மெய்யாலுமா

மெய்யாலுமா?

சூரியன் உதித்தெழுவது போல அந்த இடைத்தேர்தல் வேட்பாளர் பற்றிய புகார்கள் குதித்தெழுகின்றன. கதர்ச் சட்டை மத்திய அமைச்சராக இருந்தவர், அவருக்குச் சொந்தமான ஏழு ஏக்கர் நிலத்தைத் தனக்கு உயில் எழுதி வைத்ததாகப்

மீசை முனுசாமி

சூரியன் உதித்தெழுவது போல அந்த இடைத்தேர்தல் வேட்பாளர் பற்றிய புகார்கள் குதித்தெழுகின்றன. கதர்ச் சட்டை மத்திய அமைச்சராக இருந்தவர், அவருக்குச் சொந்தமான ஏழு ஏக்கர் நிலத்தைத் தனக்கு உயில் எழுதி வைத்ததாகப் போலி ஆவணங்களைத் தயார் செய்து நில அபகரிப்பு மோசடிக் குற்றச்சாட்டில் சிக்கியிருப்பவரை வேட்பாளராக அறிவித்திருக்கிறது முன்னாள் ஆளும் கட்சி. இந்த நில அபகரிப்பு மோசடி தொடர்பாக மறைந்த அமைச்சரின் மனைவி காவல் துறையிடம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே கொடுத்திருந்த புகாரின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை கூடத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

 ÷வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், ஏற்கெனவே சட்டப்பேரவையில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்ட நிலையில், இடைத்தேர்தலிலும் தர்ம சங்கடம் ஏற்பட்டு விடுமோ என்று கட்சித் தலைமை பயப்படுகிறதாம். பிரச்னையை சுமுகமாகப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சரின் மனைவிக்கு விடுக்கப்பட்ட தூது தோல்வி அடைந்து விட்ட நிலையில், வேட்பாளரை மாற்றுவதா, போட்டியிலிருந்தே விலகி விடுவதா என்றெல்லாம் குழம்பிப் போய் இருக்கிறதாமே, குடும்பப் பாரம்பரியக் கட்சியின் தலைமை, மெய்யாலுமா?

ஆட்சித் தலைமையின் கவனத்தைக் கவர, சந்தித்து ஆதரவைத் தெரிவிக்கத் "தானே' புயல் நிவாரண நிதி உதவுகிறது என்றால், ரத்தத்தின் ரத்தங்கள் கட்சித் தலைமைக்குத் தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தக் கையாளும் உத்தி, மன்னார் அண்ட் கம்பெனியுடன் தொடர்புடையவர்கள் மீது புகார் கொடுப்பது. இதில் வேடிக்கை என்னவென்றால், வெளியேற்றப்பட்டவர்களுக்கு மிகவும் வேண்டியவர்களும், நெருக்கமானவர்களும் தங்களுக்கும் அவர்களுக்கும் ஒட்டோ உறவோ இல்லை என்று தலைமையை நம்ப வைப்பதற்கு இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

 ஜலகண்டேஸ்வரன்மீது ஆணையாக சீதையை அசோகவனத்தில் சிறை வைத்த அரக்கனின் பெயர் கொண்ட தனது முன்னாள் "காட் பாதர்' தன்னிடம் இரண்டு கோடி ரூபாய் ஏமாற்றி விட்டதாக ஒருவர் இப்போது திடீரென்று புகார் கொடுக்கிறார் என்றால், அது இப்படியாவது தனது பெயர் அம்மாவின் கவனத்துக்குப் போய், தன்னை ஒரு விசுவாசி என்று காட்டிக் கொள்ளலாம் என்கிற நப்பாசைதானாம். மெய்யாலுமா?

 ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, மகளுக்காக மனசாட்சியே இல்லாமல் அவர்மீது பழி போட்டவர்கள், இப்போது திடீரென்று முன்னாள் அமைச்சர்களை அனுப்பி அவரை சந்திக்கச் சொன்னதில் ஒரு பின்னணி ரகசியம் இருக்கிறதாம். தனியாகக் காராகிரகத்தில் கிடக்கிறாரே, என்ன ஆனாரோ, என்ன செய்கிறாரோ என்று கவலைப்படாதவர்கள் இப்போது பொதுக்குழுத் தீர்மானம் பற்றிப் பேச இந்தியாவின் வி.ஐ.பி. சிறைச்சாலைக்குப் போனதற்குக் காரணமே, வரவிருக்கும் இடைத்தேர்தல்தானாம்.

 தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிக்கான இடைத்தேர்தலில், ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தவர் மீது பழியைப் போட்டு சிறையில் அடைத்து விட்டு வாக்குக் கேட்க உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது என்று ஆளும்கட்சி கேட்காவிட்டாலும், பம்பரமாகச் சுற்றிக் கொண்டிருப்பவர் நிச்சயமாகக் கேட்பார். "எங்க ராஜாவாச்சே அவர், அவரை நாங்கள் கைவிட்டு விடுவோமா!' என்று காட்டிக் கொள்ளத்தானாமே சிறைச்சாலை நாடகம், மெய்யாலுமா?

 எல்லா மாவட்டங்களிலும் அரசு கேபிள் டி.வி. மூலம் உள்ளூர் அளவில் சேனல் நடத்த டெண்டர் விட்டுப் பல மாதங்கள் கடந்து விட்ட நிலையில், இன்னும் ஒளிபரப்பு தொடங்க அனுமதி வழங்கப்படாதது ஏனாம்? அனுமதி இல்லாமல் பல இடங்களில் பலர் ஒளிபரப்பு நடத்துவது தொடர்வது ஏனாம்? அது மட்டுமல்ல, அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்காமல், எந்தவித ரசீதும் தரப்படாமல் நூறும் நூற்றி இருபதும் என்று ஊருக்கு ஒரு கட்டணம், தெருவுக்கு இன்னொரு கட்டணம் என்று தொடர்ந்து வசூலிக்கப்படுவது ஏனாம்? டெண்டர் எடுத்தவர்களிடம் பணம் வசூலித்தால் அரசுக்குப் பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்குமே என்பது பற்றிக் கவலையே படாமல் இருப்பது ஏனாம்?

 இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்டுக் குழப்பிக் கொண்டிருக்கிறார்களாமே அரசு கேபிள் நிறுவனத்தின் ஊழியர்கள், மெய்யாலுமா?

 இடைத்தேர்தல் அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே அறிவிக்கப்பட்ட அந்த வேட்பாளர் தனக்கென சிலரை மட்டுமே சுற்றி வைத்துக் கொண்டு பிரசாரத்தில் இறங்கி இருக்கிறாராம். மாவட்ட நிர்வாகிகளையோ, உள்ளூர் கட்சிக்காரர்களையோ யாரையும் சேர்த்துக் கொள்ளாமல் தனிச்சால் ஓட்டுகிறாராம். அவர் எந்தப் பகுதியில் வாக்கு சேகரிக்கிறார் என்பதுகூட நிர்வாகிகளிடம் கேட்டால் தெரியவில்லை என்பதுதான் நிலைமை. கட்சிக்காரர்கள் உள்ளூர் அமைச்சர்களிடம் போய் முறையிட்டபோது, அவரோ "அட போப்பா, என்கிட்டயே அவங்க எதையும் சொல்வதில்லை. நான் போய் உனக்காக என்னத்தைச் சொல்ல?' என்று சலித்துக் கொள்கிறாராம்.

 இப்போதே இப்படி என்றால் இவர் வெற்றி பெற்று எம்.எல்.ஏவும் ஆகிவிட்டால், எங்களை அந்த கோமதி அம்மன்தான் காப்பாற்ற வேண்டும் என்று கட்சிக்காரர்கள் புலம்புகிறார்களாமே, மெய்யாலுமா?

 தன்னிடமிருந்த வெளிநாட்டுக் கார்களை ஏலம் விட்டுக் கிடைத்த பணத்தை நன்கொடையாகக் கொடுப்பதாகச் சொல்லி, இனிமேல் பொதுப் போக்குவரத்தைத்தான் பயன்படுத்துவேன் என்று எந்த நேரத்தில் சொன்னாரோ தெரியவில்லை, காவல் துறை வாகனத்தில் பயணிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார். அதுகூடப் பரவாயில்லை, "நடடா ராஜா' என்று அவரைக் கைது செய்து அழைத்துக் கொண்டு போனபோது, என்ன ஏது என்று விசாரிக்க அவரைச் சுற்றி எப்போதுமே இருக்கும் நண்பர் கூட்டத்திலிருந்தும், உறவினர் கூட்டத்திலிருந்தும் யாராவது போய் விசாரித்தார்களா, பார்த்தார்களா என்றால் இல்லையாம். "நமக்கு என்ன அப்படிப் பெரிதாகச் செய்து விட்டார்?' என்று அவரால் பயனடைந்தவர்கள்கூடப் புதிய பார்வையில் பார்க்கத் தொடங்கி இருக்கிறார்களாமே, மெய்யாலுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல்லில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற சேலம் வீரா்கள்

வாக்காளா் பட்டியல்: இளம் வாக்காளா்களை சோ்க்க படிவங்கள் விநியோகம்

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT