கு தொடரப்பட்டது. இரண்டு விதமான குற்றங்களை அவர் புரிந்திருக்கிறார் என்று சொல்லப்பட்டது. ஒன்று அரசியல் ரீதியானது. இன்னொன்று மதரீதியானது. இளைஞர்களின் மனங்களை சாக்ரடீஸ் தவறான முறையில் மாற்றுகிறார், அவர்களை வழிகெடுக்கிறார், அதீனியக் கடவுளர்களின்மீது பக்தியற்றவராக இருக்கிறார், புதிய கடவுள்களை அறிமுகப்படுத்துகிறார் என்றெல்லாம் குற்றம் சுமத்தி மெலீடஸ் என்ற கவிஞன் மன்றத்துக்கு வந்து பதில் சொல்லுமாறு சாக்ரடீஸை அழைத்தான். பின்னர் அந்த குற்றப்பத்திரிக்கை முறையாக வாசிக்கப்பட்டது.

சாக்ரடீஸுக்கு எதிரான அந்த வழக்கு மக்கள் மன்றத்தில் சுமார் பத்து மணி நேரம் நடந்தது. வாதி, பிரதிவாதி இருவருக்குமே கேள்விகள் கேட்கவும், பதில் சொல்லவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. சீட்டுக்குலுக்கிப் போட்டு வந்த பெயர்களில் இருந்த ஏதன்ஸ் நகர குடிமகன்கள் 500 பேர்கள் நீதிபதிகளாக செயலாற்றினர்! ஒருவர் தீர்ப்பு சொன்னாலே பிரச்சனை வர வாய்ப்புண்டு. ஐநூறு பேர்! ஐநூறு மனங்கள்! அவர்கள் அனைவருமே நாற்பது  வயதுக்குக் கீழிருந்தவர்கள். சாக்ரடீஸின் வயது அப்போது எழுபதுக்கும் மேல். 'நீதிபதிகள்’ ஒரு மரமேஜையின்மீது அமர்ந்திருந்தனர். பார்வையாளர்கள் மத்தியில் சாக்ரடீஸின் மாணவரான ப்ளேட்டோவும் இருந்தார்.

அரசியல்ரீதியான காரணங்களுக்காகவே சாக்ரடீஸ் குற்றம் சாட்டப்பட்டார். மதரீதியான காரணங்களுக்காக அல்ல என்கின்றனர் பின்னால் வந்த விமர்சகர்கள். அதற்கு அவர்கள் ஒரு உதாரணம் சொல்கின்றனர். சாக்ரடீஸ் காலத்து நாடகாசிரியரான அரிஸ்டொஃபேனஸின் 'மேகங்கள்’ என்ற நாடகத்தில் பெரிய கடவுளான ஜீயுஸ் சிறுநீர்தான் மழையாக பூமியில் விழுகிறது என்று சொல்லப்பட்டுள்ளது. மதச்சடங்குகளையும் கடவுளரையும் அரிஸ்டோஃபேனஸ் மதிக்கவில்லை, அவருக்கு பக்தியே இல்லை என்று யாரும் சொல்லவுமில்லை. அவரைவிட மோசமாக சாக்ரடீஸ் எங்கேயும் பேசவோ எழுதவோ இல்லை என்கின்றனர் அவர்கள்!  

இறுதியில் சாக்ரடீஸ் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டது. மரண தண்டனை!

கடைசிச் செய்தி

ஹெம்லக் என்று ஒரு மூலிகை விஷம். அதை சாக்ரடீஸ் குடித்து உயிர் துறக்கவேண்டும். அதுதான் அவருக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை. சாக்ரடீஸ் அதை மனதார ஏற்றுக்கொண்டார். சிறையில் நடந்த சில சம்பவங்கள், சம்பாஷணைகள்தான் இக்கட்டுரை எழுதவே காரணம் என்று சொல்லலாம். அவைகள் ஒரு ஞானியை அடையாளம் காட்டின.

சிறைக்காவலர்களுக்கு ‘அன்பளிப்பு’ கொடுத்து சிறையிலிருந்து அவரைத் தப்பிக்கவைக்க சாக்ரடீஸின் மாணவர்கள் சிலர் ஏற்பாடு செய்தனர். ஆனால் வேண்டாம், இறப்பு பற்றிய பயம் எனக்கில்லை என்றும், சட்டத்தை மதிக்கவேண்டுமென்றும் சாக்ரடீஸ் சொன்னார்! கிறிஸ்துவுக்கு முந்தியது லஞ்சம் என்பது இதிலிருந்து தெளிவாகிறது! லஞ்சத்தைவிட நஞ்சே மேல் என்று சாக்ரடீஸ் முடிவுசெய்தார்!

கோப்பையிலிருந்த ஹெம்லக் என்ற கொடிய விஷத்தை விருப்பத்துடனேயே சாக்ரடீஸ் குடித்தார். உயிர்குடிக்கும் கசப்பை இனிப்பாக ஏற்றுக்கொண்டார்! கால்கள் மரத்துப்போகும்வரை அவரை நடந்துகொண்டிருக்கச் சொன்னார்கள். அவரும் அப்படியே செய்தார். கொஞ்சம் கொஞ்சமாக உடல் மரத்துக்கொண்டே வந்தது. பாதம் தொடங்கி நெஞ்சுவரை விஷம் ஏறி மரக்கட்டையாகிவிட்டது. கால்கள் முழுமையாக மரத்துப்போனவுடன் உட்கார வைக்கப்பட்டார். அப்போது அருகிலிருந்த மாணாக்கர்கள் சிலர், இறந்த பிறகு உங்கள் உடலை என்ன செய்யவேண்டும் என்று கேட்டனர். அதற்கு சாக்ரடீஸ் சொன்ன பதில் அற்புதமானது. அவர் ஒரு ஞானி என்பதற்கு அதுவே சான்று. அவர் சொன்னார்:

'நான் இறந்த பிறகு என் உடலை எதுவேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். ஆனால் அதுதான் நான் என்று எண்ணிவிடாதீர்கள்!'

இறுதிக்கணத்தில் மாணவர் க்ரிட்டோவைப் பார்த்து சாக்ரடீஸ், 'க்ரிட்டோ, குணப்படுத்தும் கடவுளான அஸ்க்ளீபியஸுக்கு ஒரு சேவல் பலிகொடுக்கவேண்டிய கடன் பாக்கியிருக்கிறது. அதை எனக்காக நீ செய்துவிடு' என்று வேண்டிக்கொண்டார்! கடைசிக்கணத்திலும் கடனை நினைவு கூர்ந்திருக்கிறார். அது மனிதர்களுக்குக் கொடுக்கவேண்டிய கடனல்ல, கடவுளுக்குக் கொடுக்கவேண்டிய அழகிய கடன்தான் என்றாலும்!

சாக்ரடீஸ் அதீனிய நீதிமன்றத்தின் முன்வைத்த தற்காப்பு வாதங்களையெல்லாம் ப்ளேட்டோ தன் 'அபாலஜி’ என்ற படைப்பிலும், அவருடைய இறப்பு பற்றி விரிவாக தனது 'ஃபீடோ' என்ற படைப்பிலும் எழுதியுள்ளார்.

'வாழ்வது பெரிய விஷயமல்ல. தர்மத்துடன் வாழ்வதுதான் கடினம். எல்லா மனிதர்களின் ஆத்மாக்களும் அழிவற்றவைதான். ஆனால் தர்மத்தின்படி நடப்பவர்களின் ஆன்மாக்கள் அழியாதவை மட்டுமல்ல, தெய்வீகமானவையும்கூட' என்று சாக்ரடீஸ் சொன்னது அவருக்கே பொருந்துமல்லவா?!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூரில் பலியானோருக்கு பேரவையில் அஞ்சலி!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது!

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம்! ரூ. 95 ஆயிரத்தை நெருங்கியது! வெள்ளி விலை ரூ. 206

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக வாழ்வார்கள்! டிரம்ப்

காந்தாரா சாப்டர் 1 வசூல் வேட்டை! 11 நாள்கள் விவரம்...

SCROLL FOR NEXT