பகுதி - 350
நற்றாயிரங்கல் என்னும் அகத்துறைப் பாடலான இந்தக் காஞ்சித் திருப்புகழ் மிகவும் ஆச்சரியகரமான அமைப்புடையது. பாடலைக் கவனியுங்கள்.
நற்றாயிரங்கல் என்னும் அகத்துறைப் பாடலான இந்தக் காஞ்சித் திருப்புகழ் மிகவும் ஆச்சரியகரமான அமைப்புடையது. பாடலைக் கவனியுங்கள். ஒவ்வோரடியிலும் முதலிரு சீர்களும், மூன்றாம் நான்காம் சீர்களும் ஒரேமாதிரியான அமைப்பில்—அப்படியே திரும்ப வந்தோ அல்லது சிறிய மாற்றங்களைப் பெற்றோ—அமைந்துள்ளன. முதல் சீர், மூன்றாம் சீர், ஐந்தாம் சீர் ஆகியவை ஒரே சொற்கள் (நச்சு, நச்சு நச்சு//நத்து, நத்து, நத்தி//இச்சை, இச்சை, இச்சி//எத்தனை, எத்தனை, இத்தனை//பச்சை, பச்சை, பச்சை//பத்தி, பத்தி, பத்தி//கச்சி, கச்ச, கச்சி//கற்ப, கற்ப, கைத்த. ஒவ்வோரிடத்திலும் பொருளால் மாறுபடுகிறது. அதுமட்டுமல்லாமல், மடக்கடிகளை மட்டும் தனியாக எடுத்து அமைத்தால் அது ஒரு தனிப்பாடலாக மாறும். இதைக் கரந்துறைப் பாடல் என்பார்கள். கரந்து உறையும் பாடல், மறைந்திருக்கும் பாடல் என்று பொருள். மடக்கடிகளை மட்டும் தனியே எடுத்தால்:
நச்சுமிழ் களங்க மதியாலும் நத்திரை வழங்கு கடலாலும்
இச்சிறுமி நொந்து மெலியாதே இத்தனையில் அஞ்சல் எனவேணும்
பச்சைமலை எங்கும் உறைவோனே பத்திர மணிந்த கழலோனே
கச்சில் அமர்ந்த கதிர்வேலா கைத்தளை களைந்த பெருமாளே
என்று பாடலுக்குள் பாடலாக அமையும். இரண்டின் பொருளையும் நாளைக்குக் காண்போம். இப்போது பாடலைப் பார்க்கலாம்:
Advertisement
தத்ததன தந்த தத்ததன தந்த
தத்ததன தந்த தனதான
நச்சரவ மென்று நச்சரவ மென்று
நச்சுமிழ் களங்க மதியாலும்
நத்தொடு முழங்க னத்தொடு முழங்கு
நத்திரை வழங்கு கடலாலும்
இச்சையுணர் வின்றி யிச்சையென வந்த
இச்சிறுமி நொந்து மெலியாதே
எத்தனையு நெஞ்சில் எத்தனை முயங்கி
இத்தனையி லஞ்ச லெனவேணும்
பச்சைமயில் கொண்டு பச்சைமற மங்கை
பச்சைமலை யெங்கு முறைவோனே
பத்தியுட னின்று பத்திசெயு மன்பர்
பத்திரம ணிந்த கழலோனே
கச்சிவர் குரும்பை கச்சவர் விரும்பு
கச்சியில மர்ந்த கதிர்வேலா
கற்பக வனங்கொள் கற்பக விசும்பர்
கைத்தளை களைந்த பெருமாளே.