பகுதி 14 – திருவுந்தியார் -1
வில் வளைந்தது, போத் தொடங்கியது, முப்புரங்களும் சிவபெருமானின் கோபத்தைச் சந்திக்க இயலாமல் வருந்தின,
உந்தி என்பது, பழந்தமிழர் விளையாட்டுகளில் ஒன்று. ஓரிருவரோ, பலரோ பந்தை உந்தச்செய்து விளையாடுவார்கள். அதனால் ‘உந்தி’ என்று பெயர் வந்தது. அந்த விளையாட்டில் சிவபெருமானின் பெருமைகளைச் சொல்லும்வண்ணம் அமைத்திருக்கிறார் மாணிக்கவாசகர்.
இந்தப் பகுதியில் இருபது பாடல்கள் உள்ளன. இவை தில்லையில் அருளப்பட்டவை.
93
பாடலின்பம்
வளைந்தது வில்லு, விளைந்தது பூசல்,
உளைந்தன முப்புரம் உந்தீபற,
ஒருங்குடன் வெந்தவாறு உந்தீபற.
*
ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தம்கையில்,
ஓரம்பே முப்புரம் உந்தீபற,
ஒன்றும் பெருமிகை உந்தீபற.
*
தச்சு விடுத்தலும் தாம் அடியிட்டலும்
அச்சு முறித்ததுஎன்று உந்தீபற,
அழிந்தன முப்புரம் உந்தீபற.
*
உய்யவல்லாரொடு மூவரைக் காவல்கொண்டு
எய்யவல்லானுக்கே உந்தீபற,
இளமுலை பங்கன்என்று உந்தீபற.
பொருளின்பம்
வில் வளைந்தது, போத் தொடங்கியது, முப்புரங்களும் சிவபெருமானின் கோபத்தைச் சந்திக்க இயலாமல் வருந்தின, அவை ஒன்றாகத் தீயில் வெந்தன, இதைச் சொல்லி உந்தீபற!
*
முப்புரங்களைத் தாக்கச் சென்றபோது, ஏகாம்பரநாதரான சிவபெருமானின் கையில் இரண்டு அம்புகளைக்கூட நாம் காணவில்லை, ஓர் அம்பைதான் கண்டோம், ஆனால், முப்புரங்களை எரிப்பதற்குச் சிவனுக்கு அந்த ஓர் அம்புகூட அதிகம்தான், புன்னகையாலேயே அவன் அவற்றை எரித்தான், அதைச் சொல்லி உந்தீபற!
*
முப்புரங்களை எரிக்கச் சிவபெருமான் புறப்பட்டபோது, தேவர்கள் அவருக்குத் தேர் செய்து தந்தார்கள், சிவபெருமான் அதில் தனது திருவடிகளை வைத்தார், அவரது வலுவைத் தாங்காமல் அந்தத் தேரின் அச்சு முறிந்தது, அதையடுத்து, முப்புரங்களும் அழிந்தன என்று சொல்லி உந்தீபற!
*
முப்புரங்களை அழித்தபோது, அதிலிருந்த தீயவர்கள் எல்லாரையும் அழித்தார் சிவபெருமான், நல்லவர்களான மூன்று பேரைமட்டும் அழிக்காமல் காத்து, அவர்களைத் தன்னுடைய வாயில்காப்போராகக் கொண்டார், இளம் மார்பகங்களைக் கொண்ட உமையம்மையைத் தன் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்ட அவருடைய புகழைப் பாடி உந்தீபற!
சொல்லின்பம்
வில்லு: வில்
பூசல்: போர்
உளைந்தன: வருந்தின
ஒருங்கு: ஒன்றாக
வெந்தவாறு: வெந்த தன்மை
மிகை: அதிகம்
தச்சு: தேர் செய்யும் கலை
உய்யவல்லார்: பிழைக்கவல்லவர்கள்
மூவர்: சுதன்மன், சுசூலன், சுபுத்தி என்ற மூன்று பேர், முப்புரங்கள் அழிந்தபோது சிவபெருமானைச் சரணடைந்தவர்கள், அதனால் உயிர் பிழைத்தவர்கள்
இளமுலை பங்கன்: உமையம்மையைப் பங்காகக் கொண்ட சிவபெருமான்