முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 40 – குலாப் பத்து - 3

அவர்கள் எல்லாரும் முறைப்படி சிவனின் திருவடிகளைச் சேர்ந்து, சிவபெருமானின் கருணைத்தேனைப் பருகி மனநிறைவு பெறுவார்கள்.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:10 PM
பகிர்:


குலாவுதல் என்றால் மகிழ்ச்சியாக இருத்தல் என்று பொருள். தில்லையில் சிவபெருமானின் ஆடலைக்கண்டு மகிழ்ந்தது பற்றி மாணிக்கவாசகர் பாடிய பாடல்கள் இவை.

‘குலா’ என்ற சொல்லுக்கு விளக்கம் / விளங்கித் திகழ்தல் என்ற பொருளும் உண்டு. தில்லையில் சிவபெருமான் சிறப்பாகத் திகழ்வது பற்றி மகிழ்ந்து பாடிய பாடல்கள் என்றும் சொல்லலாம். 

இவை தில்லையில் அருளப்பட்டவை. பத்து பாடல்களின் தொகுப்பு.

225

பாடலின்பம்

பேரும் குணமும் பிணிப்புஉறும் இப்பிறவிதனைத்

தூரும் பரிசு துரிசுஅறுத்துத் தொண்டர்எல்லாம்

சேரும்வகையால் சிவன் கருணைத் தேன்பருகி

ஆரும் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.

*

கொம்பில் அரும்பாய்க் குவிமலராய்க் காய்ஆகி

வம்பு பழுத்து உடலம் மாண்டு இங்ஙன் போகாமே,

நம்பும் என் சிந்தை நணுகும்வண்ணம் நான்அணுகும்

அம்பொன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.

பொருளின்பம்

பெயர், பண்புகள் போன்றவற்றால் கட்டப்படுவது இந்தப் பிறவி என்கிற பிணி. அந்தப் பிணி, இனிமேல் தங்களுக்கு இல்லை என்கிற அளவுக்குத் தங்களது குற்றங்களை நீக்கிக்கொண்டு நல்வழியில் வாழ்கிறவர்கள் எம்பெருமானின் பக்தர்கள்.

அவர்கள் எல்லாரும் முறைப்படி சிவனின் திருவடிகளைச் சேர்ந்து, சிவபெருமானின் கருணைத்தேனைப் பருகி மனநிறைவு பெறுவார்கள்.

அத்தகைய ஒளிநிறைந்த தில்லை ஆண்டானை நான் பற்றிக்கொண்டேனே.

*

கிளையிலே அரும்பு தோன்றும், பிறகு அது குவிந்து, மலர்ந்து, காயாகிப் பழுத்து வீணாகும். இந்த மனிதப்பிறவி / உடலும் அப்படிப்பட்டதுதான்.

ஆனால், என்னுடைய பிறவி அப்படி வீணாகிவிடாதபடி நான் சிவபெருமானை நம்பினேன், என்னுடைய சிந்தனையும் நானும் அவனைச் சென்றுசேர வேண்டினேன்.

அழகிய பொன்போன்ற ஒளிநிறைந்த தில்லை ஆண்டானை நான் பற்றிக்கொண்டேனே.

சொல்லின்பம்

பிணிப்புறும்: கட்டப்படும்

தூரும் பரிசு: தூர்க்கின்ற / இல்லாமல் ஆக்குகின்ற தன்மை

துரிசு அறுத்து: குற்றங்களை நீக்கி

ஆரும்: மனநிறைவு பெறும்

குலாத்தில்லை ஆண்டான்: விளங்கும் தில்லை ஆண்டவன் / சிவபெருமான்

கொம்பு: கிளை

வம்பு: வீண்

உடலம் மாண்டு இங்ஙன் போகாமே: உடல் அழிந்து இவ்வாறு போகாமல்

நணுகும்வண்ணம்: சேரும்வண்ணம்

அணுகும்: சேரும்

அம்பொன்: அழகிய பொன்

முழு கட்டுரையைப் படிக்க →