நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களுக்கும், அரசியல், சமுதாய தலைவர்களுக்கும் சிலை வைக்க வேண்டியது அவசியமா என்பது இக்கால சூழ்நிலையில் அனைவருடைய மனதிலும் எழும் முக்கிய கேள்வியாக உள்ளது.
தலைவர்களுக்கு நாம் அனைவரும் அளிக்கும் மரியாதையாகவும், அவர்கள் இந்நாட்டுக்காக பாடுபட்டது வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையிலும் அவர்களுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் மாநகரங்கள், நகரங்கள், கிராமப்புறங்களில் சிலைகள் அமைக்கப்பட்டு திறக்கப்படுகின்றன.
ஆனால் அந்தச் சிலைகள் பராமரிக்கப்படுகின்றனவா என்று பார்த்தால் பெரும்பாலான இடங்களில் பராமரிப்பு இன்றி தான் காட்சியளிக்கின்றன. பல தலைவர்களின் சிலைகள் கையொடிந்தும், அங்கம் ஈனமாகி வருத்தமடையச் செய்வதாக இருக்கிறது. சிலை அமைத்தவர்கள் தான் அதனை பராமரிக்க வேண்டுமென்று ஒரு விதியை அமல்படுத்த வேண்டும். சிலையை பராமரிக்காவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசாங்கம் அறிவிக்க வேண்டும்.
பராமரிக்காவிட்டாலும் பரவாயில்லை. தற்போது தலைவர்களின் சிலையை பாதுகாப்பது பெரும் தலைவலியாக உள்ளது. தலைவர்களின் சிலைகளை சமூக விரோதிகள் அல்லது விஷமிகள் சேதப்படுத்துவதும், அவமரியாதை செய்வதும் ஆங்காங்கே தற்போது நடந்து வருகிறது. அதனால் சேதப்படுத்தப்பட்ட தலைவரை பின்பற்றி இயங்கும் சமுதாயம் அல்லது அமைப்பைச் சேர்ந்தவர்கள் உடனடியாக போராட்டத்தில் இறங்கி விடுகின்றனர். அதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை தலைதூக்கி அரசாங்கத்துக்கும், காவல் துறைக்கும் பெரும் தலைவலியை உண்டாக்கி விடுகிறது. காவல் துறையில் ஏற்கெனவே காவலர்கள் பற்றாக்குறை நிலவும் நிலையில் அவர்களால் வழக்கமானப் பணியை மேற்கொள்ளவே பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இவ்வாறான பிரச்னை ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்னை தலைதூக்கும் காலங்களில் தலைவர்களின் சிலைக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய கூடுதல் சுமையும் காவல் துறைக்கு உருவாகிறது. இத்தகைய பிரச்னைகளை சிலர் அரசியல் ஆதாயத்துக்காகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
தலைவர்களின் சிலைகளைப் பாதுகாக்க, அவற்றைச் சுற்றி கம்பி வலை ஏற்படுத்த வேண்டுமென்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அது ஒரு சில இடங்களில் மட்டுமே பின்பற்றப்படுகிறது. அரசாங்கம் ஏன் இதை கட்டாயமாக்கக் கூடாது என்ற கேள்வி எழுகிறது. அனைத்துத் தலைவர்களின் சிலைகளும் கட்டாயமாக கம்பி வலை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு கதவு அமைத்து, பூட்டுப் போட்டு அந்த கதவு மூடியிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தலைவரின் பிறந்த நாள் விழா அல்லது நினைவு நாள் அனுசரிக்கும் நாள்களில் மட்டுமே திறக்கப்பட்டு தலைவருடைய சிலைக்கு மரியாதை செலுத்த அனுமதிக்கப்பட வேண்டும்.
தலைவர்களுக்கு மரியாதை அளிக்கிறோம் என்று கூறிக்கொண்டு சிலை அமைக்கப்படுவதன் மூலம் அவர்களுக்கு அவமரியாதையை ஏற்படுவதற்கு வழிவகுப்பதும் நாம் தான். தலைவர்களின் சிலைகள் அவமரியாதை செய்யப்படும் பொழுது சிலைகளையே வைக்காமல் இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் எழும். அதனால் தலைவர்கள் சிலைகள் புதியதாக அமைக்க கடுமையான விதிமுறைகளை வகுக்கவேண்டும். இருந்த போதிலும் கூடிய மட்டும் தலைவர்களுடைய சிலையை புதியதாக அமைத்து திறப்பதற்கு அனுமதி வழங்குவதை தவிர்க்க வேண்டும்.
தற்போதைய சூழ்நிலையில் தலைவர்களின் சிலைகள் அவமரியாதை செய்யப்படுவதால் தான் அடிக்கடி சட்டம் - ஒழுங்கு பிரச்னை தலை தூக்குகிறது. எனவே அரசாங்கம் தலைவர்களின் சிலைகள் குறித்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டியது மிகவும் அவசியமாகிறது. அப்பொழுது தான் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தவிர்க்கப்படும். தலைவர்களுக்கு அவமரியாதையும் ஏற்படாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.