உலகில் மனிதன் மட்டுமே சிரிக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளான். அணுகுண்டுக்கு இல்லாத சக்தி சிரிப்புக்கு இருக்கிறது. உணர்ச்சி வசப்படுபவனுக்கு இந்த உலகமே சோக நாடக மேடையாகக் காட்சி கொடுக்கிறது. விவேகானந்தரிடம் நிவேதிதா என்ற ஆங்கிலேய மாது சிஷ்யையாக இருந்தார்.
அவர் எப்பொழுதும் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு அழுமூஞ்சிபோல இருப்பாராம். "அம்மா, நீ ஆனந்தமாக இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். கலகலப்பாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் நீ விரும்பும் ஜீவன் முக்தி உனக்குக் கிடைக்கும்' என்றாராம்.
ராமாயணத்தில் கூனி என்ற பாத்திரம் வருகிறது. அவளுக்கு உடம்பும் கோணல். மனமும் கோணல். இரண்டும் கோணலாக இருந்ததால் அவளது வாழ்வும் கோணலாகிவிட்டது. அவளுக்கு மிஞ்சியது அவப்பெயர்தான்.
லியோ டால்ஸ்டாய் என்ற ஞானி ஒருவர் ரஷியாவில் வாழ்ந்தார். மாஸ்கோ நகரச் சாலையில் அவர் நடந்து கொண்டிருந்தபோது ஒரு பிச்சைக்காரன் அவரை வழி மறித்து, "ஐயா, பிச்சை' என்று கேட்டான். இரக்க மனமுடைய டால்ஸ்டாய் தன் சட்டைப் பைக்குள் கையை விட்டுத் துழாவிப் பார்த்தார். பைக்குள் ஒரு காசு கூட இல்லை. மன வேதனையோடு பிச்சைக்காரனைப் பார்த்து, "பையிலே பணமில்லையே, தம்பி' என்று கூறினார்.
இதைக் கேட்டவுடன், பசியால் வதங்கிப் போயிருந்த பிச்சைக்காரன் முகத்தில் என்றுமில்லாத ஓர் ஒளி பிறந்தது. பிச்சை கொடுக்க காசு இல்லையே என்று நீங்கள் வருந்த வேண்டாம். பிச்சை கொடுப்பதைக் காட்டிலும் பெரிய உதவியொன்றை நீங்கள் எனக்குச் செய்துவிட்டீர்கள். "தம்பி' என்றல்லவா என்னை அழைத்துவிட்டீர்கள். அது போதும்' என்று கூறினானாம். பிச்சைக்காரனைத் தம்பியென்று உறவு கொண்டாடிய டால்ஸ்டாயிடத்திலே பிச்சைக்காரனுக்கு அளவு கடந்த மதிப்பு ஏற்பட்டு விட்டது. பணத்தால் கிட்டாத மகிழ்ச்சியும், ஊக்கமும் பரிவினால் கிட்டி விடுகிறது. நமது பரிவு பிறர்க்கு மகிழ்ச்சியூட்டுகிறது.
நியூயார்க் நகரிலிருந்த உளவியல் மருத்துவரிடம் ஒரு பெண்மணி ஆலோசனை பெற வந்தாள். நான் ஒரு தொழிற்சாலையில் சுருக்கெழுத்தாளராகப் பணிபுரிகிறேன். எனது அதிகாரி ஒரு சிடுமூஞ்சி. எனக்கு அவரது கோபதாபங்களைத் தாங்க இயலவில்லை. அவரது கொடுமையை நினைத்தால் இரவில் தூக்கம் வருவதில்லை. வேலையை ராஜிநாமா செய்து விடலாம் என்றிருக்கிறேன். அதற்கு முன்பு உங்கள் ஆலோசனையைக் கேட்கவந்தேன் என்றாள்.
"அம்மா, நான் ஒரு வழி சொல்கிறேன். அதன்படி நடந்து விட்டு மூன்று மாதம் கழித்து என்னிடம் மறுபடியும் வா. பிறகு ராஜிநாமா பற்றிப் பேசலாம்' என்றார்.
அவர் சொன்ன வழி இதுதான். "சிடுமூஞ்சியிடத்தில் சில நற்குணங்கள் பதுங்கிக் கொண்டிருக்கும். அவற்றைத் தேடிக் கண்டுபிடித்து வாயார வாழ்த்து. ஒரு நாளைக்கு ஒரு பாராட்டு என்று வைத்துக் கொள்' என்று கூறியனுப்பினார்.
இந்த ஆலோசனையை மேற்கொள்ளத் தலைப்பட்டாள் சுருக்கெழுத்துப் பெண். மறுநாள் சுருக்கெழுத்துப் பெண் எழுதுவதற்காக அதிகாரியிடம் சென்றாள். அவர் அணிந்திருந்த ஆடை அழகாக இருந்தது. அதை உள்ளன்போடு பாராட்டினாள். அடுத்த நாள் அவரது ஆங்கில எழுத்து நடையின் நுணுக்கத்தை உணர்ந்து பாராட்டினாள்.
இப்படியே பாராட்டு ஏற ஏற சிடுமூஞ்சியாக இருந்தவர் காதலனாகிவிட்டார். மூன்று மாதங்கள் கழித்து மருத்துவரைப் பார்க்கச் சென்றாள் அந்தப் பெண். "என்னம்மா, வேலையை ராஜிநாமா பண்ண வேண்டியதுதானா?' என்று கேட்டார் அவர்.
ஐயோ, ராஜிநாமாவா? என்னை அவர் திருமணம் செய்து கொள்ளப் போகிறார். பாருங்கள் இதை என்று சொல்லி அவர் பரிசாகக் கொடுத்திருந்த வைர மோதிரத்தைக் காட்டினாள். பரிவினால் வந்த விளைவை அந்த மோதிரம் "டால்' அடித்துக் காட்டிக் கொண்டிருந்தது.
நம்மைச் சுற்றியுள்ளவர்களிடத்தில் நம்மிடமிருப்பது போலவே பல குற்றங்கள் இருக்கலாம். அவற்றை மறந்து அவர்களிடமிருக்கும் ஒரு துளி நல்ல குணத்தை முயன்று கண்டுபிடித்து நாம் பாராட்டக் கற்றுக் கொண்டால் வாழ்க்கை அடிக்கரும்பாய் இனிக்கும்.
மனிதனுக்குத் துன்பத்தைத் தருவது அவனுடைய ஆணவமே. "நான்' என்ற மயக்கமே. அந்த மயக்கத்திலிருந்து விடுதலை அடைந்தவுடனேயே அவனுக்கு ஆனந்தம் கை கூடி விடுகிறது. ஆணவம், அகங்காரம் எல்லாம் மறந்துவிட்டால் எட்டாக் கனியாக இருந்த பேரின்பம் அவனுக்கு எட்டி விடுகிறது.
இந்த உண்மையைப் பட்டினத்தார், "ஓங்காரமாய் நின்ற வஸ்துவிலே ஒரு வித்து வந்து பாங்காய் முளைத்த பயனறிந்தாற் பதினாலுலகும் நீங்காமல் நீங்கி, நிறையா நிறைந்து நிறையுருவாய் ஆங்காரமானவர்க் கெட்டாக் கனி வந்தமர்ந்திடுமே' என்று பாடியுள்ளார்.
இருட்டறைக்குள் இருக்கும் குருட்டுக் கிழவன் இழந்த சாவியைத் தேடுவதைப் போல் நாம் நம்முள்ளேயே நல்வழிகளை வைத்துக் கொண்டு வெளியில் தேடுகிறோம். அதனால் வருவது துன்பம்தான்.
சாக்ரடீஸ் என்ற கிரேக்கத் தத்துவ ஞானி தன் தேசத்திலுள்ள பெரியவர்கள் ஒவ்வொருவரிடமும் சென்று பதில் சொல்ல முடியாத கேள்விகளைக் கேட்டு அவர்களுடைய அறியாமையை விளக்கி வந்தார். எல்லோரும் அவரது எதிரிகளாயினர். கடைசியாகப் பொய்க் குற்றம் சாட்டப்பட்டு நீதிபதிகள் முன் நின்றார் சாக்ரடீஸ். மதத்துக்கு விரோதமாகப் பிரசாரம் செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு நீதிபதிகள் முன் நிற்கிறார் சாக்ரடீஸ்.
மேதாவி சாக்ரடீஸýக்கு விஷயம் தெளிவாகத் தெரிந்துவிட்டது. தனது கடைசிப் பிரசங்கத்தில் "கிரேக்க தேசத்திலேயே பெரிய அறிவாளி நான் என்று டெல்பியிலிருக்கும் அசரீரி கூறியது. ஆனால், அப்படியொன்றும் அறிந்தவன் என்று என்னைச் சொல்லிக் கொள்ள முடியாது. நமது நாட்டிலிருக்கும் பல உத்தியோகஸ்தர்களும், அரசியல்வாதிகளும் தங்களைப் பெரிய அறிவாளியாக மதித்து வந்தார்கள். நான் அவர்களை அணுகி வாதித்துப் பார்த்ததில் அவர்களுடைய அறியாமை ஸ்தாபிக்கப்பட்டது.
இந்த நாட்டிலே நான் ஒருவன்தான் எனது அறியாமையை உணர்ந்தவன் என்று தெரிந்து கொண்டேன். ஆகவே, டெல்பியிலிருக்கும் அசரீரி உண்மையென்றே இப்பொழுது தோன்றுகிறது' என்றார். தன்னுடைய அறியாமையை மனிதன் எப்பொழுது உணர்கிறானோ அப்பொழுது அவனுக்கு நிலையான நல்லறிவு பிறக்கிறது. நல்லறிவு பிறக்கும்போது தீய எண்ணங்கள், செயல்கள் இறந்து விடுகின்றன. நற்பண்புகளை வளர்த்துக் கொண்டு வாழும் வழிதனை வகுத்துக்கொண்டு வசந்தத்தை நம் வாழ்வில் மலரச் செய்யலாம்.
"அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு' என்று திருவள்ளுவர் அன்பின் தன்மைக்கு உருவேற்றியுள்ளார். ""அன்பே உருவான ஒரு சக்தி உலகையெல்லாம் இயக்கி வருகிறது.
அந்த சக்திதான் இந்த எலும்புக் கூட்டோடு ஆன்மாவைக் கொண்டு வந்து இணைந்திருக்கிறது. ஆகவே, அன்பை அடித்தளமாகக் கொண்ட இந்த உறவு வெறுக்கத்தக்கதல்ல. விரும்பத்தக்கது. எனவே அன்பு வழியில் வாழக் கற்றுக் கொண்டால் வாழ்க்கைக் கடலை ஆனந்தமாகக் கடக்கலாம்.
கடவுளிடத்தில் காதல் கொண்டு விட்டால் மற்றவற்றையெல்லாம் துச்சமாக விலக்கி விடலாம். தாய் மனம் கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை நம் சொத்தாகிவிடும். நாம் முத்தாகி விடுவோம்.
"நீ என்னவாகப் போற, பேராண்டி?' என்று ஒபாமாவிடம் அவரது பாட்டி கேட்டார். "வழக்குரைஞராகப் போகிறேன். டாக்டராகப் போகிறேன். பொறியாளராகப் போகிறேன்' என்று ஒபாமா சொல்லவில்லை. "இந்த உலகை விட்டுச் செல்லும்போது இந்த உலகம் முன்பிருந்ததைவிட இன்னும் நல்ல இடமாக்கிவிட்டுச் செல்லப் போகிறேன் பாட்டி' என்று கூறினாராம்.
வாழும் வழிதனை நன்கு வகுத்துக் கொண்டு வாழ்ந்தால் நமக்கும் நல்லது. சமுதாயத்துக்கும் நல்லதாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.