முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 41 – அற்புதப் பத்து - 4

பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களின் மை பூசிய கருமையான கண்களால் தாக்கப்பட்டுக் கிடந்தேன்,

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:10 PM
பகிர்:

சிவபெருமானின் அற்புதங்களை வியந்து பாடிய பாடல்கள் இவை.

திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை. பத்து பாடல்களின் தொகுப்பு.

231

பாடலின்பம்

இப்பிறப்பினில் இணைமலர் கொய்துநான் இயல்பொடு அஞ்சுஎழுத்து ஓதித்
தப்புஇலாது பொற்கழல்களுக்குஇடாது நான் தடமுலையார்தங்கள்
மைப்புஉலாம் கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை மலர்அடிஇணை காட்டி
அப்பன் என்னை வந்து ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே.

*

ஊசல்ஆடும் இவ்உடல்,உயிர் ஆயின இருவினை அறுத்துஎன்னை
ஓசையால் உணர்வார்க்கு உணர்வு அரியவன் உணர்வு தந்து ஒளியாக்கிப்
பாசம்ஆனவை பற்றுஅறுத்து உயர்ந்த தன் பரம்பெரும்கருணையால்
ஆசைதீர்த்து அடியார் அடிக்கூட்டிய அற்புதம் அறியேனே.

பொருளின்பம்

இந்தப் பிறவியிலே நான் பொருத்தமான மலர்களைப் பறித்து, ‘நமசிவாய’ என்கிற ஐந்தெழுத்து மந்திரத்தை இயல்பாக ஓதி, சிவபெருமானின் பொற் திருவடிகளில் சமர்ப்பித்துப் பிழையில்லாத முறையில் அவனை வழிபடவில்லை,

பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களின் மை பூசிய கருமையான கண்களால் தாக்கப்பட்டுக் கிடந்தேன்,

அப்படிப்பட்ட என்னையும் எம்பெருமான் ஏற்றுக்கொண்டான், தன்னுடைய மலர்த் திருவடிகளை எனக்குக் காட்டினான், என் அப்பன் நேரில் வந்து என்னை ஆட்கொண்டான்,

அந்த அற்புதத்தை என்னால் அறிந்துகொள்ள இயலவில்லையே!

*

இந்த உடலும் உயிரும் ஊஞ்சல் ஆடுவதுபோல் இங்கும் அங்கும் சென்று பிறவியெடுக்கிற இயல்பைக் கொண்டவை. அதற்குக் காரணமாக அமைவது, நல்வினை, தீவினை என்கிற வினைகள்தான்.

எம்பெருமான் என்னுடைய இருவினைகளையும் அறுத்தான் (பிறவாநிலை அருளினான்), ஓசையால் எல்லாவற்றையும் உணர்கிறவர்களால்கூட உணர இயலாத அரியவனான அந்தச் சிவபெருமான் எனக்குச் சிவ உணர்வைத் தந்தான், உள்ளே ஒளிபெறச் செய்தான், என்னுடைய பாசங்கள், பற்றுகளை அறுத்தான், தன்னுடைய உயர்ந்த பெரும் கருணையினாலே என்னுடைய ஆசைகளைப் போக்கினான், தன்னுடைய அடியவர்கள் கூட்டத்தில் என்னையும் சேர்த்தான்,

அந்த அற்புதத்தை என்னால் அறிந்துகொள்ள இயலவில்லையே!

சொல்லின்பம்

இணைமலர் கொய்து: பொருத்தமான மலர்களைப் பறித்து

அஞ்செழுத்து: நமசிவாய

பொற்கழல்கள்: பொன்னாலான கழல் என்கிற ஆண்கள் அணியும் வீர ஆபரணம்/ இங்கே சிவபெருமானின் திருவடிகளைக் குறிக்கிறது

தடமுலையார்: பெரிய மார்பகங்களைக் கொண்டவர்கள்

மைப்பு: மை பூசிய கருமையான கண்கள்

ஏறுண்டு: தாக்கப்பட்டு

ஊசல்: ஊஞ்சல்

இருவினை: நல்வினை, தீவினை

உணர்வு அரியவன்: உணர்வதற்கு அரியவன்

பரம் பெரும் கருணை: உயர்ந்த பெரிய கருணை

அடியார் அடிக்கூட்டிய: அடியார் கூட்டத்தில் சேர்த்த

முழு கட்டுரையைப் படிக்க →