பகுதி 42 – சென்னிப் பத்து - 4
பிறவியாகிய இந்தக் கடலை நீந்திக் கடப்பதற்கு, தன்னுடைய பேரருளையே (தோணியாகத்) தந்து அருள்செய்தான் சிவபெருமான்,
‘சென்னி’ என்றால் தலை என்று பொருள். சிவபெருமானின் திருவடிகளில் பக்தர்கள் தலைவணங்குகின்ற தன்மையைப் பாடுகிறார் மாணிக்கவாசகர்.
இந்தப் பாடல்கள் திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை.
பத்து பாடல்களின் தொகுப்பு.
236
பாடலின்பம்
பிறவி என்னும் இக்கடலை நீத்தத் தன் பேரருள் தந்துஅருளினான்,
அறவை என்று அடியார்கள் தங்கள் அருள்குழாம் புகவிட்டு நல்
உறவுசெய்து எனை உய்யக்கொண்ட பிரான் தன் உண்மைப் பெருக்கமாம்
திறமை காட்டிய சேவடிக்கணம் சென்னி மன்னித் திகழுமே.
*
புழுவினால் பொதிந்திடு குரம்பையில் பொய்தனை ஒழிவித்திடும்
எழில்கொள் சோதி, எம் ஈசன், எம்பிரான், என்னுடை அப்பன் என்றுஎன்று
தொழுத கையினர் ஆகித் தூய்மலர்க் கண்கள் நீர்மல்கும் தொண்டர்க்கு
வழுஇலா மலர்ச் சேவடிக்கணம் சென்னி மன்னி மலருமே.
பொருளின்பம்
பிறவியாகிய இந்தக் கடலை நீந்திக் கடப்பதற்கு, தன்னுடைய பேரருளையே (தோணியாகத்) தந்து அருள்செய்தான் சிவபெருமான்,
நான் ஆதரவில்லாதவன் என்பதைத் தெரிந்துகொண்டு, தன்னுடைய அடியவர்கள் கூட்டத்தில் என்னைச் சேர்த்தான், அவர்களை எனக்கு நல்ல உறவாக்கினான், என்னைப் பிழைக்கச்செய்தான்,
நம் தலைவனாகிய அந்தச் சிவபெருமான், தன்னுடைய மெய்யான பேரருள் பொங்கிவரும்படி தன் கருணைத்தன்மையைக் காட்டினான், அவனது திருவடிகளில் நம்முடைய தலை பணிந்து திகழட்டும்.
*
அழகிய சோதிவடிவானவன், நம் ஈசன், நம் தலைவன், நம்முடைய தந்தை, இப்படிப் பலவிதமாகச் சிவபெருமானைப் போற்றி, கைகளால் தொழுது, தூய்மையான மலர் போன்ற கண்களில் கண்ணீர் வழிய வணங்குகிற தொண்டர்களுக்கு அவன் அருள் செய்வான், புழுக்கள் நெளிகிற உடம்பு என்கிற இந்தப் பொய்யான உணர்வை அகற்றுவான்.
குற்றமில்லாத அவனது மலர்த் திருவடிகளில் நம்முடைய தலை பணிந்து மலரட்டும்.
சொல்லின்பம்
நீத்த: நீந்திக் கடக்க
அறவை: ஆதரவற்றவன்
அருள்குழாம்: பக்தர்கள் கூட்டம்
உய்யக்கொண்ட: பிழைக்கச்செய்த
பிரான்: தலைவன்
திறமை: தன்மை
சேவடிக்கணம்: திருவடிகள்
சென்னி: தலை
மன்னி: நெருங்கி
குரம்பை: உடல்
தூய்மலர்: தூய்மையான மலர்
வழுஇலா: குற்றமில்லாத