பகுதி 41 – அற்புதப் பத்து - 1
சிவபெருமானின் அற்புதங்களை வியந்து பாடிய பாடல்கள் இவை.திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை. பத்து பாடல்களின் தொகுப்பு.
சிவபெருமானின் அற்புதங்களை வியந்து பாடிய பாடல்கள் இவை.
திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை. பத்து பாடல்களின் தொகுப்பு.
228
பாடலின்பம்
மையலாய் இந்த மண்ணிடை வாழ்வுஎனும் ஆழியுள் அகப்பட்டுத்
தையலார்எனும் சுழித்தலைப்பட்டு நான் தலைதடுமாறாமே
பொய்யெலாம் விடத் திருவருள் தந்து, தன் பொன்அடிஇணை காட்டி
மெய்யனாய் வெளிகாட்டி முன்நின்றதோர் அற்புதம் விளம்பேனே.
*
ஏய்ந்த மாமலர்இட்டு முட்டாததுஓர் இயல்பொடும் வணங்காதே
சாந்தமார்முலைத் தையல்நல்லாரொடும் தலைதடுமாறுஆகிப்
போந்து யான் துயர் புகாவணம் அருள்செய்து பொற்கழல்இணை காட்டி
வேந்தனாய் வெளியே என்முன் நின்றதோர் அற்புதம் விளம்பேனே.
பொருளின்பம்
அறியாமையால் மயங்கி, உலக வாழ்வு என்கிற கடலில் அகப்பட்டு, பெண்கள் எனும் சுழியில் சிக்கிக்கொண்டேன்,
அப்படிப்பட்ட நான் தடுமாறாதபடி, என்னுடைய பொய்யான நம்பிக்கைகளை, பற்றுகளைக் கெடச் செய்தான் சிவபெருமான், தன்னுடைய திருவருளைத் தந்து, பொன் திருவடிகளைக் காட்டி, மெய்யாக என்முன்னே காட்சி கொடுத்தான்,
அவ்வாறு அவன் என் முன்னே நின்ற அற்புதத்தை என்னால் விவரிக்க இயலவில்லையே!
*
பொருத்தமான, சிறந்த மலர்களைத் தூவிச் சிவபெருமானைத் தொடர்ந்து வணங்கும் பழக்கம் எனக்கு இல்லை.
சந்தனம் பூசிய மார்பகங்களைக் கொண்ட பெண்களுடன் சுற்றித் திரிந்தேன்,
அப்படிப்பட்ட நான் தடுமாறாதபடி சிவபெருமான் என்னைத் தடுத்தாட்கொண்டான், எனக்குத் துயரம் ஏற்படாதபடி அருள் செய்தான், தன்னுடைய பொன் திருவடிகளைக் காட்டினான், இவ்வுலக வேந்தனாக என்முன்னே காட்சி கொடுத்தான்,
அவ்வாறு அவன் என்முன்னே நின்ற அற்புதத்தை என்னால் விவரிக்க இயலவில்லையே!
சொல்லின்பம்
மையல்: மயக்கம்
ஆழி: கடல்
தையலார்: பெண்கள்
விளம்பேனே: சொல்ல இயலவில்லையே
ஏய்ந்த மாமலர்: பொருத்தமான, சிறந்த மலர்கள்
முட்டாத: தடையில்லாத
சாந்தம்: சந்தனம்
தையல்நல்லார்: நல்ல பெண்கள்
போந்து: வந்து
துயர் புகாவணம்: துயரப்படாதபடி
வேந்தனாய்: அரசனாக