பகுதி - 339
நடனமாடுகின்ற சிவபிரான் மகிழ்ச்சியோடு காணத்தக்க விதத்தில் ஆடுவதான
பதச் சேதம் | சொற் பொருள் |
விடம் அளவி அரி பரவு விழி குவிய மொழி பதற விதறி வளை கல கல என அநுராகம் Advertisement
| அளவி: கலந்து; அரி: ரேகை; பரவு: பரவிய; விதறி: நடுங்கி; அனுராகம்: (1) அன்பு (2) காமப் பற்று. இங்கே இரண்டாம் பொருள்; |
விளைய ம்ருகமத முகுள முலை புளகம் எழ நுதலில் வியர்வு வர அணி சிதற மது மாலை
| ம்ருகமத(ம்): கஸ்தூரி; முகுள(ம்): அரும்பு, மொட்டு; புளகம்: மயிர்க்கூச்சம்; நுதல்: நெற்றி; வியர்வு: வியர்வை; மதுமாலை: தேன்நிரம்பிய (பூக்களையுடைய) மாலை; |
அடர் அளகம் அவிழ அணி துகில் அகல அமுது பொதி இதழ் பருகி உருகி அரிவையரோடே
| அடர்: அடர்த்தியான, நெருங்கியுள்ள; அளகம்: கூந்தல்; துகில்: ஆடை; அரிவையர்: பெண்கள்; |
அமளி மிசை அமளி பட விரக சலதியில் முழுகி அவசம் உறுகினும் அடிகள் மறவேனே
| அமளிமிசை: படுக்கையின் மேல்; அமளிபட: அமர்க்களப்பட; விரக சலதி: மோகக்கடல்; அவசம்: வசமிழந்த நிலை அ-வசம்; |
உடலும் முயலகன் முதுகு நெறுநெறு என எழு திமிரம் உரகர் பிலம் முடிய ஒரு பதம் ஓடி
| உடலும்: (உடறுதல்) சினக்கும்; திமிரம்: இருள்; உரகர் பிலம்: நாக லோகம் (உரகர்—நாகர், பிலம்: பாதாளம்); |
உருவ முது ககன முகடு இடிய மதி முடி பெயர உயர அகில புவனம் அதிர வீசி
|
|
கடக(ம்) கர தலம் இலக நடனம் இடும் இறைவர் மகிழ் கருத அரிய விதமோடு அழகுடன் ஆடும்
| கடகம்: கங்கணம், bracelet; |
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகமுடன் அமர் பொருத பெருமாளே.
| கலபம்: தோகை; கக: பறவை; கடவி: செலுத்தி; நிருதர்: அசுரர்; கஜ: யானை; ரத: தேர்; துரக: குதிரை; கடகம்: காலாட் படை; |
விடம் அளவி அரி பரவு விழி குவிய மொழி பதற விதறி வளை கல கல் என அநுராகம் விளைய ... விஷம் கலந்ததும்; சிவந்த ரேகைகள் பரவியதுமான கண்கள் குவிய; பேச்சில் பதற்றம் ஏற்பட; வளையல்கள் நடுங்கி அசைவதால் கலகலவெனும் ஒலி ஏற்பட; காமத்தில் பற்று உண்டாக;
ம்ருகமத முகுள முலை புளகம் எழ நுதலில் வியர்வு வர அணி சிதற மது மாலை அடர் அளகம் அவிழ அணி துகில் அகல ... கஸ்தூரிக் கலவையை அணிந்த மொட்டுப் போன்ற மார்பகத்தில் மயிர்க்கூச்சம் ஏற்பட; நெற்றியில் வியர்வை துளிர்க்க; ஆபரணங்கள் சிதறிவிழ; தேன் ததும்பும் மலர்களால் தொடுக்கப்பட்ட மாலை அடர்ந்து நெருங்கியிருக்கும் கூந்தல் அவிழ; அணிந்திருக்கும் ஆடை விலக;
அமுது பொதி இதழ் பருகி உருகி அரிவையரோடே அமளி மிசை அமளி பட விரக சலதியில் முழுகி அவசம் உறுகினும் அடிகள் மறவேனே ... அமுதம் பொதிந்துள்ள உதடுகளைப் பருகி, உருக்கம் அடைந்து, பெண்களோடு படுக்கையிலே மிகுந்த ஆரவாரமாக மோகக் கடலில் முழுகித் தன் வசமிழக்கும் நிலையிலும் உன்னுடைய திருவடிகளை மறக்க மாட்டேன்.
உடலு(ம்) முயலகன் முதுகு நெறுநெறு என எழு திமிர(ம்) உரகர் பில(ம்) முடிய ஒரு பதம் ஓடி உருவ முது ககன முகடு இடிய மதி முடி பெயர உயர... சீற்றத்தோடு வந்த முயலகனுடைய* முதுகு நெறுநெறென்று முறியும்படியும்; இருள் பரவியதான நாகலோகத்திலும் பாதாளத்திலும் ஒப்பற்றதான ஒரு பாதம் ஆழ அழுந்தி உருவும்படியும்; தொன்மையான அண்டத்தின் உச்சி இடியும்படியும், சந்திரனின் முடி பெயரும்படியும்** உயர்ந்தும்;
(* முயலகன், தாருக வனத்து முனிவர்கள் சிவபிரான்மீது ஏவிய பூதம். இவனை மிதித்தபடிதான் நடராசர் நடனமாடுகிறார். ** அழுந்துகின்ற பாதம், நாக, பாதாள லோகங்களை ஊடுருவுகிறது; அடுத்து உயர்கின்ற பாதத்தால் அண்டமுகடு இடிபடுகிறது; சந்திரன் தன் இடத்தைவிட்டுப் பெயர்கிறது. உயரும் பாதத்தின் செயல் அடுத்த அடியிலும் தொடர்கிறது.)
அகில புவனம் அதிர வீசி கடக(ம்) கர தலம் இலக நடனம் இடும் இறைவர் மகிழ் கருத அரிய விதமோடு அழகுடன் ஆடும் கலப கக மயில் கடவி ... எல்லா உலகங்களும் அதிரும்படியாக (பாம்பைக்) கங்கணமாகத் தரித்த கைகள் வீசவும்; நடனமாடுகின்ற சிவபிரான் மகிழ்ச்சியோடு காணத்தக்க விதத்தில் ஆடுவதான தோகையையுடைய பறவையாம் மயிலைச் செலுத்தி;
நிருதர் கஜ ரத துரக கடகமுடன் அமர் பொருத பெருமாளே. ... அசுரர்களுடைய ரத, கஜ, துரக பதாதி என்ற நால்வகைச் சைனியங்களோடு போரிட்ட பெருமாளே!
சுருக்க உரை
கோபத்தோடு எதிர்த்துவந்த முயலகன் என்ற பூதத்தின் முதுகு நெறுநெறன முறியும்படி அதன் முதுகில் மிதித்த ஒரு பாதம், நாகலோகம், பாதாளம் எல்லாவற்றையும் ஊடுருவவும்; உயர்த்திய மறுபாதத்தால் ஆகாய உச்சி இடியவும், சந்திரன் இடம்பெயரவும், எல்லா உலகங்களும் அதிரும்படியாக (பாம்புகளைக்) கங்கணமாக அணிந்த கைகளை வீசி நடனமாடும் சிவபிரான் மகிழ்ச்சியடையும்படியாக அழகாக ஆடுகின்ற மயிலை நடத்தி, அசுரர்களுடைய நால்வகைப் படைகளோடும் போரிட்ட பெருமாளே!
விஷம் கலந்ததும்; செவ்வரி படர்ந்ததுமான அழகிய கண்கள் குவிய; பேச்சிலே பதற்றம் தோன்ற; கையிலே வளையல்கள் கலகலவென ஒலிக்க; காமத்திலே பற்று தோன்றி, கஸ்தூரி பூசப்பெற்ற மொட்டுபோன்ற தனங்களில் மயிர்க்கூச்சம் ஏற்பட; நெற்றியிலே வியர்வை அரும்ப; கூந்தல் கலைந்து அவிழ; அணிந்திருக்கும் ஆடை நெகிழ்ந்து விலக, அமுதம் ஊறும் உதடுகளைப் பருகியபடி மனம் அதிலே உருகி நான் காமக்கடலிலே முழுகிக் கிடப்பேனாயினும் உன்னுடைய திருவடிகளை ஒருபோதும் மறக்க மாட்டேன். (உன்னுடைய அடிகளை மறக்காதவருக்குக் காம இச்சை தோன்ற வழியில்லை எனினும், தோன்ற முடியாத அப்படிப்பட்ட நிலையிலும் உன் திருவடிகளை மறக்க மாட்டேன்.)