பகுதி - 345
தெளிவான அறியு மயங்கிப்போய் நான் வீணில் இறந்துபோகாதபடி,
பதச் சேதம் | சொற் பொருள் |
எனை அடைந்த குட்ட(ம்) வினை மிகுந்த பித்தம் எரி வழங்கு(ம்) வெப்பு வலி பேசா Advertisement
| வெப்பு: காய்ச்சல்; பேசா: பேசமுடியாத, சொல்லஒண்ணாத; |
இகலி நின்று அலைக்கும் முயலகன் குலைப்பொடு இருமல் என்று உரைக்கும் இவை ஓடே
| இகலி: மாறுபட்டு, பகைத்து; முயலகன்: காக்கை வலிப்பு; குலைப்பு+ஒடு: நடுக்கத்தோடு (குலைப்பு=நடுக்கம்); |
மனைகள் பெண்டிர் மக்கள் தமை நினைந்து சுத்த மதி மயங்கி விட்டு மடியாதே
|
|
மருவி இன்று எனக்கு மரகதம் சிறக்கும் மயிலில் வந்து முத்தி தரவேணும்
| மருவி: அருகே வந்து—முன்னே தோன்றி; மரகதம் சிறக்கும்: பச்சை வண்ணம் சுடர்விடும்; |
நினை வணங்கு பத்தர் அனைவரும் தழைக்க நெறியில் நின்ற வெற்றி முனை வேலா
| முனைவேலா: (கூரான) முனையை உடைய வேலன்; |
நிலை பெறும் திருத்தணியில் விளங்கு சித்ர நெடிய குன்றில் நிற்கும் முருகோனே
| சித்ர: அழகிய; நெடிய: உயர்ந்த |
தினை விளங்கல் உற்ற புன இளம் குறத்தி செயல் அறிந்து அணைக்கும் மணி மார்பா
| விளங்கலுற்ற: செழித்து வளர்ந்துள்ள; புனம்: வயல்; |
திசை முகன் திகைக்க அசுரர் அன்று அடைத்த சிறை திறந்து விட்ட பெருமாளே.
| திசைமுகன்: பிரமன்; |
எனையடைந்த குட்டம் வினைமிகுந்த பித்தம் ... எனக்கு வந்து சேர்ந்துள்ள குஷ்டமும், வினைகளும், அதிகமான பித்தமும்;
எரிவழங்கு வெப்பு வலி ... வெப்பத்தால் எரிக்கின்ற காய்ச்சலும்; வலியும்;
பேசா இகலி நின்றலைக்கு முயலகன் ... சொல்லமுடியாத வலியும்; (என்னோடு) பகைகொண்டதுபோல வருத்துகின்ற முயலகன் என்னும் காக்கை வலிப்பு நோயும்;
குலைப்பொடு இருமலென்று உரைக்கும் இவையோடே ... நடுக்கமாகிய நோயும்; இருமலும் இவைமுதலாகச் சொல்லப்படும் நோய்களோடு,
மனைகள் பெண்டிர் மக்கள் தமைநினைந்து ... வீடு, (தன்னைச் சேர்ந்த) பெண்கள், பிள்ளைகள் என்று இவர்களை நினைத்தபடி,
சுத்த மதிம யங்கி விட்டு மடியாதே ... தெளிவான அறியு மயங்கிப்போய் நான் வீணில் இறந்துபோகாதபடி,
மருவியின்றெ னக்கு மரகதம் சிறக்கு மயிலில் வந்து... இன்றே (இப்போதே) என்னருகில் வந்து எதிரில் தோன்றி, ஒளிபொருந்திய பச்சை வண்ணத்தையுடைய மயில்வாகனத்தில் ஏறிக்கொண்டு வந்து,
முத்தி தரவேணும் ... அடியேனுக்கு முக்தியைத் தந்தருள வேண்டும்.
நினைவ ணங்கு பத்தரனைவருந்தழைக்க ...உன்னை வணங்குகின்ற பக்தர்கள் எல்லோரும் தழைக்கும்படியாக,
நெறியில் நின்ற வெற்றி முனைவேலா ... (அவர்களுக்கு) அருள்பாலிக்கும் வழியிலே நிலைபெற்றவனே! வெற்றிநிறைந்து கூரிய வேலை ஏந்தியவனே!
நிலைபெ றுந்திருத்த ணியில்விளங்கு ... நிலைத்திருப்பதான திருத்தணியில் விளங்குவதான,
சித்ர நெடிய குன்றில் நிற்கு முருகோனே ... அழகியதும் உயர்ந்ததுமான மலையில் நிற்கின்ற முருகா!
தினைவிளங்கலுற்ற புனஇளங்குறத்தி ... தினை செழித்து வளர்ந்திருக்கும் புனத்திலே இருப்பவளும் இளங்குமரியுமான வள்ளி,
செயலறிந்து அணைக்கு மணிமார்பா ... (பக்தியால் மேற்கொண்ட) செயல்களை அறிந்து அணைக்கின்ற திருமார்பனே!
திசைமுகன்திகைக்க அசுரர் அன்றடைத்த ... பிரமன் திகைக்கும்படியாக முன்னாளில் அசுரர்கள் (தேவர்களை) அடைத்து வைத்திருந்த,
சிறைதிறந்து விட்ட பெருமாளே. ... சிறைக்கதவுகளைத் திறந்துவிட்டு அவர்களை விடுவித்த பெருமாளே!
சுருக்க உரை
உன்னை வணங்குகின்ற பக்தர் அனைவரும் தழைத்து ஓங்கும்படியாக அவர்களுக்கு அருள்பாலிக்கும் வழியில் எப்போதும் நிற்பவனே! வெற்றி நிறைந்ததாகிய கூரிய வேலை ஏந்துபவனே! நிலைபெற்றதான திருத்தணியில் அழகோடும் உயரத்துடனும் உள்ள மலையில் நிற்கும் முருகனே! தினைப்பயிர் செழித்து வளர்ந்திருக்கும் புனத்திலிருப்பவளா வள்ளியம்மையின் பக்திச் செயல்களை உணர்ந்து அவளை அணைத்த மணிமார்பனே! பிரமன் திகைத்து நிற்கும்படியாக தேவர்களை அசுரர்கள் அடைத்துவைத்திருந்த சிறையின் கதவுளைத் திறந்துவிட்டு அவர்களை விடுவித்தருளிய பெருமாளே!
எனக்கு வந்திருக்கும் குஷ்டம், வினைகள், பித்தநோய், காய்ச்சல், வலி, சொல்லவொண்ணாத வேதனைதந்து வருத்துகின்ற முயலகன் என்னும் வலிப்பு, நடுக்கம், இருமல் முதலாகச் சொல்லப்படும் எல்லா நோய்களாலும நான் வருந்தியும்; வீடு, மனைவி, மக்கள் என்று இவர்களை நினைத்த வண்ணமாக நான் தெளிந்த அறிவு கலக்கமுற்று மயங்கிப்போய் வீணில் இறந்துபடாமல் இப்போதே பச்சை மயில்வாகனத்தில் ஏறி என்னெதிரில் தோன்றி முக்தியளித்தருள வேண்டும்.