பகுதி - 331
பதச் சேதம் | சொற் பொருள் |
கரி முக கடம் களிறு அதிக கற்பக மத கஜ முகத்து அவுணனை கடி யானை Advertisement
| கரிமுக: யானைமுக; கடகளிறு: மதங்கொண்ட யானை; கஜமுகத்து அவுணனை: கஜமுகாசுரனை; கடி யானை: அடக்கிய யானை; |
கடலை எள் பயறு நல் கதலியின் கனி பல கனி வயிற்றினில் அடக்கிய வேழம்
| கதலி: வாழைப்பழம்; |
அரி முகத்தினன் எதிர்த்திடு களத்தினின் மிகுத்த அமர் புரி கணபதிக்கு இளையோனே
| அரி முகத்தினன்: அழகிய முகத்தினன்; |
அயில் எடுத்து அசுரர் வெற்பு அலைவு உற பொருது வெற்றியை மிகுத்த அறுமுக குமரேசா
| அயில்: கூர்மை, ஆகுபெயராக வேல்; |
நரி மிகு கிளைகளை பரி என கடிவளம் கையில் பிடித்து எதிர் நடத்திடும் ஈசன்
| மிகு கிளைகளை: பெரிய கூட்டங்களை; கடிவளம்: கடிவாளம்; |
நடனம் இ படி இடத்து இ(ன்)னும் இசை தரையினில் கரி உரித்து அணிபவர்க்கு ஒரு சேயே
| நடனம்: திருவிளையாடல்; இப்படி: இ படி, இந்த பூமியில்; |
துரி பெற சரி பொழில் கன வயல் அழகு உள துரிய மெய் தரளம் மொய்த்திட வீறி
| துரி: சுமை (காய் கனிகளின் சுமை); சரி பொழில்: சரிந்திருக்கின்ற சோலைகள்; துரிய: தூய்மையான; தரளம்: முத்து; மொய்த்திட: நெருங்கிக் கிடக்க; வீறி: பொங்கியெழுந்து; (வீறுதல்: மேம்படுதல், மிகுதல்); |
சுரர் துதித்திட மிகுத்து இயல் தழைத்து அருணையில் சுடர் அயில் சரவண பெருமாளே.
| சுரர்: தேவர்; இயல்: குணம் (இயல்பு); அருணை: திருவண்ணாமலை; அயில்: வேல்; |
கரிமுகக் கடகளிற் றதிககற்பக ... யானைமுகன்; மதங்கொண்ட வேழம்; சிறந்த கற்பக விநாயகன்;
மதக் கஜமுகத்து அவுணனைக் கடியானை … மதங்கொண்டவனும் யானைமுகம் கொண்டவனுமான கஜமுகாசுரனை வென்றயானை;
கடலை எள் பயறு நற் கதலியிற் கனிபலக் கனி வயிற் றினிலடக்கிய வேழம்... கடலை, எள், பயறு, நல்ல வாழைப்பழம், பலாப்பழம் என்று எல்லாவற்றையும் வயிற்றில் அடக்கிய யானை;
அரிமுகத்தினன் எதிர்த்திடு களத்தினின் மிகுத்து அமர்புரிக் கணபதிக்கு இளையோனே... அழகிய முகத்தவன்; எதிர்க்கின்ற போர்க்களத்தில் பெரிய போரைச் செய்கின்றவன் (இப்படிப்பட்ட) கணபதியின் தம்பியே!
அயிலெடுத்து அசுரர்வெற்பு அலைவுறப் பொருது ... வேலை எடுத்து, மலைபோன்ற அசுரர்களின் (கூட்டம்) கலங்கும்படியாகப் போரிட்டு,
வெற்றியைமிகுத்த அறுமுகக் குமரேசா ... மிகப்பெரிய வெற்றியை அடைந்த ஆறுமுகனே! குமரேசனே!
நரிமிகுக் கிளைகளைப் பரியென கடிவளக் கையில்பிடித்து எதிர்நடத்திடும் ஈசன்... பெரிய நரிக் கூட்டங்களைக் குதிரையாக மாற்றி, அவற்றின் கடிவாளத்தைக் கையிலே பிடித்தபடி பாண்டியனுக்கு எதிரே அவற்றை நடத்திவந்த சொக்கேசரும்;
நடனம் இப் படியிடத்தினும் இசை... தம்முடைய பல திருவிளையாடல்களை இந்த உலகத்திலே நடத்தியவரும்;
தரையினில் கரியுரித்து அணிபவற்கு ஒருசேயே ...உலகில் யானையை உரித்து அதன் தோலை அணிபவருமான பரமசிவனாருடைய ஒப்பற்ற புதல்வனே!
துரிபெறச் சரிபொழிற் கனவயற்கு ... (காய் கனிகளுடைய) சுமையால் சரிந்துள்ள சோலைகளிலும்; பரந்த வயல்களிலும்;
அழகுள துரியமெய்த் தரளமொய்த்திட ... அழகும் தூய்மையும் நிறைந்துள்ள முத்துகள் நெருங்கிக் கிடக்க, (அங்கே)
வீறிச் சுரர்துதித்திட மிகுத் தியல்தழைத்த அருணையிற்... தேவர்கள் பொங்கியெழுந்து துதிக்கின்ற தன்மை மிகுந்ததும், புகழ் தழைத்ததுமான திருவண்ணாமலையில்,
சுடர் அயிற் சரவணப் பெருமாளே. ... ஒளிவீசும் வேலுடன் பொலிகின்ற சரவணப் பெருமாளே!
சுருக்க உரை
யானை முகத்தையும் மதத்தையும் கொண்ட வேழமும்; கற்பக(விநாயரும்); மதங்கொண்ட யானைமுகம் கொண்ட கஜமுகாசுரனை வென்றவரும்; கடலை, எள், பயறு, வாழை, பலாப் பழங்களை வயிற்றில் அடக்கியவரும்; அழகிய முகத்தை உடையவரும்; எதிர்த்துப் போரிடும் போர்க்களத்தில் பெரும்போர் புரிபவருமான கணபதியின் இளையவனே! மலைபோன்ற பேருருவத்தை உடைய அசுரர்களின் கூட்டங்கள் கலங்கும்படியாக வேலை வீசிப் போரிட்டு பெரிய வெற்றியை அடைந்த ஆறுமுகனே! குமரேசனே!
நரியின் பெருங்கூட்டங்களைப் பரியாக்கி அவற்றின் கடிவாளத்தைப் பிடித்தபடி பாண்டியனுக்கு எதிரில் நடத்தியவரும்; இவ்வுலகில் தன்னுடைய பல திருவிளையாடல்களைச் செய்தவரும்; யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவருமான பரமேச்வரருடைய ஒப்பற்ற மகனே! காய் கனிகளின் சுமையால் கிளைகள் சரிந்து சாய்ந்திருக்கும் சோலைகளிலும்; மிகப்பரந்த வயல்களிலும் அழகும் தூய்மையும் நிறைந்த முத்துகள் நெருங்கிக் கிடக்க, அவ்விடத்திலே பொங்கியெழுந்த தேவர்கள் துதிக்கின்ற தன்மையை உடையதும்; புகழ் தழைத்ததுமான திருவண்ணாமலையில் ஒளிவீசும் வேலுடன் வீற்றிருக்கும் சரவணப் பெருமாளே!