முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 41 – அற்புதப் பத்து - 3

செல்வங்களில் திளைப்பது, உறவினர்களுடன் பேசிச் சிரிப்பது, மற்ற இன்பங்களை அனுபவிப்பது, பெண்களுடன் கூடுவது

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:10 PM
பகிர்:

சிவபெருமானின் அற்புதங்களை வியந்து பாடிய பாடல்கள் இவை.

திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை. பத்து பாடல்களின் தொகுப்பு.

230

பாடலின்பம்

மாடும் சுற்றமும் மற்றுஉள போகமும் மங்கையர் தம்மொடும்

கூடி அங்குஉள குணங்களால் ஏறுண்டு குலாவியே திரிவேனை

வீடுதந்து, என்றன் வெம்தொழில் வீட்டிட மென்மலர்க் கழல் காட்டி

ஆடுவித்து எனது அகம்புகுந்து ஆண்டதோர் அற்புதம் அறியேனே.

*

வணங்கும் இப்பிறப்பு, இறப்பு இவை நினையாது மங்கையர் தம்மொடும்
பிணைந்து வாய்இதழ்ப் பெருவெள்ளத்து அழுந்தி நான் பித்தனாய்த் திரிவேனைக்
குணங்களும் குறிகளும் இலாக் குணக்கடல் கோமளத்தொடும் கூடி
அணைந்து வந்து எனை ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே.


பொருளின்பம்

செல்வங்களில் திளைப்பது, உறவினர்களுடன் பேசிச் சிரிப்பது, மற்ற இன்பங்களை அனுபவிப்பது, பெண்களுடன் கூடுவது போன்றவற்றைத்தான் நான் விரும்பினேன், இந்தக் குணங்கள் என்னைத் தாக்கித் துன்புறுத்தின, ஆனாலும் நான் அந்தப் பழக்கங்களையே பின்பற்றிவந்தேன்,

அப்படிப்பட்ட எனக்கு, சிவபெருமான் வீடுபேறு என்கிற பெரும் செல்வத்தைத் தந்தான், என்னுடைய கொடும்செயல்கள் அழியும்படி தன்னுடைய மென்மலர்த் திருவடிகளைக் காட்டினான், என்னை ஆனந்தத்தில் ஆடவைத்தான், எனக்குள் புகுந்து ஆண்டான்,

அந்த அற்புதத்தை என்னால் அறிந்துகொள்ள இயலவில்லையே!

*

மாறி மாறி வருகிற இந்தப் பிறப்பு, இறப்பு என்கிற பிறவிச்சுழலை நினைக்காமல், பெண்களோடு கூடித் திரிந்தேன், அவர்களுடைய வாயில், இதழ்களில் ஊறுகிற உமிழ்நீர் என்கிற பெருவெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தேன், பித்தனாகத் திரிந்தேன்,

எனினும், (மனிதர்களைப்போல் வந்து செல்கிற) குணங்களும் பெயர்களும் இல்லாத குணக்கடலான சிவபெருமான் (என் பிழைகளை மன்னித்தான்), மென்மையான உமையன்னையுடன் சேர்ந்து எனக்குக் காட்சி கொடுத்தான், என்னை ஆண்டுகொண்டான்,

அந்த அற்புதத்தை என்னால் அறிந்துகொள்ள இயலவில்லையே!

சொல்லின்பம்

மாடு: செல்வம்

சுற்றம்: உறவினர்கள்

மற்று உள போகமும்: இவற்றைத் தவிர மீதமுள்ள இன்பங்கள்

ஏறுண்டு: தாக்கப்பட்டு

குலாவியே திரிவேனை: கூடித் திரிகிற என்னை

வீடு: வீடு பேறு/ மோட்சம்

வெம் தொழில் வீட்டிட: கொடிய செயல்கள் அழிந்திட

கழல்: ஆண்கள் காலில் அணியும் வீர அணிகலன் / இங்கே சிவபெருமானின் திருவடிகளைக் குறிக்கிறது

ஆடுவித்து: ஆடச்செய்து

அகம்: உள்ளே

வணங்கும்: திரும்பத் திரும்ப வருகிற

பிணைந்து: கூடி

அழுந்தி: மூழ்கி

கோமளம்: மென்மையான பெண் / உமையம்மை

முழு கட்டுரையைப் படிக்க →