ஒரு படம் ஓடுவதோ அல்லது ஓடாமல் தோல்வியை அடைவதோ யாரும் முன்கூட்டியே நிச்சயமாகச் சொல்லிவிட முடியாது.
அதே நிலையில் படம் ஓடியதை மட்டும் தங்கள் நினைவில் நிறுத்திக் கொண்டு வரும் இத்தகைய புதியவர்கள் பின்னர் நஷ்டமடைந்து திரும்பக் காரணமாக அமைவது, ஓடிய படங்கள் காட்டும் மாயையின் வம்புதானே?
இன்னொன்று –
ஒரு புதுமுகம். படத்தில் நடித்து அது ஓடிவிட்டால் வந்தது ஆபத்து!
அவரைப் போய் சூழ்ந்து கொள்ளும் தயாரிப்பாளர்கள் ஒரு பக்கம் இருக்க, அந்த நடிகையைப் போலவே தாங்களும் ஆகிவிடலாம் என்ற நினைப்பில் புது முகங்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? அவரது பெயரை – பொருந்துகிறதோ இல்லையோ தங்களது பெயருடன் ஒட்ட வைத்துக் கொள்ள ஆரம்பித்துவிடுகிறார்கள்.
ஜெயலலிதா வருகிறாரா உடனே பலரது பெயருக்கு முன்னால் ஜெய –
விஜயா நட்சத்திரமாகி விட்டாரா? அவ்வளவுதான். பெயருக்கு முன்னேயோ பின்னேயோ விஜயா இடம் பெற்றுவிடும். இப்படித்தான் ஸ்ரீகளும் தேவிகளும்.
இப்படி இந்தப் பெயர் மயக்கம் நடிகர்களிடம் மட்டுமல்ல. டைரக்டர்களிடமும் உண்டு. ஒரு பாரதிராஜா வந்தார். பெரும் வெற்றி பெற்றார். இப்போது அவரைப் பின்பற்றி எத்தனை ராஜாக்கள்? பாவம். ராஜாக்களும், பாரதிகளும். படாதபாடு படுகிறார்கள் இப்போதும்.
இவை எல்லாம் படங்கள் ஓடுவதால் வரும் வம்புதானே?
வெற்றிகரமாக ஓடிய படங்கள் எடுத்தவர்கள் பாடுதான் இன்னும் ரொம்பவும் ஆபத்தானது. நமது முந்தைய படம் ஓடிவிட்டது. இப்போது எடுக்கும் இந்தப் படமும் பிரமாதமாக ஓடி வெற்றி பெற வேண்டும் என்று தலையைப் பிய்த்துக் கொள்ளும் பரிதாபம் இருக்கிறதே – அது உண்மையிலேயே பரிதாபம் தான். அவர்களது முதல் படம் ஓடியதால் வந்த வம்புதானே?
‘சங்கராபரணம்’ படம் வெளி வந்து, திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் பெரும் வெற்றி பெற்று வருகிறது. அந்தப் படத்தை டைரக்ட் செய்த திரு விஸ்வநாத் அவர்கள் டைரக்ட் செய்த மற்றொரு தெலுங்குப் படத்தை எனது நண்பர் திரு.டி.வி.எஸ். ராஜூ அவர்கள் சமீபத்தில் வெளியிட்டார். படம் வெற்றிகரமாக அமையவில்லை.
ஒரு படம் நன்றாக ஓடி – அதே டைரக்டரோ இசையமைப்பாளரோ டைரக்ட் செய்து எடுத்து படம் வருமானால் படம் பார்க்கும் ரசிகர்கள் கூட ‘ அவரது முந்தைய படம் போல இது இருக்குமா?’ என்ற ஆராய்ச்சியில் இறங்கி விடுகிறார்கள். தவறிப் போய் கொஞ்சம் அப்படி இப்படி இருந்துவிட்டால் போதும் அவர் அவ்வளவு தான். ஒரே தட்டு! போன படம் அவருக்கு ஃப்ளூக்குடா! என்று வாய்கூசாமல் சொல்லி விடுவார்கள்.
படம் ஓடினால் வரும் வம்புகளைப் பார்த்தீர்களா?
படம் ஓடாவிட்டால்?
அந்தப் படத்தைத் தயாரித்தவர்களுக்கு மட்டுமல்ல, அதில் நடித்த நடிகர்கள், கலைஞர்கள் அனைவரது பாடும் திண்டாட்டம் தான்!
அவர்கள் எவ்வளவு திறமைசாலிகளாக இருந்தாலும் எவ்வளவு சிறப்பாக உழைத்திருந்தாலும் அவர்களது திறமை, உழைப்பு எல்லாமே ஒரு தோல்விப் படத்தினால் வீணாகிவிடுகிறது.
‘போப்பா! அவர் நடித்த அந்தப் படம் ஓடவே இல்லை. யார் இப்போது அவர் படத்தை வாங்குவது?’ என்ற விநியோகஸ்தர்கள் கை விரித்து விடுகிறார்கள்.
ஆக, தங்கள் உழைப்பையும், எதிர்காலத்தையும் பணயம் வைத்துள்ள கலைஞர்களின் நிலை அதோகதிதான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.