இரவு ஒன்பது மணிக்கு மேல் நகரின் பிரதான வீதியில் உள்ள ஓர் உணவு விடுதியில் நான்கைந்து இளைஞர்கள் நுழைந்து தாம் விரும்பிய உணவை உண்ட பிறகு பணம் தராமல் வெளியேற, உரிமையாளர் பணம் கேட்கிறார். பணம் கேட்ட உரிமையாளர் அந்த இளைஞர்களால் தாக்கப்பட்டுக் கடை சூறையாடப்படுகிறது. உணவு விடுதியுள் உண்ணும் பலர் அதிர்ச்சியடையவும், பெரும்பாலானவர்கள் காணாதது போல் வெளியே ஓடவும், சிறிது தூரத்திலிருக்கும் காவல் துறையினர் ஒரு மணி நேரம் தாமதமாக வந்து விசாரித்து வழக்குப் பதிவு செய்கிறார்கள். இது ஒரு பக்கம்.
நடுவீதியில் நூற்றுக்கணக்கானவர் நடமாடும் பகல் பொழுதில் பலர் புடைசூழ ஒரு நபர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் கிடக்கிறார். பலர் விலகி நின்று பார்த்துக் கொண்டேயிருக்கிறார்கள். யாரும் நெருங்கி வரவில்லை. வாகனங்கள் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கின்றன. 5 பேரே செய்யும் வன்முறையை 500 பேர் விலகி நின்று பார்க்கவும், கண்டும் காணாதது போல ஒதுங்கவுமே செய்கிறார்கள். உயிருக்காகப் போராடுபவருக்கு உதவி செய்யவும் தயக்கம். "நாம் மனிதர்கள்தானா? இதயம் நமக்கு இருக்கிறதா'? இக்கேள்விகள் நமக்குள் எழாமல் இல்லை.
உயிருக்குப் போராடுபவர் நமக்கு வேண்டியவராகவோ நமது உறவினராகவோ இருக்கலாம் என்ற சிந்தனையும் நமக்கில்லை. அருகிலிருக்கும் காவல் துறை பல மணி நேரம் கழித்துப் பிணத்தை வண்டியில் ஏற்றிச் செல்கிறது.
ஜாதி மோதல்கள், மதப் போராட்டங்கள், கல்லூரி மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் } இவை நிகழும் போதெல்லாம் கடைகள் சூறையாடப்படுகின்றன. தெரு விளக்குகள் நொறுக்கப்படுகின்றன. அரசு வாகனங்கள் தீக்கிரையாக்கப்படுகின்றன. வன்முறையாளர்கள் பத்து அல்லது இருபது பேர் மட்டுமே. வாய் பொத்தி, கைகட்டி ஒதுங்கி நின்று மரங்களாக நிற்பவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள். இங்கும் காவல் துறை வேடிக்கை பார்த்த பிறகே செயல்படுகிறது.
ஏன்? மனிதர்கள் மரத்துப் போய் விட்டார்களா? உணர்ச்சியற்ற இயந்திரங்களாகிவிட்டார்களா? பொழுதுபோக்காக வேடிக்கை பார்க்கிறார்களா? இவற்றையெல்லாம் தடுத்து உடனடியாக நடவடிக்கை எடுப்பது தம் பணியல்ல எனக் காவல் துறையினர் நினைக்கிறார்களா? தொலைக்காட்சியில்தான் இப்படியென்றால் நிஜ வாழ்விலும் இப்படியா?
தம் பிள்ளைகளின் வளர்ப்பு முறையில் பெற்றோரின் பங்கு சரியின்மையா? கல்விக் கூடங்கள் வெறும் அறிவை மட்டும் பெருக்கிப் பண்புகளை வளர்த்தெடுப்பதில் ஆர்வம் காட்டவில்லையா? இளைஞர்களின் மிருக உணர்வுகளுக்குத் தீனி போட்டு அவர்களை வன்முறையாளர்களாக மாற்றும் வக்கிரப் பணிகளைச் செய்வதுதான் ஊடகங்களின் வேலையா?
இந்தியாவில் அரசியல் பெயரைச் சொல்லி யாரும் எதையும் செய்யலாம். எந்த வன்முறையிலும் ஈடுபடலாம். எதற்கும் தண்டனை இல்லை. இந்த அசட்டுத் துணிச்சல் வளரக் காரணமாக இருப்பது காவல் துறையா? தவறுகளைத் தண்டிக்க முயலும்போது காவல் துறையினரின் கைகளை, அதிகாரத்தைக் கட்டிப் போடும் அரசியல் செல்வாக்கா?
நிகழும் வன்முறைகளுக்கு இவர்கள் எல்லாருமே ஒவ்வொரு வகையிலும் காரணமாகி விடுகிறார்கள். வன்முறைகளுக்குக் காரணமானவர்களே பாதிப்புக்கு உள்ளாவதும் உண்டு. எரிக்கப்படும் பேருந்துகளில், எரிக்கும் மாணவர்களின் பெற்றோர் இருக்கலாம் அல்லவா? கல்லெறிந்து தாக்கப்படும் முதியவர்களில் கல்லெறியும் மாணவர்களின் தாய், தந்தை இருந்தால் என்ன ஆவது? சூறையாடப்படும் வாகனங்கள், கடைகள் இவர்களது உறவினர்களின் உடைமைகளாகவும் இருக்கலாம் அல்லவா?
இயற்கையிலேயே மனிதர்களின் இயல்பு இப்படித்தானா? காட்டு விலங்குகளிடம் வன்முறை இயல்பான அம்சம். இயற்கையின் படைப்பில் மாற்ற முடியாதது. மிருக நிலையிலிருந்து மனித நிலைக்குத் தன்னைப் பலவிதங்களில் வளர்த்துக் கொண்டுள்ளவன், நாகரிகத்தின் உச்சத்தில் வாழ்பவன், தனித்திருக்கும்போது தன் உயர் பண்புகளை இழக்காதவன் தவறுகளுக்கு நானுபவன் கூட்டமாகும்போது நெறிபிறழ்வது ஏன்?
கும்பலாகச் சேரும்போதுதானே பல்வேறு நாசங்கள், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. உணர்வைத் தூண்டும் சிலரது பேச்சு, செயல்களால் கலவரம், தீவைத்தல், கல்லெறிதல் என மூர்க்கத்தனமான தாக்குதல்கல் நடக்கின்றன. பொதுக்கூட்டம் நடத்துவது, ஊர்வலம் செல்வது, மாநாடுகள், கோவில் திருவிழாக்கள் நடத்துதல் ஆகியவை ஜனநாயக நாட்டில் மக்களுக்கிருக்கும் உரிமை என்று முழக்கமிடுகிறோம்.
இவற்றால் விளையும் போக்குவரத்துப் பாதிப்பு, தெருக்களில் வீண் நெரிசல், தேவையற்ற மின் விரயம், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பு நாசம், காவல் துறையினருக்குப் பணிச்சுமை இவற்றை எண்ணிப் பார்க்க மறந்து விடுகிறோம். இவை எல்லாம் மனித உரிமைகள்தானா?
நமக்குள்ள உரிமையென்று பிறருக்கு இடையூறு செய்வதும் ஜனநாயக உரிமைகளில் அடங்குமா? "ஜனநாயகத்திற்குப் பக்குவப்பட்ட மக்கள் இந்தியர்கள் அல்லர்' என அன்றே ஆங்கிலேயர் சொன்னதை இன்றளவும் மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறோம். உண்மையான ஜனநாயகம் எது என்பதைக் கண்டிப்புள்ள அரசும், ஊடகங்களும்தான் மக்களுக்கு உணர்த்த வேண்டும்.
கும்பலாக மக்கள் ஓரிடத்தில் கூடுவதற்குத் தடை; ஜாதித் தலைவர்களின் பிறந்த தினம், நினைவு தினம் கூட்டம் கூடி மேடை போட்டு நடத்த அனுமதி மறுப்பு; தொழிற்சங்கவாதிகள் நடத்தம் தேவையற்ற மாநாடுகள், ஊர்வலம் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடின்றி நிறுத்தம் } இவைகளையும் மீறி நடக்கும் வன்முறை, பொருள் இழப்புகளுக்கு தொழிற்சங்கங்களும் தலைவர்களும் பொறுப்பேற்பு; இவை சட்டத்தில் இருந்து பயன் இல்லை. நடைமுறைப்படுத்தும் கறாரான காவல் துறை தேவை.
கல்லூரிகளில் நடக்கும் தேர்தல், ஆண்டு விழாக்கள், காதலர் தினம், பஸ் தினம் இவை பெரும்பாலும் வன்முறைகளிலும், கலவரத்திலுமே முடிகின்றன. கல்லூரி மாணவர்களின் இளமை ஆற்றல் விரயம், கல்வி பாதிப்பு, கல்லூரிக் கட்டடங்கள் சேதம், பொதுச் சொத்துகள் அழிப்பு, பொதுமக்களுக்கு இடையூறாக போக்குவரத்து நிறுத்தம் இவற்றால் விளையும் துன்பங்கள் மிக அதிகம். நிகழும் அனைத்து நாசங்களுக்கும் கல்லூரி நிர்வாகம், பெற்றோர்களே பொறுப்பேற்க வேண்டும்.
அமைதியை நிலைநாட்ட முயலும் காவல் துறையினரின் பணிச்சுமைகள் அதிகமாகின்றன. சட்டம் } ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக காவல் துறையினர் எடுக்கும் கண்டிப்பு நடைமுறைகளுக்காக காவல் துறையினரைக் குற்றம் சுமத்தும் போக்கை பொதுமக்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். வன்முறையைக் கட்டுப்படுத்த வேண்டிய சூழலில் காவல் துறையினருக்கு முழுமையான அதிகாரம் வழங்குவதே சரி.
கடுமையான சட்டங்கள், நீதிமன்றங்களின் தாமதமற்றத் தீர்ப்பு, குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதற்கு முயற்சி செய்யாத அரசியல்வாதிகள் இவையெல்லாம் சாத்தியமானால் இந்தியா அமைதிப் பூங்காவாக மாறும் என்பதில் ஐயமில்லை.
தற்போது நமக்குத் தேவை, ஜனநாயகத்தில் நம்பிக்கையுடைய மக்கள் நலம் நாடும் இரும்பு மனம் கொண்ட சர்வாதிகாரத் தலைமையே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.