மெய்யாலுமா

மெய்யாலுமா..?

பெண் வாரிசின் பிறந்தநாளில் ஆழ்வார்ப்பேட்டை பகுதியே களை கட்டியதாம். தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கில் ஃப்ளெக்ஸ் பேனர்களாம். வந்திருந்த கூட்டத்தைப் பார்த்து அந்தக் குடும்பமே திகைத்து விட்டதாம்.

மீசை முனுசாமி

பெண் வாரிசின் பிறந்தநாளில் ஆழ்வார்ப்பேட்டை பகுதியே களை கட்டியதாம். தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கில் ஃப்ளெக்ஸ் பேனர்களாம். வந்திருந்த கூட்டத்தைப் பார்த்து அந்தக் குடும்பமே திகைத்து விட்டதாம். இந்த அளவுக்குக் கூட்டத்திற்குக் காரணம், அவர்களில் பலர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட பெண் வாரிசு தங்களுக்கு சிபாரிசு செய்வார் என்கிற நைப்பாசைதானாமே, மெய்யாலுமா?

===

அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியைக் கூட்டணிக்குள் கொண்டு வந்து, மதுரை மக்களவைத் தொகுதியையும் விட்டுக் கொடுத்துவிடுவது என்று முடிவெடுத்திருந்தாராம் அடுத்த வாரிசு. தனது பேட்டையில், தன்னை எடுத்தெறிந்து ஏளனம் செய்தவர் போட்டி போடுவதா என்று கோபத்தின் எல்லைக்கே போய்விட்டாராம் மூத்த வாரிசு. தன்னைக் கலந்தாலோசிக்காமல் தொகுதிகளை ஒதுக்கி விடுவார்களோ என்கிற பயத்தில்தான், இப்போதே பிரச்னையை எழுப்பியிருக்கிறாராம் அவர். அது மட்டுமல்ல, தனது எதிர்ப்பையும் மீறி, அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியும், நிரந்தர எதிர்க்கட்சியும் கைகோக்குமானால், தென் மாவட்டங்களில் ஓர் இடத்தில்கூட இந்த அணியை வெற்றி பெற விட மாட்டேன் என்று சூளுரைத்திருக்கிறாராமே மூத்த வாரிசு, மெய்யாலுமா?

===

பல்லவர்கள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கும், கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தை, குறிப்பாக, தொண்டை மண்டலம் என்று வழங்கப்பட்ட வட தமிழகத்தை ஆண்டவர்கள். சேர, சோழ, பாண்டியர் என்கிற மூவேந்தர்களின் பட்டியலில் பல்லவர்கள் சேர்க்கப்படாததற்குக் காரணம் இவர்கள் தெலுங்கர்கள் என்பதுதான் என்கிறார் சரித்திர ஆய்வாளர் கே.ஆர். சுப்பிரமணியன். கே.ஏ. நீலகண்ட சாஸ்த்ரி, பல்லவர்கள் வடநாட்டிலிருந்து வந்த ராஜ பரம்பரையினர் என்று குறிப்பிடுகிறார்.

அகநானூறு, பெரும்பாணாற்றுப்படை, மணிமேகலை போன்ற பண்டைத் தமிழ் இலக்கியங்களில் பல்லவர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. சோழர்களிடமிருந்து பாண்டவர்கள் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றியதாகக் குறிப்புகள் காணப்படுகின்றன.

அரசர்களும் அமைச்சர்களும் பட்டங்கள் சூட்டிக் கொள்வதும், விருதுகள் வழங்குவதும் பல்லவர்கள் காலத்திலிருந்துதான் தொடங்கின. ஆரம்ப நாள் பல்லவர் காலக் கல்வெட்டுக்களும் குறிப்புகளும் பிராகிருதம் அல்லது சம்ஸ்கிருத மொழியிலும், ஆறாம் நூற்றாண்டு முதல் பிராமி எழுத்து முறையிலும் காணப்படுகின்றன.

பல்லவர்களின் தலைநகரத்தில், "பாண்டிய ராஜ குமாரி' என்று அறியப்படும் மதுரையம்பதியின் அம்பாள் பெயர் கொண்ட கல்லூரியில் படித்த மழை மேகத்தின் பெயர் கொண்ட முதலாமாண்டு மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதும், அந்தத் தற்கொலைக்குக் காரணம் நிர்வாகம்தான் என்று கூறி மாணவர்களின் போராட்டம் வெடித்ததும் ஒருபுறம். சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய, பரகேசரி, யுத்தமல்லன், கங்கைகொண்ட சோழன் என்றெல்லாம் அறியப்பட்ட ராஜராஜ சோழனின் மகனின் பெயரைக் கொண்ட அதிகாரி, இந்தப் பிரச்னையில் கூடுதல் அக்கறை செலுத்துகிறாராம். நிர்வாகத்திற்கு எந்த பிரச்னையும் ஏற்பட்டுவிடாமல் வழக்கை விரைந்து முடிப்பதில் அவர் அதீத ஆர்வம் காட்டுவது ஏன் என்று காவல் துறை வட்டாரங்களில் கேள்வி எழுப்பப்படுகிறதாமே, மெய்யாலுமா?

===

சாதாரணமாக பொதுமக்களுக்குத்தான் பொங்கல் இலவசங்கள் வழங்கப்படும். இந்த முறை ஆளும் கட்சியின் சார்பில் அடிமட்டத் தொண்டர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க கிளைச் செயலாளர்கள், பகுதிச் செயலாளர்கள், இளைஞரணி, பாசறைகள் போன்ற அமைப்புகளின் அடிமட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் பொங்கல் பரிசுகள் வழங்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கும் அமைச்சர்களுக்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறதாம். அதனால் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் ஒரே உற்சாகமாமே? ஆனால் கொடுப்பவர்கள் மகிழ்ச்சியாகத் தரவேண்டாமோ? பலரும் மேலிட உத்தரவே என்று சலித்துக் கொண்டு முனகிக் கொண்டேதான் கைக் காசை எடுக்கிறார்களாமே, மெய்யாலுமா?

===

கடந்த ஆட்சியில் முதல்வரின் நிழலாகவே இருந்த ஐந்தெழுத்து காவல் துறை அதிகாரி அவர். அவரது பெயரைக் கேட்டால் அடகுக்கடை நடத்தும் மார்வாடிகள் நினைவுக்கு வருவார்கள். தமிழக முதல்வருக்கு எதிராக பெங்களூரில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கில் எப்படியாவது அவருக்கு தண்டனை பெற்றுக் கொடுத்துவிட வேண்டும் என்கிற பணி இவரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறதாம். அதற்கு இவருக்குத் துணையாக இருப்பவர், சென்னையிலிருந்து தில்லி செல்லும் துரந்தோ, ராஜதானி ரயில்கள் சென்றடையும் ரயில் நிலையத்தின் பெயர் கொண்ட, கடந்த ஆட்சியில் பதவி பெற்றுத் தர பல்கலைக்கழகத் துணைவேந்தர்களிடம் பேரம் நடத்தியவராம். இவர்கள் இருவரும் சந்தித்து திட்டம் போட்ட இடம் எதுவாம்? பிரதமர் சந்திரசேகர் திமுகவின் ஆட்சியைக் கலைத்தபோது உள்துறை அமைச்சராக இருந்தவரின் இல்லமாம். அவர் கர்நாடக அரசிடம் பேசி இவர்களுக்கு சகாயிப்பதாக வாக்களித்திருக்கிறாராமே, மெய்யாலுமா?

===

தேசிய அளவில் முற்போக்குக் கூட்டணியில் கட்சிகளைச் சேர்க்க காங்கிரஸ் தலைமை தலைகீழாக முயற்சி செய்தும் பயனில்லையாம். இப்போது மாநிலக் கட்சியாகச் சுருங்கிவிட்ட முன்னாள் பிரதமரின் கட்சியைத் தேர்தலுக்கு முன்பே கூட்டணியில் சேர்க்க முயற்சி நடந்ததாம். ரகசியப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட மகனிடம் முன்னாள் பிரதமர் சொன்ன தேவ ரகசியம் இது. "காங்கிரஸ் ஒரு பத்மாசுரா. அது உன்னைத் தொட்டாலும், நீ அதைத் தொட்டாலும் பஸ்பம் (சாம்பல்) ஆகிவிடுவாய், ஜாக்கிரதை!'' என்று எச்சரித்தாராமே அந்த பத்து மாத பிரதமர், மெய்யாலுமா?

===

ஒருபுறம் தனக்கு முக்கியத்துவம் வேண்டும் என்று முரண்டு பிடிக்கும் மூத்த வாரிசு. இன்னொருபுறம் சமரசம் செய்ய முடியாத அளவுக்கு குடும்பத்தில் சகோதர யுத்தம். கட்சிக்குள்ளேயானால் ஊருக்கு ஊர் வட்டத்துக்கு வட்டம் மாவட்டத்துக்கு மாவட்டம் கோஷ்டிப்பூசல். வலுவான கூட்டணி அமைகிறதா என்றால் என்னதான் முயற்சி செய்து காந்தமாய் இழுத்தாலும் கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக நடிகர் கட்சி. இதனாலெல்லாம் ஆடிப் போயிருப்பார் தலைவர் என்று யாராவது கருதினால் அப்படியெல்லாம் இல்லையாம். தனது பெயரில் இயங்கும் தொலைக்காட்சிக்கு பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக மானையும், மயிலையும் ஆட விட்டுத் தொகுக்கப்படும் நிகழ்ச்சியைப் பொறுமையாகப் பார்த்து ரசித்தாராம். அந்த நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்தவர் கோயில் கட்டி கும்பிடப்பட்ட நடிகையாம். அவரது வற்புறுத்தலால்தான் பிரச்னைகளுக்கு வடிகாலாக இருக்கட்டுமே என்று நிகழ்ச்சியைப் பார்க்க ஒத்துக் கொண்டாராமே, மெய்யாலுமா!

===

தற்போது உறுப்பினர்களாக இருக்கும் பலருக்கும் மீண்டும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஆளும் கட்சியில் வாய்ப்பளிக்கப்படாது என்று கூறப்படுகிறது. இப்போது அம்மாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான நால்வர் அணி சாமிதான் சமீபகாலமாக தேசிய அளவிலான கூட்டங்களில் தமிழகம் சார்பில் கலந்து கொள்ள அனுப்பப்படுகிறாராம். அதனால், அவர் மக்களவைக்கு போட்டியிடக் கூடும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். மத்திய ஆட்சியில் பங்கு பெறும் நிலைமை ஏற்பட்டால் உள்துறைக்கு அவர் பெயர் பரிந்துரைக்கப்படலாம் என்கிறார்களே, மெய்யாலுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

ஜம்மு - காஷ்மீர் ஆல்ரவுண்டரை ரூ. 8 கோடிக்கு ஏலத்தில் எடுத்த தில்லி கேபிடல்ஸ்!

19 வயது விக்கெட் கீப்பரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

SCROLL FOR NEXT