முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 4 – போற்றித் திரு அகவல் 6

சிவபெருமானின் பெருமைகளைப் போற்றும் அகவல் பா இது. தில்லையில் அருளப்பட்டது.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:07 PM
பகிர்:


27

பாடலின்பம்

தென்னாடு உடைய சிவனே போற்றி,

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி,

ஏனக் குருளைக்கு அருளினை போற்றி,

மானக் கயிலை மலையாய் போற்றி,

அருளிடவேண்டும், அம்மான் போற்றி,

இருள்கெட அருளும் இறைவா போற்றி,

தளர்ந்தேன் அடியேன், தமியேன், போற்றி,

களம் கொளக் கருத அருளாய் போற்றி,

அஞ்சேல் என்று இங்கு அருளாய் போற்றி,

நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி,

அத்தா போற்றி, ஐயா போற்றி,

நித்தா போற்றி, நிமலா போற்றி,

பத்தா போற்றி, பவனே போற்றி,

பெரியாய் போற்றி, பிரானே போற்றி,

அரியாய் போற்றி, அமலா போற்றி,

மறையோர் கோல நெறியே போற்றி,

முறையோ! தரியேன்! முதல்வா போற்றி!

உறவே போற்றி, உயிரே போற்றி,

சிறவே போற்றி, சிவமே போற்றி,

மஞ்சா போற்றி, மணாளா போற்றி,

பஞ்சு ஏர் அடியாள்பங்கா போற்றி,

பொருளின்பம்

தென்பாண்டி நாட்டை உடைமையாகக் கொண்ட சிவனே, உன்னை வணங்குகிறோம், எந்நாட்டு மக்களுக்கும் இறைவனானவனே, உன்னை வணங்குகிறோம்,

பன்றிக்குட்டிக்குப் பாலூட்டி அருளியவன், பெருமைக்குரிய திருக்கயிலாய மலையில் எழுந்தருளியிருப்பவன், உன்னை வணங்குகிறோம், எங்களுக்கு அருள் செய்ய வேண்டும்,

எங்களுடைய அறியாமை என்கிற இருள் அழியும்படி அருள் செய்கிற இறைவா, உன்னை வணங்குகிறோம்,

நான் தளர்ந்துள்ளேன், தனியாக நிற்கிறேன், உன்னை வணங்குகிறேன், உன்னையே இருப்பிடமாகக் கொண்டு சேர நினைக்கிறேன், அருள் செய்வாய், ‘பயப்படாதே’ என்று சொல்லி எனக்கு அருள் செய்வாய், உன்னை வணங்குகிறேன்,

நஞ்சை அமுதமாக விரும்பி உண்டவனே, எங்கள் தந்தையே, தலைவனே, நிலையானவனே, தூய்மையானவனே, உன்னை வணங்குகிறோம்,

அன்பனே, அனைத்தையும் படைப்பவனே, பெரியவனே, தலைவனே, கிடைப்பதற்கு அரியவனே, குறையற்றவனே, அந்தணன்போல் வடிவெடுத்து வந்து வழிகாட்டியவனே, இனியும் என்னுடைய பிறவித் துயரத்தைப் போக்காமல் இருப்பது முறையா? நான் இதைத் தாங்கமாட்டேன், முதல்வனே, உன்னை வணங்குகிறேன்,

என் உறவே, உயிரே, சிறப்பே, சிவமே, அழகனே, மணவாளனே, செம்பஞ்சுக் குழம்பு பூசிய அழகிய திருவடிகளைக் கொண்ட உமையம்மையைப் பாகமாகக் கொண்டவனே, உன்னை வணங்குகிறோம்!

சொல்லின்பம்

ஏனம்: பன்றி

குருளை: குட்டி

மானம்: பெருமை

அம்மான்: இறைவன்

தமியேன்: தனித்து உள்ளவன்

களம்: இருப்பிடம்

அஞ்சேல்: அஞ்சவேண்டாம்

நயந்தாய்: விரும்பினாய்

அத்தன்: தந்தை

நித்தன்: நித்தியமாக/ என்றும் இருப்பவன்

நிமலன்: தூய்மையானவன்

பத்தன்: அன்பு வடிவானவன்

பவன்: படைப்பவன்

பிரான்: தலைவன்

அரியாய்: அரியவன்/ கிடைக்க அரியவன்

அமலன்: குற்றமற்றவன்

மறையோர்: வேதியர்/ அந்தணர்

கோலம்: உருவம்/ அழகு/ தோற்றம்

நெறி: வழி

தரியேன்: தாங்கமாட்டேன்

சிறவு: சிறப்பு

மஞ்சன்: அழகன்

ஏர்: அழகு

முழு கட்டுரையைப் படிக்க →