பகுதி 41 – அற்புதப் பத்து - 2
இந்த உலகிலே நான் நல்லவனைப்போல நடித்தேன், பொய்யான செயல்களைச் செய்தேன், நான், என்னுடையது என்கிற மாயப்
சிவபெருமானின் அற்புதங்களை வியந்து பாடிய பாடல்கள் இவை.
திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை. பத்து பாடல்களின் தொகுப்பு.
229
பாடலின்பம்
நடித்து மண்இடைப் பொய்யினைப் பலசெய்து நான், எனது எனும் மாயக்
கடித்த வாயிலே நின்று முன்வினை மிகக் கழறியே திரிவேனைப்
பிடித்து முன்னின்ற பெருமறை தேடிய அரும்பொருள் அடியேனை
அடித்து அடித்து அக்காரம் முன்தீற்றிய அற்புதம் அறியேனே.
*
பொருந்தும் இப்பிறப்பு, இறப்பு இவை நினையாது பொய்களே புகன்றுபோய்க்
கரும்குழலினார் கண்களால் ஏறுண்டு கலங்கியே கிடப்பேனைத்
திருத்து சேவடிச் சிலம்பு அவை சிலம்பிடத் திருவொடும் அகலாதே
அரும்துணைவனாய் ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே.
பொருளின்பம்
இந்த உலகிலே நான் நல்லவனைப்போல நடித்தேன், பொய்யான செயல்களைச் செய்தேன், நான், என்னுடையது என்கிற மாயப் பாம்புகள் என்னைக் கடித்தன, முன்வினைப்பயன் என்னை வருத்தியது, புலம்பித் திரிந்துகொண்டிருந்தேன்,
இப்படிப்பட்ட என்னை, சிவபெருமான் பிடித்தான், பெருமைக்குரிய வேதங்களெல்லாம் தேடியும் காண இயலாத அரும்பொருள் என்முன் தோன்றினான், என்னை அடித்து அடித்துச் சர்க்கரை (சிவ அனுபவம்) உண்ணவைத்தான்,
அந்த அற்புதத்தை என்னால் அறிந்துகொள்ள இயலவில்லையே!
*
பிறப்பு, இறப்பு என்று பொருந்துகின்ற இந்தப் பிறவிச்சுழலை நினைக்காமல், பொய்களையே பேசிக்கொண்டிருந்தேன், கருமையான கூந்தலை உடைய பெண்களின் கண்களால் தாக்கப்பட்டு கலங்கிக் கிடந்தேன்,
இப்படிப்பட்ட எனக்கு சிவபெருமான் காட்சி கொடுத்தான், திருத்தமான திருவடிகளில் சிலம்புகள் ஒலிக்கும்படி உமையம்மையோடு அரிய துணைவனாகத் திகழ்கிற அந்தப் பெருமான் என்னை ஆண்டுகொண்டான்,
அந்த அற்புதத்தை என்னால் அறிந்துகொள்ள இயலவில்லையே!
சொல்லின்பம்
மாயக் கடித்த வாயிலே: மாயப் பாம்புகள் கடித்தபோது
கழறி: புலம்பி
பெருமறை: பெருமைக்குரிய வேதங்கள்
அக்காரம் முன் தீற்றிய: சர்க்கரையை முன்னின்று ஊட்டிய
புகன்று: சொல்லி
கரும்குழலினார்: கருமையான கூந்தலைக் கொண்ட பெண்கள்
ஏறுண்டு: தாக்கப்பட்டு
திருந்து சேவடி: திருத்தமான திருவடிகள்
சிலம்பிட: ஒலிக்க
திருவொடும் அகலாதே அரும் துணைவனாய்: உமையம்மையைப் பிரியாத அரிய நண்பனாக