வரலாறு படைத்த வரலாறு

காஷ்மீர் ரோஜா!

அவர் ரொம்ப அழகானவர். ஆணழகன் என்று கூடச் சொல்லலாம். நல்ல உயரம். நீண்ட அழகிய நாசி. எப்போதும் உதட்டோரம் ஒரு வசீகரப்புன்னகை. பிறவிப்பணக்காரர். Born with a silver spoon.

நாகூர் ரூமி

அவர் ரொம்ப அழகானவர். ஆணழகன் என்று கூடச் சொல்லலாம். நல்ல உயரம்.  நீண்ட அழகிய நாசி. எப்போதும் உதட்டோரம் ஒரு வசீகரப்புன்னகை. பிறவிப்பணக்காரர். Born with a silver spoon. லண்டனில் புகழ்பெற்ற ஹாரோ (Harrow) பள்ளியிலும் கேம்ப்ரிட்ஜிலும் படித்து பாரிஸ்டர் பட்டம்பெற்றவர். அவருடைய அம்மா காஷ்மீர் பிராமண குடும்பத்தில்  பிறந்ததாலோ என்னவோ காஷ்மீர் மீது அவருக்கு மாறாத, தீராத காதலிருந்தது. 

ஆனால் இதையெல்லாம் மீறி அவருடைய கோபம் பிரசித்தி பெற்றுவிட்டது. ‘இரண்டு கால்களால் நடந்துசெல்லும் எரிமலை’ என்று அவர் வர்ணிக்கப்பட்டார்! ‘நான் பல விஷயங்களை இழக்கும் பழக்கம் கொண்டவன். கோபப்படும்போது கட்டுப்பாட்டையும் இழந்துவிடுகிறேன்’ என்று தன் ஆக்ரோஷம் பற்றி அவரே நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்!

ஒருமுறை அவர் சென்னைக்கு வந்தபோது அவரைப் பார்க்கத் தெருவெங்கும் கூட்டம். குழந்தைகள்தான் அதிகம். மரங்களின் மீதேறி குழந்தைகள் அவரைப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தனர். திறந்த ஜீப்பில் தன்னைப் பார்க்கக் கூடி நின்ற கூட்டத்தை ரசித்துக்கொண்டே வந்தார் அவர். அப்போது ஒரு பலூன் விற்பவன் அவர் கண்ணில் பட்டான். உள்ளுணர்வு ஏதோ சொல்ல, உடனே ஜீப்பிலிருந்து குதித்த அவர் ‘இங்கே வா’ என்று பலூன் விற்பவனை அழைத்தார். பயந்துகொண்டே அவன் அவரருகில் வந்தான். உடனே அவன் வசமிருந்த பலூன்களையெல்லாம் விலைகொடுத்து வாங்கும்படி அருகிலிருந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அவர் அப்பலூன்களையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த குழந்தைகளுக்குக் கொடுத்தார். முன்னால் நின்றுகொண்டிருந்த ஒரு குண்டுக்குழந்தையின் கன்னத்தை செல்லமாகக் கிள்ளிவிட்டு மீண்டும் ஜீப்பில் ஏறி தன் பயணத்தைத் தொடர்ந்தார். 

அவரை ‘பண்டிட்’ என்று அறிஞர்களும் ‘சாச்சா’ (மாமா) என்று குழந்தைகளும் அன்பாக அழைத்தனர். அவரது பிறந்தநாள்கூட குழைந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. தெரிந்துவிட்டதா? ஆமாம், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருதான் அவர்!

‘இந்தியாவில் பணக்காரர்களுக்குப் பிறந்த ஆண்குழந்தை செல்லம்கொடுத்துக் கெடுக்கப்படுவதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. அதுவும் முதல் பன்னிரண்டாண்டுகளுக்கு அவன் ஒருவன்தான் குழந்தையென்றால் கெட்டுப்போவதிலிருந்து அவனைக் காப்பாற்ற வழியே கிடையாது’  என்கிறார்  தன்னைப்பற்றி சுயசரிதையில் நேரு!

பெற்றோருக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் அவர்தான் செல்லம்! எப்போதுமே தனக்குப் பிடித்ததை, பிடித்தமாதிரிதான் செய்வார். அதுவே அவருடைய பலமாகவும் பலவீனமாகவும் இருந்தது.

இங்கிலாந்தில் படிக்கும்போது மேடையேறிப் பேசவேண்டும் என்பது ஹாரோவின் விதி. பேசமுடியாவிட்டால் அபராதம் கட்டவேண்டும். நேரு அபராதம்தான் கட்டினார்! ஆனால் மாணவப் பருவத்தில் பேசாமடந்தையாக இருந்தவர் பிரதமரான பிறகு உலகெங்கிலும் பேசாத பேச்சில்லை! எல்லோரையும் தனது பேச்சால் வாயடைக்கவைத்தார்!

தலைவராக வேண்டுமென்று அவர் எப்போதுமே நினைத்ததில்லை. ஆனால் தலைமைத்துவம் அவரைப் பின்தொடர்ந்து சென்றது. ‘ஒரு தலைவனாக இல்லாதிருந்தால் ரொம்ப சந்தோஷமாக இருந்திருப்பேன்’ என்றொருமுறை சொன்னார். ஒரு கட்சியின் தலைவராகவும் நாட்டின் பிரதமராகவும் முடிவுகள் எடுக்கமுடியாத தடுமாற்றங்களும் ஊசலாட்டங்களும் ஆரம்பத்தில் அவருக்கு இருக்கத்தான் செய்தன.

காங்கிரஸின்  தீர்மானம் பிடிக்கவில்லையென்றால் உடனே ‘பதவியை ராஜினாமா செய்துவிடுவேன்’ என்று குதிப்பார். பின்பு அவரே அந்த முடிவைத் திரும்பப் பெற்றுக்கொள்வார்! வாடிக்கையாகிப்போன அவருடைய ‘ராஜினாமா’, ‘வாபஸ்’ முடிவுகளை யாரும் பொருட்படுத்துவதில்லை! இப்படியெல்லாமிருந்தாலும் மகாத்மாவுக்கு அடுத்த நிலையில் நேருதான் இந்திய மக்களால் தலைவராகப் பார்க்கப்பட்டார்.

சர்வதேச அரசியல் நிலமைகளைப் பற்றிய தனது கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவிப்பதற்கு நேரு எப்போதும் தயங்கியதில்லை. ஸ்பெயினில் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட, விரட்டப்பட்ட வரலாற்றையும் சிலுவைப் போர்களைப் பற்றியும்  படித்துவிட்டு முஸ்லிம்கள் பக்கம்தான் நியாயம் இருந்தது என்று கூறினார்.

நேருவின் பாத்திரம் முரண்பாடுகள் கொண்டது. உழைக்கும் வர்க்கம் அவரை நண்பராக நினைத்த அதேசமயம் முதலாளிகள் அவரை எதிரியாக நினைக்கவில்லை! ‘கொள்கையில் மார்க்சியவாதியாகவும், நடைமுறையில் ஜனநாயகவாதியாகவும், இலக்குகளில் உறுதியாகவும், செயல்படும்விதத்தில் நெகிழ்வுள்ளவராகவும் இருந்தார்’ என்கிறார் டாக்டர் மைக்கேல் ப்ரஷர். சோஷலிசம், கம்யூனிசம் போன்றவை பற்றி நேருவின் கருத்துக்களைக் கேட்பவர்களால் அவரைப்பற்றி எந்த முடிவுக்கும் வரமுடியாது!

‘இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் வாழும் நாம் என்னசெய்வதென்று பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்த கார்ல்மார்க்ஸைக் கேட்பது நியாயமே அல்ல’ என்பதுதான் மார்க்சியம் பற்றிய நேருவின் கருத்து!

‘தனது சோஷலிஸத்தின் மூலம் காந்தியவாதிகளையும், தனது காந்தியத்தின் மூலம் சோஷலிஸவாதிகளையும் அவர் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்’ என்கிறார் ஃப்ராங்க் மோரஸ்!

வெளிஉலகத்துக்கு நேரு அமைதியின் தூதுவராகத்தான் தெரிந்தார். ‘எந்தக் கண்டத்துக்கு நீங்கள் சென்றாலும் இந்தியாவின் பெயர் அமைதியோடு இணைத்தே பேசப்படுவதைக் காண்பீர்கள்’ என்று பாராளுமன்றத்தில் பேசினார்! சவூதி அரேபியாவுக்குச் சென்றபோது ‘மர்ஹபா, ரஸூலுஸ்ஸலாம்’ (அமைதியின் தூதுவரே, வருக) என்று அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது(பக்கம் 10).

‘என்னை நோக்கி லட்சக்கணக்கான மக்களை இழுப்பது எது? என் முகமா? என் தோற்றமா?...கடந்த முப்பதாண்டுகளாக என் பேச்சையும் எழுத்தையும் மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். ஏனெனில் அவர்கள் மனதில் இருந்ததைத்தான்  நான் என் பேச்சின் மூலமாகவும் எழுத்தின் மூலமாகவும் சொன்னேன்’ என்றார் நேரு (பக்கம் 11).

ஆரோக்கியமான குழந்தை

நேரு என்ற தலைவருக்குள், அறிஞருக்குள், படைப்பாளிக்குள் எப்போதுமே ஒரு குழந்தையின் மனமிருந்தது. இல்லையென்றால் பூட்டானிலிருந்து திரும்பிவரும்போது வேண்டுமென்றே 1200க்கும் மேற்பட்ட கிலோமீட்டர்கள் தூரத்தை கழுதையின்மீதும் குதிரையின்மீதும் பயணித்து வந்திருப்பாரா?! திரும்பிவந்தபிறகு, ‘இப்போது பத்தாண்டுகள் இளமையாக உணர்கிறேன்’ என்றார். அதுவும் அவர் இறந்துபோவதற்கு ஐந்தாண்டுகளுக்கு முன்பு!

சின்ன வயதில் அவரும் அப்பா மோதிலால்நேருவும் பட்டம் விடுவார்கள். அந்தக் குழந்தைத்தனம் அவரைவிட்டுப் பிரியாமல் இருந்ததால்தான் குழந்தைகள் மத்தியிலிருக்கும்போது சந்தோஷமடைந்தார். பேரக்குழந்தைகளுடன் ஓடிப்பிடித்து விளையாடுவார். அவர்களது மூன்றுசக்கர சைக்கிள்களை ஓட்டுவார். நாகா கலைஞர்களோடு சந்தோஷமுடன் நடனமாடுவார். குழந்தைகள் மீது மாலைகளை வீசுவார்.

ஒருமுறை குடும்ப நண்பரும் காங்கிரஸின் தலைவராகவும் இருந்த ஆச்சார்ய கிருபளானியின் தோள்கள்மீது ஏறிக்கொண்டுவிட்டார் நேரு! ‘கீழே இறங்குங்கள், நீங்கள் குழந்தையல்ல’ என்று கிருபளானி கெஞ்சவேண்டியதாகிவிட்டது (பக்கம் 14)!  இது எத்தனை வயதில் நடந்தது என்ற குறிப்பு இல்லை.

காங்கிரஸ் கூட்டங்களில் தூங்கிக்கொண்டிருப்பவர்கள் மீதும் மரியாதைக்குறைவாக நடந்து கொள்பவர்கள் மீதும் தலையணைகளைத் தூக்கி எறிவது நேருவின் வழக்கம்! சென்னை ஆவடி காங்கிரஸ் கூட்டத்தில் அப்படி அவர் செய்தபோது அதை ஒரு ஃபோட்டோகிராஃபர் நிழல்படமெடுத்து அப்போதைய முதல்வர் காமராஜர் மூலமாக நேருவுக்கு அனுப்பிவைத்தார். அதைப்பார்த்து சந்தோஷப்பட்ட நேரு அந்த ஒளிப்படத்தில் பல பிரதிகளெடுத்து அதிலொன்றில் கையெழுத்திட்டு அந்த ஃபோட்டோகிராஃபருக்கே பரிசளித்தார்!

எழுபது வயதிலும் எப்படி இளமையோடு இருக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, ‘சின்னச் சின்ன விஷயங்களைப் பற்றி நான் கவலைப்படமாட்டேன். அதுமட்டுமல்ல. மலைகளை, குழந்தைகளை, பறவைகளை, மிருகங்களை, மரங்களை, பூக்களையெல்லாம் நான் நேசிக்கிறேன், அதனால்தான்’ என்று பதில் சொன்னார்!

வாழும் காலமெல்லாம் உடலுறுதியுடனும் ஆரோக்கியமாகவும் அவர் இருந்ததற்கு அந்த குழந்தைத்தனம் ஒரு முக்கியமான காரணம்.

தேசத்தின் செல்லம் மக்கள் காதலன்

நேருவைவிட அதிகமாக இந்திய மக்களை நேசித்தவர்கள் இருக்கமுடியாது என்றே சொல்லலாம். மக்களை அன்றாடம் நேரில் சந்தித்து அவர்களின் உள்ளங்களில் இருந்தவற்றை உணர்ந்துகொண்டவர் அவர். பாதுகாப்புக்காக அவரைச்சுற்றி போலீஸ் இருப்பதை அவர் என்றுமே விரும்பியதில்லை. ‘ஏன் எனக்கும் மக்களுக்கும் மத்தியில் தடையாக நீங்கள் நிற்கிறீர்கள்?’ என்று போலீஸைச் சப்தம்போட்டு விரட்டுவார்! தூரத்திலிருந்து மக்கள் கையசைத்துச் சிரிப்பதைப் பார்த்தபிறகுதான் ‘ரிலாக்ஸ்’ ஆவார். தினமும் அவரைப்பார்க்க முன்னனுமதியின்றி நூறு பேராவது வருவார்கள். ‘டெல்லியில் பார்க்கவேண்டிய விஷயங்களில் நானும் ஒன்று’ என்று வேடிக்கையாக நேரு குறிப்பிடுவார்!

ராஜாஜிக்கும் அவருக்கும் என்றுமே ஒத்துப்போனதில்லை. ஆனால் 1959ல் தமிழ்ப்புத்தாண்டன்று கிண்டி குழந்தைகள் பூங்காவைத் திறக்க சென்னைக்கு வந்த நேரு ராஜாஜியைப் புகழ்ந்து பேசி, தன் கருத்துக்களை நயமாக எடுத்துக் கூறி ராஜாஜி ரசிகர்களையும் கவர்ந்துவிட்டார்! அக்கூட்டத்தில் முக்கியமானதொரு தகவலைக் கூறினார். ‘மாநில அரசில் உள்ளவர்கள் தங்களை சூப்பர்மேனாக நினைத்துக்கொண்டு மத்திய அரசைக் கலந்து கொள்ளாமல் இருப்பது தவறு’ என்று அழகாக எடுத்துச் சொன்னார். அந்த அறிவுரை ராஜாஜி ரசிகர்களுக்குத்தான் என்றாலும் இன்றும் பொருத்தமாகத்தானே உள்ளது!

கடவுளும் மதமும்

இந்த விஷயத்திலும் நேரு ஒரு புதிர்தான். தன் பதவிக்காலத்தில் எந்த வழிபாட்டுத் தலத்துக்குள்ளும் அவர் சென்றதில்லை. கடவுளையும் மதங்களையும் பற்றி அவர் சொன்ன கருத்துக்கள் மதவாதிகளுடைய மனங்களில் ஊசியால் குத்துவதைப் போல்தான் இருந்தன.

ஆன்மிக ஞானத்தைவிட, எதைச்சாப்பிடலாம், எதைச்சாப்பிடக் கூடாதென்பதில்தான் இந்துமதம் அதிக அக்கறை செலுத்துகிறது. சமத்துவம், சகோதரத்துவத்தைவிட, தினசரி செய்யவேண்டிய கடமைகளைப் பற்றித்தான் இஸ்லாம் அதிக அக்கறை செலுத்துகிறது என்று நேரு நினைத்தார் (பக்கம் 31). மதம் என்பது குழந்தைகளுக்கானது என்ற இருபதாம் நூற்றாண்டு சூஃபி ஞானி இப்னுருஷ்தின் கொள்கைகளில் நேரு பிடிப்புக்கொண்டிருந்தார். ‘கடவுள் இல்லையென்றாலும் அவரை உருவாக்கிக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது’ என்று சொன்ன வால்டேரின் கருத்துக்களும் நேருவின் மீது தாக்கம் செலுத்தின.

கருத்துக்களில் இவ்விதம் இருந்தாலும் இந்தியா சுதந்திரமடைந்த அன்று பண்டிதர்களின் ஆசியைப் பெற்றுக்கொள்ள நேரு தயங்கவில்லை. தஞ்சாவூரிலிருந்து வந்த பூசாரிகள் மற்றும் துறவிகளின் கரங்களால் தன் நெற்றியில் திருநீரு பூசப்படவும் அனுமதித்தார்.

உண்மையில் நேரு மதங்களுக்கு எதிரானவரில்லை. மதங்களும் சடங்குகளும் ‘பெண்களுக்கு உரியவை’ என்று கருதப்பட்ட குடும்பச்சூழலில் வளர்ந்தவர் அவர். ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் நேரு தன் மதரீதியான நம்பிக்கைகள் பற்றி இப்படிக் கூறினார்:

‘மதரீதியான சடங்குகளில் எனக்கு நம்பிக்கையில்லை என்று பலமுறை கூறியுள்ளேன். மதம் தொடர்பான என் கருத்துக்கள், நம்பிக்கைகள் என்னவென எனக்கே தெரியாதென்பதுதான் உண்மை. ஆனால்…நற்செயல்களுக்கு நல்ல விளைவும், தீயசெயல்களுக்கு தீயவிளைவும் ஏற்பட்டே தீரும்... அதுதான் இயற்கையின் விதி’ (பக்கம் 33) என்று கூறினார்.

ஆயுதம் தாங்கிய சண்டை தவிர்க்கப்படவேண்டும் என்று தினமும் தான் பிரார்த்தனை செய்வதாக ஆஸ்திரேலியப் பிரதமர் மென்சிஸ் ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் சொன்னபோது, பிரார்த்தனை மட்டும் போதாது, செயல்பாடும் தேவை என்று நேரு கூறினார்! ‘ஒரு குதிரையைப் பார்ப்பதுபோல்தான் நான் பசுவையும் பார்க்கிறேன்’ என்று சொன்னதற்காக நேருமீது ஒருமுறை அலாஹாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்குகூட தொடரப்பட்டது!

ஒருமுறை காசியில் அனைத்து மதங்களின் மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அது தொடர்பாக பண்டிட் மதன்மோஹன் மாளவியா வந்து அம்மாநாட்டுக்குத் தலைமையேற்கும்படி மகாத்மா காந்தியை அழைத்தார். ஆனால் தனக்கு வேறு வேலைகள் இருப்பதால் நேருவை அழையுங்கள் என்று மகாத்மா சொல்ல, கடவுளை மறுக்கும் அவரா என்று பண்டிட் கேட்கவும், ‘அவர் வேண்டுமானால் கடவுளை மறுக்கலாம். ஆனால் அவரது செயல்களிலும் நடத்தையிலும் தெய்வீகம் உள்ளது’என்றார் மகாத்மா!

எந்த மொழி?

ஒட்டுமொத்த இந்தியாவின் குடிமகனாகவே நேரு தன்னை நினைத்தார், வாழ்ந்தார். தான் இந்த மாநிலத்தவன் என்று தன்னை அவர் எப்போதும் சுருக்கிக்கொண்டதில்லை. ‘மஹாராஷ்ட்ராவில் இருக்கும்போது நான் மஹாராஷ்டிரன். தமிழ்நாட்டிலிருக்கும்போது நான் தமிழன். நான் எல்லா மாநிலங்களுக்கும் உரியவன்’ (பக்கம் 37) என்று அவர் சொன்னார்.

மொழிப்பிரச்சனையை அவரிடத்திலேயே விட்டிருந்தால் மிக எளிதாக அவர் அதை சமாளித்திருப்பார். ஏனெனில் அவர் எல்லா மொழிகளையும் நேசித்தார்.

‘என் மகளின் கல்விக்காக நான் அவளை உ.பி.க்கு அனுப்பாமல் புனேவுக்கு அனுப்பினேன். அங்கே அவள் குஜராத்தியும் மராத்தியும் கற்றுக் கொள்ளவேண்டும் என்று விரும்பினேன். பின் வங்காளம் கற்றுக்கொள்வதற்காக அவளை சாந்திநிகேதனுக்கு அனுப்பினேன். தென்னிந்தியாவுக்கும் அனுப்பி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளையும் கற்றுக்கொள்ள அனுப்பியிருக்கவேண்டும். ஆனால் எல்லா மொழிகளையும் கற்றுக்கொள்கிற அளவுக்கு வாழ்க்கை போதுமானதாக இல்லை’ (பக்கம் 38) என்று அவர் ஒருமுறை மக்களவையில் கூறினார்.

நேருவின் தாய்மொழி இதுதானென நிச்சயமாகச் சொல்லமுடியவில்லை. அது உருது என்பதற்குப் போதிய ஆதாரங்களில்லை. ஆங்கிலத்தின் மீது அடங்காத தாகம் அவருக்கு இறுதிவரை இருந்தது. எனினும் உருதுக் கவிஞர்களான இக்பால், காலிப் ஆகியோர் அவரது சிந்தனையில் பெரிதும் ஆதிக்கம் செலுத்தினர்.

உருது மாநாட்டில் கலந்து கொண்ட அவர் ‘உருது அறிஞர்’ என்று புகழப்பட்டபோது உடனே ஒலிபெருக்கியில், ‘நான் உருது அறிஞனல்ல. இப்படிஒரு குற்றச்சாட்டு என் மீது வைக்கப்படுவது இதுதான் முதன் முறை’ என்று அவருக்கே உரிய நகைச்சுவை பாணியில் குறிப்பிட்டார்!

ஆனால் மக்களவையில் அவர் அடிக்கடி உருதுக் கவிதைகளை எந்த முன்தயாரிப்புகளுமின்றி  மேற்கோள் காட்டுவார். ஒருமுறை எதிர்க்கட்சியினர் பிரச்சனை செய்தபோது

ஹம் ஆ பி கர்த்தேஹைன் தொ ஹோஜாதேஹைன் பத்நாம்

வோ கத்ல் பி கர்த்தேஹைன் தொ ச்சர்ச்சா நஹீ ஹோதா

(நாங்கள் பெருமூச்சு விட்டாலும் கெட்டபெயர் வந்துவிடுகிறது

அவர்கள் கொலையே செய்தாலும் அது கண்டுகொள்ளப்படுவதில்லை)   

என்ற கவிதையை மேற்கோள் காட்டினார்!

உருது என்பது இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பொதுவான மொழி, அதை எந்த சமூகத்தோடும் தொடர்புபடுத்திப் பார்க்கக்கூடாது என்பதில் அவர் தெளிவாக இருந்தார். ‘உருது இஸ்லாத்தோடு பிறந்ததா என்ன?’என்று கேட்ட அவர் டெல்லி, லக்னோ, அலாஹாபாத், உத்திரப்பிரதேசம், பீஹார், பஞ்சாப் எல்லாவற்றிலும் பேசப்பட்ட பொதுவான மொழியாக உருது இருந்தை எடுத்துக்கூறினார் (பக்கம் 40).

செங்கோட்டையில் அவர் பேசிய இந்தி உரையை தவறாக மொழிபெயர்த்து ஒலிபரப்பிய அகில இந்திய வானொலியை கடுமையாகச் சாடினார். ‘இந்த மொழிக்கொலைக்காக கொலைவழக்குப்போட வேண்டும்! இது மனிதர்களைக் கொல்வதைவிட மோசமானது’ என்றார்!

அரசாங்கரீதியாக தரப்படும் பதில்களிலிருந்த யாருக்கும் புரியாத இந்தியை அவர் கிண்டல் செய்தார். எல்லா விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கும் இந்தி வார்த்தைகளைத் தேடிய இந்தி ஆர்வலர்களால்தான் இந்தியின் வளர்ச்சி தடைபடுகிறது என்றார். 

‘மொழி என்ற நுண்மையான மலர் இயற்கையாக வளரவேண்டும். அதைப்பிடித்து இழுத்தெல்லாம் வளரவைக்க முடியாது’ என்று அழகாகச் சொன்னார். 

ரோஜாமொட்டுக்கள் விரியும்…

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூரில் பலியானோருக்கு பேரவையில் அஞ்சலி!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது!

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம்! ரூ. 95 ஆயிரத்தை நெருங்கியது! வெள்ளி விலை ரூ. 206

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக வாழ்வார்கள்! டிரம்ப்

காந்தாரா சாப்டர் 1 வசூல் வேட்டை! 11 நாள்கள் விவரம்...

SCROLL FOR NEXT