திருமணத்துக்கு அடுத்த நாள் காலையில் ரஜினிகாந்தின் இல்லத்தில் அவரையும், அவரது மனைவி லதாவையும் சந்தித்தேன்.
சூப்பர் ஸ்டாராகவோ, ஸ்டைல் மன்னனாகவோ காட்சி அளிக்காமல் சாதாரணமாக, சிம்பிளாகத் தோற்றம் தந்த ரஜினிகாந்த், என்னைக் கதவருகே கவனித்ததுமே, ‘வாங்க! வெல்கம்!’ என்று புன்னகையுடன் வரவேற்றார். அப்போது அவரது மனைவி லதாவும் உடனிருந்தார்.
இருவருக்கும் என் திருமண வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். தொடர்ந்து, திருமணம் எப்படி நடந்தது?’ என்று கேட்டேன்.
லதா பதில் சொன்னார் சிரித்துக் கொண்டே:
‘எங்க வெட்டிங்கை சிம்பிளாக நடத்த வேண்டும் என்று இவர் (ரஜினிகாந்த்) விரும்பினார். அதே போல புரோகிதர் கூட இல்லை. மாலை மாத்திக் கொண்டோம். சில நிமிஷங்களில் முடிந்து விட்டது.
ரஜினிகாந்த், அப்போது குறுக்கிட்டு, ஒரு டிஃபெரண்டாக, வித்தியாசமாக வெட்டிங் நடக்கணும்னு விரும்பி சிம்பிளா முடிச்சிட்டோம். சடங்குகள் எதுவும் தேவையில்லைன்னு தீர்மானம் பண்ணி வெங்கடேஸ்வர பெருமாள் அனுக்கிரஹத்தோடு எளிமையா முடிஞ்சுது’ என்றார்.
‘ஜில்லு! டிபன் ரெடியா, சாப்பிடலாமா?’ என்று ரஜினி காந்த் கேட்க, ‘ஓ, ரெடி!’ என்றார் லதா.
அப்போதுதான் புரிந்தது லதாவை ரஜினிகாந்த் கூப்பிடும் செல்லப் பெயர் ‘ஜில்லு’ என்பது.
லதா டிபன் பரிமாறத் தொடங்க ருசித்துச் சாப்பிட்டார் ரஜினி. எனக்கு காபி வந்தது. டிபன் சாப்பிட்டவாறே ரஜினிகாந்த் சொன்னார்:
‘வாழ்க்கையில் எனக்கு மிகவும் சந்தோஷமான நாள் என் திருமண நாள். அந்த மகிழ்ச்சியான நேரம் முழுமையாக எனக்குக் கிடைக்க வேண்டும் என்று விரும்பினேன். அந்த மகிழ்ச்சியில் நானும், நான் விரும்பியவளும் மட்டுமே நினைக்க வேண்டும் என்று விரும்பினேன். அதிக அளவில், அனாவசியமாக வேறு யாரும் அங்கு தேவையில்லை என்பது எனது முடிவு.’
முதன் முதலில் ரஜினிகாந்தை எப்படி எப்போது சந்தித்தீர்கள்?
ரஜினி, லதா புன்னகையுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். பிறகு லதா சொன்னார்:
‘சென்ற ஜூன் மாதத்தில் ஒரு வெள்ளிக் கிழமையன்று எங்கள் கல்லூரி மாகஸினுக்காக (எதிராஜ் கல்லூரி மூன்றாம் ஆண்டு லிட்ரேச்சர் மாணவி லதா) ரஜின்காந்தை பேட்டி காண விரும்பினேன். அவரிடம் கேட்பதற்காக நிறைய கேள்விகளைத் தயாரித்து வைத்திருந்தேன். ஆனால், அவரை நேருக்கு நேர் சந்தித்த போது, சில நிமிஷங்கள் பேச நா எழவில்லை!
என்னை அவர் கவர்ந்து விட்டார். அவரிடம் பேசிய போது, பழகிய போது ஒன்றை உணர்ந்தேன். நான் பேசியதும் பழகியதும் ரஜினிகாந்த் என்ற ஸ்டாருடன் அல்ல. ரஜினிகாந்த் என்ற அன்பான மனிதருடந்தான் என்பதை உணர்ந்தேன். ‘இன்டர்வ்யூ’வுக்காக அவரைச் சந்திக்கப் போனேன். வேறொன்றின் ஆரம்பமாகவும், அந்தச் சந்திப்பு அமைந்துவிட்டது! வாழ்க்கையில் ஒரு மகிழ்ச்சிகரமான திருப்பத்தையும் அந்தச் சந்திப்பு தோற்றுவித்தது!
அப்போது ரஜினிகாந்த் குறுக்கிட்டு, ‘லதாவை நான் சந்தித்த அந்த முதல் சந்திப்பு மறக்க முடியாத சந்திப்பு. அவளைப் பார்த்தவுடனேயே இவளைத்தான் கல்யாணம் பண்ணிக் கொள்வது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்!’ என்றார்.
உடனே லதா தொடர்ந்தார், ‘அடுத்த வாரமே அவர் என் பெற்றோரைச் சந்தித்தார். ஆனால் என்னிடம் நேரிடையாக அவர் அப்போதும் எதுவும் சொல்லவில்லை!’ என்று குறும்பாக! ரஜினியைப் பார்த்தவாறே லதா கூறுகிறார்.
‘தொடர்து ரஜினி டெலிபோனில் என்னுடன் பேசுவார். காதல் மலர்ந்தது. ‘காளி’ படம் இருவரும் பார்த்தோம். திருமணத்தைப் பற்றி என் பெற்றோரிடம் சீக்கிரமாகவோ சில மாதங்களுக்குப் பிறகோ அவர் பேச வருவார் என்று தெரியும். ஆனால் எனக்கு ஒரு தர்மசங்கடம். மூன்று நான்கு ஆண்டுகளுக்கு எனக்கு கல்யாணமே வேண்டாம் என்று சில நாட்களுக்கு முன்னதாக என் பெற்றோரிடம் சொல்லியிருந்தேன்.’ என்றார் லதா சிரித்தவாறே.
ரஜினி குறுக்கிடுகிறார். ‘அப்புறம் சில நாட்களுக்குப் பின் லதாவின் பிறந்த நாளன்று வாழ்த்துக் கூறப் போயிருந்தேன். காலை பூனை நேரம். அப்புறம் ஹேம்நாக் பிக்சர்ஸ் படத்தின் ஷூட்டிங். இந்த இடை நேரத்தில் பல விஷயங்களைப் பற்றிப் பேசுவோம். பத்திரிகைகளீல் வந்த செய்திகளைப் படித்து ரசித்தோம்.’
லதா குறுக்கிட்டுக் கூறினார். ‘எங்களுக்குத் திருமணம் என்று செய்திகள் வெளியானதைப் படித்துவிட்டு பல தோழிகள், ‘என்ன லதா, இது உண்மைதானா?’ என்று கேட்பது போல என்னை உற்று உற்றுப் பார்த்து புன்னகைத்ததும் எனக்கு என்னவோ போல இருந்தது. ரஜினியைப் பற்றியும் எங்கள் கல்யாணத்தைப் பற்றியும் கேள்வி மேல் கேள்வி போட்டு என்னைத் திக்கு முக்காடச் செய்து விட்டார்கள் அவர்கள்…’
'வருங்காலம் பற்றி ஏதாவது திட்டம்….’ என்று இருவரையும் பார்த்துக் கேட்ட போது, லதா சொன்னார் : ‘முதலில் படிப்பை ஃபைனலை முடித்துவிட வேண்டும் ஏப்ரல் மாதம் பரீட்சை. அப்புறம் தான் மற்றவையெல்லாம். வீட்டை அலங்காரமாய் ஜோடிப்பது, மனைவி என்கிற முறையில் கணவருக்குப் பணி புரிவது. இசையில் தொடர்ந்து ஈடுபடுவது போன்றவையே என் முக்கியப் பணியாக இருக்கும்’ என்றார் லதா.
பேட்டி : பிரெய்ன்லால்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.