முகப்பு
யோகம் தரும் யோகம்

ஆசனம் 1 - பத்மாசனம்

பத்மம் என்றால் தாமரை. தாமரைப் பூவின் தண்டானது ஒரே நேர்கோட்டில்தான் இருக்கும். வளைந்திருக்காது.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:07 PM
பகிர்:

யோக நீதிக்கதை

அஷ்டாங்க யோகம் - 1. இயமம் (கட்டுப்பாடு)

வரப்பு நீரோட்டம்

கிருஷ்ணன், அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும்போது அதிகாலை 3.30 மணி. காரை ஓட்டிக்கொண்டு வந்ததால் இடுப்பெல்லாம் கடுமையான வலி. காரை போர்டிகோவில் நிறுத்திவிட்டு, லேப்-டாப் பையை வெறுப்புடன் எடுத்துக்கொண்டு, காலிங் பெல்லை அடித்துவிட்டு, கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்று, படுக்கையறைக்குள் புகுந்தான்.

பின்னாலேயே ஓடி வந்த ஆயம்மா, ‘பாப்பா சாப்பிடமாட்டேங்குது தம்பி. எப்படியெல்லாமோ ஊட்டிப் பாத்தேன். மம்மிதான் வேணும்னு அடம் பிடிக்குது. டாடி இப்ப வந்துடுவாருடான்னு எவ்வளவோ சொன்னேன். காதுல வாங்கிக்கல. அம்மாகூட ஆஸ்திரேலியாவுல இருந்து பேசினாங்க. செல்ஃபோனையும் தூக்கிப் போட்டதுல அது உடைஞ்சிபோச்சி. பாப்பா ஒண்ணுமே சாப்பிடாம அழுதுகிட்டே தூங்கிடுச்சு தம்பி’ என்றபடி, உடைந்த ஃபோனை நீட்டினாள்.

உடைந்த ஃபோனை வாங்கி, அவன் வீசி அடித்ததில், இரண்டு நான்காகி, நான்கு எட்டானது. வெறுப்புடன் குழந்தையின் அறைக்குள் வந்தான். படுத்திருந்த, குழந்தை குமுதாவின் நெற்றியில் கை வைத்துப் பார்த்தான். காய்ச்சல் கொதித்தது. கிருஷ்ணனுக்கு அழுகையே வந்துவிட்டது. ‘இரண்டு பேர் இருந்தும், இல்லாமல் போய்விட்டோமே, அடச்சே!’ என்று தலையில் அடித்துக்கொண்டான்.

குழந்தையின் பிஞ்சு நெஞ்சின் மீது கன்னத்தைப் பதித்தான். உடையையும் தாண்டி உடல் தகித்துக்கொண்டிருந்தது. கன்னத்தை மெள்ள வருடினான். தூக்கத்திலும்கூட ஒரு ஏக்கம் அதன் முகத்தில் தெரிந்தது.

தாமரைக்குளம் கிராமம் -

வயலின் வாய்க்காலில் சலசலவென்று வைகையாற்று நீர் ஓடிக்கொண்டிருந்தது. தண்ணீரில், அயிரை மீன்கள் துள்ளிக்குதித்தன. பால்பிடிக்கும் நெற்கதிர்களின் நறுமணம், மாலைக் காற்றில் நிரம்பி நிற்கும். பகலும் இரவும் சந்திக்கும் வேளையில்தான், அந்தப் பால்மணத்தை நம்மால் நுகர முடியும்.

கால்களை நனைத்த வாய்க்கால் நீரை, வரப்பு மேட்டில் தட்டுத் தட்டு உதறிவிட்டு, இதென்ன பிழைப்பு என்று ரயில் ஏறிய நாட்கள் நினைவுக்கு வந்தன. வயலும், வாய்க்காலும், ஓடை நீரும், அயிரை மீன்களும் இப்போது அவனை எள்ளி நகையாடுவதை எண்ணிக் கூனிக் குறுகிப் போனான்.

சென்னைக்குப் புலம்பெயர்ந்த கிருஷ்ணன், தன்னைப்போலவே ஐ.டி. துறையில் பணிபுரிந்த காவ்யாவை காதலித்து மணந்தான். பெரிய வருவாய்களை நம்பி, இருவருமே பெரிய ஃப்ளாட்டாக வாங்கினார்கள். அலங்கரிக்கும் பொருளிலிருந்து அதிநவீனக் கார்கள் வரை எல்லாமே இ.எம்.ஐ.யில்! காவ்யாவை, ஆறு மாதம் சிறப்புப் பயிற்சிக்காக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பியிருக்கிறது நிறுவனம்.

விவசாயத்தை இழந்தது எத்தனை பெரிய தப்பு! என்ன வாழ்க்கை இது, எதற்கு இந்தப் பணம். இந்த ‘நர’கத்தை அடைவதற்கா ‘நக’ரத்துக்கு ஓடிவந்தோம்!

‘யானோ அரசன், யானே கள்வன்’ என்று குற்ற உணர்ச்சியோடு கொடைசாய்ந்த பாண்டியன் நெடுஞ்செழியன்போல, குழந்தையைத் தழுவியபடியே படுக்கையில் கண் அயர்ந்தான் கிருஷ்ணன்.

ஆனந்த உறக்கத்தைக் கெடுப்பதற்கென்றே செல்ஃபோன் அலறியது.

நிறுவனத்தின் அமெரிக்க மேலிடத்தில் இருந்து அழைப்பு. வெள்ளைக்காரன் ஒரு வேலையைச் சொல்லி, அதை விடிவதற்குள் அனுப்பச் சொல்லிக் கிசுகிசுத்தான்.

மறுக்க முடியாது. லேப்டாப்பை ஒரு முடிவோடு திறந்து, அதிகாலை ஐந்து மணிவரை மேய்ந்தான். ஃப்ராஜெக்டை அனுப்பிய கையோடு, லேப்டாப்பை மூடாமலேயே தள்ளிவிட்டு, குழந்தையோடு ஒட்டிக்கொண்டான்.

குழந்தையின் காய்ச்சல் அவனை வாட்டியது. இந்தக் காய்ச்சலுக்குத் தீர்வு, மாத்திரை அல்ல; மாற்று என்று தீர்மானித்தவாறு, தூக்கத்தில் குடிபுகுந்தான்.

ஆறு மணி இருக்கும்.

ஆயம்மா பெட் காஃபியோடு வந்து நின்றாள்.

‘தப்பா எடுத்துக்காதீங்க தம்பி. இது என் கையால தர்ற கடைசி காப்பி. நான் வேலைய விட்டுப் போறேன். குழந்தையோட கஷ்டத்தை காணச் சகிக்கலை. உங்களுக்குப் பழகிப்போச்சு. ஆனா எனக்கு ஒவ்வலை. இந்த வேலையும் வேண்டாம், வேதனையும் வேண்டாம். ஒருவேளைச் சோறு எங்கேயும் கிடைக்கும் தம்பி. நான் வாரேன்’.

‘நில்லுங்க. நானும் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். கடன்ல வாங்கின வீடு, காரையெல்லாம் வந்த விலைக்கு வித்துட்டு ஊரோட போகப் போறேன். ஆசைப்பட்டு ஆபத்துல சிக்கிட்டோம். உலகத்துக்கே சோறு போடற பரம்பரை. பட்டணத்துக்கு வந்து வெளிநாட்டுக்காரன்கிட்ட கையேந்திக்கிட்டு இருக்கேன். எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும். ஆசைக்குப் பலியாகி நிம்மதி, சந்தோஷம் இரண்டையுமே இழந்துட்டோம். குழந்தைய இழக்க விரும்பலை. மறுபடியும் சொந்த ஊருக்கே போகப் போறேன். விவசாய நிலம் இருக்கு. நீங்களும் எங்களோடயே கிராமத்துக்கு வந்துடலாம் என்றபோது, குழந்தை குமுதா அரைத் தூக்கத்தில் அப்பா என்று எழுந்தாள். முழுக் கண்களைக்கூடத் திறக்கமுடியாமல், கிருஷ்ணனை ஆசையோடு கட்டிக்கொண்டாள்.

காய்ச்சல் போன மாயம் தெரியவில்லை.

ஆசனம் 1
(உட்கார்ந்த நிலை)

பத்மாசனம்

பத்மம் என்றால் தாமரை. தாமரைப் பூவின் தண்டானது ஒரே நேர்கோட்டில்தான் இருக்கும். வளைந்திருக்காது. அதுபோல் நாம் நம் முதுகுத் தண்டுவடத்தை ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்படி வைத்துச் செய்ய வேண்டிய ஆசனம் என்பதால், இது பத்மாசனம் என்று வழங்கப்படுகிறது.

செய்முறை

இரண்டு கால்களையும் அகலமாக நீட்டிவைக்கவும். முதலில், வலது காலை மடக்கி உட்பக்கமாகக் கொண்டுவந்து இடது தொடை மீது வைக்கவும். பின்னர், இடது காலை கொஞ்சம் கொஞ்சமாக மடக்கி உள்பக்கமாகக் கொண்டுவந்து வலது கால் மேல் வைத்து, இடது பாதம் வலது தொடைப்பக்கம் இருப்பதுபோல் இழுத்து வைத்துக்கொள்ளவும்.

கைகளை ‘சின்முத்திரை’யில் வைத்துக்கொள்ளவும். ஆட்காட்டி விரல் நுனியும் பெருவிரல் நுனியும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டிருப்பதுபோல் வைத்து, மற்ற மூன்று விரல்களையும் வெளிப்புறமாக நீட்டி வைக்கவும். நிமிர்ந்து அமர்ந்து, கண்களை மூடிக்கொள்ளவும்.

பிறகு, சுவாசக் காற்றை நீண்டநேரம் உள் இழுக்கவும். காற்றை உள் இழுக்கும்போது, வயிற்றை பலூன்போல் வெளிமுகமாக உப்பச் செய்யவும். பிறகு, மெதுவாக சுவாசத்தை வெளியிட்டவாறு, வயிற்றுத் தசையை உள்பக்கமாகச் சுருக்கி இழுக்கவும். இதனால், நுரையீரலில் இருந்து அசுத்தக் காற்று முழுமையாக வெளியேற்றப்படும்.

இதுபோல் சுமார் பத்து சுவாசங்கள் எடுக்கவும். மனத்துக்குள் உங்கள் இஷ்ட மந்திரத்தைக்கூட சிந்திக்கலாம்.

பிறகு, மெதுவாக இடது காலை எடுத்து கீழே வைத்து விலக்கி நீட்டவும். பின்னர் வலது காலையும் மெதுவாக விடுவித்து, தரையில் வைத்து விலக்கி நீட்டவும். இளைப்பாறுவதுபோல் சுகமாக அமர்ந்த நிலையில் ஓய்வெடுக்கவும்.

மறுபடியும், கால்களை மாற்றி இந்த ஆசனத்தைச் செய்ய வேண்டும். காரணம், நமது வலது நாடியின் நுனி இடது கால் பெருவிரலிலும், இடது நாடியின் நுனி வலது கால் பெருவிரலிலும் முடிகிறது. இவற்றைச் சமன்படுத்துவதற்காக, கால்களை மாற்றி ஒருமுறை இவ்வாசனத்தைச் செய்ய வேண்டும்.

பலன்கள்

முதுகுத் தண்டுவடம் ஒரே நேர்க்கோட்டில் இருப்பதால், சுழுமுனை நாடி தெள்ளத் தெளிவாக ஓடும்.

உடலில் உள்ள 72,000 நாடி நரம்புகளும் சுத்தமாகும் ரத்த ஓட்டம் சீராகும்.

தங்கு தடையின்றி உடலின் அனைத்து அணுக்களுக்கும் பிராண சக்தி கிடைக்கும்.

வயிற்றை உள்ளும் புறமும் அசைப்பதால், உதரவிதானத் தசை மேலும் கீழுமாக அசைக்கப்படுகிறது. இதன்காரணமாக, அதனோடு பிணைக்கப்பட்டுள்ள விலா எலும்புகளும் விரிந்தும் சுருங்கியும் அசைவதால், நுரையீரல்கள் முழுமையாக சுருங்கிவிரிகின்றன.

இதனால் இயல்பான சுவாசத்தைவிட ஏழு மடங்கு மிகையான காற்றை உள் இழுக்கிறோம். அது, உடலில் ஆற்றலை மிகைப்படுத்தி, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டுகிறது.

கைவிரல்களை சின்முத்திரையில் வைத்திருப்பதால், நீட்டிய மூன்று விரல்களும் நம் பிறவித் துன்பங்களுக்குக் காரணமான ஆணவம், கன்மம், மாயை என்று மூன்று வகை மலங்களையும் நம்மை விட்டு அகற்றும். பெருவிரலுடன் (லிங்கமாகிய சிவன்) ஆள்காட்டி விரல் (ஆன்மாவாகிய நந்தி) ஐக்கியப்பட்டு இறை அனுபவம் கிடைக்கும்.

மனத்துக்கும் பெரும் அமைதி கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.