மெய்யாலுமா

மெய்யாலுமா..?

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று என்னவாகப் போகிறது என்று யோசிக்கிறாராம் அடுத்த வாரிசு. அதிக இடங்களில் வெற்றி பெற்று மத்திய ஆட்சியில் இடம் பெறுவதால், பெண் வாரிசின் கைதான் ஓங்கும் என்றும், கட்சி தனது கட்டுப்பாட்டில் இருக்காது என்றும் கருதுகிறாராம் அவர்.

மீசை முனுசாமி

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று என்னவாகப் போகிறது என்று யோசிக்கிறாராம் அடுத்த வாரிசு. அதிக இடங்களில் வெற்றி பெற்று மத்திய ஆட்சியில் இடம் பெறுவதால், பெண் வாரிசின் கைதான் ஓங்கும் என்றும், கட்சி தனது கட்டுப்பாட்டில் இருக்காது என்றும் கருதுகிறாராம் அவர். ஆனால், தனக்கு எதிராக வழக்குகள் இருக்கும் நிலையில், மக்களவையில் கணிசமான இடங்களை வென்று அடுத்து அமையும் ஆட்சியில் இடம் பெற்றால்தான் பாதுகாப்பு என்று கருதுகிறாராம் பெண் வாரிசு. மகனா, மகளா பாசப் போராட்டத்தில் மனம் நொந்து போய் இருக்கிறாராமே தலைவர், மெய்யாலுமா?

===

எப்படியும் கட்சித் தலைமை தனக்கு மீண்டும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கும் என்று "மலை' போல நம்பி இருந்தார் அந்த முன்னாள் சுகாதார அமைச்சர். பட்டியலைப் பார்த்ததுதான் தாமதம் கோபத்தில் முகம் சிவந்துவிட்டது. இடையில் புகுந்து மாவட்ட அமைச்சர் "சாமி' ஆடிவிட்டாரென்று புலம்பித் தீர்க்கிறார். "தலைவர் சீட்டுக் கொடுக்காதபோது சுயேச்சையாக நின்று ஜெயித்துக் காட்டியது போல இப்போது செய்து காட்டுவதுதானே?' என்று அவருக்குக் கொம்பு சீவி விடுவது போலத் தனது ஆதரவாளர்களிடம் எக்காளமிடுகிறாராமே, தனது எதிரியை ஓரங்கட்டிவிட்ட களிப்பில் இருக்கும் அந்த அமைச்சர், மெய்யாலுமா?

===

அப்பன் குதிருக்குள் இல்லை கதையாக, பெண் மென்பொருள் பொறியாளர் மர்மச் சாவுக்கு உடனடியாக பெண் வாரிசு கண்டனம் தெரிவித்ததைக் காவல் துறை கூர்ந்து கவனிக்கிறதாம். அண்ணா சாலையில் உள்ள அந்த நிறுவனத்துக்கு சொந்தமான சொத்தை பினாமி பெயரில் வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டையும், கடந்த ஆட்சியில் அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகள் குறித்தும் தமிழக அரசு விசாரணைக்கு உத்தரவிட இருக்கும் நிலையில், பெண் வாரிசு அந்த நிறுவன பெண் ஊழியர் மீது அக்கறையுடன் பேசுவதை இணைத்துப் பார்க்கிறதாமே காவல் துறை, மெய்யாலுமா?

===

இயக்குநர் சிகரத்தை ஆங்கில இன்ஷியலால் அழைத்தால் எப்படி அழைப்பார்கள்? அந்த இரண்டு எழுத்து இன்ஷியல் உயர்நீதிமன்ற வளாகத்தில் மிக அதிகமாக அடிபடுகிறது. கேன்டீனிலிருந்து வழக்குரைஞர்கள் வரை நிறையவே அடிபடும் இந்தப் பெயருக்குச் சொந்தக்காரர் யார், அவர் பின்னணி என்ன என்று கேட்டால், விவரம் தெரிந்தவர்கள் எல்லோரும் நமுட்டுச் சிரிப்புச் சிரிக்கிறார்களாமே, மெய்யாலுமா?

===

ஆளும் கட்சியின் மக்களவைத் தேர்தல் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது முதல் தலைமைக் கழக அலுவலகத்தில், அந்தந்த வேட்பாளர்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் வந்து குவிந்த வண்ணம் இருக்கிறதாம். தொகுதியின் பெயரை எழுதி, தனித்தனியாக அந்தக் குற்றச்சாட்டுகளைக் கட்டுக் கட்டாகக் கட்டி வைக்கிறார்களாம் அலுவலக ஊழியர்கள். முக்கியமான குற்றச்சாட்டுகள் உளவுத் துறைக்கு அனுப்பப்பட்டு விசாரிக்கப்படுகிறதாம். அந்தக் கட்டுகளில், சென்னையைப் பொருத்தவரை, வடக்கு நாளுக்கு நாள் வளர்கிறதாம். தெற்கு தேய்ந்து காணப்படுகிறதாம். இரண்டுக்கும் இடையில், காலியாக இருக்கிறதாம். புகார் சொல்லக்கூட ஆளில்லாத அளவு அந்த வேட்பாளர் "வீக்' என்று பேசிக் கொள்கிறார்களே, மெய்யாலுமா?

===

மத்திய அரசின் கஜானாச் சாவியுடன் சுற்றுபவர், சாதாரணமாக அந்த மூத்த தலைவரின் பிறந்த நாளுக்கு மட்டும்தான் பிறந்தநாள் வாழ்த்துக் கூறுவது வழக்கம். பிறந்த நாளன்று வாழ்த்துச் செய்தி அனுப்புவார். அடுத்த முறை சென்னை வரும்போது அந்த மூத்த தலைவரின் வீட்டிற்கு நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவிப்பார். ஒரு தடவை கூட அடுத்த வாரிசைப் பொருட்படுத்தியதே இல்லை. இந்த முறை அடுத்த வாரிசின் பிறந்த நாளுக்கு ஒரு நாளும் இல்லாத விபரீதமாக வாழ்த்துத் தெரிவித்திருப்பது, அறிவாலய வட்டாரத்தையே வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. "தேர்தலில் கூட்டணி அமையாவிட்டால் டெபாசிட் கூடக் கிடைக்காது என்கிற பயம்தான் புலியைப் புல் தின்ன வைத்திருக்கிறது' என்று அடுத்த வாரிசின் ஆதரவாளர்கள் சொல்லிச் சிரிக்கிறார்களாமே, மெய்யாலுமா?

===

சட்டப்பேரவை, மக்களவைத் தலைவர்களைப் போலவே, நீதிபதிகளுக்கும் வானளாவிய அதிகாரம் உண்டு என்பது நிஜம்தான். ஆனால் வான்மண்டலம் வரை அந்த அதிகாரம் பாயுமா என்பதுதான் உயர்நீதிமன்ற வளாகத்தில் விவாதப் பொருளாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

தவறுகளுக்கும், அவதூறுகளுக்கும் எதிராக சவுக்கடி கொடுக்க வேண்டியதுதான், தவறில்லை. அதற்காக வான்மண்டலத்தை ஏணி வைத்தா ஏற முடியும்? வெளிநாடுகளில் இருக்கும் இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள் இந்திய தகவல் தொலைத் தொடர்புச் சட்டங்களால் கட்டுப்படுத்தப்பட முடியாத நிலையில், தேன் கூட்டில் கை வைத்த கதையாகி விட்டிருக்கிறதாம் நீதிமன்ற உத்தரவு. நீதிபதியின் பெயரிலேயே இணையதளத்தினை பதிவு செய்து, தங்களது சவுக்கைத் திருப்பிச் சுற்றுகிறார்களாம். சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாகிவிட்டது என்கிறதாமே காவல் துறை, மெய்யாலுமா?

===

வாரிசுகளுக்கு போட்டி வாய்ப்பில்லை என்று அறிவாலயம் முடிவெடுத்திருப்பதால் சோர்ந்து போயிருக்கிறார்களாம் பல மூத்த தலைவர்கள். சிறுபான்மையினர் வாக்கு வங்கியை வைத்துத் தனது மகனை எப்படியும் மக்களவைத் தேர்தலில் வெற்றியடைய வைத்து விடலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்தவரின் பொதுப்பணி வாழ்க்கையில் இப்படி ஒரு ஏமாற்றம் இருந்ததே இல்லையாம். ""கட்சிக்கும் உங்கள் மகனுக்கும் என்னய்யா தொடர்பு? உன் மகனுக்கெல்லாம் சீட் கொடுத்தால், கட்சித் தொண்டன் நானென்ன ஏமாளியா என்று கேட்பான்'' என்று தலைவர் முகத்தில் அறைந்தது போலச் சொல்லிவிட்டாராமே, மெய்யாலுமா?

===

சிறுத்தைக்கு விழுப்புரத்திலிருந்து விடுதலையாம். அங்கே உதயசூரியன்தான் உதிக்க வேண்டும் என்று விரும்புகிறாராம் அடுத்த வாரிசு. சிறுத்தை பாயப் போகும், அல்லது, தூக்கி அடிக்கப்படும் இடம் திருவள்ளூராக இருக்கக்கூடும் என்கிறார்கள். மெய்யாலுமா?

===

என்னதான் கட்சியிலிருந்து இடைக்கால நீக்கம் செய்யப்பட்டு ஓரங்கட்டப்பட்டிருந்தாலும், வேட்பாளர் பட்டியல் வெளிவரும்போது குறைந்தது நான்கு தென் மாவட்டத் தொகுதிகளில் மூத்த வாரிசின் ஆதரவாளர்கள் இடம் பெற்றிருப்பார்கள் என்று அறிவாலய வட்டாரம் அடித்துச் சொல்கிறது. அறிவாலய நேர்காணல்போல அல்லாமல், மூத்த வாரிசு தனது ஆதரவாளர்களின் வீடுகளுக்கே போய் தனது ஆதரவு வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் முயற்சியில் இறங்கி இருக்கிறாராமே, மெய்யாலுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

ஜம்மு - காஷ்மீர் ஆல்ரவுண்டரை ரூ. 8 கோடிக்கு ஏலத்தில் எடுத்த தில்லி கேபிடல்ஸ்!

19 வயது விக்கெட் கீப்பரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

SCROLL FOR NEXT