பகுதி 42 – சென்னிப் பத்து - 2
பெண்களே, என்னைப் பாருங்கள், நம்முடைய தலைவன், நம்மை அடிமைகொண்டவன், தென்னை மரங்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் வீரன், நாயகன் சிவபெருமான்,
‘சென்னி’ என்றால் தலை என்று பொருள். சிவபெருமானின் திருவடிகளில் பக்தர்கள் தலைவணங்குகின்ற தன்மையைப் பாடுகிறார் மாணிக்கவாசகர்.
இந்தப் பாடல்கள் திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை.
பத்து பாடல்களின் தொகுப்பு.
234
பாடலின்பம்
நங்கைமீர் எனை நோக்குமின், நங்கள் நாதன், நம் பணிகொண்டவன்,
தெங்குசோலைகள்சூழ் பெருந்துறை மேய சேவகன், நாயகன்
மங்கைமார் கையில் வளையும் கொண்டு எம் உயிரும் கொண்டு எம் பணிகொள்வான்,
பொங்கு மாமலர்ச் சேவடிக்கணம் சென்னி மன்னிப் பொலியுமே.
*
பத்தர் சூழப் பராபரன் பாரில் வந்து பார்ப்பான்எனச்
சித்தர் சூழச் சிவபிரான் தில்லை மூதூர் நடம்செய்வான்,
எத்தன்ஆகி வந்து இல்புகுந்து எமை ஆளும்கொண்டு எம் பணிகொள்வான்,
வைத்த மாமலர்ச் சேவடிக்கணம் சென்னி மன்னி மலருமே.
பொருளின்பம்
பெண்களே, என்னைப் பாருங்கள், நம்முடைய தலைவன், நம்மை அடிமைகொண்டவன், தென்னை மரங்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் வீரன், நாயகன் சிவபெருமான்,
(அவனைக்கண்டு காதல் கொண்ட பெண்கள் பிரிவுத்துயரால் இளைத்து வருந்துவார்கள், அவர்களுடைய கைகளில் உள்ள வளையல்கள் கழன்றுவிழும்), அந்த வளையல்களையும் நம்முடைய உயிரையும் கவர்ந்துகொண்டு, அவன் நம்மை அடிமைகளாக்கிக்கொள்வான், அந்தச் சிவபெருமானின் அழகு பொங்கும் தாமரை மலரைப் போன்ற திருவடிகளில் நம்முடைய தலை பணிந்து பொலியட்டும்.
*
பரம்பொருளானவன் சிவபெருமான், பக்தர்கள் சூழ்ந்து நிற்க இந்த உலகில் பிராமணக்கோலத்தில் எனக்காக எழுந்தருளினான், சித்தர்கள் சூழ்ந்து நிற்க தில்லையாகிய பழைமையான ஊரில் நடனம் செய்வான்,
அவனே எத்தனாகவும் தோன்றுவான், நமக்கே தெரியாமல் நம் உடலாகிய வீட்டுக்குள் புகுவான், நம்மை அடிமையாக்கிக்கொண்டு ஆளுவான், அந்தச் சிவபெருமானின் சூட்டப்படுகிற மலர் போன்ற திருவடிகளில் நம்முடைய தலை பணிந்து மலரட்டும்.
சொல்லின்பம்
நங்கைமீர்: பெண்களே
நோக்குமின்: பாருங்கள்
நங்கள் நாதன்: நமது நாயகன்
பணிகொண்டவன்: அடிமையாக்கிக்கொண்டவன்
தெங்கு: தென்னைமரம்
பெருந்துறை மேய சேவகன்: திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் நாயகன்
மங்கைமார்: பெண்கள்
வளை: வளையல்
பொங்கு மாமலர்: அழகு பொங்கும் சிறந்த மலர்
சேவடிக்கணம்: திருவடிகள்
சென்னி: தலை
மன்னி: நெருங்கி
பொலியுமே: திகழுமே
பத்தர்: பக்தர்
பராபரன்: உயர்ந்த பரம்பொருள்
பாரில்: உலகில்
மூதூர்: பழைமையான ஊர்
நடம் செய்வான்: நடனம் செய்வான்
எத்தன்: ஏமாற்றுபவன் / நம்மையும் அறியாமல் நமக்குள் புகுவதால்
இல்புகுந்து: வீட்டில் / உடலில் / உள்ளத்தில் நுழைந்து
வைத்த மாமலர்: சூட்டிய சிறந்த மலர்