பகுதி 13 – திருப்பூவல்லி - 6
கடுமையாகப் போர் செய்கிற காளையை வாகனமாகக் கொண்டவன், சிவபுரத்தவர்களைக் காக்கும் ஆண் சிங்கம் சிவபெருமான்.
திரு + பூ + அல்லி என்பது ‘திருப்பூவல்லி’. இதுவும் பண்டைய மகளிரின் விளையாட்டுதான். அல்லி மலரைக் கொண்டு ஆடிப்பாடுவது. அதில் சிவபெருமானின் பெருமைகளைச் சொல்லும்வண்ணம் மாணிக்கவாசகர் அமைத்திருக்கிறார்.
தில்லையில் அருளப்பட்ட இந்தப் பகுதியில் இருபது பாடல்கள் உள்ளன.
91
பாடலின்பம்
திண்போர் விடையான், சிவபுரத்தார் போர்ஏறு,
மண்பால் மதுரையில் பிட்டுஅமுது செய்துஅருளித்
தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட
புண்பாடல் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ.
*
முன்ஆய மால்,அயனும் வானவரும் தானவரும்
பொன்ஆர் திருவடி தாம்அறியார் போற்றுவதே,
என்ஆகம் உள்புகுந்து ஆண்டுகொண்டான் இலங்குஅணியாம்
பல்நாகம் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ.
பொருளின்பம்
கடுமையாகப் போர் செய்கிற காளையை வாகனமாகக் கொண்டவன், சிவபுரத்தவர்களைக் காக்கும் ஆண் சிங்கம் சிவபெருமான்.
அத்தகைய சிவன், பூமியில் மதுரையிலே தோன்றி, பிட்டை அமுதாக உண்டான், பாண்டியனிடம் தண்டால் அடிபட்டான், நமக்காகத் தன் திருமேனியில் புண்பட்டான், அவனுடைய அந்தக் கருணையை நாம் பாடுவோம், அல்லி மலர்களைக் கொய்து ஆடுவோம்.
*
எல்லா உயிர்களுக்கும் முன்பாகத் தோன்றிய திருமால், பிரம்மன், வானவர்கள், அசுரர்கள் என அனைவரும் சிவபெருமானை வணங்குகிறார்கள், போற்றுகிறார்கள், ஆனால், அவர்களால் அவனுடைய பொன்போன்ற திருவடிகளை அறிய இயலுவதில்லை.
ஆனால், அத்தகைய சிவபெருமான் என்னுடைய மனத்தில் புகுந்தான், என்னை ஆண்டுகொண்டான், பலவகைப் பாம்புகளை அவன் சிறந்த ஆபரணங்களாக அணிந்திருக்கும் தன்மையை நாம் பாடுவோம், அல்லி மலர்களைக் கொய்து ஆடுவோம்.
சொல்லின்பம்
திண்: திண்மையான/ வலுவான/ கடுமையான
விடை: காளை
ஏறு: சிங்கம்
மண்பால்: பூமியிலே
அயன்: பிரம்மன்
வானவர்: விண்ணோர்/ தேவர்
தானவர்: அசுரர்
பொன்ஆர்: பொன் போன்ற
ஆகம்: உள்ளம்
இலங்கு: திகழ்கிற
பல்: பல