முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 7 - திருவெம்பாவை - 7

திரு எம் பாவை. அதாவது, மேலான எங்களுடைய பதுமை என்ற பொருளில் இந்தப் பகுதிக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:07 PM
பகிர்:

திரு எம் பாவை. அதாவது, மேலான எங்களுடைய பதுமை என்ற பொருளில் இந்தப் பகுதிக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மார்கழி மாதத்தில் பெண்கள் அதிகாலையில் நீராடி இறைவன் புகழைப் பாடும் பாடல்கள் இவை.

திருவண்ணாமலையில் அருளப்பட்டவை.
 

50

பாடலின்பம்

அண்ணாமலையான் அடிக் கமலம் சென்று இறைஞ்சும்

விண்ணோர் முடியின் மணித்தொகை வீறு அற்றாற்போல்

கண் ஆர் இரவி கதிர் வந்து கார் கரப்பத்

தண் ஆர் ஒளி மழுங்கித் தாரகைகள் தாம் அகலப்

பெண் ஆகி, ஆணாய், அலியாய்ப் பிறங்கு ஒளி சேர்

விண் ஆகி, மண் ஆகி, இத்தனையும் வேறு ஆகி,

கண் ஆர் அமுதமுமாய் நின்றான் கழல் பாடிப்

பெண்ணே, இப் பூம்புனல் பாய்ந்து ஆடேல் ஓர் எம்பாவாய்.

*

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்,

போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்,

போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்,

போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்,

போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்,

போற்றி மால், நான்முகனும் காணாத புண்டரிகம்,

போற்றி யாம் உய்ய ஆட்கொண்டு அருளும் பொன்மலர்கள்,

போற்றி யாம் மார்கழி நீராடேல் ஓர் எம்பாவாய்.

பொருளின்பம்

திருவண்ணாமலைக்கு வரும் விண்ணோர்கள் அங்கே எழுந்தருளியிருக்கும் எம்பெருமானின் திருவடித் தாமரைகளை வணங்குகிறார்கள், அப்போது அவர்களுடைய கிரீடங்களில் இருக்கும் மணிகளின் ஒளி, சிவபெருமானின் பிரகாசத்துக்குமுன் மங்கிவிடுகிறது. அதுபோல, சூரியனின் கதிர்கள் எங்கும் நிறைய, அதனால் இருட்டு விலகுகிறது, குளிர்ந்த விண்மீன்களின் ஒளி மழுங்கி அவையும் விலகுகின்றன,

பெண்ணாக, ஆணாக, அலியாக, ஒளி வீசும் விண்ணாக, மண்ணாக, இவையனைத்தும் அல்லாத மற்றவையாக, சிறந்த அமுதமுமாகத் திகழும் சிவபெருமானின் திருவடிகளைப் பாடுவோம், பூக்கள் நிறைந்த பொய்கையில் நீராடுவோம்,

பாவைபோன்ற பெண்ணே, நீ இதனை எண்ணுவாய்.

சிவபெருமானே, அனைத்துக்கும் தொடக்கமான உன் பாத மலர்களை வணங்குகிறோம், அருள் செய்வாய்,

அனைத்துக்கும் நிறைவான உன் செந்தளிர்த் திருவடிகளை வணங்குகிறோம், அருள் செய்வாய்,

எல்லா உயிர்களுக்கும் தோற்றமான உன் பொற்பாதங்களை வணங்குகிறோம்,

எல்லா உயிர்களுக்கும் பேரின்பமாகத் திகழும் கழல் அணிந்த உன் பூப்போன்ற பாதங்களை வணங்குகிறோம்,

எல்லா உயிர்களுக்கும் நிறைவாகத் திகழும் உன் இணையடிகளை வணங்குகிறோம்,

திருமாலும் பிரம்மாவும்கூடக் காண இயலாத உன் தாமரைப் பாதங்களை வணங்குகிறோம்,

நாங்கள் உய்வதற்காக எங்களை ஆட்கொண்டு அருள் செய்கிற உன் பொன்மலர்ப் பாதங்களை வணங்குகிறோம்,

பாவைபோன்ற பெண்ணே, மார்கழி மாதத்தில் சிவபெருமானை வணங்கி நீராடி நோன்பிருப்போம், இதை நீ எண்ணுவாய்,

சொல்லின்பம்

கமலம்: தாமரை

தொகை: தொகுப்பு

வீறு: சிறப்பு/ பெருமை/ ஒளி

கண் ஆர்: கண்ணுக்கெட்டிய இடமெல்லாம் பரவுகிற

இரவி: சூரியன்

கார்: கருமை

கரப்ப: ஒளிக்க

தண்: குளிர்ச்சி

தாரகை: நட்சத்திரம்

பிறங்கு: திகழ்கிற

கழல்: ஆண்களின் காலில் அணிகிற வீர அணிகலன், இங்கே சிவபெருமானின் திருவடிகளைக் குறிக்கிறது

புனல்: நீர்

ஆதி: தொடக்கம்

அந்தம்: நிறைவு

போகம்: இன்பம்

ஈறு: நிறைவு

புண்டரிகம்: தாமரை

முழு கட்டுரையைப் படிக்க →