அதிர்ஷ்டம் எப்போது யாருக்கு எப்படி அடிக்கும் என்று யாரால் சொல்ல முடியும்? பரபரப்பான அந்த இரவு நேரக் கைதின்போது சென்னை மாநகர ஆணையராக இருந்த காவல்துறை அதிகாரியை அதிர்ஷ்டம் தூக்கத்தில் தட்டி எழுப்ப இருப்பதாகப் பேசிக் கொள்கிறார்கள். சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் தலைமைப் பொறுப்பில் அமர அவர்தான் சரியானவர் என்று முதல்வருக்குப் பரிந்துரைக்கபட்டிருக்கிறதாம். இதைக் கேள்விப்பட்டது முதல் அந்தப் பதவியின் மீது கண்ணாக இருந்த பெண் அதிகாரி கோபத்தில் கணிதமேதையின் பெயர் கொண்டவரை தனக்குத் தெரிந்த வார்த்தைகளை எல்லாம் உபயோகித்து அர்ச்சனையோ அர்ச்சனை செய்து வருகிறாராம். தன்மீது சுமத்தப்பட்ட அபாண்ட பழிகளையும், சொத்துக் குவிப்பு வழக்கையும் கருப்பு அத்தியாயமாக முத்தான அதிகாரி எப்போதோ மறந்து விட்டதாகவும், மீண்டும் முதல்வரின் நம்பிக்கையைப் பெற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறதே, மெய்யாலுமா?
=================================
லட்சியம் பேசிக் கட்சி தொடங்கிய அந்த நடிகர், அடுக்கு மொழி வசனம் பேசி அறிவாலயத்தை அரவணைத்துக் கொண்டது அடுத்த வாரிசுக்குத் தெரியாமலே நடந்தேறியதாமே? அதுமட்டுமல்ல, தேர்தலில் நிற்க வாய்ப்புக் கேட்கக்கூடாது என்கிற நிபந்தனையுடன்தான் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறாராமே, மெய்யாலுமா?
=================================
நான்கெழுத்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் தனக்கு மாநில துணைத் தலைவர் பதவி தரப்படும் என்று எதிர்பார்த்து ஏமாந்ததில் உச்சக்கட்ட கோபத்தில் இருக்கிறாராம். தான்தான் மாற்று கோஷ்டி என்றும், மூப்பனாரின் வாரிசுக்குப் போட்டிக்குப் போட்டி என்றும் வீர வசனம் பேசி வந்தவரின் பெயர் துணைச் செயலாளர் பட்டியலில்கூட இடம் பெறாததில் அவருக்குப் பெருத்த அவமானம். அவருக்கு வேண்டாதவர்கள் அனைவரும் பதவிகள் பெற்றிருக்கும் நிலையில் இவர் பெயர் இடம் பெறாமல் போனதற்குக் கட்சித் தலைமை அவரது பெயரை நிராகரித்ததுதான் காரணமாம்.
"எனக்குக் கிடைக்காவிட்டால் யாருக்கும் வேண்டாம்' என்று பதவி தரப்பட்டிருக்கும் தனது ஏழெட்டு ஆதரவாளர்களையும் கட்சி அலுவலகப் பக்கமே போகக்கூடாது என்று "தடா' போட்டிருக்கிறாராமே? நிர்வாகிகள் கூட்டத்தை இவர்கள் புறக்கணித்ததை, "நிதி இருந்தென்ன பயன், மதி இல்லையே' என்று கேலி செய்கிறதாமே சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள், மெய்யாலுமா?
=================================
ராமநாராயண வெங்கட்ரமண சர்மா என்பதுதான் நடிகர் ரஞ்சனின் இயற்பெயர். இவர் நடிகர் மட்டுமல்ல, பாடகர், பத்திரிகையாளர், எழுத்தாளரும்கூட. அற்புதமான ஓவியர். மேஜிக்கெல்லாம்கூட அவருக்குத் தெரியும். தனது 15ஆவது வயதிலேயே அற்புதமாக வயலின் வாசிப்பார்.
சொந்த ஊர் ஸ்ரீரங்கம் என்றாலும் படித்து வளர்ந்தது சென்னையில்தான். இவர் நடித்த நாடகம் ஒன்றைப் பார்த்த "ஜெமினி' ஸ்டூடியோவைச் சேர்ந்த எழுத்தாளர் வேப்பத்தூர் கிட்டுவின் சிபாரிசின் பேரில் அசோக்குமார் திரைப்படத்தில் கெüதம புத்தர் வேடம். அந்தத் திரைப்படத்தின் வெற்றி இரண்டு ஆக்ஷன் ஹீரோக்களை தமிழ்த் திரையுலகுக்குத் தந்தது. முதலாமவர் ரஞ்சன். மற்றவர் எம்.ஜி. ராமச்சந்திரன்.
ரிஷ்யசிருங்கர், நாரதர் திரைப்படங்களைத் தொடர்ந்து, ஜெமினியின் "மங்கம்மா சபதம்' திரைப்படத்தில் ரஞ்சனுக்கு இரட்டை வேடம் - கதாநாயகனாகவும், வில்லனாகவும்! தொடர்ந்து மாபெரும் வெற்றிப்படமான சந்திரலேகாவும், இந்திப் படமான நிஷானும். இன்குலாப், சபேரா, மங்களா, கிலாடி, ஷான்-எ-ஹிந்த், தாஜ் ஜோஷி, கிஸ்மத், பாசி சிப்பாய் என்று தொடர்ந்து பல இந்திப் படங்கள். இந்திப் படவுலகில் வெற்றிக் கொடி நாட்டிய முதல் தென்னிந்திய நடிகர் ரஞ்சன்தான்.
அவர் கடைசியாக நடித்த தமிழ்த் திரைப்படம் "நீலமலைத் திருடன்'. அதில், "சத்தியமே லட்சியமாய் கொள்ளடா, வெல்லடா' பாடல் இப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு நாட்டியக் கலைஞராக திசை திரும்பி விட்டார் ரஞ்சன். "நாட்டியம்' என்கிற பெயரில் பத்திரிகையை நடத்தினார். அந்த நாளிலேயே விமானம் ஓட்டியவர். பல நாடுகளில் நடன நிகழ்ச்சிகள் நடத்தியவர். சென்னையில் தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒரு பள்ளிக்கூடம் நிறுவினார். அதை ராஜாஜி தொடங்கி வைத்தார். ரஞ்சன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இருந்திருந்தால் அவர் எம்.ஜி.ஆரின் இடத்தைப் பிடித்திருக்கக்கூடும் என்று கருதுபவர்களும் உண்டு.
நடிகர் ரஞ்சனின் பெயரை நினைவுபடுத்தும் அந்த உயர் அதிகாரி திடீரென்று இடம் மாற்றப்பட்டதன் "உள்' ரகசியம் என்ன தெரியுமா? சென்னை மணப்பாக்கத்தில் சமீபத்தில் பங்களா ஒன்று கட்டிப் புதுமனை புகுவிழா நடத்தினார். அந்த வீட்டுக்கான முழுச் செலவையும் ஏற்றுக்கொண்டது, பல குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகி இருக்கும் காவல் துறை அதிகாரியாம். அவருக்கு உதவுவதாக இவர் வாக்களித்திருந்தார் என்றும், அது முதல்வருக்குத் தெரிந்ததால்தான் மாற்றப்பட்டார் என்றும் கூறப்படுகிறதே, மெய்யாலுமா?
=================================
பெண் வாரிசின் பிறந்தநாள் கடந்த ஆண்டு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதிலிருந்தும் அவரது ஆதரவாளர்கள் அவரை வாழ்த்த வந்து குவிந்தனர். இந்த ஆண்டும் அதுபோல நடக்கக்கூடும் என்பதால் முன்கூட்டியே தடுப்பதற்காகத்தான் அவரது பிறந்தநாள் அன்று கோவையில் இளைஞரணி மாநாடு கூட்டப்படுகிறதாம். யார் வந்தாலென்ன, போனாலென்ன, தலைவர் என் பக்கம் என்று கவலைப்படாமல் இருக்கிறாராம் பெண் வாரிசு. ஜனவரி ஜந்தாம் தேதி என்ன நடக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறதாமே, உடன் பிறப்புகளின் கூட்டம், மெய்யாலுமா?
=================================
தென் மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் தங்களது ஜாதீய அடையாளத்தைக் காட்டிக் கொள்வதில் ஆர்வம் ஏற்பட்டிருப்பதாக உளவுத் துறை அறிக்கையொன்று தெரிவிக்கிறது. ஒவ்வொரு ஜாதியினரும், வெவ்வேறு வண்ணத்தில் கையில் கயிறு கட்டிக் கொள்கிறார்களாம். முக்குலத்தோர் என்றால் மஞ்சள் கயிறும், பட்டியல் வகுப்பினர் பச்சைக் கயிறும் கட்டுகிறார்களாம். இதைப் பார்த்து, நாடார், யாதவர் சமுதாயத்தினரும் கயிறு கட்டத் தொடங்கி இருக்கிறார்களாம்.
நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கையில் கயிறு கட்டி வரும் மாணவர்களை கண்காணித்து அதை அகற்றுமாறு கல்வித் துறைக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறதாமே, மெய்யாலுமா?
=================================
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.