பகுதி - 357
உன் சிவந்த பாதத்தைத் தந்தருள வேண்டும்.
பதச் சேதம் | சொற் பொருள் |
சிறு பறையும் முரசு துடி சத்த கண பறையும் மொகு மொகு என அதிர உடன் எட்டிப் பிடித்து முடி சிறு கயிறு நெடிது கொடு கட்டிட்டு இழுக்க இனி அணுகாதே Advertisement
| துடி: உடுக்கை; கண பறை: கூட்டமான பறை வாத்தியங்கள்; |
சில தமர்கள் உறவு கிளை கத்தி பிதற்றி எடு சுடலை தனில் இடு கனலை இட்டு கொளுத்து புனல் திரை கடலில் முழுகு என உரைக்கப்படி குடிலை ஒழியாதே
| தமர்கள்: உறவினர்கள்; சுடலை: சிதை; இட்டுக் கொளுத்து: இட்டுக் கொளுத்தி; குடிலை: குடிசையை, உடலை; |
மறை முறையின் இறுதி நிலை முத்திக்கு இசைத்தபடி உடல் உயிர்கள் கரண வெளி பட்டு குணத்திரயம் வழிபடவும் நினது அடிமை இச்சைப் படுத்துவது ஒரு நாளே
| மறைமுறையின் இறுதி நிலை: வேதங்களின் முடிவாகச் சொல்லப்பட்ட நிலை; கரண(ம்): அந்தக்கரணம், இந்திரியங்கள்; குணத்திரயம்: ஸத்வ, ராஜஸ, தமோ குணங்களாகிய முக்குணங்கள்; |
வரு துரக மயில் மணிகள் சத்திக்க நிர்த்தமிட ஒருபதுடன் இரு புயமும் மட்டு தொடைக்கு இசைய மனம் மகிழ இனிய மொழி செப்பி சிவத்த பதம் அருள்வாயே
| துரகம்: குதிரை; துரகமயில்: குதிரையைப் போன்ற, வாகனமான மயில்; சத்திக்க: சப்திக்க, ஒலிக்க; நிர்த்தமிட: நடனமிட; ஒருபதுடன் இருபுயம்: பன்னிரண்டு தோள்களும்; மட்டு: தேன்; தொடை: மாலை; |
நறை இதழி அறுகு பல புட்ப திரட்களொடு சிறு பிறையும் அரவும் எழில் அப்பு திரு தலையில் நளினம் உற அணி சடையர் மெச்சி ப்ரியப்படவும் மயில் ஏறி
| நறை: தேன் (அல்லது) மணம்; இதழி: பூ, கொன்றை; அப்பு: நீர், கங்கை; நளினம்: அழகு |
நவ நதிகள் குமு குமு என வெற்பு திரள் சுழல அகில முதல் எழு புவனம் மெத்த திடுக்கிடவும் நவ மணிகள் உரகன் உடல் கக்க துரத்தி வரும் முருகோனே
| வெற்புத் திரள்: மலைக் கூட்டங்கள்; உரகன்: பாம்பு; |
குறவர் முனை கெட மனது வெட்கப் பட குடிலில் மலையில் எழு தினை இதணில் வைத்து சிறுக்கி இரு குவி முலையும் அணி இடையும் மெச்சி புணர்ச்சி செயு மணவாளா
| குறவர் முனைகெட: போருக்கு எழுந்த குறவர்களுடைய (சினம்) கெட; இதண்: பரண்; சிறுக்கி: சிறுபெண்; |
குறு முனிவன் இரு பொழுதும் அர்ச்சித்து முத்தி பெற அறிவு நெறி தவ நிலைகள் செப்பு தமிழ்க்கு இனிய குரு குமர பழநி வளர் வெற்பு தனில் திகழும் பெருமாளே.
| குறுமுனிவன்: அகத்தியன்; வெற்பு: மலை; |
சிறு பறையும் முரசு துடி சத்தக் கணப் பறையும் ... சிறிய பறை; முரசு; உடுக்கை; ஓசையுடன் கூடிய கூட்டமான பறைகள் (எல்லாமும்),
மொகு மொகு என அதிர உடன் எட்டிப் பிடித்து ... மொகுமொகு என்ற பேரோசையுடன் முழங்க, உடனே (யமதூதர்கள்) எட்டிப் பிடித்து,
முடி சிறு கயிறு நெடிது கொடு கட்டிட்டு இழுக்க ... தலைமுடியைச் சிறிய பாசக் கயிற்றால் கட்டி நெடுநேரம் இழுக்கவும்;
இனி அணுகாதே சில தமர்கள் உறவு கிளை கத்திப் பிதற்றி ... (இவர் இனிப் பிழைக்கமாட்டார் என்று) அருகில் வராமலேயே—தூரத்தில் நின்றபடியே—உறவினர்களும் சுற்றற்த்தாரும் உடன்பிறந்தாரும் அலறிப் பிதற்றி அழுது,
எடு சுடலை தனில் இடு கனலை இட்டுக் கொளுத்து புனல் திரை கடலில் முழுகு என உரைக்கப்படி குடிலை ஒழியாதே ... ‘(உடலை) எடு; சிதையில் வை; தீயை மூட்டு; அலைவீசும் கடலில் முழுகு’ என்றெல்லாம் சொல்வதற்கான நிலையிலுள்ள இந்த உடலை (எடுப்பதான பிறப்பு என்பது) ஒழியாதோ.
மறை முறையின் இறுதி நிலை முத்திக்கு இசைத்தபடி ... வேத நூல்களில் முடிவாகச் சொல்லப்பட்ட நிலையாகிய முக்தி பெறுதற்குச் சொல்லிய வழிப்படி,
உடல் உயிர்கள் கரண வெளி பட்டுக் குணத் திரயம் வழிபடவும் ... உடலும்; உயிர்களும்; (புத்தி, மனம், சித்தம், அகங்காரம் ஆகிய) அந்தக்கரணங்களும் வெட்டவெளியோடு சம்பந்தப்பட்டு (அதனாலே சத்வ, ரஜஸ், தமோ குணங்களாகிய) முக்கணங்களும் வழிந்தோடி ஒழுக;
நினது அடிமை இச்சைப் படுத்துவதும் ஒரு நாளே ... உன்னடிமையான எனக்கு உன்மேல் இச்சை தோன்றுமாறு என்னை நீ ஆண்டருளும் நாள் ஒன்று வருமோ? (என்னை நீ ஆண்டருள வேண்டும்).
வரு துரக மயில் மணிகள் சத்திக்க நிர்த்தமிட ... ஏறிவருகின்ற (ஆடும்பரியாகிய) மயிலுடைய மணிகள் ஒலித்து நடனமாட;
ஒரு பதுடன் இரு புயமும் மட்டுத் தொடைக்கு இசைய ... (ஒரு பத்தோடு இரு புயம்=பன்னிரு புயம்) உன்னுடைய பன்னிரு புயங்களிலும் தேன்சிந்தும் மலர்மாலைகள் பொருந்தி விளங்க;
மனம் மகிழ இனிய மொழி செப்பிச் சிவத்த பதம் அருள்வாயே ... மனம் மகிழும்படியாக இனியதான உபதேச மொழியைச் சொல்லி, உன்னுடைய சிவந்த பாதத்தைத் தந்தருள வேண்டும்.
நறை இதழி அறுகு பல புட்பத் திரட்களொடு சிறு பிறையும் அரவும் எழில் அப்புத் திரு தலையில் ... நறுமணம் மிகுந்த கொன்றை மலர்; அறுகம்புல்; பலவகையான புஷ்பக் குவியல்கள்; பிறைச் சந்திரன்; பாம்பு; கங்கை (ஆகிய) இவற்றை,
நளினம் உற அணி சடையர் மெச்சிப் ப்ரியப்படவும் மயில் ஏறி ... அழகாகத் தன் சடையில் சூட்டிக்கொண்டுள்ள சிவபிராம் மெச்சி, மனமுவக்கும்படியாக மயிலில் ஏறிக்கொண்டு,
நவ நதிகள் குமு குமு என வெற்புத் திரள் சுழல ... (கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சிந்து, கோதாவரி, காவேரி, சோணை, துங்கபத்திரை ஆகிய) ஒன்பது நதிகளும் குமுகுமுவெனப் பொங்கவும்; மலைக்கூட்டங்கள் சுழலவும்;
அகில முதல் எழு புவனம் மெத்தத் திடுக்கிடவும் ... பூலோகம் முதலான ஏழு உலகங்களும் திடுக்கிடவும்;
நவ மணிகள் உரகன் உடல் கக்கத் துரத்தி வரும் முருகோனே ... உடலுக்குள்ளே இருக்கும் ஒன்பது மணிகளையும் (நவமணிகள்) பாம்புகள் கக்கவும் (அசுரர்களைத்) துரத்திக்கொண்டு வருகின்ற முருகனே!
குறவர் முனை கெட மனது வெட்கப் பட ... போருக்கெழுந்த குறவர்களுடைய சினம் தணிந்து அவர்களுடைய மனம் வெட்கமைடையும்படியாக,
குடிலில் மலையில் எழு தினை இதணில் வைத்து சிறுக்கி ... (குறவர்களின்) குடிசையிலும்; மலையிலே உள்ளதான தினைப்புனத்துப் பரணிலும் இருந்த சிறு பெண்ணான (வள்ளியின்),
இரு குவி முலையும் அணி இடையும் மெச்சிப் புணர்ச்சி செயு மணவாளா ... குவிந்த மார்பகங்களையும்; அழகிய இடையையும் மெச்சி, அவளை மணமுடித்தவனே!
குறு முனிவன் இரு பொழுதும் அர்ச்சித்து முத்தி பெற ... குள்ள முனிவரான அகத்தியர் காலை, மாலை இருவேளையும் அர்ச்சனை செய்து, முக்திபெறும்படியாக, (அவருக்கு),
அறிவு நெறி தவ நிலைகள் செப்பு ...ஞான மார்க்கத்தையும், தபோ முறைகளையும் சொன்னவனும்;
தமிழ்க்கு இனிய குரு குமர பழநி வளர் வெற்புத் தனில் திகழும் பெருமாளே.... தமிழுக்கு இனியவனுமான குருவே! குமரனே! பழனியில் நிலைபெற்றிருக்கும் மலையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!
சுருக்க உரை
நீ வாகனமாக ஏறிவருகின்ற மயிலின் மணிகள் ஒலிக்கவும்; பன்னிரு புயங்களிலும் மணங்கமழும் மாலைகள் பொருந்தி விளங்கவும்; அடியேனுடைய மனம் மகிழும்படியாக இனிய உபதேசங்களைச் சொல்லி, உன் சிவந்த பாதத்தைத் தந்தருள வேண்டும்.
மணமுள்ள கொன்றை; அறுகம்புல்; மலர்க் குவியல்கள்; பிறைச் சந்திரன்; பாம்பு; கங்கை இவற்றையெல்லாம் சடாமுடியில் அணிந்த சிவனார் மனம் மகிழும்படியாக மயிலிலே ஏறிக்கொண்டு; (அந்த மயிலானது)
ஒன்பது நதிகளும் குமுகுமுவெனப் பொங்கும்படியும்; மலைக்கூட்டங்கள் சுழலும்படியும்; பூவுலகு முதலான ஏழு உலகங்களும் கலங்கும்படியும்; பாம்புகள் தம்முடைய உடலுக்குள் கிடக்கும் நவமணிகளையும் கக்கும்படியும் (பறந்துவர) அசுரர்களைத் துரத்திவரும் முருகனே! போருக்கெழுந்த குறவர்களுடைய துணிச்சல் அழியவும்; மனம் வெட்கப்படவும்; அவர்களுடைய குடிசையிலும் தினைப்புனத்துப் பரணிலும் இருந்த சிறுபெண்ணான வள்ளியை அவளுடைய குவிந்த மார்பகத்தையும், அழகிய இடையையும் கண்டு மோகித்து மணந்துகொண்ட மணாளனே! குறுமுனியான அகத்தியர் இருவேளையும் அர்ச்சித்து முக்தியடையும்படியாக அவருக்கு ஞான மார்க்கத்தையும் தபோ நெறிகளையும் உபதேசித்தவனே! தமிழுக்கு இனியவனே! குருவே! குமரனே! பழனியில் நிலைத்திருப்பதாகிய மலையில் வீற்றிருக்கும் பெருமாளே!
சிறிய பறைகளும் முரசமும், உடுக்கையும் பேரொலி செய்ய; யமதூதர்கள் தலைமுடியைச் சிறு கயிற்றால் கட்டி வலிந்திழுக்க; அருகே வராமல் தூர இருந்தபடியே உற்றார் உறவினர்கள் கூச்சலிட்டுப் பிதற்றி, ‘உடலை எடு; சிதையில் இடு; கடலில் முழுகு’ என்று சொல்லி நீங்கும்படியான நிலையில் உள்ள இத்தகைய பிறவியைச் சுமக்கும் உடலை மீண்டும் மீண்டும் சுமக்கின்ற நிலை ஒழியாதோ! (பிறவித் துன்பம் நீங்காதோ!)
வேதநூல்களின் முடிவாகச் சொல்லப்பட்ட முக்திநிரையைப் பெறுவதற்கான வழியில், உடல், உயிர், இந்திரியங்கள் எல்லாமும் வெட்டவெளியோடு சம்பந்தப்பட்டு அதனால் முக்குணங்களும் வழிந்து ஒழுகி விலகும்படியாகவும்; உனதடிமையாகிய எனக்கு உன்மீது இச்சை ஏற்படும்படியாகவும் நீ என்னை ஆண்டருள வேண்டும்.