முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 42 – சென்னிப் பத்து - 5

எதற்கும் பயனில்லாமல் திரிந்துகொண்டிருந்தேன், என்னை ‘வா’ என்று அழைத்து, என்னுடைய கொடுமையான தீவினைப் பகைகளை அகற்றினான் சிவபெருமான்,

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:10 PM
பகிர்:

‘சென்னி’ என்றால் தலை என்று பொருள். சிவபெருமானின் திருவடிகளில் பக்தர்கள் தலைவணங்குகின்ற தன்மையைப் பாடுகிறார் மாணிக்கவாசகர்.

இந்தப் பாடல்கள் திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை.

பத்து பாடல்களின் தொகுப்பு.

237

பாடலின்பம்

வம்பனாய்த் திரிவேனை வா என்று வல்வினைப் பகை மாய்த்திடும்
உம்பரான், உலகு ஊடுஅறுத்து அப்புறனாய் நின்ற எம்பிரான்,
அன்பர்ஆனவர்க்கு அருளி, மெய் அடியார்கட்கு இன்பம் தழைத்திடும்
செம்பொன் மாமலர்ச் சேவடிக்கணம் சென்னி மன்னித் திகழுமே.

*

முத்தனை, முதல்சோதியை, முக்கண் அப்பனை, முதல் வித்தினை,
சித்தனை, சிவலோகனை திருநாமம் பாடித் திரிதரும்
பத்தர்காள், இங்கே வம்மின், நீர்உங்கள் பாச்ம தீரப் பணிமினோ
சித்தம் ஆர்தரும் சேவடிக்கணம் சென்னி மன்னித் திகழுமே.


பொருளின்பம்

எதற்கும் பயனில்லாமல் திரிந்துகொண்டிருந்தேன், என்னை ‘வா’ என்று அழைத்து, என்னுடைய கொடுமையான தீவினைப் பகைகளை அகற்றினான் சிவபெருமான்,

வானுலகின் தெய்வம், உலகங்கள் அனைத்தையும் கடந்து, அதற்கு அப்பாலும் நிற்கிற நம் தலைவன், தன்னுடைய அன்பர்களான மெய்யடியார்களுக்கு அருள்செய்து அவர்கள் வாழ்வில் இன்பம் தழைக்கச் செய்கிறவன், அவனது செம்பொன் போன்ற சிறந்த மலர்த் திருவடிகளில் நம்முடைய தலை பணிந்து திகழட்டும்.

*

முக்திப் பேற்றைத் தருகிறவனை, உலகின் முதல்வனாகத் திகழும் சோதி வடிவானவனை, மூன்று கண்களை உடைய நம் அப்பனை, அனைத்துக்கும் முதல் வித்தானவனை, சித்தனை, சிவலோகனைப் பாடி, அவனது திருநாமங்களைச் சொல்லித் திரியும் பக்தர்களே, வாருங்கள், உங்களுடைய பற்றுகளெல்லாம் நீங்கும்படி அந்தப் பெருமானை வணங்குங்கள்,

நெஞ்சத்தில் நிறைகிற அந்தச் சிவபெருமானின் திருவடிகளில் நம்முடைய தலை பணிந்து திகழட்டும்.

சொல்லின்பம்

வம்பன்: பயனற்றவன்

வல்வினை: கொடிய தீவினை

உம்பரான்: வானுலகின் தெய்வம்

உலகு ஊடு அறுத்து அப்புறத்தனாய் நின்ற எம்பிரான்: உலகங்கள் அனைத்தையும் கடந்து, அதற்கு அப்பாலும் நிற்கிற நம் தலைவன்

தழைத்திடும்: தழைக்கச்செய்யும் / பெருகச்செய்யும்

சேவடிக்கணம்: திருவடி

சென்னி: தலை

மன்னி: நெருங்கி

முத்தன்: முக்திப்பேறு / வீடுபேறு வழங்குகிறவன்

சோதி: ஒளிவடிவானவன்

வித்து: விதை

பத்தர்காள்: பக்தர்களே

வம்மின்: வாருங்கள்

பாசம்: உலகப் பற்றுகள்

பணிமினோ: வணங்குங்கள்

சித்தம் ஆர்தரும்: நெஞ்சத்தில் நிறையும்

முழு கட்டுரையைப் படிக்க →