துப்பறியும் கதைகளைப் படமாக்குவதில் மட்டுமல்ல. அன்றாட வாழ்க்கையிலும் தன்னைச் சுற்றியிருப்போரிடம் பரபரப்பான கதைகளைக் கூறி அவர்களைத் திகைப்பில் ஆழ்த்துவாராம் ஹிட்ச்காக். லிப்டில் போய்க் கொண்டிருக்கும்போது, அருகிலுள்ளோரிடம் கதை சொல்ல ஆரம்பித்து விடுவாராம்.
‘ஓர் அழகான இளம் பெண். கல்யாணமானவள். கணவன் இல்லாத நேரங்களில் ரகசியமாகத் தன் காதலனை வரவழைத்து அவனோட உல்லாசமாக இருப்பாள்.
அவளுக்கு ஒரு காதலன் மட்டுமல்ல. வேறு இரண்டு காதலர்களும் இருந்தார்கள். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு நேரத்துக்கு வரச் சொல்வாள்.
ஒரு நாள் இரவு அவளுடைய கணவன் வீட்டில் இருக்கும் போதே அந்த மூன்று காதலர்களும் அவளைத் தேடி வந்து விட்டார்கள்.
அடுத்து என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள லிப்டில் இருப்போர் ஆர்வத்துடன் அவரைப் பார்ப்பார்கள்.
அதற்குள் ஹிட்ஷாஹ் இறங்க வேண்டிய மாடி வந்துவிடும். லிப்டின் கதவைத் திறந்து கொண்டு மெளனமாகப் போய்விடுவார்.
லிப்டில் இருப்போரை சஸ்பென்ஸில் ஆழ்த்தி வேடிக்கைப் பார்ப்பதே அவர் நோக்கம்.
இப்படி அவர் சஸ்பென்ஸ் கதைகளைக் கூறிக் கொண்டிருப்பதைப் பார்த்த அவருடைய நண்பர் ஒருவர் ‘மிஸ்டர் ஹிட்ச்காக்! மர்மக் கதைகளைக் கூறி எல்லாரையும் திணர அடிக்கிறீர்கள். ஆனால் உங்கள் சஸ்பென்ஸ் என்னிடம் வேலை செய்யாது’ என்றாராம்.
‘அப்படியா? சரி. இந்தக் கதையைக் கேளுங்கள். வெளிநாட்டுக்குப் போன ஒருவன் அங்கிருந்த ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போது ஒரு சிறுவன் அவனிடம் ஒரு கடிதத்தைக் கொண்டு வந்து கொடுத்தான். அந்த மனிதன் கடிதத்தைப் பிரித்துப் பார்த்தான். அதிலிருந்த மொழி அவனுக்குப் புரியவில்லை.
எதிரே இருந்தவரிடம் கடிதத்தைக் கொடுத்தான். அவர் அதைப் படித்துப் பார்த்ததும் பயந்து போய் அலறிக் கொண்டே ஓடிவிட்டார்!
அவர் கீழே போட்டுவிட்டுப் போன கடிதத்தை அங்கு வந்த சர்வர் எடுத்துப் பார்த்தான். உடனே தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தான். அதைப் பார்த்த ஹோட்டல் முதலாளி அங்கு வந்து கடிதத்தை வாங்கிப் பார்த்தார். மறுவினாடி பைத்தியம் பிடித்தவரைப் போல பலமாகச் சிரித்தார்.
அச்சமயம் ஒரு பெண் வந்தாள். கடிதத்தை அவளிடம் காட்டினார் அம்மனிதர். அதைப் படித்த அவள் உடனே அவரைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டாள்!
ஹிட்ச்காக்கின் நண்பருக்கு அதற்கு மேல் பொறுமை இல்லை.
‘அப்படி அந்தக் கடிதத்தில் என்னதான் எழுதி இருந்தது? என்று கேட்டார்.
அதுதான் சஸ்பென்ஸ்! என்று புன்னகையுடன் கூறிவிட்டுப் போய்விட்டார் ஹிட்ச்காக்.
மறுநாள் விடிந்ததும் எனக்குத் தூக்கமே பிடிக்கவில்லை. அந்தக் கடிதத்தில் என்ன எழுதியிருந்தது என்று தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்குத் தலையே வெடித்துவிடும் போலிருக்கிறது!’ என்று தவிப்புடன் கூறினார்.
‘என்னுடைய கதைகளிலுள்ள சஸ்பென்ஸ் உங்களிடம் வேலை செய்யாது என்றீர்களே?’ என்று கேட்டார் ஹிட்ச்காக்.
‘நான் தோற்றுவிட்டேன். சீக்கிரம் சொல்லுங்கள். அந்தக் கடிதத்தில் என்ன எழுதியிருந்தது?’ என்றார் நண்பர்.
‘அது எனக்கும் தெரியாது! என்றார் ஹிட்ச்காக் சிரித்துக் கொண்டே.
- திரைப்பட இயக்குநர் ப.நீலகண்டன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.