முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 351

பக்தியோடு செய்யும் தொண்டோ, தெளிவோ இல்லாமல்

Updated On : 2 செப்டம்பர், 2016 at 12:32 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:42 PM

பதச் சேதம்

சொற் பொருள்

நச்சு அரவமென்று  நச்சு அரவம் என்று நச்சு உமிழ் களங்க மதியாலும்

Advertisement

 

`நச்சு: நச்சி, விரும்பி; அரவம்: கேது என்ற பாம்பு; நச்சரவம்: விஷம்கொண்ட பாம்பு; என்று: போல; களங்க மதியாலும்: கறையையுடைய சந்திரனாலும்;

நத்தொடு முழங்கு(ம்) கனத்தொடு முழங்கு(ம்)   நத் திரை வழங்கு(ம்) கடலாலும்

 

நத்தொடு: சங்கோடு; கனத்தொடு: மேகத்தோடு; நத்திரை: நத்தம் திரை—நத்தம்=இரவு, இருள்; நத்திரை: இருண்ட, கரிய அலைகள்;

இச்சை உணர்வின்றி இச்சை என வந்த இச்சிறுமி நொந்து மெலியாதே

 

இச்சை: பக்தியோடு புரியும் தொண்டு; உணர்வு: அறிவு, தெளிவு; இச்சை: விருப்பம்;

எத்தனையு(ம்) நெஞ்சில் எத்தன(ம்) முயங்கி இத்தனையில் அஞ்சல் என வேணும்

 

எத்தனையும்: எத்தனையோ; நெஞ்சில்: மனத்தில்; எத்தனம்: முயற்சி, பிரயத்தனம்; முயங்கி: முயங்குதல்=செய்தல் (முயங்குதல் என்பதற்குக் கலத்தல், புணர்தல், பொருந்துதல், தழுவுதல், செய்தல் என்றெல்லாம் பொருளுண்டு); இத்தனையில்: இந்த அளவிலே, இப்போதே;

பச்சை மயில் கொண்டு பச்சை மற மங்கை பச்சை மலை எங்கும் உறைவோனே

 

 

பத்தியுடன் நின்று பத்தி செய்யும் அன்பர் பத்திரம் அணிந்த கழலோனே

 

பத்தியுடன் நின்று: பக்தியோடு நின்று; பத்தி செயும் அன்பர்: முறைதவறாமல் வழிபடும் அன்பர் (பத்தி: வரிசை); பத்திரம்: பத்ரம்—இலை, பூ இதழ்கள்;

கச்சு இவர் குரும்பை  கச்சவர் விரும்பு(ம்) கச்சியில் அமர்ந்த கதிர் வேலா

 

கச்சிவர்: கச்சு இவர், கச்சணிந்துள்ள; குரும்பை: தென்னங்குரும்பையைப் போன்ற; கச்சவர்: கைத்தவர்—வெறுத்தவர்;

கற்பக வனம் கொள் கற்பு அகம் விசும்பர் கை தளை களைந்த பெருமாளே.

 

கற்பகம் வனம் கொள்: கற்பகக் காட்டைக் கொண்ட; கற்பு அகம்: கல்வி நிறைந்த உள்ளம்; கைத்தளை: கைவிலங்கு;

நச்சு அரவ மென்று நச்சரவ மென்று ... கேது என்ற பாம்பு விரும்பிப் பிடித்து மென்று (உமிழ்ந்ததால்) தானும் ஒரு நச்சரவத்தைப் போல,

நச்சுமிழ்க ளங்க மதியாலும் ... விஷத்தைக் கக்குகிற கறைபடிந்த சந்திரனாலும்;

நத்தொடுமுழங்கு கனத்தொடுமுழங்கு ...  சங்குகளின் முழக்கமும்; மேகக்கூட்டங்களின் முழக்கமும் ஒன்றுகலந்து,

நத்திரைவ ழங்கு கடலாலும் ... கரிய அலைகளை வீசும் கடலாலும்;

இச்சையுணர் வின்றி யிச்சையென வந்த ... பக்தியுடன் செய்யும் தொண்டும், தெளிவும் இல்லாமல் ‘இச்சை கொண்டேன்’ என்று வந்திருக்கும்,

இச்சிறுமி நொந்து மெலியாதே ... சிறுமியாகிய நான் மனம் வாடி மெலிந்து போகாமலும்;

எத்தனையி நெஞ்சில் எத்தன முயங்கி ... உள்ளத்தில் எத்தனையோ ஆசைகளைக் கொண்டு முயல்பவளான என்னை,

இத்தனையில் அஞ்சலெனவேணும் ... இப்போதே ‘அஞ்சாதே’ என்று சொல்லியருள வேண்டும்.

பச்சைமயில் கொண்டு பச்சைமற மங்கை ... பச்சை மயிலை வாகனமாகக் கொண்டவனே!  பச்சைநிறம் கொண்ட வேட்டுவச்சியான வள்ளியம்மையோடு,

பச்சைமலை யெங்கும் உறைவோனே ...  பசுமை நிறைந்த மலைகளிலெல்லாம் வீற்றிருப்பவனே!

பத்தியுட னின்று பத்திசெயும் அன்பர் ... பக்தித்துறையில் நின்று (பக்தியோடு), முறைதவறாது வழிபடுகின்ற பக்தர்கள் (அர்ச்சிக்கும்),

பத்திரம ணிந்த கழலோனே ... இலைகளையும் மலர் இதழ்களையும் அணிந்த திருவடிகளைக் கொண்டவனே!

கச்சிவர் குரும்பை கச்சவர் விரும்பு ... கச்சு அணிந்த தென்னங்குரும்பையைப் போன்ற மார்பினரை வெறுத்தவர்களான பெரியோர்கள் விரும்புகின்ற,

கச்சியில மர்ந்த கதிர்வேலா ... கச்சி எனப்படும் காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கின்ற கதிர்வேலனே!

கற்பக வனங்கொள் கற்பு அக விசும்பர் ... கற்பக வனத்தை உடையவர்களும்; கல்வி நிறைந்த நெஞ்சினருமான தேவர்களுடைய,

கைத்தளைக ளைந்த பெருமாளே. ... கைவிலங்குகளை உடைத்தெறிந்த பெருமாளே!

சுருக்க உரை

பச்சை மயிலை வாகனமாகக் கொண்டு, பச்சை நிறத்து வேட்டுவப் பெண்ணான வள்ளியம்மையுடன் பசுமை நிறைந்த மலைகளிலெல்லாம் வீற்றிருப்பவனே!  பக்தியோடு வழிபடும் அன்பர்கள் இட்டதான இலைகளையும் பூக்களையும் அணிந்திருக்கும் திருப்பாதங்களை உடையவனே!  கற்பகச் சோலைகளையும் கல்வி நிறைந்த உள்ளத்தையும் உடைய தேவர்களின் கைவிலங்குகளை அறுத்த பெருமாளே!

கேதுவாகிய பாம்பு, தன்னை விரும்பி விழுங்கி உமிழ்ந்த காரணத்தால், தன்னையும் ஒரு நச்சரவமாகக் கருதி நஞ்சை உமிழ்கின்ற நிலவாலும்; சங்கின் ஓசையும் கனத்த மேகங்களின் ஓசையும், கரிய அலைகளின் ஓசையும் கலந்து அலைவீசும் கடலாலும்;

பக்தியோடு செய்யும் தொண்டோ, தெளிவோ இல்லாமல் ‘இச்சை மட்டும் இருக்கிறது’ என்று வந்திருக்கும் இந்தச் சிறுபெண்ணுடைய மனமானது இனியும் வாடி மெலிந்து போகாமல், எத்தனையோ முயற்சிகளை மேற்கொள்ளும் என்பால் ‘அஞ்சாதே’ என்றபடிக் கூறி ஆண்டருள வேண்டும்.

(பக்தி செய்யும் முறைமையும் மனத்தெளிவும் இல்லாமல் உன்பால் விருப்பத்தை மட்டுமே கொண்டுவந்து உன்னெதிரே நிற்கும் அடியார்களாகிய எங்களை ‘அஞ்சேல்’ என்றவண்ணம் ஆண்டுகொள்ள வேண்டும்.)

இனி, இந்தப் பாட்டுக்குள் மறைந்துள்ள ‘கரந்துறைப் பாட’லையும் அதன் பொருளையும் காண்போம்:

நச்சுமிழ் களங்க மதியாலும் நத்திரை வழங்கு கடலாலும்

இச்சிறுமி நொந்து மெலியாதே இத்தனையில் அஞ்சல் எனவேணும்

பச்சைமலை எங்கும் உறைவோனே பத்திர மணிந்த கழலோனே

கச்சியில் அமர்ந்த கதிர்வேலா கைத்தளை களைந்த பெருமாளே

பசுமைகொண்ட மலைகளிலெல்லாம் உறைபவனே!  இலை, மலரிதழ்களை அணிந்த திருவடிகளை உடையவனே!  கச்சியில் வீற்றிருக்கும் கதிர்வேலனே!  (தேவர்களுடைய) கைவிலங்கை உடைத்தருளிய பெருமாளே!  விஷத்தைக் கக்கும் களங்கமுள்ள நிலவாலும்; கரிய அலைகளை வீசும் கடலாலும் இந்தச் சிறுபெண் மனம் நொந்து இளைக்காமல் இப்பொழுதே ‘அஞ்சேல்’ என்று சொல்லியருளவேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.