நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசி கொண்டிருந்தேன். அவரது இல்லத்தில் நுழையும் போதே ஹாலில் ஒரு மாறுதலைக் கண்டேன். சுவரில் மூன்று பெரிய படங்கள் மாட்டப்பட்டிருந்தன. முதல் படம் எம்.ஜி.ஆர். இரண்டாவது ஜெயலலிதா. மூன்றாவது அவரது தாயார் சந்தியா.
‘வாங்க, வாங்க!’ என்று முக மலர்ச்சியுடன் வரவேற்றார். பழைய ஜெயலலிதாவைப் பார்ப்பது போலவே இருந்தது. பேச்சிலும், போக்கிலும் புதிய உற்சாகத்தைக் கண்டேன்.
‘எத்தனையோ படங்களில் எத்தனையோ கேரக்டர்களில் நடித்தாகிவிட்டது. இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் பட உலகில் பிரவேசிக்கும்போது சிறந்த கேரக்டர்களில் தான் தோன்றமுடியும். அந்த மாதிரி கேரக்டர்களில் மட்டும் நடிக்கலாம்!’ என்றார் ஜெயலலிதா.
ஜெயலலிதா, தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று புறப்பட்டு வெளிநாடுகளில் சுற்றூப் பயணம் செய்து, நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்துகிறார். அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பல நாடுகளில் அவரது கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அந்த விவரங்களை அவரே சொன்னார்.
நீங்கள் என்னுடைய மதுரநாயகி நாட்டிய நாடகத்தைப்பார்க்க வேண்டும். அடுத்த வாரம் கிருஷ்ண கான சபாவில் நடக்கிறது. அழைப்பு அனுப்புகிறேன் அவசியம் வாங்க! என்றார்.
அதேபோல் அடுத்த வாரம் அவரிடமிருந்து இன்விடேஷன் வந்தது. மதுரநாயகி நாட்டிய நாடகத்தைப் பார்த்து வியந்தேன். கலை உலகலிருந்து சில ஆண்டுகள் விலகியிருந்தாலும் அவரது கவர்ச்சியும், திறமையும் கொஞ்சம்கூடக் குறையவில்லை என்பது புரிந்தது. ஜெயலலிதா புகழேணியில் கொடிகட்டிப் பறந்தபோது அவரைப் பலமுறை பேட்டி கண்டிருக்கிறேன். எத்தனை பிஸியாக இருந்தாலும், சொன்ன டயத்துக்கு பேட்டிக்கு தயாராக வந்துவிடுவார். அந்த நேரத்தில் வேறு எந்த வேலையையும் வைத்துக் கொள்ள மாட்டார். ஒரே நேரத்தில் எத்தனைவிதமாக – எத்தனை கேள்விகளைக் கேட்டாலும் சோர்வின்றி பதில் சொல்லக் கூடியவர். இன்றைய புதுமுக நடிகைகள் ஜெயலலிதாவிடமிருந்து இதுபோன்ற விஷயங்களைக் கற்றுக் கொள்ளவது நல்லது என்று நினைக்கிறேன்.
-ராம்ஜி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.