முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 42 – சென்னிப் பத்து - 3

மாய வாழ்க்கையை உண்மை என்று கருதி நான் மதித்துவிடாதபடி செய்து நல்வழியைக் காட்டினான் சிவபெருமான்,

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:10 PM
பகிர்:

‘சென்னி’ என்றால் தலை என்று பொருள். சிவபெருமானின் திருவடிகளில் பக்தர்கள் தலைவணங்குகின்ற தன்மையைப் பாடுகிறார் மாணிக்கவாசகர்.

இந்தப் பாடல்கள் திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை.

பத்து பாடல்களின் தொகுப்பு.

235

பாடலின்பம்

மாய வாழ்க்கையை மெய்என்றுஎண்ணி மதித்திடாவகை நல்கினான்,

வேயதோள் உமைபங்கன் எங்கள் திருப்பெருந்துறை மேவினான்,

காயத்துஉள் அமுதுஊறஊற நீ கண்டுகொள்என்று காட்டிய

சேய மாமலர்ச் சேவடிக்கணம் சென்னி மன்னித் திகழுமே.

*

சித்தமே புகுந்து எம்மை ஆட்கொண்டு தீவினை கெடுத்து உய்யலாம்

பத்தி தந்து தன் பொற்கழற்கணே பன்மலர் கொய்து சேர்த்தலும்

முத்தி தந்து இந்த மூவுலகுக்கும் அப்புறத்து எமை வைத்திடும்

அத்தன் மாமலர்ச் சேவடிக்கணம் சென்னி மன்னி மலருமே.

பொருளின்பம்

மாய வாழ்க்கையை உண்மை என்று கருதி நான் மதித்துவிடாதபடி செய்து நல்வழியைக் காட்டினான் சிவபெருமான்,

மூங்கில்போன்ற தோள்களைக் கொண்ட உமையம்மையைத் தன் உடலில் ஒரு பங்காகக் கொண்டவன், எங்களுடைய திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருப்பவன், என்னுள்ளே அமுதம் ஊறச்செய்து, ‘அதை நீ கண்டுகொள்’ என்று காட்டியவன், அந்தச் சிவபெருமானின் செந்தாமரை போன்ற மலர்த் திருவடிகளில் நம்முடைய தலை பணிந்து திகழட்டும்.

*

இறைவன் நம் மனத்தில் புகுந்து நம்மை ஆள்பவன், தீவினைகளைக் கெடுப்பவன், பிழைப்பதற்கு ஏற்ற பக்தியை நமக்குத் தருபவன்,

பல மலர்களைப் பறித்து, அவனது பொன்போன்ற திருவடிகளில் வைத்து வணங்கினால், முக்திச்செல்வத்தைத் தருவான், மூன்று உலகங்களுக்கும் அப்பாலிருக்கும் பேரின்ப உலகத்தில் நம்மை வைப்பான், நம் தந்தையாகிய அந்தச் சிவபெருமானின் சிறந்த மலர்போன்ற திருவடிகளில் நம்முடைய தலை பணிந்து மலரட்டும்.

சொல்லின்பம்

நல்கினான்: வழங்கினான்

வேய தோள் உமைபங்கன்: மூங்கில் போன்ற தோள்களை உடைய உமையம்மையைத் தன் உடலில் ஒரு பங்காகக் கொண்டவன் / சிவபெருமான்

மேவினான்: எழுந்தருளினான்

காயம்: உடல்

சேய மாமலர்: சிவந்த, சிறந்த மலர் / செந்தாமரை

சேவடிக்கணம்: திருவடிகள்

சென்னி: தலை

மன்னி: நெருங்கி

சித்தமே: மனத்திலே

உய்யலாம்: பிழைப்பதற்காக

பத்தி: பக்தி

பொன்கழல்கணே: பொன்னாலான கழல் என்கிற ஆண்கள் காலில் அணியும் வீர ஆபரணம் / இங்கே சிவபெருமானின் திருவடிகளைக் குறிக்கிறது

பல்மலர் கொய்து: பல மலர்களைப் பறித்து

முத்தி: முக்தி / வீடுபேறு

அத்தன்: தந்தை

முழு கட்டுரையைப் படிக்க →