அரவணைப்பு என்பது வாழ்க்கையின் பல தருணங்களில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இன்றைய மாறிவரும் வாழ்க்கை சூழ்நிலையில் அரவணைப்பு என்பது அவசியமாகிவிட்டது.
பொதுவாக, வீட்டில் குழந்தைகளைக் கண்டிக்கும்போது, கணவன் கண்டித்தால் மனைவியோ, மனைவி கண்டித்தால் கணவனோ அல்லது குடும்பத்தில் உள்ள பெரியவர்களோ குழந்தைகளை அரவணைத்து அவர்களை கண்டிப்பிலிருந்தோ, அடிபடுவதிலிருந்தோ காக்கிறார்கள். சில குடும்பங்களில் கணவன் கோபத்தின் உச்சியில் குழந்தைகளை அடிக்க முற்படும்போது குழந்தைகளைக் காப்பது இந்தப் பெரியவர்களின் அரவணைப்புதான்.
எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் ஒரு பெண் தன் குழந்தைகளை எப்படி அடிப்பார் தெரியுமா? அந்த வீட்டில் சமையல் கரண்டிகள் பல உடைந்து, வளைந்து உள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். தான் சொல்வதை குழந்தைகள் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவ்வளவுதான். கோபம் தலையின் உச்சிக்கு சென்றுவிடும். பலமுறை அந்தக் குழந்தைகளை அடிவாங்குவதிலிருந்து தடுத்தது அரவணைப்பு மட்டுமே.
அரவணைப்பு என்பது மனிதர்களிடம் மட்டுமல்லாமல் விலங்குகளிடமும் காணப்படுவதுதான். ஆனால், அவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே. பிறகு அவை தனித்தனியே சென்றுவிடும். ஆனால், மனித சமூகம் என்பது அப்படியல்ல. ஒரு குடும்பத்திலுள்ள சில குழந்தைகளில் ஒரு குழந்தை ஊனமுற்றிருந்தாலோ, திறமை குறைந்து காணப்பட்டாலோ அதற்கு கூடுதல் அரவணைப்பு தேவை.
அரவணைப்பில் வளராத குழந்தைகளின் நிலையும், முதியவர்களின் நிலையும் சொல்லி மாளாது. குடும்பத்தில் அரவணைப்பு இல்லாததால் ஏற்பட்ட சம்பவங்கள் செய்தித் தாள்களில் அடிக்கடி வெளிவருகின்றன. சரியான அரவணைப்பு இல்லாத குழந்தைகளும், முதியவர்களும் வீட்டைவிட்டு வெளியேறிச் சென்று கஷ்டப்படுவதும், சிலர் மன நலம் பாதிக்கப்படுவதும், இன்னும் சிலர் தங்கள் உயிரையே மாய்த்துக் கொள்வதும் ஊடகங்களில் செய்தியாக வந்துக் கொண்டு இருக்கின்றன.
சில நேரங்களில் நமது அரவணைப்பு தவறாவதும் உண்டு. தேர்வில் தோல்வியடைந்த பிள்ளைகளை வரம்புமீறிக் கண்டிப்பதால், அந்த மாணவர்கள் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். ÷முன்பெல்லாம் சமூகத்தில் கூட்டுக் குடும்பங்களே அதிகம். ஆனால், இன்று அது ஆச்சரியமாக பேசப்படும்படியாகி விட்டது. எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இன்றும் தனது பெற்றோர், இரு தம்பிகள் சகிதமாக, கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
எனது நண்பர் ஒருவரின் அலுவலகத்தில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தை பார்ப்போம். ஒரு துறையின் அதிகாரி தன் சொந்த வெறுப்பின் காரணமாக தனக்கு கீழே வேலை செய்யும் ஓர் ஊழியர் செய்த தவறை திருத்தி சரி செய்ய முற்படாமல் அதனைப் பெரிதுபடுத்தி, அந்த அலுவலகத்தின் மேலதிகாரியிடம் புகார் செய்தார்.
ஆனால், அந்த மேலதிகாரியோ துறை அதிகாரியிடம், "அவர் தவறைத் திருத்திக் கொள்ள என்ன உதவி செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல், இதனை ஒரு புகாராக எடுத்துக் கொண்டு என்னிடம் வருகிறாயே' என்று அந்தத் துறை அதிகாரியிடம் கண்டித்தார். அந்த மேலதிகாரி ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களை வலியுறுத்தியுள்ளார். ஒன்று தவறு செய்த ஊழியரை அரவணைத்ததன் மூலம் இனி தவறு நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தியது. மற்றொன்று தவறு செய்த ஊழியருக்கு அரவணைப்பையே தண்டனையாகத் தந்தது.
பொதுவாக ஒரு விஷயத்தைப் பற்றி முழுவதும் அறிந்தவரும் இல்லை, எதுவும் அறியாதவரும் இல்லை. சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் 120 பேர் பங்கு கொண்ட சாரணர் முகாமில் கலந்துக் கொண்ட ஒரு மாணவனுக்கு, எந்த பொருளைப் பார்த்தாலும் எடுத்துக் கொள்வது பழக்கம்.
அந்த முகாமில் பொருள்கள் காணாமல் போகிறது என்று தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டே இருந்தன. அந்த முகாமில் இருந்த அதிகாரியின் "இன்ஹேலர்' கருவியும் காணவில்லை. முகாம் பொறுப்பாளர்கள் சிலர் மீது சந்தேகம் கொண்டு, சோதனை செய்ததில் ஒரு மாணவனுடைய பையிலேயே காணாமல்போன அத்தனை பொருள்களும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அவனைத் தனியாக கூப்பிட்டு இந்த பொருள் எங்கு வாங்கினாய், அந்த பொருள் எங்கு வாங்கினாய் என்று கேட்டுவிட்டு "இன்ஹேலரை'க் காட்டி இது என்ன காது வலி எந்திரம். உனக்கு எதற்கு என்று கேட்டபோது, எனக்கு காது வலி இருக்கிறது. ஆகவே காது வலிக்கும்போது மருந்து அடித்துக் கொள்வேன் என்று கூறினான்.
சோதனையிட்டவர்களுள் ஒருவருக்கு வந்தது கோபம். அந்த இளைஞனை அடித்து விட்டார்.
மற்றொருவர் அந்த இளைஞனைத் தனியே அழைத்து, அவன் செய்தது திருட்டு என்பதைப் புரியவைத்து அன்பாகப் பேசி அவனை அரவணைத்தார். ஆக அந்த மாணவனை திருத்தியது அடி அல்ல; அரவணைப்புதான்.
அரவணைப்பு இருந்தால் சோதனைகளையும் சாதனைகளாக்க முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.