பகுதி - 336
கடலினிடத்திலே செலுத்தப்படுகிற, உயர்ந்த இனத்தைச் சேர்ந்த பச்சை வண்ணக் குதிரைகளால் இழுக்கப்படும்
‘உததியிடை கடவுமர கதவருண குலதுரக உபலளித கனகரத சதகோடி சூரியர்கள் உதயம்’ என்று இறைவனுடைய திருப்பாதத்தை ‘சீர்பாத வகுப்’பில் வருணித்தார். ‘கடலினிடத்திலே செலுத்தப்படுகிற, உயர்ந்த இனத்தைச் சேர்ந்த பச்சை வண்ணக் குதிரைகளால் இழுக்கப்படும் பொன்மயமான தேரிலே நூறுகோடி சூரியர்கள் ஒரே சமயத்தில் உதித்தைப்போல்’ என்று பொருள்.
குறிப்பிட்ட தலத்துக்கென்றில்லாத பொதுப்பாடல்கள் வரிசையில் வரும் இந்தப் பாடலிலோ, ‘பலகோடி வெண்ணிலவுகளின் திரண்ட ஒளி ஒன்றாக எழுந்ததைப்போல் எழுந்தருள வேண்டும்’ என வேண்டுகிறார். முருகனைத் தமிழ்க் கடவுள் என்று பல பாடல்களில் வலியுறுத்துவதைப் போலவே இந்தப் பாடலிலும் செய்திருக்கிறார். பொதுவாக ‘தேவர் பெருமாளே, அமரர் பெருமாளே’ என்றெல்லாம் முடியும் இறுதிச் சீர்கள் இதில் ‘தமிழ் பெருமாளே’ என்று முடிகின்றன.
மற்ற பாடல்களைப்போல ஒவ்வோரடியின் முடிவிலும் சற்று நிறுத்தி, மடக்கடியைத் (மடக்கிய அடி. உதாரணத்துக்கு இப்பாடலில் ‘வடிவாயுடல் நடமாடுக முடியாதேன்’ என்பது முதல் மடக்கடி) தனியாகத் தொடர்வது போலில்லாமல், மடக்கடியையும் ஒரே மூச்சில் படிக்கவேண்டும். அந்த வகையில் இது சற்றே நீளமான தாள அமைப்பு. (இதைவிட மிக நீளமான தாள அமைப்புக் கொண்ட பாடல்கள் இருக்கின்றன.) இப்பாடலில் அடிக்கு 34 எழுத்துகள். இடையின மெய்களை ஒழித்து, வல்லின மெல்லின மெய்கள் எதுவும் இல்லாத பாடல். ஒவ்வொரு சீரிலும் மூன்றாவது எழுத்து நெடில். பாடலைப் பார்ப்போம்.
Advertisement
தனதானன தனதானன தனதானன தனதானன
தனதானன தனதானன தனதான
மதனேவிய கணையாலிரு வினையால்புவி கடல்சாரமும்
வடிவாயுடல் நடமாடுக முடியாதேன்
மனமாயையொ டிருகாழ்வினை யறமூதுடை
மகிழ்ஞானக அநுபூதியி னருள்மேவிப்
பதமேவுமு னடியாருடன் விளையாடுக அடியேன்முனெ
பரிபூரண கிருபாகர முடன்ஞான
பரிமேலழ குடனேறிவி ணவர்பூமழை யடிமேல்விட
பலகோடிவெண் மதிபோலவெ வருவாயே
சதகோடிவெண் மடவார்கட லெனசாமரை யசையாமுழு
சசிசூரியர் சுடராமென வொருகோடிச்
சடைமாமுடி முநிவோர்சர ணெனவேதியர் மறையோதுக
சதிநாடக மருள்வேணிய னருள்பாலா
விதியானவ னிளையாளென துளமேவிய வளிநாயகி
வெகுமாலுற தனமேலணை முருகோனே
வெளியாசையொ டடைபூவளர் மருகாமணி
வெயில்வீசிய அழகாதமிழ் பெருமாளே.