முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 356

உபதேச மொழியைப் பெறுவதற்கான கோரிக்கையை வைக்கும் இந்தப் பழனித் திருப்புகழ் சற்றே நீளமான சந்த அமைப்பைக் கொண்டது.

Updated On : 5 செப்டம்பர், 2016 at 3:57 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:42 PM

உபதேச மொழியைப் பெறுவதற்கான கோரிக்கையை வைக்கும் இந்தப் பழனித் திருப்புகழ் சற்றே நீளமான சந்த அமைப்பைக் கொண்டது. அடிக்கு ஒற்றொழித்து 55 எழுத்துகள்; 54, 55 ஆகிய எழுத்துகள் மட்டும் நெடில், மற்ற அனைத்து எழுத்துகளும் குறில்; ஒவ்வொரு மடக்கிலும் 12, 14, 17 ஆகிய எழுத்துகள் வல்லொற்று. 

தனனதன தனனதன தத்தத் தனத்ததன

      தனனதன தனனதன தத்தத் தனத்ததன

Advertisement

      தனனதன தனனதன தத்தத் தனத்ததன            தனதானா

சிறுபறையு முரசுதுடி சத்தக் கணப்பறையு

         மொகுமொகென அதிரவுட னெட்டிப் பிடித்துமுடி

         சிறுகயிறு நெடிதுகொடு கட்டிட் டிழுக்கஇனி      யணுகாதே

      சிலதமர்க ளுறவுகிளை கத்திப் பிதற்றியெடு

         சுடலைதனி லிடுகனலை யிட்டுக் கொளுத்துபுனல்

         திரைகடலில் முழுகெனவு ரைக்கப் படிக்குடிலை யொழியாதே

மறைமுறையி னிறுதிநிலை முத்திக் கிசைத்தபடி

         உடலுயிர்கள் கரணவெளி பட்டுக் குணத்திரயம்

         வழிபடவும் நினதடிமை யிச்சைப் படுத்துவது    மொருநாளே

      வருதுரக மயில்மணிகள் சத்திக்க நிர்த்தமிட

         ஓருபதுட னிருபுயமு மட்டுத் தொடைக்கிசைய

         மனமகிழ இனியமொழி செப்பிச் சிவத்தபத      மருள்வாயே

நறையிதழி யறுகுபல புட்பத் திரட்களொடு

         சிறுபிறையு மரவுமெழி லப்புத் திருத்தலையில்

         நளினமுற அணிசடையர் மெச்சிப் ப்ரியப்படவு   மயிலேறி

      நவநதிகள் குமுகுமென வெற்புத் திரட்சுழல

         அகிலமுத லெழுபுவன மெத்தத் திடுக்கிடவும்

         நவமணிகள் உரகனுடல் கக்கத் துரத்திவரு      முருகோனே

குறவர்முனை கெடமனது வெட்கப் படக்குடிலில்

         மலையிலெழு தினையிதணில் வைத்துச் சிறுக்கியிறு

         குவிமுலையு மணியிடையு மெச்சிப் புணர்ச்சிச்செயு மணவாளா

      குறுமுனிவ னிருபொழுதும் அர்ச்சித்து முத்திபெற

         அறிவுநெறி தவநிலைகள் செப்புத் தமிழ்க்கினிய

         குருகுமர பழநிவளர் வெற்புத் தனிற்றிகழு             பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.