முகப்பு
கருத்துக் களம்

தடம் மாறுவதால் தடுமாற்றம்...

இப்போதெல்லாம் பண்டிகை நாட்களில் எத்தனை கோடி ரூபாய்க்கு மதுபான வகைகள் விற்பனை செய்யப்பட்டன என்பது குறித்த செய்திகளே நாளேடுகளில் இடம்பெறுகின்றன. இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஒவ்வொரு பண்டிகையின்போதும்

Updated On : 20 செப்டம்பர், 2012 at 5:20 AM
பகிர்:
Updated On : 29 டிசம்பர், 2023 at 12:15 AM

இப்போதெல்லாம் பண்டிகை நாட்களில் எத்தனை கோடி ரூபாய்க்கு மதுபான வகைகள் விற்பனை செய்யப்பட்டன என்பது குறித்த செய்திகளே நாளேடுகளில் இடம்பெறுகின்றன.

இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஒவ்வொரு பண்டிகையின்போதும் மதுபான வகைகளின் விற்பனைத் தொகை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மதுபானக் கடைகளை அரசு ஏற்றபோது 995 கோடி ரூபாயாக இருந்த ஆண்டு வருமானம் தற்போது 10 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இதற்கு புதுரக மதுபான வகைகளின் வரவோ, விலை உயர்வோ காரணமல்ல. மது அருந்துவோர் எண்ணிக்கை குறிப்பாக இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதே ஆகும்.

மது அருந்தும் பழக்கம் பரவலாக அதிகரித்து வருகிறது என்றாலும் இளைஞர்கள் மத்தியில் வேகமாக அதிகரித்து வருகிறது. மது அருந்துவோரின் சராசரி வயது 28-லிருந்து 13 ஆகக் குறைந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. காலை முதல் மாலை வரை தங்கள் உடல்திறன் முழுமையும் பயன்படுத்தி உழைத்தவர்கள் உடல் அயர்வைப் போக்க மது அருந்தினர். அப்போதுகூட மற்றவர்களுக்குத் தெரியாமல் ஒளிவுமறைவாக மது அருந்தினர். மது அருந்தியவர்களிடம் பழக மற்றவர்கள் தயக்கம் காட்டியதுண்டு என்றால் இன்றைய இளைஞர்கள் நம்புவதற்கில்லை.

Advertisement

ஆனால், இன்றைய காலகட்டத்தில் மது அருந்துவது என்பது நாகரிக செயலாகி வருகிறது. ஒரு நிகழ்வை மகிழ்ச்சி எனவோ அல்லது கடினம் எனவோ எடுத்துக்கொள்ளும்போது மது அருந்துவதுதான் அதற்குத் தீர்வு எனக் கருதுகின்றனர். இந்த எண்ணம் மற்ற வயதினரைக் காட்டிலும் இளம் வயதினரிடம் அதிகமாகவே உள்ளது.

குறிப்பாக பள்ளிச் சிறார்களிடம் மது அருந்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது. பள்ளிச் சீருடையுடன் மதுபானக் கடைக்குச் செல்வது, மது அருந்திவிட்டு வகுப்பறைக்கு வருவது போன்ற செய்திகள் நாளேடுகளில் வெளியாகின்றன. இந்நிலைக்குக் காரணம்தான் என்ன?

நாகரிக வளர்ச்சி, கலாசாரச் சீரழிவு என்பதைக் காட்டிலும் சரியான வழிகாட்டுதல்கள் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

கூட்டுக் குடும்ப முறை பரவலாக இருந்தபோது தாத்தா, பாட்டியின் மடியில் உட்கார்ந்து கொண்டு அவர்கள் சொல்லும் கதைகளையும் அறிவுரைகளையும் கேட்டு நடந்தபோது இத்தகைய பிரச்னைகள் இல்லை. பிரச்னைகளின்போது அவர்கள் கூறிய அறிவுரைகளும் வழிகாட்டுதல்களும் தீர்வாக இருந்தது. ஆனால் அத்தகைய வாய்ப்பு இன்று பெரும்பாலான சிறார்களுக்குக் கிட்டுவதில்லை.

இதற்கு குடும்பச் சூழல் மட்டுமன்றி இன்றைய கல்வி முறையும் ஒரு காரணமாகும். வணிகமயமாகிவிட்ட இன்றைய கல்வி முறை மதிப்பெண் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. மாறாக சிறார்களை பண்படுத்துவதாக இல்லை. பள்ளிப் பாடங்களோடு இணைந்துவிட்ட சிறார்கள் வெளியுலகம் பற்றி அறியாதவர்களாகவே உள்ளனர்.

இன்றைய வாழ்க்கை முறையில் நகரங்களில் கணவன், மனைவி ஆகிய இருவரும் வேலைக்குச் சென்றால்தான் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. அவ்வகையான குடும்பங்களில் இருவரும் வேலைக்குச் செல்லும்போது தங்கள் பிள்ளைகளைக் கவனிக்க நேரம் கிடைப்பதில்லை. அவர்களுக்காக நேரம் ஒதுக்குவதுமில்லை. வாரத்தில் ஒரு நாள் கிடைக்கும் ஓய்வைக்கூட தொலைக்காட்சி முன்பு அமர்ந்து கழித்துவிடுகின்றனர்.

பெற்றோரின் கண்காணிப்பு இல்லாத நிலையில் நல்லது எது, கெட்டது எது என பிரித்துப் பார்க்கும் தன்மை சிறார்களிடம் இருப்பதில்லை. "இளங்கன்று பயமறியாது' என்று கிராமங்களில் சொல்லும் சொலவடைக்கு ஏற்ப எதையும் செய்யும் மனப்பக்குவத்தில் இருப்பவர்கள் பிரச்னை என்றால் அதற்குத் தீர்வு காண்பதில் தடுமாறவே செய்கின்றனர். கண்காணிப்பு இல்லாததால் இளம் வயதினர் மதுவின் தீமைகள் பற்றி அறிந்திடாமல் சாதாரணமாக மது அருந்தத் தொடங்குகின்றனர். நாளடைவில் அப் பழக்கத்துக்கு முழுமையாக ஆளாகிவிடுகின்றனர். இன்று நிகழும் சாலை விபத்துகள், குடும்பப் பிரச்னைகள், வீண் தகராறுகள், உடல்நலக் கேடுகள் போன்ற பல்வேறு சமூக நிகழ்வுகளுக்கு மதுவே காரணமாகிறது.

உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 2.5 கோடி பேர் மது காரணமாக இறக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளது.

பள்ளிப் பருவத்தில் விளையாட்டுத்தனமாக மது அருந்தும் பழக்கத்துக்கு ஆளாகி நாளடைவில் அதிலிருந்து மீள்வதற்கு முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். காலப்போக்கில் மதுவுக்காகவோ, மது அருந்திய பின்னரோ எத்தகைய செயல்களிலும் ஈடுபடுகின்றனர். பல்வேறு குற்றச் சம்பவங்களின் பின்னணியில் காவல் துறையினரால் கைது செய்யப்படும் இளைய தலைமுறையினர் பற்றிய விசாரணையில் இது தெரியவரும்.படிப்பதற்கு சிறார்கள் இல்லை என்பதற்காக பள்ளிகள் மூடப்படுகின்றன. ஆனால் வருமானம் இல்லை என்றோ, குடிப்பதற்கு எவரும் இல்லை என்றோ எந்த மதுபானக் கடையும் மூடப்படவில்லை.

இதுவரை நடந்தது நடந்ததாகவே இருந்தாலும் இனி நடப்பது நல்லவையாக இருக்க வேண்டும். இளைய தலைமுறையினர் சீரழிவுப் பாதைக்குச் செல்வதைத் தடுத்து அவர்களை நல்வழிப்படுத்துவதும் நம் கடமையல்லவா? இதுதானே எதிர்காலச் சந்ததியினருக்கு நாம் செய்யும் பேருதவியாக அமையும்.

நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வந்த பழக்க வழக்கங்களில் இருந்து தடம் மாறி தடுமாறும் இளைஞர்கள் சமுதாயத்தை நல்வழிப் பாதைக்கு இட்டுச் செல்வதில் நம் எல்லோருக்கும் பங்கு உண்டு என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதில் பெற்றோர், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினருக்கும் மிகப் பெரிய பங்கு உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.