ஆசனம் 34. தனுராசனம்
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இவரைத் தெரியாத எல்லைப் பகுதி ராணுவ முகாம்களே இருக்க முடியாது. எல்லைப் பகுதியில் இருக்கும் ராணுவ முகாம்களுக்கு ஆகாய மார்க்கமாக எந்நேரமும் பறந்துகொண்டிருப்பார் இராயப்பன்.
அஷ்டாங்க யோகம்
தாரணா
யோக நீதிக் கதை
மகிழ்ச்சி என்றென்றும்…
ஃபீல்டு மார்ஷல் இராயப்பன்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இவரைத் தெரியாத எல்லைப் பகுதி ராணுவ முகாம்களே இருக்க முடியாது. எல்லைப் பகுதியில் இருக்கும் ராணுவ முகாம்களுக்கு ஆகாய மார்க்கமாக எந்நேரமும் பறந்துகொண்டிருப்பார் இராயப்பன்.
அவருடைய நேரங்கள் யாவும் அந்தரங்கக் காரியதரிசியின் டைரியில்தான் இருக்கும். மணித்துளிகளில்தான் அவரது நிகழ்ச்சிக் குறிப்புகள் இருக்கும்!
ஃபீல்டு மார்ஷல் இராயப்பனுக்கு வயது 60 ஆயிற்று. பணி ஓய்வுபெற்று வீடு திரும்பினார்.
பெரிய பதவி - அதிகாரம் என்று, பரபரப்பான வாழ்க்கையின் ஒரு பக்கம் ஓய்ந்துவிட்டது. இப்போதுதான் வாழ்க்கையின் மறுபக்கத்தை எட்டிப் பார்க்கிறார்.
ஊர் திரும்பிய பின், சுமார் ஒரு மாதத்துக்கு உறவுமுறைகளைக் காண வெளியூர் பயணங்களை மேற்கொண்டார். பணியில் இருந்த காலங்களில், நெருக்கமான உறவினர் வீட்டு நல்லது கெட்டதுகளுக்குக்கூட தலை காட்டமுடியாமல் இருந்தவர். காதுகுத்து, மஞ்சள் நீராட்டு, திருமணம், துக்க விசாரணை என்று அவர் மிஸ் பண்ணிய விழாக்கள் நூற்றுக்கணக்கில் உண்டு!
அத்தனை ஊர்களுக்கும், மனைவி சமேதராக அன்பளிப்புடன் போய் வந்ததிலேயே இரண்டு மாதங்கள் கழிந்துவிட்டன. உறவுகளின் அன்பு மழையில் நனைந்து நனைந்து குளிர்க் காய்ச்சல் கண்டு களைப்புடன் சென்னை திரும்பினார் இராயப்பன்.
பணிக் காலத்தில், அதிகாலை நான்கு மணிக்கே எழுந்துவிடக்கூடியவர். முப்பது வருடப் பழக்கம் ஒருநாளில் போய்விடுமா ?
அதிகாலை நான்கு மணிக்கே எழுந்த இராயப்பன், கட்டிலின் தலைமாட்டில் சாய்ந்து அமர்ந்து, இரண்டு கைகளையும் தலைக்குப் பின்னால் கட்டிக்கொண்டு விட்டத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். கடந்த கால ராணுவ உயர் அதிகாரி வாழ்க்கை நினைவில் ஓடியது.
நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு கம்பீரமாக எதிர்கொண்ட நாள்களை நினைத்தபடி, அருகில் படுத்திருந்த மனைவி சரோஜாவை ஓரக்கண்ணால் பார்த்தார்.
இரண்டு மகன்களும் ஒரு மகளும் அமெரிக்காவில் குடியேறிவிட்டார்கள். அமெரிக்காவுக்கு வந்துவிடும்படி பிள்ளைகள் அழைத்தபோதும் மறுத்துவிட்டார்.
பிஸியாகவே இருந்துவிட்டு, இனி வரப்போகும் காலத்தை எப்படி கடக்கப்போகிறோம் என்று பெருமூச்செறிந்தார். ராணுவ நாள்களை மறக்கவும் முடியாது; அதுபோன்ற பெருமையும் அதிகாரமும் உள்ள பணி இனி வேறு எங்கும் கிடைக்காது.
இதுவரைக்கும் பிஸியா இருந்தது போதும். வயசான காலத்துல கோயில் குளம்னு போயிட்டு வா என்று ரயிலில் உடன் பயணித்த அதிகாரிகள் சொன்னது நினைவுக்கு வந்தது.
இராயப்பனுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை! காரணம், அவர் சிறுவயதிலேயே ராணுவப் பள்ளியில் சேர்ந்து பயின்றதால் அதற்கு வாய்ப்பே இல்லை. உடற்பயிற்சிகளும் தேசப் பணிகளும்தான் அவரது அன்றாடக் கடமைகளாக இருந்தன.
நேரடிக் கடவுள் வழிபாடுதான் இல்லை. ஆனால், ஆன்மிகத்தில் எப்போதுமே அவருக்கு ஈடுபாடு உண்டு. உடலால் மனிதனாக வாழ்ந்தாலும், உள்ளத்தால் இறைத்தன்மை பெற்ற மனிதர்கள் மீது அவருக்குத் தனி மரியாதை இருந்தது.
அதனால், அன்று மாலை சத்சங்கம் ஒன்றில் சகஸ்ரநாம சங்கீர்த்தன தபோவனத் துறவி ஸ்ரீமகாஸ்ரீ சேதுபதி சுவாமிகளின் சொற்பொழிவுக்குப் போக தீர்மானித்தார்.

நரைத்த வெண்தாடியும் மீசையும் வழுக்கைத் தலையுமாகக் காணப்பட்ட சேதுபதி ஸ்வாமி இப்படிப் பேசிக்கொண்டிருந்தார் –
‘லௌகீகம் லௌகீகம்னு அலையறவாள்லாம் என்னத்தைக் கண்டீங்க? நீங்க லௌகீகத்துல என்னதான் அனுபவிச்சாலும், இறுதியில பகவான்கிட்டதானே வந்தாகணும். பகவான்கிட்ட போறது பெரிசில்லை. அதுவரைக்கும் பாவம் பண்ணாம இருக்கணுமே. இருக்க முடியுமோ? நான் பாவமே பண்ணாதவான்னு சொல்றவாளை எல்லாம் நம்பாதீங்க. அவாள்லாம் பொய் சொல்றா. அவாளுக்குத் தன்னந் தனியா ஒரு சிச்சுவேஷனை ஏற்படுத்திக் குடுத்தா, அப்பறந் தெரியும். நம்ம விஸ்வாமித்திரரை விடவா? மேனகைகிட்ட அவாளோட ஜம்பம் பலிச்சுதா? நேக்கு வயசாயிடுத்து. எந்த சிச்சுவேஷன் கிடைச்சாலும் நான் ஸ்டெடியா இருப்பேன்னு யாரும் பெருமை பேசமுடியாது. அவாளோட ஸ்டெடினெஸ் எல்லாம் தவிடுபொடியாயிடும்…’ என்று சொல்லிவிட்டு, வலது கையை தம்ஸ் அப் முத்திரையில் காட்டி கட்டை விரலை ஆட்டி ஆட்டிச் சிரித்தார். (பலத்த கைத்தட்டல்).
நன்னா தெரிஞ்சுக்கோங்கோ. சின்ன வயசுல எப்படியும் இருந்திடலாம். தப்பு செஞ்சாகூட கண்டுக்கமாட்டா. ஆனா, வயசான காலத்துலதான் ரொம்ப ஜாக்ரதையா இருக்கணும். பொம்மனாட்டிகளை சும்மா தொட்டுப் பேசினாகூட கதை கட்டி விட்டுடுவா. கெழவனுக்கு ஆசைய பத்தியாடீ... அவன் பார்வையே சரியில்லடீ… என்று வலது கையை மடித்து நாடியில் வைத்துக்கொண்டு, பெண்கள் பேசுவதுபோல பாவனை காட்டிச் சொன்னபோது, ஆஸ்ரம் அதிர கைதட்டிச் சிரித்தார்கள் பக்தர்கள்.
அவருடைய பேச்சு, கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் இருந்ததால், அறுவறுப்போடு எழுந்து வெளியேறினார் இராயப்பன்.
அடுத்த ஞாயிறு -
மற்றொரு ஆசிரமத்தில் ஒரு துறவி பேசுவதாகக் கேள்விப்பட்டுப் போய் அமர்ந்தார் இராயப்பன். அவர் மிகவும் இளையவராகக் காணப்பட்டார்.
‘மனிதன் இறைவனாக மாற வேண்டும். அதற்குத்தான் இந்தப் பிறவி. இங்கே வயதில் குறைந்தவர்கள் நிறைய பேர் வந்திருக்கிறீர்கள். திருமணமாகாதவர்கள்கூட நிறைய வந்திருக்கிறீர்கள். நானும் திருமணம் செய்துகொண்டு சம்சாரக் கடலில் விழுந்திருக்கலாம்.
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
என்றார் வள்ளுவர்.
யாதனின்னு சொன்னா கல்யாணம்னு அர்த்தம். கல்யாணத்தை நீக்கினா, கல்யாணம் பண்ணிக்கிறதால வர்ற கஷ்டம் அத்தனையும் நீக்கலாம்னு வள்ளுவர் பொடி வச்சி சொல்லியிருக்கார். ஆனா, மனுஷங்க அதை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க. உடலால வர்ற சந்தோஷம் எத்தனை நாளைக்கு இருக்கும்? கொஞ்ச நேரம் சந்தோஷமா இருந்ததுக்கு எத்தனை பெரிய தண்டனை கிடைக்குது? ஒரு குழந்தையைப் பெத்து அதை படிக்கவெச்சி, நோய் நொடி வராம பார்த்து, வளர்த்து ஆளாக்கி கல்யாணம் பண்ணிவெச்சி என்னத்தை கண்டாங்க. சொல்லுங்க. உங்களத்தான் கேக்கறேன். என்னத்தை கண்டீங்க என்று பார்வையாளர்களைப் பார்த்துக் கேட்டார்.
பார்வையாளர்கள் நிமிர்ந்து அமர்ந்தார்கள்.
நான் கல்யாணமே பண்ணிக்கல. எனக்கு என்ன குறைச்சல்? நான் சந்தோஷமாத்தான் இருக்கேன். ஒரு சின்ன தேக சந்தோஷத்துக்காக மொத்த வாழ்க்கையவே பறிகொடுக்கறதா? நல்லா கேட்டுக்கோங்க.
சிற்றின்ப இச்சை இருக்கறவரைக்கும் பகவானை அறியமுடியாது. எப்போ நாம சிற்றின்பத்தை தூரப்போன்னு துரத்திவிடறமோ அன்னிக்குத்தான் பகவான் நமக்குள்ள வந்து உட்காருவார்!
இராயப்பன் உடன்பாடில்லாமல் அங்கிருந்தும் வெளியேறினார்.
ஒருவாரம் சென்றது.
மதுரைக்கு அருகே உள்ள ஆஸ்ரமத்தில் ஒரு மவுனகுரு சாமி இருப்பதாகக் கேள்விப்பட்டார்.
வாய் திறந்து பேசியவர்கள் வார்த்தைகள் ஒன்றுகூடச் சரியில்லை. பேசாத ஸ்வாமிதான் நல்ல சாமியாக இருப்பார் என்று மனைவியை அழைத்துக்கொண்டு மதுரைக்குப் புறப்பட்டார் இராயப்பன்.
மேடையில் ஒரு துறவி எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தார்.
பக்தர்கள் வரிசையாகச் சென்று அவரை வணங்கிக்கொண்டிருந்தார்கள். இராயப்பன் அவருக்கு அருகே சென்றதும் ஏதோ கேட்டுவிட வேண்டும் என்று துடித்தார்.
சுவாமி, நான் மிலிட்ரியில இருந்தவன். எனக்கு ஒரு சந்தேகம் என்றார் காதோடு.
சுவாமிக்கு அருகில் இருந்தவர்கள், ‘அவரே மவுனத்துல இருக்காரு. அவர்கிட்ட பேசறீங்களே? என்று இராயப்பன் கையைப் பிடித்து இழுத்தனர்.
அதற்குள் சுவாமி ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்து இராயப்பனிடம் நீட்டி, அதில் எழுதிக் கொடுக்குமாறு சைகை செய்தார்.
இராயப்பன் மகிழ்ச்சியோடு வாங்கி கேள்வியை எழுதி நீட்டினார். சுவாமி அதை வாங்கிப் பார்த்து புன்னகைத்தார்.
பேசாமலேயே இருப்பதால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது?
இது இராயப்பனின் கேள்வி. அதற்குக் கீழே பதிலாக, பேசிக்கொண்டே இருப்பதால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது? என்று பதிலையே ஒரு கேள்வியாக எழுதி நீட்டினார் மௌனகுரு சாமிகள்.
வாங்கிப்பார்த்த இராயப்பன், யோசிப்பதற்குள் சுவாமியின் ஆட்கள் அவரை இழுத்துக்கொண்டு போய்விட்டார்கள்.
பேசினால்தான் கஷ்டம். பேசாமல் இருந்துவிட்டால் பெரிய நிம்மதி என்று முடிவெடுத்தார்.
மனைவி சரோஜாவை அருகில் அழைத்தார். இன்றுமுதல் நான் யாரிடமும் அநாவசியமாகப் பேசமாட்டேன், உன்னிடம்கூடதான். சாப்பிடும்போது மட்டும் சில வார்த்தைகள் பேசுவேன். அவ்வளவுதான். எனக்கு இது நிம்மதியாக இருக்கிறது என்றார்.
சரி என்று சரோஜா தலையாட்டினாள்.
அன்று நள்ளிரவு. நல்ல உறக்கத்திலிருந்து கண் விழித்த இராயப்பன், பக்கத்தில் சரோஜாவைக் காணாமல் திடுக்கிட்டார்! பால்கனி கதவு திறந்திருந்தது. அங்கு, மனைவி சரோஜா தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தாள்.
மவுன விரதத்தை மறந்து, என்ன சரோஜா, ஏன் இந்த ராத்திரில அழுதுட்டிருக்கே? என்று கேட்டார்.
மவுன விரதமாச்சே. ஏன் பேசினீங்க…
மவுன விரதம் கெடக்கட்டும். நீ எதுக்காக அழறே…
மனத்தில் இருப்பதைக் கொட்ட ஆரம்பித்தாள் சரோஜா.
ராணுவத்துல இருக்கறபோது கல்யாணம் பண்ணீங்க. நாட்டுக்காக வாழ்க்கைய தியாகம் பண்றேன்னீங்க. நான் உங்களுக்காக வாழ்க்கைய தியாகம் பண்ணேன். பிள்ளைங்க கூப்பிட்டாங்க. வரமாட்டேன்னுட்டீங்க. நானும் போகல.
சர்வீஸ் முடிஞ்சதும் வாழ்ந்துக்கலாம்னு சொன்னீங்க. நானும் சம்மதிச்சேன். ஆனா இப்போ, மவுன விரதம் ஆரம்பிச்சிட்டீங்க. வாக்கு மாறிட்டீங்கன்னும், என்னை ஏமாத்திட்டீங்களேன்னும் சொல்ல மாட்டேன். நீங்க என்னை ஏமாத்தலை. ஆனா நான்தான் ஏமாந்துட்டேன். என்னோட விதி…
சரோஜா சொல்லி முடிக்கவில்லை. அப்படியே வாரி அணைத்துக்கொண்டார் இராயப்பன். உச்சி முகர்ந்தார்.
என்னை மன்னிச்சுடு சரோஜா. நான் தப்பு பண்ணிட்டேன். என்னமோ ஒரு விரக்தியிலே அந்த முடிவுக்கு வந்துட்டேன். எனக்காக இத்தனை வருஷங்கள தியாகம் பண்ண உனக்காக நான் எதுவுமே பண்ணல. நான் புரிஞ்சிக்கிட்டேன். இன்னியோட என்னோட மவுன விரதத்தை தியாகம் பண்றேன்.
இனிமேதான் நமக்கு வாழ்க்கையே ஆரம்பமாகப்போகுது. இந்த நிலவுதான் சாட்சி. கல்யாணத்துக்கு நாம ஹனிமூன்கூட போகலை. இனிமே, என் இறுதி நாள் வரைக்கும் உன்னை சந்தோஷமா வெச்சிக்கிறதுதான் என்னோட ஒரே குறிக்கோள் என்றபடி, சரோஜாவை அணைத்து ஆறுதல் சொன்னபடி படுக்கை அறைக்குச் சென்றார்.
நல்ல குறிக்கோள் வேண்டும் என்பது தாரணை.

ஆசனம்
தனுராசனம்
பெயர்க்காரணம்
தனுர் என்றால் வில். வில் போன்று உடலை வளைத்துச் செய்யும் ஆசனம் என்பதால், இதற்கு தனுராசனம் என்று பெயர்.
செய்முறை
விரிப்பின் மீது குப்புறப் படுத்துக்கொள்ளவும்.
பின்னர் கால்கள் இரண்டையும் பின்பக்கமாக வளைக்கவும்.
இரண்டு கைகளாலும் கணுக்கால்களைப் பற்றிக்கொண்டு கால்களை மேலே உயர்த்தவும்.
தலையையும் மேல்நோக்கி உயர்த்திப் பார்க்கவும்.
அதே நிலையில் நீண்ட நெடும் சுவாசங்கள் எடுக்கவும்.

பலன்கள்

செரிமானக் கருவிகள் நன்றாக அழுத்தப்பட்டு, சுரப்பு நீர்கள் நன்றாகச் சுரக்கின்றன.

குறிப்பாக, மண்ணீரல் அழுத்தப்பட்டு இன்சுலின் நிறைய சுரந்து, சர்க்கரை நோய் வராமல் தடுக்கப்படுகிறது.

கல்லீரலில் பித்த நீர் நிறைய சுரந்து, உணவு செரிமானத்துக்கு உதவுகிறது.

காணொளி / புகைப்படம் - ப்ரியா