போக்குவரவுத் துறை, ரயில்வே துறை, அஞ்சல் துறை, மின்சாரத் துறை, விமான சேவைத் துறை, அரசின் கூட்டுறவு ஆலைகள் என அனைத்துத் துறைகளிலும் வேலை செய்பவர்கள் அன்னியர்கள் அல்லர். இந்தத் தேசத்தில் "வாழும் குடியுரிமை' பெற்றவர்கள். இந்த மண்ணில் தவழ்ந்தும், விளையாடியும், மண்ணில் விளைந்த உணவுகளை உண்டும் வாழ்ந்து வருபவர்கள். இவர்களின் சொத்தான நிறுவனங்களை நட்டத்தில் இயங்க வைத்தவர்களும் இவர்கள்தாம்.
"தேவையற்ற வேலை நிறுத்தங்கள், காரணங்களே இல்லாத அல்லது அற்பக் காரணங்களுக்காக உள்ளிருப்பு, வெளிநடப்புப் போராட்டங்கள், அரசியல் காரணங்களை முன்வைத்துத் தொழிற்சாலைகளில் வேலை முடக்கம், நிர்வாகத்தின் மேல் கொண்டுள்ள வன்மம், எதிர்ப்பால் யந்திரங்களைப் பழுதாக்குதல், இயங்க விடாமற் செய்தல் இன்னபிற காரணங்களால்தான் பொதுத்துறை நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றன' - நிறுவனங்களின் உயரதிகாரிகள் தொழிலாளர்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் இவை.
"அதிகாரிகளின் வறட்டுப் பிடிவாதம், தொழிலாளர் விரோதப் போக்கு, கட்சி சார்ந்த அரசியல், நிர்வாகக் கண்காணிப்பில் ஈடுபாடின்மை, அனுபவம் மிக்க தொழிலாளர்களின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளாமை, நிர்வாக வளர்ச்சிக்கான திட்டமில்லாமை, தவறானத் திட்டமிடுதல், முறைகேடான வரவு செலவுகளால் நிறுவன நிதியைக் கையாடல் செய்தல், தொழிலாளர்களிடம் சீரான அணுகுமுறையின்மை' - உயரதிகாரிகள் மீது தொழிலாளர்கள் வீசும் கண்டனக் கணைகள் இவை.
தொழிலாளர்கள், உயரதிகாரிகள், ஆட்சியாளர்கள் ஆகிய மூன்று தரப்பினருமே பொதுத்துறை நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கக் காரணமாகிறார்கள். உடனே பேசித் தீர்க்க வேண்டிய பல பிரச்னைகளைக் காலங்கடத்தி காலங்கடத்தி மூடுவிழாச் செய்பவர்கள். "களைகளை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்' என விவசாயி அறிந்திருக்கிறான். இடையூறுகளை ஆரம்பத்திலேயே களைய வேண்டுமென்று அதிகாரிகளுக்குத் தெரிந்திருக்கவில்லையா?
நாட்டில் அரசியல் கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் எனவும் வேலையில்லாத் திண்டாட்டத்தை அறவே ஒழித்து விடுவோம் எனவும் மக்களிடம் வாக்குறுதியளித்து ஆட்சியைப் பிடித்து விடுகிறார்கள்.
தனியார் போக்குவரவுத் துறை ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய்கள் லாபம் ஈட்டி விரிவடைந்து கொண்டிருக்கவும் அரசின் போக்குவரவு நிறுவனங்களில் நட்டம் பணமுடக்கம் அதிகரிப்பதற்கான காரணங்களும் ரகசிமல்ல. அளவான ஊழியர்கள், தீவிரக் கண்காணிப்பு, ஏய்ப்பில்லாத கடின உழைப்பு, தரமான யந்திரங்கள், உடனுக்குடன் யந்திரக் கோளாறுகள் நீக்கம் இப்படி காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். மத்திய அரசின் பொதுத்துறைகளில் ஒன்றான அஞ்சலக சேவை நாளுக்கு நாள் நலிவடைகிறது. தனியார் அஞ்சலக சேவைத் துறைகள் புதிது புதிதாக முளைத்துப் பல்கிப் பெருகுகின்றன.
இதற்கான தீர்வுக்குத் தற்போது எடுக்கப்படும் அரசின் முடிவு சரியல்ல. தொழில்துறை நிறுவனங்களின் பங்குகளில் 49 சதவிகிதப் பங்குகளை அன்னிய முதலீட்டாளர்களுக்கு ஒப்படைத்தல் என்ற அரசின் முடிவு, ஒரு நோயைக் குணப்படுத்துவதற்கான மருந்தை உட்கொண்டு வேறொரு நோயை வலிய வரவழைத்துக்கொள்வது போலாகும்.
அரசின் நிறுவனங்களில் அத்தனை உயரதிகாரிகளும் ஊழல்வாதிகளாகவும், நேர்மையற்றவர்களாகவும் இருக்கமாட்டார்கள். எல்லாக் கீழ்நிலைத் தொழிலாளர்களும் வேலை செய்யாமல் ஏய்ப்பவர்களாகவும், கடமை தவறுபவர்களாகவும் இருக்கச் சாத்தியமில்லை. பொறுப்புணர்வு, கண்டிப்பு மிக்க உயரதிகாரிகளைப் பொறுக்கியெடுத்து அவர்களிடம் நிர்வாகப் பொறுப்பை முழுமையாக ஒப்படைக்கலாம். விசுவாசமாக உழைக்க வேண்டுமென நினைக்கும் ஊழியர்களை மேற்பார்வையாளர்களாக நியமிக்கலாம். பாரபட்சமற்ற போக்கு, தவறு செய்பவர் மீது கடுமை காட்டும் கண்டிப்பு, கடமையாளர்களை மன நிறைவுடன் பாராட்டும் தாராள மனது இவை அரசிடம் இருந்தால் வீழ்ச்சியிலிருந்து மீள்வது சாத்தியமாகும்.
ஒரு பொதுத் துறை நிறுவனம் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து பல்வேறு உதிரிபாகங்களைத் தயாரிக்கிறது. உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிலாளர்களை, சில நிபந்தனைகளுடன் உரிமையாளர்கள் என்ற நிலைக்கு மாற்றலாம். உரிமையாளர்கள் அந்தஸ்தைப் பெறும் தொழிலாளர்கள் கடமை, பொறுப்புணர்வுடன் செயல்படுவர். நிர்வாகப் பராமரிப்பிலும் கடமை, பொறுப்பு அதிகரிப்பினால் நிறுவனம் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்ல இயலும்.
பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களையே பங்குதாரர்களாக ஆக்குவதன் மூலம் நிதி நெருக்கடியைச் சமாளிக்க முடியும். தொழிலாளர்களே முதலாளிகளாக ஆகும்போது அவசியமற்ற போராட்டம், வேலைநிறுத்தங்கள் குறைவதற்கான சூழல் உருவாகும். "வளர்ச்சியும் தேய்வும் தொழிலாளர்களைச் சார்ந்தது;'' என்றாகும்போது, தொழிலாளர்களின் கவனம் முழுமையும் நிறுவனத்தின்பால் திரும்பும் என்பதில் ஐயமில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.