மெய்யாலுமா

மெய்யாலுமா..?

சினிமா படப்பிடிப்புகள்தான் வெளிநாடுகளில் நடக்க வேண்டும் என்பதில்லை. நடிகர்கள் அரசியலுக்கு வந்து விட்டிருப்பதால் அரசியல் பேரங்கள் கூட வெளிநாடுகளில் நடக்கத் தொடங்கிவிட்டன.

மீசை முனுசாமி

சினிமா படப்பிடிப்புகள்தான் வெளிநாடுகளில் நடக்க வேண்டும் என்பதில்லை. நடிகர்கள் அரசியலுக்கு வந்து விட்டிருப்பதால் அரசியல் பேரங்கள் கூட வெளிநாடுகளில் நடக்கத் தொடங்கிவிட்டன. ஓய்வெடுக்கச் செல்வதாகக் கூறிக் கொண்டு மலேசியா போனார் அந்த அரசியல்வாதி நடிகர். அவரை அங்கே போய், "ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி, என் கேள்விக்கு பதிலும் என்னாச்சு? காத்துக் காத்து நாளாச்சு....'' என்றபடி சந்தித்தாராம் அறிவாலயக் குடும்பத்தைச் சேர்ந்த அந்த முன்னாள் மத்திய அமைச்சர். தொலைத் தொடர்புடன் சம்பந்தப்பட்டவருக்கும், திரையுலகுடன் தொடர்புடையவருக்கும் இடையில் மூன்று நான்கு ரவுண்டு பேச்சுவார்த்தைகள் நடந்ததாம். தயை காட்டச் சொல்லி முரசொலியுடன் தொடர்புடையவர் கேட்க, நிதி எவ்வளவு தருவீர்கள் என்று முரசுடன் தொடர்புடையவர் பேரம் பேச, முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிந்திருக்கிறதாமே, மெய்யாலுமா?

===

காஞ்சி நகரத்தில் உள்ள மதுரையம்பதி அம்பாளின் பெயரிலான கல்விக் குழுமம் அது. மருத்துவர் ஒருவர் தாக்கப்பட்ட வழக்கில் மகாபாரதக் கண்ணன் குழந்தை பருவத்தில் வளர்ந்த இடத்தின் பெயர்கொண்ட அந்தக் குழுமத்தின் வாரிசு தேடப்படுகிறார். சென்னை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாகி இருக்கிறார் அந்த வாரிசு. இப்போது, அதே அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறதாம். நிராகரிக்கப்பட்ட ஒரு வாரத்தில் மீண்டும் அதே நீதிமன்றத்தில் ஏன் தாக்கல் செய்யப்படுகிறது என்று கேட்க வேண்டிய அரசு வழக்கறிஞரே கேட்கவில்லை, நமக்கேன் வம்பு என்று காவல் துறையினர் பேசிக் கொள்கிறார்களாமே, மெய்யாலுமா?

===

முதல்வர் சென்னை திரும்பியதும் அவரிடம் கொடுக்க நால்வர் அணி ஒரு பட்டியல் தயாரித்து வைத்திருக்கிறதாம். மக்களவைத் தேர்தலுக்கு நால்வர் அணி எல்லா தொகுதிகளுக்கும் வேட்பாளர்களைப் பரிந்துரைத்திருக்கும் பட்டியலாம் அது. ஆளுக்குப் பத்தாக நாற்பது தொகுதிகளுக்கும் தங்கள் வேட்பாளர்களை முன்மொழிந்திருக்கிறார்களாம் அவர்கள். வேடிக்கை என்ன தெரியுமா? தாங்கள் பரிந்துரைக்கப்பட்டவர்கள் நிராகரிக்கப்படுவார்கள் என்பதால் தங்களுக்கு வேண்டாதவர்கள் பெயரைப் பரிந்துரைத்திருக்கிறார்களாமே, மெய்யாலுமா?

===

அரசியல் ஓய்வை அறிவித்த எதிர்க்கட்சி முன்னாள் துணைத் தலைவருக்கு அண்ணா விருது அளிக்கப்பட்டதே பலருக்கும் அதிர்ச்சி. அதைவிட அதிர்ச்சி, தானே நேரில் வழங்குவதற்காக விருது வழங்கும் விழாவை முதல்வர் ஒத்தி வைத்தது. இப்போது, கதி கலங்கிப் போயிருக்கிறது "இரட்டைப் புறா' கோஷ்டி. அடுத்த தடாலடி நடவடிக்கையாக அந்த மூத்த தலைவரை மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுத்து அ.தி.மு.க. குழுவுக்குத் தலைவராக்கி விடுவாரோ முதல்வர் என்பதுதான் அவர்களது பயம். மத்திய அமைச்சர் கனவில் மிதக்கும் துரைகளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறதாமே, மெய்யாலுமா?

===

திருநெல்வேலி - திருச்செந்தூர் பாதையில் தாமிரபரணி நதிக் கரையில் அமைந்த நவதிருப்பதிகளில் ஒன்று ஸ்ரீவைகுண்டநாதப் பெருமாள் கோயில். இந்த ஒன்பது கோயில்களுமே மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள்.

ஸ்ரீவைகுண்டம் கோயில் கைலாசபுரம் என்றும் அறியப்படுகிறது. ஒன்பது அடுக்கு ராஜகோபுரத்துடன் அமைந்த ஸ்ரீவைகுண்டநாதர் பெருமாள் கோயில், சில காலம் வீரபாண்டிய கட்டபொம்மனின் கோட்டையாகவும் செயல்பட்டது.

÷இந்தச் கோயிலில் உள்ள நடராஜர் சந்நிதியில் அற்புதமான சிற்பங்களுடன் கூடிய எட்டு தூண்கள் மிகவும் பிரசித்தம். உற்சவமூர்த்தியின் பெயர் கள்ளபிரான் (கண்ணபிரான்). ஆண்டுதோறும் சித்திரை மாதம் ஆறாம் நாள் சூரியன் நேராக மூலவரின் மீது விழும்படி ஆலயம் வடிவமைக்கப்பட்டிருப்பது இந்தக் கோயிலின் தனிச் சிறப்பு.

÷முன்னாள் முதல்வரின் தனிச் செயலாளர் பெயர் கொண்ட அமைச்சர் அவர். ஏற்கெனவே அவருக்கு இரண்டு மனைவியர். அது போதாதென்று இப்போது புதியதொரு சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறாராம் அவர். தனது சொந்த ஊருக்கு அவ்வப்போது விஜயம் செய்யும் அமைச்சருக்குப் பணிவிடை செய்ய வருவாராம் ஓர் உறவுக்காரப் பெண். அவரை அமைச்சர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகப் புகார் எழுந்திருக்கிறதாமே? நட்பும் சுற்றமும் கொதித்தெழுந்திருக்கிறதாமே, மெய்யாலுமா?

===

சென்னை மாநகர இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர் வாகனங்கள் அடாவடி வசூலில் இறங்குவதாகப் புகார்கள் கொடநாட்டை எட்டியிருக்கிறதாம். அங்கிருந்து கேள்வி எழ, ஆடிப் போய் விட்டதாம் மாநகரக் காவல் ஆணையம். அவசர அவசரமாக ரோந்து வாகனங்களில் செல்பவர்கள் அழைக்கப்பட்டு, ஆணையரால் எச்சரிக்கப்பட்டிருக்கிறார்களாம். இரவு நேர கள்ள மார்க்கெட் மது விற்பனை செய்பவர்களிடமிருந்துதானே கல்லா கட்டினோம், அதுகூடவா தப்பு என்று அங்கலாய்க்கிறார்களாமே, ராத்திரி ரோந்தினர், மெய்யாலுமா?

===

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக காங்கிரஸ் கட்சிக்கு நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் சிதம்பரம் ஆதரவாளர்கள், சத்தியமூர்த்தி பவனத்துக்குச் செல்வதோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவருடன் தொடர்பு வைத்துக் கொள்வதோ கூடாது என்று தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறாராம், கட்சிப் பொறுப்பு எதுவும் இல்லாத வாரிசு. தந்தையின் ஆதரவாளர்கள் தன்னை மட்டும்தான் வந்து சந்திக்க வேண்டும் என்று உத்தரவாம். பதவி பெற்றுவிட்டவர்களில் பலர் இப்போது கோஷ்டி மாறி சத்தியமூர்த்தி பவனத்தில் அதிகாரபூர்வ கட்சித் தலைமையுடன் ஐக்கியமாகத் தீர்மானித்திருக்கிறார்களாம். கட்சித் தலைமையின் ஆதரவில்லாமல் பதவி இருந்தும் கட்சி வேலை செய்ய முடியாதே என்று கேள்வி எழுப்புகிறார்களாமே அவர்கள், மெய்யாலுமா?

===

நீதிபதிகள் நியமனப் பட்டியலை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்குரைஞர்களைக் கிளப்பி விட்டிருப்பதன் பின்னணியில் மூன்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருக்கிறார்களாமே? மூன்று முன்னாள் நீதிபதிகளும் எப்படியும் தங்கள் வாரிசுகளை இந்தப் பட்டியலில் சேர்த்துவிட வேண்டும் என்று தலைகீழாக நின்றார்களாம். அத்தனை நீதிபதிகளையும் தொடர்பு கொண்டு கெஞ்சியும், மிரட்டியும் பேசிப் பார்த்தார்களாம். தங்களது முயற்சி பலிக்கவில்லை என்பதால் இப்போது பட்டியலையே ரத்து செய்ய "சமூகநீதி என்கிற பெயரில் வழக்குரைஞர்களைக் கிளப்பி விட்டிருக்கிறார்களாம். தேசப்பிதாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் இந்த வாரிசு முயற்சி, அவரது பெயரால் நடத்தப்படுவதுதான் வேதனை என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். அடையாறு காந்திநகர் கிளப்பில்தான் இதற்கான திட்டம் தீட்டப்பட்டதாமே, மெய்யாலுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

ஜம்மு - காஷ்மீர் ஆல்ரவுண்டரை ரூ. 8 கோடிக்கு ஏலத்தில் எடுத்த தில்லி கேபிடல்ஸ்!

19 வயது விக்கெட் கீப்பரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

SCROLL FOR NEXT